காணி நிலம்-சிறுகதை

>> Monday, June 25, 2012


ராமசாமி வரப்பு வழியாக நடந்தார், செருப்பு இல்லாத கால்களில் மூன்று நாள் முன் பெய்த மழையில் துளிர்த்து இருந்த அருகம்புல் குளிர்ச்சியாய் வருடியது, அந்த குளிர்ச்சியை ரசிக்கும் மனோபாவத்தில் இல்லை அவரின் மனது, ஓரத்தில் இருந்த தன் பாட்டனின் சமாதியில் வந்து உக்கார்ந்தார், மாடத்தில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, தோட்டம் ஒரு நாலு ஏக்கர் இருக்கும், பரம்பரையாக கட்டிக்காத்த பூமி. ராமசாமியின் தகப்பனார் தன் தந்தையின் ஆசைப்படியே அவர் வாழ்ந்த பூமியில் தன்னை புதைக்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றியிருந்தார்...ஒரு கோவில் மாதிரி அதைக் கட்டியிருந்தார், யாராவது ஒருவர் மாடத்தில் தினம் விளக்கு வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள், பரந்து விரிந்த தோட்டத்தில் வெயிலில் வருபவர்களும், பண்ணையாட்களும் இளைப்பாறுவது அந்த சமாதி திண்டில்தான்.
சமாதியை சுற்றி மாமரம், கொய்யா மரம்,செம்பருத்தி செடி,சிறு நெல்லிக்காய் மரம், என பல மரங்களும் ஒட்டியபடி கிணறும் இருப்பதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும், கிராம மக்கள் வீட்டுக்குள் எப்பொழுதும் முடங்கி கிடக்க விரும்புவதில்லை, வயல் வேலையில்லாத தருணங்களில் ஆலமரத்தடி, அரசமரத்தடி, துண்டை போட்டு தூங்குவார்கள், ஒரு சிலர் கட்டம் போட்டு ஆடு புலி ஆடுவார்கள், எதாவது வெட்டியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள், கடுமையாக எந்த அளவுக்கு உழைக்கின்றார்களோ அதே மாதிரி சுகவாசிகளாக இருப்பார்கள், அமைதியான அந்த இடம் அந்த கிராம மக்களின் ஓய்வு கழிக்கும் இடமாக இருந்தது, மாலை நேரங்களில் வயது வந்த இளைஞர்கள் தன் கூட்டாளிகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருப்பார்கள் பெரும்பாலும் பெண்கள் விசயமாக இருக்கும் அந்த திண்டில் இராமசாமி உக்காந்தார் நடந்து வந்த களைப்பு தந்த வியர்வை முகத்தில் பூத்திருந்தது.

தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தில் இருந்த வியர்வையை துடைத்தார் ராமசாமி, பொட்டென்று மடியில் ஒரு சிறுநெல்லிக்காய் மரத்தில் இருந்து விழுந்தது, மரத்தின் தண்டுகளில் பாசி போல் ஏராளமான நெல்லிக்காய் ஏராளமாக காய்த்திருந்தது, இந்த ஊர்லயே இவங்க தோட்டத்து கிணறு தண்ணீர் கல்கண்டு மாதிரி இனிக்கும், அந்த தண்ணியில வளருகின்ற மா,கொய்யா நெல்லி எல்லாமே நல்ல இனிப்புதான், கிணற்று ஊத்தம் மேற்கு தொடர்ச்சி மலையில தொடங்குகிறது அதனாலதான் என சொல்லுவாங்க, மோட்டார் போட்டா தண்ணிய இறைச்சு குடிச்சா அவ்வளவு இனிப்பா இருக்கும், வரப்பு ஓரத்தில இருக்கின்ற தென்னமரத்தில இளனி,தேங்காய் அதைவிட ருசி.

மடியில் விழுந்த நெல்லிக்காயை எடுத்து பார்த்தார், இளம் பச்சையும் மஞ்சளும் கலந்து இருந்தது, பழுக்க தொடங்கியுள்ளது என அர்த்தம், நாக்கில் எச்சில் ஊர வாயில் போட்டார் இனிப்பும் புளிப்புமான ஒரு சுவையில் கண்ணை மூடினார், மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு வனதேவதையின் கோவிலுக்கு வருடத்திக்கு ஒரு முறை ஊர்மக்கள் வசுவன்(மண்ணால் செய்யப்பட்ட குதிரை),பாத்திரம், பண்டம், எல்லாம் தூக்கிக்கொண்டு, மத்தாளம் அடித்துக்கொண்டு காட்டுவழியாக சென்று ஆடு,கோழி வெட்டி பொங்கல் வைத்து அங்கியே எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டு வருவாங்க, ராமசாமி சின்ன வயசுல அப்படி போன சமயத்துல காட்டுக்குள்ள நல்லா வளர்ந்து நின்ன சிறுநெல்லிக்காய் மரத்தின் கீழே இருந்த விழுந்த விதையில் முளைத்த ஒரு நாத்த புடிங்கி கையில வைச்சிக்கிட்டாரு பெரிசுக எல்லாம் அட “முட்டாப்பயலே காட்டுநெல்லி கசக்குமடா தூர எரி” என்றார்கள் ஆனாலும் கொண்டு வந்து நட்டினார்... இந்த மண்ணின் மகிமையா... இல்ல தேன் மாதிரியான தண்ணீரின் மகிமையான்னு தெரியலை! கல்கண்டு இனிப்பும், புளிப்பும் கலந்த கலவையா இருந்தது.
ராமசாமிக்கு கல்யாணம் பண்ணியது நல்ல பெரும்போக்கான குடும்பம் ஒரே பொண்ணு நாச்சாயா...இரண்டு பேருக்கும் இடையில சண்டை சச்சரவு இல்லாத அருமையான வாழ்க்கை இரண்டு பெண் புள்ளைக பிறந்தது, வயசுக்கு வந்து கல்யாணம் செய்யற நிலையில இருக்கிறப்ப மூத்த பொண்ணு திடீர்ன்னு தலவலிக்குது என கதற மாட்டுவண்டி கட்டி பெரியாஸ்பத்திரி போறதுக்குள்ள தல தொங்கி உசிர விட்டிருச்சு, வயலுக்கு அப்பனுக்கு சோறு கொண்டு போகயில பேய் அடிச்சிருச்சுன்னு பெரிசுக உச்சு கொட்டிச் சொல்ல படிச்சவங்க மூளைக்காய்ச்சல் அப்படின்னு சொன்னாங்க, இருக்கிற ஒரே பொண்ணை நல்லா பாசமா வளர்த்து படிக்க வைச்சு டவுன்ல கட்டிக்கொடுத்துட்டாரு மருமகனும் தங்கமான பையன் டவுன்ல கடை வியாபாரம்ன்னு நல்ல வசதியா இருக்காங்க, அவங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க நாச்சாயா சந்தோஷமா போனவங்க மிதமிஞ்சிய மகிழ்ச்சியில தூங்கினவங்க காலையில பிணமாத்தான் இருந்தாங்க...ஒத்தை மனுசனா போன ராமசாமிய தோட்டத்தை வித்திட்டு டவுன்ல வந்து இருக்க சொல்ல ராமசாமியும் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கிறார் ஆனால் தோட்டத்தை விற்று விட்டு போன மனசில்ல...கட்டிக்காத்த பூமிய கொடுக்க எந்த விவசாயிக்கும் மனசு வராது ஆனா இருக்கும் சூழ்நிலை அந்த நிலையை நோக்கி நகர்த்துகின்றது ஒவ்வொரு விவசாயிம் சதுரங்க ஆட்டத்தில் படையினை இழந்து நகரும் ராஜா போலத்தான் தென்னைமரத்தில் ஏறி மட்டையை வெட்ட ஆள் கிடைப்பதில்லை, விவசாய வேலை செய்ய ஆள் இல்லை சொகுசான நூறு நாள் வேலைத்திட்டம், கிராமங்களை சுற்றி உருவாகும் பஞ்சு மில்கள், கூட்டம் கூட்டமாக வரும் பனியன் கம்பனிகளின் பேருந்துகள், இதற்கு என்று ஆள் பிடிக்கும் தரகர்கள்.

காலையில் ஆறு மணிக்கு வந்து ஐந்து மணியோடு முடியும் விவசாய வேலையில் வெயிலில் வாட விரும்பாத பல மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயருகிறார்கள், ஆள் கிடைக்காதாலும் மழை பொய்ப்பதும், அதிகம் பெய்வதும் விவசாயின் குரல்வளை நசுக்கப்படுகின்றது, ச்சீ கருமம்டா சாமீ! என இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட்காரங்களிடமும், தொழில் நிறுவனங்களிலும் விற்று விட்டு சென்று விடுகிறார்கள், ராமசாமிக்கு அந்த மாதிரி தன் நிலத்தை விற்க விருப்பமில்லை தன் நிலத்தை விவசாயம் செய்ய விருப்பமுள்ள ஒருவரிடம் விற்கவே ஆசைப்பட்டார், தரகர் மொட்டையப்பனிடம் விவரமா கூறிவிட்டு வந்துதான் இளைப்பாற அமர்ந்திருக்கின்றார். இங்க பாருப்பா மொட்டையப்பா...! நல்ல வெள்ளாமை பண்ணுறவங்களுக்குத்தான் நான் தோட்டத்தைக் கொடுப்பேன் அப்படி நல்ல ஆளா இருந்தா சொல்லு என்றார்..! மொட்டையப்பனும் சரி சொல்லுகின்றேன் என்றார்.

மெல்ல எழுந்து நடந்து வீட்டை நோக்கி நடந்தார்...தோட்டத்தினை அடுத்து சிறு ஓடை ஒன்று இருக்கின்றது அதைக்கடந்து மண் படிகளில் ஏறி தெருவில் நடந்தார் தெருவே வெறிச்சோடிக்கிடந்தது மனதில் குழப்பம், இயலாமை எல்லாம் சேர உடம்பு சோர்வாக இருந்தது, தளர்வுடன் நடந்து வீட்டையடைந்தார், கதவை திறந்து சட்டையை கழற்றி வைத்து விட்டு துண்டை விரித்து ஆசாரத்தில் அப்படியே படுத்தார்.

அப்படியே தூங்கிக்கொண்டிருந்தவர் எவ்வளவு நேரம் தூங்கினார் என்று தெரியவில்லை...கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து மெதுவாக நடந்து கதவை திறந்தார், யாரோ ஒருவன் கருப்பாக நின்று கொண்டிருந்தான், யாருப்பா நீ? என்ன வேனும்? என்றார். அய்யா! நான் காடப்பட்டிங்க...உங்க மச்சான் கனகு! காலமாயிட்டாருங்க... சேதி சொல்ல வந்தம்முங்க..! என்றான், மொபைல் போன் இருந்தும் இந்த தூதுவர்கள் இன்னும் கிராமத்தில் இருக்கின்றார்கள், இவர்களுக்கு கூலிக்கோ, பணத்திற்கோ போவது கிடையாது அந்த ஊர்ல பெரிய காரியம் ஆனா ஒவ்வொரு ஊராப் போய் செய்தி சொல்லுவாங்க...அவங்க கொடுக்கிற காச வாங்கி்க்குவாங்க, அதுல கிடைக்கிற காசுல சாயங்காலம் சாராயமமோ, பிராந்தியோ காசுக்கு தக்க சாப்பிடுவாங்க, சரிப்பா நான் பின்னாடியே வருகிறேன் என்று டவுசரில் இருந்த பணப்பையை எடுத்து பிரித்து ஒரு பத்து ரூபாய் கொடுத்தார், பணப்பை அடுக்கில் இருந்த நல்ல கொளுந்து வெற்றிலையை பார்த்தவன் நாக்கில் எச்சில் ஊற வாய்க்கு ரண்டு வெத்தலை கொடுங்க....! என்றான்.  இரண்டு வெற்றிலையும், வெட்டுப்பாக்கு இரண்டு துண்டும் கொடுத்தார், துண்டு புகையிலையில் கொஞ்சம் பிய்த்து தர... வாயில் போட்டுக்கொண்டு கும்புடு போட்டு விட்டு போய் விட்டான்...கனகுவைப்பற்றி யோசித்தார் எம் வயசுதான் இரண்டு வருடசத்துக்கு முன்னாடி தாங்கமுடியாத வயறு வலிக்குதுன்னு, டவுன் ஆஸ்பத்திரியில பார்த்தப்ப புற்றுநோய்ன்னு சொல்லிட்டாங்க, எந்த கெட்டபழக்கமும் கிடையாது! நல்ல மனுசன், நல்ல உழைப்பாளி! பத்து பேரை தூக்கி வீசுர பலம், கொஞ்சம்...கொஞ்சமா...மருத்துவத்திற்காக நிலம், இருப்பு பணம், சேமிப்பு எல்லாம் கரைந்து இன்று ஆளும் போயிட்டாரு! இனி அந்த குடும்பம் என்ன பண்ண போகுதோ? வாய் விட்டே புலம்பி விட்டார். மறுபடியும் சட்டையை மாட்டிக்கிட்டு தோல் செருப்பை மாட்டிக்கிட்டு கிளம்பினார், பெரும்பாலும் செருப்பு போடுவதில்லை ராமசாமி! ஆனால் இப்ப போகிற இடம் கரடு முரடான சரியான சாலை கிடையாத ஊர், பண்ணன்டு மணி பஸ்ஸை புடிச்சா...ஒரு வெத்தலைய மெல்லற நேரத்தில கொண்டு போய் விட்டுடுவான் அங்கிருந்து நடந்து போனா ஒரு மைல் தூரம்!மெதுவாக வீதியில் இறங்கி பஸ் நிற்கும் பிள்ளையார் கோவிலை நோக்கி நடந்து போனார். 

அங்க நல்ல வெள்ளையும்...சொல்லையுமா...குடை புடிச்சுகிட்டு கருப்புசாமி நின்னிட்டுருந்தான் ஊருக்குள்ள பணம் பவுசு உள்ள ஆளு. “என்ன ராமசாமி? கனகு பெரிய காரியத்துக்கா..” என்றார், “ஆமாங்க...”என்றார் இராமசாமி. “நானும்தான்யா நல்ல மனுசன்.....எல்லாம் ஒன்னாமன்னா பழகிட்டோம்! அப்புறம் நான் கேள்வி பட்டேன் தோட்டத்தை குடுத்துட்டு டவுன்ல மருமகனோட இருக்கப் போறதா உண்மையா!? என்றான் கருப்புசாமி பீடிகையுடன்,” எச்சிலை விழுங்கினார் ராமசாமி தலையை மட்டும் ஆட்டினார் சுரத்தேயில்லாமல்...“நானே உங்கிட்ட வந்து பேசலாம்மின்னு இருந்தேன்... நம்ம கூட்டாளிக்கு பேசி முடிக்கலாம்மின்னு நாலு ஏக்கர் தோட்டம், கிணறு நல்ல தங்கமான பூமி, பத்து லட்சத்துக்கு குறையில்லாம போகும், என்ன முடிச்சிறலாமா? இந்த வாரத்துக்குள்ள தோட்டத்தை பார்க்க வரச்சொல்லட்டுமா..?” என்றார்! பதில் சொல்லாமல் சிந்தனையில் இருந்த ராமசாமி...“என்ன பதிலைக் காணம் என்ன ராமசாமி என்ன சொல்லுமய்யா..” என்றார் குரலை உயர்த்தி...! ராமசாமி பதில் சொல்ல வாயெடுத்த பொழுதில் டவுன் பஸ் புழுதியை வாரியிறைத்தபடி வந்து நின்றது இருவரும் ஏறி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

பேருந்து கிளம்பியதும் அருகில் அமர்ந்த கருப்புசாமி! ராமசாமியின் பதிலுக்காக அவர் முகத்தைப் நோக்கினார், தொண்டையை கனைத்து குரலை சரி செய்த ராமசாமி வெள்ளாமை பண்றதா இருந்தா மட்டும் கொடுப்பேன் வேற விவகாரம்ன்னா வேண்டாமுங்க என்றார்! அட...அவரு நம்மூர்ல தோட்டம் வேனும்ன்னு ரொம்ம நாளா கேட்டுக்கிட்டு இருக்காங்க வெள்ளாமைக்குத்தான் பெரிய பணக்காரங்க உனக்கு கூட தெரியும்ன்னு நெனைக்கிறேன் ஈரோட்டுகார சத்தியமூர்த்தி என்றார்! பிராந்தி கடை சத்தியமூர்த்தியா..? என்றார்..! அட ஆமா அவரேதான்...! சரி நான் யோசனை பண்ணிச் சொல்றேன் என்றார்.

சத்தியமூர்த்தியைப் பற்றி ஊருக்கே தெரியும் பரம்பரையே சராயக்கடை கள்ளுக்கடையின்னு நடத்தியவங்க...!தனியார் கடையிருக்கையில பல கடை நடத்தி பணம் சம்பாதிச்சு பெரிய ஆளா ஆயிட்டாரு இன்னிக்கு கவர்மெண்ட் கடைய எடுக்கவும் வேறவேற தொழில்ல இறங்கிட்டாங்க...முறையா சில வியாபாரம் முறையில்லாம பல வியாபாரம்ன்னு தில்லுமுல்லு ஆளு...! ஏனோ அந்த மாதிரி ஆளுக்கு நிலத்தைக் கொடுக்க விருப்பமில்லை...!இராமசாமிக்கு.கிராமத்து மக்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் நிலம், வீடு, வாகணம் போன்றவற்றை தனக்கு பிடித்தவர்களிடமே விற்பனை செய்வார்கள், நகரம் போல யார் வந்து கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள், அதுவும் இராமசாமியின் ஊரில் ஜாதிக் கட்டுப்பாடும் உண்டு வேறு ஜாதியினருக்கு கொடுக்கக்கூடாது என்று, அந்த கட்டுபாட்டை இதுவரை யாரும் மீறியது கிடையாது.

இறங்கும் இடம் வந்தவுடன் இருவரும் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்...கருப்புசாமி விடாமல் நிலத்தை பிராந்திகடைக்காரனுக்கு முடிப்பதிலே குறியாக இருந்தார், பலவாறு சொல்லியபடி வந்தார், மேல வேனும்ன்னாலும் வாங்கிக்கலாம் என மனதை கரைக்கப் பார்த்தார் ஆனால் ராமசாமி வெடுக்கென்று அடுத்தவர் மனம் நோகும்படி பேசி பழக்கமில்லாதவர் என்பதால் நான் நல்லா யோசனை பண்ணி மருமகன்,மகளிடம் கேட்டு பதில் சொல்லுவதாய் அவரின் நிலம் பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இறங்கும் இடம் வந்ததும் இருவரும் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள், கருப்புசாமி இடைவிடாமல் நிலத்தை சத்தியமூர்த்திக்கு முடிப்பதிலேயே குறியாக இருந்தான் திரும்ப..திரும்ப...அவன் அதை பற்றியே பேசுவது அவருக்கு அயற்சியாக இருந்தது. இருவரும் கனகு வீட்டையடைந்தனர் நெருங்க...நெருங்கவே கொட்டுச் சத்தமும் அழுகுரலும் கலவையாகக் கேட்டது. கனகுவின் மகன் வெளியே சோகமாக நின்று கொண்டிருந்தான் அவனுக்கு கை கொடுத்து விட்டு போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள். சிறிது நேரம் கழிந்த பிறகு ஒரு பெரும் கூச்சலும் சலசலப்பும் ஏற்ப்பட்டது.....

(வாழ்க்கை தொடரும்)

35 comments:

கோவை நேரம் 8:25:00 PM  

மாம்ஸ்..சிறுகதை ன்னு சொல்லிட்டு ரொம்ப பெருசா போட்டுட்ட...

கேரளாக்காரன் 8:30:00 PM  

Superb...... Waiting for the part 2...... Awesome write up

முத்தரசு 8:36:00 PM  

சாரி நமக்கு கதை படிக்கிறது புடிக்காதுங்க - அடுத்த பதிவில் சந்திப்போம்

உணவு உலகம் 8:44:00 PM  

சுரேஷ், அருமையா எழுதியிருக்கீங்க. உயிரோட்டமான கதை.

Yaathoramani.blogspot.com 8:51:00 PM  

மனத்தை சங்கடப்படுத்திப்போனாலும்
ஸ்வாரஸ்யமாக ப் போகிறது கதை
தொடர வாழ்த்துக்கள்

வெளங்காதவன்™ 9:30:00 PM  

நெகிழ வைக்கும் நடை!

நிலத்தை விற்க நினைக்கும் விவசாயியின் மனதை அப்பட்டமாகப் படம்பிடுத்துள்ளது..

எனக்கு, மேலாண்மை பொன்னுசாமி+ கந்தர்வன் நடை ஞாபகம் வருது.

ரியலி கிளாசிக்....

நடத்துங்க மாம்ஸ்!

rajamelaiyur 9:38:00 PM  

உங்களுக்குள்ள எதோ இருக்கு ... அருமையான கதை .. தொடரட்டும்

வெளங்காதவன்™ 9:40:00 PM  

இன்னிக்கு நோ மோர் கும்மி!

யாராச்சும் கும்மி அடிச்சா கும்மிடுவேன் கும்மி!சொல்லிப்புட்டேன்.

MARI The Great 11:04:00 PM  

மனதை தொட்டது.!

கோவி 4:57:00 AM  

வாழ்க்கை தொடரட்டும்.

Unknown 5:27:00 AM  

மாம்ஸ் பதிவு ரொம்ப நல்லா இருக்கு, பிளாக்குல எழுதும் போது வேணா இவ்வளவு டீடெய்லா ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதலாம், ஆனா வாரமலர் மாதிரி புக்குக்கு அனுப்பனும்னா நிகழ்வுகள சுருக்கமா நச்சுன்னு சொல்லனும்னு எதிர்பார்ப்பாங்க, மத்தபடி சூப்பர் மாம்ஸ் தொடருங்கள்

Anonymous,  6:15:00 AM  

நல்லா வந்திருக்கு...ரசித்தேன்..தொடருங்க..

அதுசரி படத்துல கருப்புசாமி...ராமசாமி...

மங்கள் சிங் மாதிரி இருக்காங்களே...அவ்வ்வ்வ்

”தளிர் சுரேஷ்” 7:12:00 AM  

அழகான நடையில் அருமையான கதை! வாழ்த்துக்கள்!

Gobinath 7:24:00 AM  

மண்வாசனை நெஞ்சை நெருடுகிறது. அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்....

Unknown 8:05:00 AM  

@கோவை நேரம்மாம்ஸ்..சிறுகதை ன்னு சொல்லிட்டு ரொம்ப பெருசா போட்டுட்ட...
/////////////////////
ஒரு ஆசை...விரிவா எழுதனும் என்று...!

Unknown 8:08:00 AM  

@மௌனகுருSuperb...... Waiting for the part 2...... Awesome write up
/////////////////////
நன்றி! வருன்!

Unknown 8:09:00 AM  

@மனசாட்சி™சாரி நமக்கு கதை படிக்கிறது புடிக்காதுங்க - அடுத்த பதிவில் சந்திப்போம்
/////////////////
ஓகே......!மாம்ஸ்!

Unknown 8:09:00 AM  

@FOOD NELLAIசுரேஷ், அருமையா எழுதியிருக்கீங்க. உயிரோட்டமான கதை./////////////
நன்றிங்க....!சார்!

Unknown 8:10:00 AM  

@Ramaniமனத்தை சங்கடப்படுத்திப்போனாலும்
ஸ்வாரஸ்யமாக ப் போகிறது கதை
தொடர வாழ்த்துக்கள்
/////////////////////
நிதர்சனங்கள் எப்பொழுதும் வலிக்கும்! சார்.......!

Unknown 8:12:00 AM  

@வெளங்காதவன்™நெகிழ வைக்கும் நடை!

நிலத்தை விற்க நினைக்கும் விவசாயியின் மனதை அப்பட்டமாகப் படம்பிடுத்துள்ளது..

எனக்கு, மேலாண்மை பொன்னுசாமி+ கந்தர்வன் நடை ஞாபகம் வருது.

ரியலி கிளாசிக்....

நடத்துங்க மாம்ஸ்!
///////////////////
பங்கு நீங்க எப்பவும் கிண்டல்தான் அடிப்பீங்க...நீங்க பாராட்டியது என்னால நம்ப முடியலை!

Unknown 8:13:00 AM  

@"என் ராஜபாட்டை"- ராஜாஉங்களுக்குள்ள எதோ இருக்கு ... அருமையான கதை .. தொடரட்டும்
////////////////////
நன்றி ராஜா!

Unknown 8:14:00 AM  

@வரலாற்று சுவடுகள்மனதை தொட்டது.!
//////////////////
மிக்க நன்றி சார்!

Unknown 8:14:00 AM  

@கோவிவாழ்க்கை தொடரட்டும்.
////////////////
நன்றிகள் சார்!

Unknown 8:16:00 AM  

@இரவு வானம்மாம்ஸ் பதிவு ரொம்ப நல்லா இருக்கு, பிளாக்குல எழுதும் போது வேணா இவ்வளவு டீடெய்லா ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதலாம், ஆனா வாரமலர் மாதிரி புக்குக்கு அனுப்பனும்னா நிகழ்வுகள சுருக்கமா நச்சுன்னு சொல்லனும்னு எதிர்பார்ப்பாங்க, மத்தபடி சூப்பர் மாம்ஸ் தொடருங்கள்
////////////////
உண்மைதான் கொஞ்சம் விரிவா எழுதி எடிட் செய்து அனுப்பலாம் என்று இருந்தேன் அனுப்ப மனசு வரலை..அப்படியே பிளாக்குல போட்டுட்டேன்...நன்றி சுரேஷ்!

Unknown 8:19:00 AM  

@ரெவெரிநல்லா வந்திருக்கு...ரசித்தேன்..தொடருங்க..

அதுசரி படத்துல கருப்புசாமி...ராமசாமி...

மங்கள் சிங் மாதிரி இருக்காங்களே...அவ்வ்வ்வ்
//////////////////
கதை நடப்பது ஈரோடு மாவட்டத்தில் இங்கே சாமியில்லாத பெயர் இருப்பதில்லை ரெவரி சார்...! பழனிசாமி,ராமசாமி,குப்புசாமி, என பெயரில் சாமி சேர்ப்பது இந்த வட்டாரத்தில் அதிகம்! என்றாலும் இது எதிர்பாராமல் நடந்தது!கருத்திட்டமைக்கு நன்றி சார்...!

Unknown 8:20:00 AM  

@s sureshஅழகான நடையில் அருமையான கதை! வாழ்த்துக்கள்!
//////////////////
மிக்க நன்றிகள் சார்..!

Unknown 8:21:00 AM  

@Gobinathமண்வாசனை நெஞ்சை நெருடுகிறது. அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்....
/////////////////////
நன்றிகள் சார்...!

சக்தி கல்வி மையம் 8:57:00 AM  

ரியலி சூப்பர் மாம்ஸ்...

Manimaran 10:18:00 AM  

கதை உயிரோட்டமா இருக்கு ...வெல்டன்...அடுத்தப் பகுதி எப்போ?

கலாகுமரன் 2:30:00 AM  
This comment has been removed by the author.
கலாகுமரன் 2:54:00 AM  

கதை கோர்வையா நல்லா இருக்கு அப்புரம் இரவு வானம் சொன்னமாதிரி எடிட் பண்ணிராதிங்க சுவாரசியம் கெட்டுடப் போவுது. ஒரு கிராமத்தானுடைய இன்னசென்ட் நடையில் பளிச்சிடுகிறது. கதையை படிக்கும் போது எனக்கு அந்த இடத்தில் இருப்பது போன்றே தோன்றுகிறது. பெரியவர் நம்மிடம் பேசுவது போன்ற கோணம் மிக அருமை. கிராமத்து சூழ்நிலைய பளிச்சுனு சொல்றீங்க. எனக்கு இந்த கதைய படிச்சு ரொம்ப இம்ப்ரசிவ் ஆகிட்டேன்.

நாய் நக்ஸ் 6:09:00 AM  

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

கவிதை,கதை,.....போயா.....

sakthi 7:46:00 PM  

தொடரை எதிர்பார்த்து ,,,,,,,,,,,,
சூப்பர்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP