அன்னக்கொடி கொட்டாவி வந்ததடி......!

>> Friday, June 28, 2013


ஆடுமேய்க்கும் கூட்டத்தில் கொடிவீரன் என்ற தலித் இளைஞனும் அன்னக்கொடி என்கின்ற மேட்டுக்குடி இளைஞிக்கும் ஏற்படுகின்ற ஒரு மென்மையான காதலை அழகான ஒளி அமைப்புடன்; கொஞ்சம் மொன்னையாக எடுத்திருக்கின்றார் பாரதிராஜா!

சில இடங்களில் கலைஞர் டிவி சீரியலை ஞாபகப்படுத்தி கொட்டாவி மேல் கொட்டாவி வந்து தாடை வலிக்கின்றது. காதல் காட்சிகளில் கூட தம்மடிக்கப் போகின்றார்கள். பாடல்கள் ஒண்ணு கூட மனசில... ஒட்டவில்லை.....!

மனோஜின் நடிப்பு மிகையாக இருந்தாலும் படத்தை தாங்கி நிற்பதில் உதவுகின்றது. இருபது வயது கார்த்திகா நடிப்பிலும் முதிர்ச்சி உடலிலும்...! இறுதிக் காட்சியில் பாயை விரித்து படுத்து பாவாடையை முழங்காலுக்கு மேல் தூக்கி "புருசன்தானே நீ...? வாடா...!" என்கின்ற இடத்தில் அதிர வைக்கின்றார்....! 

பெண் கேட்டுச் செல்லும் கொடிவீரனையும் அவனுடைய தந்தையையும் கார்த்திகாவின் அம்மாவும், ஊர் மக்களும் வன்கொடுமை செய்யும் காட்சி நம்மை நிமிர வைக்கின்றது ஆனால் அதன் பின் வழக்கமான தமிழ்ப் படமாக சைக்கோதனமான காட்சிகளும்....நாடக தன்மையும் நம்மை எரிச்சலுற வைக்கின்றது. இந்த காட்சியில் துளி கூட லாஜிக் இல்லாதது ஒரு பெரிய குறை கதை நடப்பது அறுபது...எழுபதுகளில். கிராமத்தில் இவர்கள் இன்ன சாதி என்பது பத்து ஊர் தாண்டினாலும் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் பிறகு எப்படி பெண் கேட்டு போகின்றார்கள்..?

அன்னக்கொடியை காதலிக்கும் கொடிவீரன் ஒரு தலித் (செருப்பு தைப்பவர்). அவர் தொடர்பான கொடுமைப் படுத்தப்படும் காட்சிகளில் எல்லாம் செருப்பை குளோசப்பில் காட்டுவது என்ன யுத்தி என்றே தெரியவில்லை தமிழ் ரசிகர்கள் இன்னும் முட்டாள்கள் இல்லை ஜீனியஸ்.


உடல் துணிகள் உருவப்பட்டு அரை நிர்வாணமாக ஓடித் தப்பிக்கும் கார்த்திகா, கொடிவீரனின் கூழ் நனைந்த விரல்களை சப்புவது, மீனாளின் ரவிக்கையில்லாத நிர்வாணம் என கிளுகிளுப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. இருந்து என்ன பண்றது...?

நல்ல கதைக்களம், அழகான காதல் காட்சிகளுக்கான வாய்ப்பு நிறைய சம்பவங்களை புகுத்தக் கூடிய வாய்ப்பு என அனைத்தும் இருந்தும் ஏனோ வரட்சியான ஒரு திரைப்படத்தையே பாரதிராஜாவால் நமக்கு தரமுடிந்திருப்பது பெருஞ்சோகம். டிரைலரில் பாரதிராஜா நடித்துக் காட்டிய காட்சிகளைப் பார்த்த பாதிப்பா எனத் தெரியவில்லை மனோஜ், கார்த்திகா தவிர அனைவரும் பாரதிராஜா நடித்துக் காட்டியபடியே நடித்திருப்பதாக தோன்றுகின்றது அவர்களிடம் பாரதிராஜாவின் சாயல் தெரிகின்றது அதுவே நம்மை நெளிய வைக்கின்றது....படத்தின் டைட்டில் ஹீரோவிடம் கூட உணர்ச்சியேயில்லை....!

பாசத்துக்குறிய பாரதிராஜா எங்களை விட்டுடுங்க மீமீமீ..........பாவம்...!


Read more...

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

>> Monday, June 3, 2013


குடி குடியை கெடுக்கும் குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்னடா இது...? சாத்தான் வேதம் ஓதுகின்றது! என்று நீங்கள் சிரிப்பது புரிகின்றது… மேலும் படியுங்கள் ஏன்? இப்படிச் சொல்கின்றேன் என்று புரியும்.

நான் இப்பொழுது இருக்கும் இடம் அரசின் 'டாஸ்மாக்' கடை அருகில் இருப்பதால் பலதரப்பட்ட குடிமகன்களை தினந்தோறும் பார்ப்பது வழக்கம். அவர்களின் அன்றாடச் செய்கைகளைக் காணும் போது மிக சுவாரஸ்யமாக இருந்த போதிலும் நான் குடிப்பதை கொஞ்சம்…கொஞ்சமாக வெறுக்கவே தொடங்கிவிட்டேன்.

நான் தினமும் பார்க்கும் மனிதர்கள் செரிமானத்திற்காக குடிக்கும் பணக்காரர்கள் அல்ல! உடல் வலிக்காக குடிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் அல்ல! பிறந்த நாள் மகிழ்ச்சிக்காக பியர் அருந்தும் இளைஞர்கள் அல்ல! குடியையே தொழிலாக கொண்ட விளிம்பு நிலை மனிதர்கள்.


இவர்கள் எந்த வேலைக்கும் செல்வதி்ல்லை, குடிப்பதற்காக வீட்டில் மனைவியிடமோ…! மகனிடமோ…! பணம் வாங்கிக்கொண்டு சரியாக காலை பத்து மணிக்கு கை நடுக்கத்துடன்  கடையை முற்றுகையிடுகின்றார்கள். சரியாக நான் கணக்கிட்டதில் ஒரு முப்பது நபர்கள் இந்த மாதிரி இருக்கின்றார்கள். குடிப்பழக்கத்தை அதிகமாக கொண்ட மேற்கத்திய நாடுகளில் கூட மது வியாபாரத்தின் மூலம் அரசாங்கம் இயங்குவதில்லை. ஆனால் நம்மை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் மது வியாபரத்தின் மூலமே இயங்குகின்றது என்பதை நினைத்துப் பார்க்கும் போது நாம் தலை குனிய வேண்டும். அதுவும் இது போன்ற மது அடிமைகள் உருவாகுவது நமது இனத்தையே கேவலப்படுத்தும்.

இந்த மது அடிமைகள் கொஞ்சம்…கொஞ்சமாக… மனநோயாளிகளாக மாறிவருகின்றார்கள். உண்மைதான் நேற்று ஒரு சம்பவம். தள்ளாடியபடி சாலையின் போக்குவரத்தை தடை செய்த குடிமகன் ஒருவரை ஒரு காவலர் தடியை ஓங்கிக்கொண்டு அடிக்க வரும் போது கம்பீரமாக நின்று “அடி….அடி….“என்று சட்டையைக் கழட்டி நெஞ்சை நிமிர்த்தி “நீயே விக்குற நீயே அடிக்கற அடி“ என்று நிற்கின்றார். காவலரே திகைத்துப் போய் விட்டார் போய்யா ஓரமா என்ற படி சென்று விட்டார்.

இவர்கள் சரியாக காலை வந்தவுடன் இரண்டிரண்டு பேராகக் கூடி ஒரு 'கோட்டர்' மட்டமான சரக்கை வாங்கி பகிர்ந்து அருந்துகின்றார்கள், எதுவும் சாப்பிடுவதில்லை நிழல் கண்ட இடத்தில் அமர்ந்து 'ஒபாமா' முதல் கிரிக்கெட் சூதாட்டம் 'ஸ்ரீசாந்த்' வரை அலசுகின்றார்கள். பிறகு மதியம் பன்னிரண்டு மணியளவில் மீண்டும் ஒரு சுற்று. மதியம் வீட்டுக்கு ஒரு சிலர் போவார்கள், ஒரு சிலர் அங்கேயே ரோட்டோரக் கடைகளில் எதாவது வாங்கிச் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துப் புரண்டு கொண்டிருக்கின்றார்கள்.

பிறகு மூன்று மணிக்கு ஒரு சுற்று, இரவு கடை மூடும் போது ஒரு சுற்று என்று அதோடு அன்றைய ஆட்டத்தை முடித்துக் கொள்கின்றார்கள். ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது மகன்களே மது அருந்த பணம் தருவதாகவும். சிலர் மனைவி, குழந்தைகள் என வேலைக்குப் போக அவர்கள் கொண்டு வரும் வருமாணத்தை வைத்து சரக்கடிப்பதாகவும், ஒரு சிலர் சின்ன..சின்ன.. வேலைகள் செய்கின்றார்கள் சுண்ணாம்பு அடிப்பது, காலி இடங்களில் உள்ள புற்களை சுத்தம் செய்வது என்று 'சரக்கு'க்கு அளவாக மட்டும் வேலை செய்கின்றனர்.


சில நேரங்களில் அந்த குடி 'அகோரி'களுக்குள் சண்டை வந்து விடும் இரத்தம் வர அடித்துக் கொள்கின்றார்கள், ஆனால் அடுத்த நாளே தோளில் கை போட்டுக் கொண்டு நண்பேன்டா என்று திரிகின்றார்கள். இவர்கள் கூறும் தத்துவத்தை நாம் தலைகீழாக நின்றாலும் சொல்ல முடியாது. அரசியலை கரைத்துக் குடித்திருக்கின்றார்கள், ஒருவர் சேக்ஸ்பியர் தொடங்கி எஸ்.ரா வரை விவாதிக்கின்றார். பட்டினத்தார் பாடல்களை எந்த தடுமாற்றமில்லாமல் சொல்கின்றார் ஒருவர். ஒவ்வொரு குடிமகனும் ஒரு 'சாக்ரடிஸ்' போல...அறிவுக் களஞ்சியமாக இருக்கின்றார்கள். அந்த தத்துவ ஞானிகளுக்கு விஷத்தை தருவதற்கு பதிலாக குப்பியில் குடல் வேகும் ஸ்பிரிட்டை கொஞ்சம்....கொஞ்சமாக நமது அரசு தந்து கொண்டிருக்கின்றது, இந்த அடிமைகள் இருக்கும் வரை கஜானா நிரம்பி வழியும்...அதே அளவு சுடுகாடும் நிரம்பும்.

*படங்கள் கூகுளில் இருந்து பெறப்பட்டது*

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP