கடைசித் துளி மது! - சிறுகதை

>> Tuesday, May 27, 2014


(உண்மை சம்பவங்களின் அடிப்படையில்)
பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமர்ந்து இருப்பது ரம்யமாக இருக்கின்றது. வானில் நட்சத்திரங்கள் மினுமினுக்கின்றது... நிலா மேகங்களின் பின்னே ஒளிந்து ஒளிந்து விளையாடுகின்றது. இது என்ன ஒரு குளுமையான பனி காலம் போல் இந்த வெயில் கால இரவு இருக்கின்றது. மலருடன் நான் இருந்த காலம் இப்படித்தானே இருந்தது. மலர் எப்படியிருப்பாள் தெரியுமா..? புசுபுசுவென்ற கன்னம் அவளுக்கு... அடிக்கடி கிள்ளச் சொல்லும். அவ்வளவு அழகு அவள்! ஒரு குழந்தைமை அவளிடத்தில் இருக்கும், முதன் முதலாக காதலைச் சொல்ல நான் பெரிய துன்பமேதும் படவில்லை விளையாட்டுப் போல.....மிதமான போதையில் வாசனை பாக்குப் போட்டுக் கொண்டு இங்க பாரு நான் உன்னை லவ் பண்றன்டி நீ என்ன சொல்ற...?” என்று வழியை மறித்து முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டேன். போதை எனக்கு இரண்டு ஆள் தைரியம் கொடுத்திருக்கின்றது. அதே போதை என் வாழ்க்கையை சூன்யமாக்கியும் விட்டது, என்னடா இது குடிகாரனின் உளறல் எனக் எண்ணிக் கொண்டு நக்கலடிக்க வேண்டாம்... குடிகாரனின் பேச்சில் எப்பொழுதும் ஒரு உண்மை இருக்கும், சரி நான் எதற்கு திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தின் யாருமற்ற மொட்டை மாடியில் தனியாக அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றேன் தெரியுமா..?

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன். என்னடா ஒரு பெக் அடிக்கப் போகின்றேன் என்று சொல்வது போல் சாதாரணமாக சொல்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா...? வாழ்க்கை வெறுத்து விட்டது. துன்பமே என் வாழ்வில் வந்ததால் என பிலாசபி பேசி உங்களை அறுக்க விரும்பவில்லை! உண்மையில் நிரம்ப...நிரம்ப கோப்பையில் தழும்ப..தழும்ப இருக்கும் மதுவைப் போல் என் வாழ்வில் இன்பம் மட்டுமே தழும்ப....தழும்ப கிடைத்தது....ஆனால் தற்கொலை ஏன் செய்து கொள்கின்றேன் தெரியுமா…? மலர் என் வாழ்வில் இழக்கக் கூடாத இன்பம் அதை தொலைத்து விட்டேன்....இனி என்ன இருக்கின்றது வெறுமை மட்டுமே மிச்சம் இருக்கின்றது. இவ்வெளியில் நானும் ஒரு சீவனாய் வாழ்வதற்குறிய ஆசை என் மனதில் இருந்து அகன்று விட்டது.

என்னுடைய தற்கொலை மிக அழகாக அமைய வேண்டும். மரணம் கூட அழகாக அமைவது சிலருக்குத்தான்....உறங்கும் போது சிரித்தபடியே இறந்திருப்பார்கள். துன்பத்தில் உழன்று பல்லை வெறுவியபடி மரணத்தின் வலியை உணர்ந்து, துடித்து இறந்திருப்பார்கள். அவர்கள் பாவப்பட்ட ஆன்மாக்கள் சொர்க்கம், நரகம் இரண்டும் இறந்தபிறகு காண்பதல்ல இங்கேயே இருக்கின்றது. ஒரு பெண்ணை சுகிப்பது சொர்க்கம்...அதே பெண்ணை திருமணம் செய்வது நரகம். குடிப்பது சொர்க்கம் போதை இறங்கிய பிறகு நரகம்... கை கால்கள் வெடவெடவென்று நடுங்குகின்றது... ஒரு துளி சரக்கு தொண்டையில் நனைந்த பிறகு நடுக்கம் நிற்கின்றது. அந்த கைகால்கள் நடுங்கும் போது உடல் வலி உயிர் போகும் வேதனைத் தருகின்றது. மருத்துவ உலகம் அதை நரம்புத் தளர்ச்சி என்கின்றது.

போதைக்கு அடிமையான பிறகு ஆண் குறிகளுக்கு வேலையில்லாமல் போய்விடுகின்றது, பெண் இல்லை போதை இரண்டில் எதாவது ஒரு விரலைத்தான் நாம் தொடமுடியும்! சாத்தான் அவ்வளவு நுட்பமானவன்...எதையும் இரண்டாக தருவதில்லை! 

அதுவுமில்லாமல் சாலையில் விழுந்து புரண்டு துணிகள் அழுக்கடைந்து தலைமுடி எல்லாம் பிசுபிசுத்துப் போய் புளித்த நாற்மடிக்கும் ஒரு ஆடவனை பிச்சைக்காரி கூட கூப்பிடமாட்டாள். நானும் ஒரு காலத்தில் குளித்து, பவுடர் அடித்து, பாடி ஸ்பிரே கிக்கத்தில் அடித்து, டக் இன் செய்து பளபளப்பான கட் ஷூ போட்டுக் கொண்டு கம்பனி கொடுத்த பைக்கில் போய் இறங்குவேன்...ரிசப்ஷனில் இருக்கும் மாலதி காதலுடன் சிரிப்பாள்....வா என்று கூப்பிட்டாள் வந்து படுப்பாள், இன்று வருவாளா...? ஒரு நாள் எதிரில் நான் வந்த பொழுது என்னை உருகி....உருகி காதலித்தவள்.... இதழோடு இதழ் பதித்து எத்தனை நாட்கள் எத்தனை முத்தம் கொடுத்திருப்பாள்....பத்தடி தள்ளி நடந்தாள் எங்கேயோ பார்த்துக் கொண்டு...போகின்றாள். மாலதி.....என்னடி கண்டுக்காம போற....என்ற என்னை ஒரு புழுவைப் போல் கரப்பான் பூச்சியைப் போல், பல்லியைப் போல், இல்லாமல் அதை விட கேவலமாக...பார்த்தாள்! அருவருப்பான பிராணியாகப் அவளுக்குத் தோன்றியிருப்பேன்.

பேசியிருந்தாலும் நான் அவளிடம் காதலுடனா பேசப் போகின்றேன் ஒரு நாற்பது ரூபாய் பணம் கேட்பேன் ஒரு கட்டிங்க்குத்தான் கேட்பேன். நான் பழைய நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் கட்டிங்க்கு பணம் குடுஎன்றுதான் கேட்கின்றேன். எனக்கே கேவலமாக இருக்கின்றது என்ன செய்ய...? உடல் நடுங்குகின்றது...வலி உயிர் போகின்றது... குடிக்க வேண்டும் அதுதான் மருந்து....நான் ஒரு வாரத்திற்கு முன் ஒரு நான்கு இட்லி தின்றதாய் நியாபகம்! ஆனால் சரக்கு குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். மிதமான போதை தலையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்த ஒரு பொழுதில்தானே நான் மலரைத் தொலைத்தேன்....என் குழந்தையை சொல்லச் சொல்ல கேட்காமல் அனாதை ஆசிரமத்தில் சேர்த்தார்கள், என் குழந்தை எப்படியிருக்கின்றாளோ...?

நான் மலருடன் வாழ்ந்த காலத்தில் நான் தொழில் கற்றுக் கொடுத்த பசங்க ஒரு காலத்தில் குரு....குரு...என்று அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள்...இன்று என்னைக் கண்டால் வழியை மாற்றி ஓடிப் போகின்றார்கள்...! ஒரு தடவை தொழில் கற்றுக் கொடுத்தற்கு காலம் முழுவதும் நாற்பது ரூபாய் அழமுடியுமா...?

அது மட்டுமல்லாமல் மலரை நான் கொன்று விட்டேன் என்கின்றார்கள். நான் என் உயிரை எப்படிக் கொல்ல முடியும்...? அது எப்படிச் சாத்தியமாகும்? நண்பர்கள் கூட என்னை வெறுக்கின்றார்கள்.

அந்த நாள் சீழ் பிடித்த புண்ணை ‘ஈ துளைத்துக் கொண்டேயிருக்கும் வேதனையைப் போல் என்னை அந்த நினைவு அரித்துக் கொண்டேயிருக்கின்றது… குற்ற உணர்ச்சி என்னை கொல்லுகின்றது…குழந்தையும் மலரும் விடிய...விடிய காய்ச்சலுடன் கிடந்தார்கள் மிக அதிகமான போதையில் இரவு முழுவதும் கிடந்த எனக்கு எதுவும் தெரியவில்லை....காலையில் எழுந்து பார்த்த பொழுது முனகியபடி கிடந்தாள்...தொட்டுப் பார்த்தேன் உடம்பு நெருப்பு மாதிரி கொதித்தது. அவளுடைய முகம் என்றோ தேஜஸ் இழந்து விட்டது…காய்ந்து போன சருகாக கிடந்தாள்…காதல் திருமணம் செய்ததால் என்னை இரு குடும்பமும் ஒதுக்கி வைத்தால் ஆதரவுக்கு யாருமில்லை....மலர் குடும்பம் பெரிய குடும்பம் மட்டுல்ல அழகானது கூட...அந்த கூட்டை சிதறடித்த பெருமை என்னையே சேரும்...நான் வேலை செய்த ஆட்டோமொபைல் கம்பனியில் சேல்ஸ் கேர்ளாக வேலைக்குச் சேர்ந்தாள் கொஞ்ச நாளில் என் மனதை திருடிக் கொண்டாள். நான் காதலை சொன்ன போது போதையில்தான் சொன்னேன்...எப்படி ஏற்றுக் கொண்டாள் என்று பல தடவை வியப்படைந்துள்ளேன். குடிகாரன் என்பது ஒரு பெரிய குறை மலருக்கு கிடையாது அவளே பல தடவை எனக்கு குடிக்க காசு கொடுத்திருக்கின்றாள்....நான் மாலதியை ஸ்டோர் ரூமில் வைத்து லிப் டு லிப் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததை நேரடியாக பார்த்தும் என் காதலை அங்கீகரித்ததுதான் உலக ஆச்சர்யம்! அதை விட ஆச்சர்யம் நான் மாலதியிடம் காதலிக்கின்றேன் என்றெல்லாம் சொன்னதில்லை…ஏதோ பிடித்துப் போக உறவு வரை கொண்டு சென்றது, நான் மலரை காதலிப்பது தெரிந்ததும் விலகிப் போனாள்! வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாள்! பெண்களுக்கு பிடித்தவனாகிப் போனால் அவனுடைய குற்றங்கள் திருமணத்திற்கு பின் தன்னால் நிவர்த்தி செய்யப்படும், அல்லது திருத்தப்படும் என்று முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள். வீட்டு நாய்க்கு என்னதான் பாலும் மோரும் ஊற்றினாலும்... தெருவில் மலத்தைக் கண்டால் நக்கிப் பார்க்கும்....அதைப் போலத்தான் ஆண் ஜெனமங்கள்... என்பதை பெண்கள் உணர மாட்டார்கள். நான் இன்று எச்சில் இலைகளுக்குள் தெரு நாய்களுடன் நாயாக போதையில் விழுந்து கிடந்திருக்கின்றேன்! பல வித வாடைகள் கலந்தமுடை நாற்றம் எப்பொழுதும் வீசும் உடம்பு, பார்வை கூசும் சிமிட்டும் கண்கள் என உங்களை அச்சப்படுத்தும் தோற்றமுடையவன் நான். ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்..... நான் பெரிய அழகன் எல்லாம் இல்லை மிக...மிக சுமாரானவன், மாநிறம், ஒழுங்கற்ற பல் வரிசை என இருந்தாலும்...என் பேச்சு மென்மையாகவும் வருடிக் கொடுப்பது போல இருக்கும்....அது பெண்களுக்கு பிடித்தமான பேச்சு....கத்திப் பேசுபவர்களை பெண்களுக்கு பிடிக்காது. கண்களை நேரடியாக பார்த்துப் பேசவேண்டும் நம் பார்வை தடம் மாறினால்....பெண்களின் மனதில் நம் மீது ஒரு தவறான பிம்பம் பதிந்து விடும், பின்பு நம்மை மனதில் கொண்ட பிறகு பிடித்த இடத்தைப் பார்ப்பதென்ன பிடித்தே பார்க்கலாம். நான் பேசுவது ஆபாசமாக இருப்பதாக கருதினால்...நீங்கள் இந்த உலகை சரியாக பார்க்கவில்லை என்று அர்த்தம்! இல்லை பெண்ணியவாதிகளுக்கு லைக் போட்டு....லைக் போட்டு... மடச்சாம்பிராணி ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆண்களுக்கு இருக்கும் காமம், கோபம், குரோதம், அன்பு, உணர்ச்சிகள் எல்லாம் மிகையாகவே பெண்களுக்கு இருக்கின்றது என்பதை முதன்முதலாக மலரை உடலுறவு கொண்ட போது உணர்ந்தேன். உட்சகட்டத்தில் என் தலைமுடியை பிய்த்தெடுத்தாள்....இரத்தம் வர என் உதட்டைக் கடித்தாள்...அமைதியாக தலையைக் குனிந்து போகும், வரும் பெண்ணா இவள் என ஆடிப் போனேன்! இரவு பகல் பாராது இன்பத்தை வாரிக் கொடுத்த தேவதை....ஒரு குழந்தை பிறக்கும் வரை....நான் அவளைக் கூட்டிக் கொண்டு ஓடிய பிறகு என்னோடு ஓடி விட்டாள் என்று யாரும் நம்பவில்லை, திரும்ப நாங்கள் வந்த போதுதான் நம்பினார்கள்....சிலர் உச்சுக் கொட்டினார்கள்.....அதற்கான காரணத்தை என்னோடு வாழ்ந்த நரக வாழ்க்கைக்கு பின் அவளுக்குப் புரிந்திருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை அழகாகத்தான் போனது... பெரிய சப்பாத்தியாக தேய்த்து பிஸ்கட் டப்பா மூடியை வைத்து வட்டமாக வெட்டி சப்பாத்தி போடுவாள், தோசை சுட்டாலும் பிசிரில்லாமல் முழு சந்திரன் போல் சுடுவது அவள் இயல்பு...எதிலும் நளினம், நேர்த்தி என இருப்பவள்...நானோ அதற்கு எதிர்மறை!

மாலை வீடு திரும்பும் போது நண்பர்களுடன் சிறிது குடித்துக் கொண்டு ஜாலியாக இருந்தவன் நான்! சில வருடங்களில் குடிக்காமல் இருக்கவே முடியாது என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். வேலைக்கே குடித்துக் கொண்டு போக ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள் என்னிடம் வீசிய புளிச்ச வாசத்தைக் கண்டுணந்து நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க ஒரு கெட்ட யோகம் கெட்ட தினத்தில் என் வேலையைப் பிடுங்கி கழுத்தைப் பிடித்து நடுத் தெருவில் நிறுத்தினார்கள்... ஒரே வாரத்தில் ஏழு கம்பனிகள் மாறினேன். குடிக்க பணம் இல்லாமல் திருட ஆரம்பித்தேன், நண்பர்கள் பாக்கட்டில் இருந்து, போதையில் மட்டையானவர்களிடம் இருந்து, மலர் வேலைக்கு போக ஆரம்பித்தாள்....அவளின் சம்பளத்தைக் கூட திருடிக் குடிக்க ஆரம்பித்தேன். நாகரிக நண்பர்கள் என்னை விட்டு விலகிப்போனார்கள், புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள் எப்படியாவது நாற்பது ரூபாய் தேற்றிவிட்டால் போதும்...யாராவது பாட்னர் மதுக்கடையே கதியென கிடப்பார்கள் ஒரு கோட்டரை வாங்கி சரிசமமாக பிரித்து ராவாக குடித்தால் கொஞ்சம் சுறுசுறுவென்று இருக்கும்...தண்ணீர் கலந்தால் இப்பொழுது போதை ஏறுவதேயில்லை...! ஐஸ் கட்டி போட்டு...சிக்கன் லெக் பீஸை கடித்துக் கொண்டே ரெஸ்டாரண்ட்டில் குடித்த காலம் எங்கே...? இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது...இன்று சைட் டிஸ் ஊறுகாய் மட்டுமே அதுவும் சரக்கு கசப்புத் தெரியாமல் இருப்பதற்கு துளி நக்கிக் கொள்ள மட்டுமே!

மலரை தொலைத்த பிறகு பெரும்பாலும் நான் குடியிருப்பது ஒயின்ஷாப் வாசலில்தான் யாராவது நண்பர்களை கெஞ்சிக் கூத்தாடி பணம் வாங்கிக் குடிப்பேன்... இல்லை எப்பவும் ஒயின்ஷாப் வாசலில் கிடக்கும் என்னுடைய பாட்னர்கள் மட்டையாகிக் கிடப்பவனிடம் பணம், செல்போன் எது கிடைத்தாலும் ஆட்டையப் போட்டு விடுவார்கள். திருட்டு செல்போனை வாங்குவதெற்கென்றே டாஸ்மாக்கை சுற்றி நான்கைந்து செல்ப்போன் கடைகள் இருக்கும். யார் பணத்தை அடித்தாலும் சரிசமமாக பிரித்து சரக்கு அடிப்போம்! மட்டையானவன் தெளிந்து எழும் போது அவன் கோவனம் மட்டுமே மிஞ்சும்.

மலரை அப்படியான ஒரு விருந்தில்தான் தொலைத்தேன்....! மலர் வேலைக்கு போகாமல் இரண்டு நாட்களாய்... முடங்கிக் கிடந்தாள். இரவு முழுவதும் முனகிக் கொண்டேயிருந்தாள்.....அவளுடைய காய்ச்சல் குழந்தைக்கும் தொற்றிக் கொள்ள....இருவரும் கொதிக்கும் உடம்புடன் கிடந்தார்கள். கையில் பத்துப் பைசா இல்லை...தெருவிற்கு வந்து பலபேரைக் ஒரு நூறு ரூபாய் கேட்டேன்...நான் குடிக்க கேட்பதாய் நினைத்து யாரும் தரவில்லை. அப்படியே பித்துப் பிடித்தவன் போல் வந்தவனை என்னுடைய சரக்கு பாட்னர்கள் வழிமறித்து யாரோ மட்டையான வியாபாரியிடம் இருந்த ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடி விட்டார்கள்...அப்பாடா நிம்மதி..! “பணம் ஒரு நூறு குடுங்க பாட்னர்” என்றேன். “தருகிறோம் பாட்னர் முதல்ல சரக்கு அடிக்கலாம்” என்றார்கள்....நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் பணம் தரவில்லை... “சரக்கு அடிப்போம் பிறகு பணம்” என்றார்கள்...அங்கே குடிக்க...குடிக்க... போதை தலைக்கேற... நான் மலரை மறந்து போனேன்! ஒரு கட்டத்தில் என்னால் நடக்க முடியாமல் நினைவிழுந்து நடு பாரில் விழுந்து கிடந்தேன். மாலை நிதானம் வந்த பொழுது மணி ஆறு அய்யோ....இரண்டு பேரும் காய்ச்சலில் கிடந்தார்களே என்னாச்சோ...?” என்று புலம்பியபடி வீட்டுக்கு ஓட்டமாக ஓடினேன் கதவு நான் சாத்தியபடியே இருந்தது, கதவைத் திறந்து பார்த்தேன் இருட்டாக இருந்தது கைகளால் துழாவி விளக்கைப் போட்டேன்..... காலையில் எப்படிப் படுத்திருந்தாளோ அதே நிலையில் கிடந்தாள் மலர்!

மலரு.....அடியேய் மலரு......என்றேன். என் கை, கால்கள் நடுங்கின அவளிடம் எந்த அசைவும் இல்லை... பக்கத்தில் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவளைத் தொட்டுப் பார்த்தேன் உடல் சில்லென்று இருந்தது.... அப்பொழுதுதான் கவனித்தேன் அவள் மூக்கு துவாரத்தில் இருந்து துளி இரத்தம் வந்திருந்தது.... அதை ஒரு செவ்வெறும்பு கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. மூடிய கண்ணுக்குள் இருந்தெல்லாம் எறும்புகள் சாரை....சாரையாய் அவளுடைய சதையை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது....அய்யோ....ஆண்டவா.....நான் வீட்டை விட்டுப் போனதும் மரணித்துவிட்டாள்....போதையில் மனைவி செத்தது கூடத் தெரியாமல் கிடந்திருக்கின்றேன்.....காலையில் இறந்து பிணமானவளை எறும்புகள் மொய்த்து கொண்டிருக்கின்ற கொடுமையை கண்ட நான் அலறினேன், என் அலறலைக் கேட்டுத்தான் அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்து குழந்தைக்கு உயிர் துடித்துக் கொண்டு இருந்தது 108 ஆம்லன்ஸ்க்கு அழைத்து குழந்தையைக் கொண்டு போனார்கள்... மலரின் உறவினர்கள் என்னை அடித்து உதைத்து கை,கால்களை உடைத்து தெருவில் எரிந்து விட்டுப் பிணத்தைக் கொண்டு போய் விட்டார்கள்... இரண்டு நாளாய் தெருவில் கிடந்த என்னைப் பழைய நண்பர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டுப் போய் விட்டார்கள்.

குழந்தையை மலரின் அண்ணன் தன்னால் வளர்த்த முடியாது என்று அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டானாம், அவன் வீட்டுக்கு போய் கேட்டால் சாகின்ற மாதிரி அடிக்கின்றான். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது அதனால்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இதோ சரக்கு ஒரு புல் பாட்டில் இருக்கின்றது...மட்டையான ஒருவனிடம் சில நூறு ரூபாய் இருந்தது. ஒரு புல் வாங்கி வந்து விட்டேன். என் நண்பன் ஒருவன் ஸ்கிரீன் மேக்கர் வைத்திருக்கின்றான்....அங்கே போய் அவன் வைத்திருந்த “அம்மோனியம் பைக்ராமெட்டை ஒரு நூறு கிராம் அளவுக்கு அவனுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். இந்த விஷத்தைத் தேர்ந்தெடுத்தற்கு காரணம் சத்திவேல் என்று ஒரு நண்பன் இருந்தான் பெண்கள் விசயத்தில மோசமானவன்... அவனுடைய பராமக்கிரகங்களை கதைகதையாகச் சொல்வார்கள்! ஆனால் அவன் மனைவி வேறு ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்தாள். ஒரு நாள் நேரடியாக தன் வீட்டில் பொண்டாட்டி வேற ஒருவனோட படுத்துக் கிடந்திருக்கின்றாள் இவன் கேட்டதுக்கு..... போடா ஒம்போது..... நீ சரியா இருந்தா நான் ஏன் அடுத்தவனோட படுக்குறேன்என்று சொல்ல இவன் ஆண் திமிர் அடங்கி கேவலமான புளுவைப் போல் உடைந்து போனான். இவன் ஊர் பெண்களுக்கெல்லாம் இன்பத்தைக் வாரி..வாரிக் கொடுத்தவன் தன் வீட்டை கவனிக்கவில்லை.... இதே விஷத்தை பீர்ல கலந்து குடிச்சுட்டு ஒருமணி நேரத்தில் மரணித்துப் போனான்.

அதனால எனக்கு இதுதான் சரியான தேர்வு என்று முடிவு செய்து திருடிட்டு வந்துட்டேன்.....! இதோ கலந்து வச்சுட்டேன் உங்ககிட்ட பேசிட்டே இரண்டு பெக்கு போட்டுட்டேன்....நல்லா ஜிவ்வுன்னு இருக்கு.... வயிறுதான் லைட்டா எரிச்சலா இருக்கு....இதைக் கலந்து சாப்பிட்டா குடல் அறுந்து உள்ள வயித்துகுள்யேயே... விழுந்துடுமாம்....இரத்தத்தில் கலந்தா....இதய இரத்த நாளங்களில் புகுந்து இதயத்தை அரிச்சு பொத்தலாயிடுமாம்.... வலியில்லாமல் உடனடி மரணம். மரண போதையில் ஒரு தனி சுகம்தான்....வானத்தில் இருந்து மலர் என்னைக் கூப்பிடுறா...? “வாடா ஆம்பளை மேல ஒயின்ஷாப் இல்ல என்னடா பண்ணுவே தேவடியா பையா...?” என்கின்றாள்......மலர்! இப்படித்தான் திட்டுவாள், கண்ணே...மணியேன்னு ஆரம்ப நாட்களில்தான் கொஞ்சினாள்..... பிறகு நான் முழுக்குடிகாரன் ஆன பிறகு யப்பா...என்ன மாதிரி பேசுனா... தண்ணி வாங்கிக் கொடுத்தா என்னைக் கூட கூட்டிக் கொடுப்பீடா தேவடியாப் பையா...அப்படிம்பா...! நான் மூத்திரம் பெய்யற குடி நல்லா போதையேரும் தேவடியாப் பையா.... நான் கஸ்டப்பட்டு சம்பாரிச்சு வச்ச காச எடுத்துட்டுப் போயி குடிச்சிருக்கிறியே....சாக வேண்டியதுதானே.....?” இப்படியெல்லாம் ஒரு படிச்ச பொண்ணு வாயில வருமான்னு நீங்க கேட்காதிங்க...வரும்! சூழ்நிலை மாறினால்...வரும்! எனக்கு வெறியேறி அடிச்சு சாத்தியிருக்கின்றேன்...! தானே தேர்ந்தெடுத்த வாழ்வு தானே பொறுப்பு என்று அடி உதையைப் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தாள்! எங்க வாழ்ந்தாள் இருந்தாள் நடை பிணம் போல....இன்னும் கொஞ்ச நேரத்துல நான் செத்துருவேன்னு நெனைக்குறேன்... மறுபடியும் ஒரு பெக்கு அடிக்கப் போறேன் டம்ளர் கூட தெரியல... எனக்கு கண்ணு கொஞ்சம் மசமசங்குது. இதோ இருக்கு இதுதான் என் கடைசி பெக்கு....
இந்த உலகத்துக்கு சியர்ஸ்...
இந்த ஒயின்ஷாப்புக்கு சியர்ஸ்...
என் பாட்னர்களுக்கு சியர்ஸ்......
யார் அது....? மங்கலா எனக்கு முன்னாடி நிக்குறது.....நாலு பேர் இருக்காங்க....கைய நீட்டி எதோ பேசறாங்க.... அய்யோ என்னை காப்பாத்தப் போறாங்களா....?அவங்க பேசறது எனக்கு கிணத்துக்குள்ள... கேட்குற மாதிரி கேட்குது....பரிட்சையமான குரலாகத் தெரிகின்றது......அய்யோ மிச்ச சரக்க எடுத்துக் குடிக்கறாங்களே.... அதுல வெஷம் கலந்திருக்குறேன்.......அதுல ஒருத்தன் பக்கத்துல வர்றானே.....

என்ன பாட்னர் புல் பாட்டில வச்சுக்கிட்டு எங்களைக் கூப்பிடல.....

அதுல வி.....வி......விஷம் கலந்துருக்குறேன்....குடிக்க வே.....வேண்டாம்........."

"போங்க பாட்னர்....உங்களுக்கு சுயநலம் ஜாஸ்தியாகிடுச்சு.....

“நாலு பேரும் சரக்க ஊத்திக் குடிக்கறாங்களே.......நான் சொல்றது அவங்க காதுல கேட்கலையே.........இப்ப நான் என்ன பண்ணுவேன்......கண்ணு வேற இருட்டிக்கிட்.........”
Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP