தேரடி வீதியில் சில தேவதைகள்....!

>> Sunday, January 13, 2013ச்சேரி மேட்டில் இருந்து சைக்கிளை துளியளவு கூட மிதிக்காமல் பறந்தது.....கதிரு மிதிக்க நான் பின்னால் இருந்து தாண்டுகால்ப் போட்டு மிதிக்க, தறி கெட்ட குதிரை வண்டி மாதிரி பறந்தது...! நாங்க எங்க ஊர்ல இருந்து பதினைந்து கிலோ மீட்டர் பயணித்து செல்லும் இடம் பாரியூர் கோவில் திருவிழாவிற்கு! சுற்றிலும் உள்ள வயல்களுக்கு நடுவில் பாவானி ஆற்றின் கிளை வாய்க்கால் கரையில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது இந்த அம்மன் கோவில், வருடம் ஒரு முறை நடக்கும் திருவிழாவிற்கு சுற்றுப் புறமிருந்து பல கிராமங்களில் இருந்து மக்கள் பொங்கல் வைக்கவும், பூ மிதிக்கவும், தீர்த்தம் எடுக்கவும், மக்கள் இக்கோவிலை வருடத்தின் ஒரு மாதத்தில் மையமாக கொண்டு கூடுவார்கள். 

நாங்கள் செல்வது இதில் ஒன்றைக் கூட செய்வதற்கில்லை! நாங்கள் செல்வது “சைட் அடிக்க” பல ஊர் தேவதைகள் கோவிலை வலம் வர , நாங்கள் தேவதைகளை வலம் வரவே சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்கின்றோம். 

இன்று விடிய விடிய இசைக்கச்சேரி, எல்.ஆர்,ஈஸ்வரியின் “செல்லாத்தா செல்ல மாரியாத்தா...” பாடலில் துவங்கும் கச்சேரி நடு இரவிற்கு பிறகு காலேஜ் பீடி, வில்லேஜ் பீடி கம்பனிகாரர்களின் தயவில் சினிமா பாடல்களுடன் களை கட்டும், விடியக்காலை மூன்று மணி வரைக்கும் நடக்கும் கச்சேரிக்கு மகுடிக்கு மயங்கிய பாம்புகளாக ஜனங்கள் அமர்ந்திருக்க நாங்களும் தேவதைகளை “சைட்” அடித்துக் கொண்டு கிண்டல், கேலி பேசிக் கொண்டு வலம் வருவோம்.

அப்படியான ஒரு திருவிழாவிற்கு தேவதை தரிசனத்திற்காக எங்கள் வாகனம் இறகு இல்லா குதிரையாக கோவிலை நோக்கி பறந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் கோவிலை அடைந்த நாங்கள் தற்காலிகமாக வயலில் போட்டிருந்த சைக்கிள் ஸ்டேண்டில் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கோவில் பின்னால் உள்ள வாய்க்கால் நீரில் கை,கால் முகம் கழுவி களைப்பை போக்கிக் கொண்டு, கையோடு கொண்டு வந்திருந்த பாண்ட்ஸ் பவுடர் கொட்டி வந்த பொட்டலத்தைப் பிரித்து முகத்துக்கு கொஞ்சம் தீற்றி அழகு படுத்திக் கொண்டு பிரகாரத்துக்குள் நுழைந்தோம்.

நீண்ட வரிசையில் இருந்த மக்களிடையே நாங்களும் நின்ற போதுதான் எங்களுக்கு முன்னால் சில தேவதைகள் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களை சைட்டடித்தபடியே நின்று கொண்டோம். அதில் ஒருத்தி கிளிப் பச்சை நிற தாவணியில் மாநிறமாக நல்ல வட்ட முகம், ஒத்தை பொட்டு மூக்குத்தி, ஸ்டிக்கர் பொட்டு, கரிய நீண்ட கூந்தல், அதில் வைத்திருந்த முல்லைப்பூ, காலில் இருந்த கொலுசு, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள், ஒரு மயக்கமாக இனிமையான குரலில் பேசிக் கொண்டிருக்க பூ வாசமும் என்னைக் கிறங்கடிக்க நான் அம்மனை மறந்து இந்த தேவதையை ரசித்துக் கொண்டிருந்தேன்.

பேசிக் கொண்டேயிருந்தவள் ஏதோச்சசையாக எங்கள் பக்கம் பார்க்க...நான் கண் புருவத்தை மட்டும் அசைத்து என்ன....? என்றேன். சைகையில் அவள் ஒரு நிமிடம் என்னை முறைத்து விட்டு தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அம்மன் தரிசனம் முடிந்து அப்படியே திருவிழா கடைப்பக்கம் ஒரு சுற்று வந்தோம், “மாப்ள சாமி பித்தளைக் காப்பு வாங்கனும்டா...“ என்றான் கதிரு! அப்படியே வந்த போது ஒரு வளையல் கடையில் காப்பு இருக்க அந்த கடைக்கு செல்ல அங்கே ஏற்கனேவே பிரகாரத்தில் பார்த்த மாநிற தேவதை கூட்டம் பத்து ரூபாய் வளையலை தங்கள் காது தொங்கட்டான் அசைய.....அசைய....இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசிக் கொண்டிருந்தது. 

கதிரு காப்பை வாங்கிக் கொண்டிருக்க ஒரு வளையலை எடுத்து கையில் மாட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை என்னைப் பார்க்க நான் குறும்பாக சிரித்தபடி வளையல் நல்லாயிருக்கு..! என்று “சூப்பர்“ என்று சைகை காட்டினேன், உதட்டை சுழித்து பழிப்புக் காட்டிய தேவதை இந்த வளையல் நல்லாவேயில்லை என்று வளையல்காரனிடம் திருப்பிக் கொடுத்து விட்டாள், எனக்கு ஒரு மாதிரியாக போய்விட “வாடா மாப்ள போகலாம்“ என்று கச்சேரி நடக்கும் திடலில் போய் உக்காந்து கொண்டோம். கதிரு வேறு பயந்தான் “பாத்துடா மாப்ள பிரச்சனையாகிறப் போவுது....“என்றான். “டேய் சும்மா வாடா நான் என்ன கையப்புடிச்சா இழுத்தேன்....! ஒன்னும் பிரச்சனையாகாது வா“ என்றேன்.

பாடகர்கள் டொயிங் டொயிங் என்று இசைக்கருவிகளை சோதனை செய்து வினாயகர் பாடலில் இருந்து ஆரம்பித்தார்கள், இரண்டாவது பாடலாக எல்.ஆர்.ஈஸ்வரி அம்மன் பாடல் பாட கூட்டம் கூடத் தொடங்கியது, எங்களுக்கு அருகில் மட்டும் கொஞ்சம் இடம் காலியாக இருக்க அந்த தேவதைகள் கூட்டம் வேறு வழியில்லாமல் கையோடு கொண்டு வந்திருந்த துண்டை விரித்து அதில் தாவணி அழுக்குப் படாமல் உக்கார்ந்தனர். நான் ஏதோச்சையாக பார்ப்பது போல மாநிற தேவதையைப் பார்க்க அவள் கையில் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்த வளையல் அணிந்திருந்தாள்.

அட்ரா சக்க....! என்றபடி அவள் பார்க்கட்டும் இந்தப்பக்கம் என்று காத்திருந்தேன். அவளும் என் பக்கம் பார்க்க நான் சைகையால் வளையலைக் காட்டி என்ன...? என்றேன்...! அவள் படக்கென்று திரும்பி அவள் தோழியிடம் என்னைப் பற்றி காதில் கிசுகிசுத்தாள்! அந்த தோழி என்னை பார்த்தாள். நான் நல்லவன் மாதிரி மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த தேவதைக் கூட்டம் வீட்டிலிருந்து கொண்டு வந்தார்களோ...!இல்லை இங்கே வாங்கினார்களோ...! தெரியவில்லை பொரிஉருண்டை, கடலை மிட்டாய், முறுக்கு என்று தின்பண்டங்களை சாப்பிட்ட ஆரம்பித்தார்கள். அதைப்பார்த்த கதிரு “வாடா நாமளும் எதாவது வாங்கிட்டு வரலாம்!“ என்று கூப்பிட நானும் சென்று கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி வருகையில் கதிரு “டேய் மாப்ள விடிய....விடிய...உக்காந்து பாக்கப் போறோம் தண்ணி தவிக்கும், தண்ணி கொண்டு போயிறலாம்..“ என்றான், “எப்பர்ரா கொண்டு போறது நம்மகிட்ட ஒன்னுமில்லையேடா...?“ என்றேன், “அதுக்கே மாப்ள கவலப்படுறே...!“ என்ற கதிர் பொங்கல் வைக்க வந்தவர்களின் கூட்டு வண்டி ஒன்று நிற்க வண்டிக்காரன் மாடுகளை அவிழ்த்து வண்டியில் கட்டிவிட்டு போதையில் கிடந்தான்! அந்த வண்டியில் இருந்த ஒரு ரப்பர் குடத்தை எடுத்தான் கோவில் பின்புறமுள்ள வாய்க்காலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பக்கத்தில் வைத்தபடி கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தோம்.

தேவதைக் கூட்டங்களில் அவளை அடிக்கடி நானும் ரசித்துக் கொண்டிருக்க, தின்பண்டங்களை உண்டு முடித்த அவர்களுக்கு அடுத்ததாக தண்ணீர்த் தாகம் எடுக்க....! எங்களிடமிருந்த தண்ணீர் குடத்தையும் அதை நாங்க மோந்து குடிப்பதையும் பார்த்து நீண்ட தயக்கங்களுக்கு பிறகு தண்ணீர் கேட்டார்கள் நாங்களும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க மெதுவாக அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

“நீங்க எந்த ஊருங்க....“என்றேன்!

“ஏங்க....?எதுக்கு கேட்குறீங்க.....?“என்றாள்!

“இல்லை...! உங்களை எங்கியோ பாத்திருக்கிறேன் அப்படின்னு வழக்கமான பசங்க கோடிங்க பயண்படுத்த...!“

“நாங்க நம்பியூர்ங்க...நீங்க....எந்த ஊர்ங்க“ என்றாள்....!

நாங்க எங்க ஊர்ப் பேரைச் சொல்ல....!

ஒரு சில மணி நேரம் மொளத்திற்கு பிறகு நான் கேட்டேன் “உங்க பேரைச் சொல்ல முடியுமா...? படிக்கிறீங்களா...?“ என்றேன்!

“பன்னெண்டாவது படிக்கிறேன் என் பேரு சுமதி, இவ பேரு ராதிகா, இவபேரு குமாரி, அவ பேரு ராஜி“ என்று அனைவரின் பெயரையும் சொல்ல நாங்களும் எங்க பேரைச் சொல்லி விட்டு நான் கேட்டேன் “நான் வளையல் நல்லாயிருக்குன்னு சொன்னேன் வேண்டாமின்னுட்டு மறுபடியும் அதே வளையல் வாங்கிட்டு வந்திருக்கிங்க என்றேன்..!“

அவள் எதுவும் சொல்லலை திரும்பி மேடையைப் பார்க்க எனக்கு அட கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ....! தப்பா நினைச்சுட்டாளோ என்று பயப்பட ஆரம்பித்தேன் அடுத்தது எப்படிப் பேச்சக் கொடுக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

“நீங்க என்னை தப்பா நினைச்சுட்டிங்க போல........உங்களுக்கு உங்க அழகுக்கு இந்த வளையல் ரொம்ம அழகா இருக்கு சொல்லனும்ன்னு தோணுச்சு அதான் சைகை காட்டினேன்“ என்றேன்.

இந்த பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியாது! தன்னை அழகுன்னு சொல்லிட்டாப் போதும் உருகிடுவாங்க...போல அவள் முகம் பிரகாசமடைந்தது “தேங்ஸ்ங்க“ அப்படின்னாள் அவள் முகம் முழுவதும் வெட்கமும், பெருமையும் அவள் போட்டிருந்த பவுடரைத் தண்டி மினுமினுத்தது! ஆனால் உண்மையில் அவள் போட்டிருந்த பச்சை தாவணிக்கும் நீலக்கலர் வளையலுக்கும் எள்ளளவும் சம்மதமில்லை..!

உங்களுக்கு பிடிச்ச நடிகர், சாப்பாடு, அப்பா, அம்மா, எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொண்டு எதை..எதையோ பேச ஆரம்பித்தேன் சுமதியிடம். 

இந்த தேவதைகளிடம் பேசும் வரைக்கும்தான் மௌனிகள்! பேச ஆரம்பித்து நம் மேல் இவன் நல்லவன் என்கின்ற பிம்பமும் பதிந்து விட்டால் போதும் பேசிக்கிட்டே இருப்பாங்க. விடிய....விடிய....பேசிக்கிட்டே இருக்கின்றோம் இருவரும், கதிரும் மற்ற தேவதைகளுக்கு நடுவில் போய் அமர்ந்து கொண்டு எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருந்தான் எங்களை அந்த கூட்டம் தனியாக ஒதுக்கி விட்டது.

கச்சேரியில் என்ன பாடல் பாடினார்கள், யார் பாடினார்கள் என ஒன்று கூடத் தெரியாது எனக்கு! கச்சேரி முடிந்தது அதிகாலை மூணு மணிக்கு, கோயிலில் இருந்த கோபி பேருந்து நிலையம் வரை ஒரு கிலோ மீட்டர் நடக்கனும் நாங்களும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தள்ளிக் கொண்டே பேசிக் கொண்டு நடந்தோம். 

இரு புறமும் வயல்கள் நடுவில் இருக்கும் தார் ரோடு நிலா வெளிச்சம் அதிகாலைப் பனி வேறு, தேவதையுடன் பேசிக் கொண்டே நான் என நினைக்கையில் எனக்கே ஆச்சர்யமாகத்தானிருக்கி்னறது நான் எந்த பெண்களிடமும் இப்படிப் பேசியதில்லை ஒரு முறை தார் ரோட்டின் ஓரத்தில் நடந்து வந்தவள் ஒரு இடத்தில் தடுமாறிய போது உரிமையாக என் கரங்களை பற்றிக் கொண்டாள்! “டேய்...! நீ கொடுத்து வெச்சவன்டா...“ எனக் கத்தனும் போல இருந்தது!

பேருந்து நிலையத்தில் அவர்கள்  நம்பியூர் பேருந்து நிற்க ஏறிக் கொண்டார்கள், உங்க அட்ரஸ் கொடுங்க என்றாள் சுமதி! நானும் நடத்துனரிடம் பேனா வாங்கி ஒரு கீழே கிடந்த சிகரட் அட்டையைக் கிழித்து எழுதிக் கொடுத்தேன்! “எதுக்குங்க எங்க அட்ரஸ் என்றேன்.....! “ இல்ல என் பிரண்ட்ஸ்க்கு எல்லாம் பொங்கல் வாழத்து அனுப்புவேன் உங்களுக்கும் அனுப்பத்தான்.., வேண்டாம்ன்னா விடுங்க....நான் அனுப்பலை என்றாள்!“ ஆகா...!தேவதைகளிடம் இருந்து வாழத்தா...! நானா மறுப்பேன் “நானும் அனுப்பனும் உங்க அட்ரஸ் கொடுங்க“ என்றேன்..! “அய்யோ வேண்டாம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா கொண்ணே போடுவாங்க“ என்றாள்...! “நீங்க கவலைப் படாதிங்க நான் உங்க தோழி மாதிரி பெண் பெயரில் அனுப்புகின்றேன்“ என்றேன்! அவளும் கொடுத்தாள் பேருந்து கிளம்பியது, நாங்களும் கிளம்பினோம் ஜன்னல் வழியே கையை ஆட்டிய படியே விடை பெற்றாள்.

வரும் வழியில் பவானி ஆற்றில் குளிச்சிட்டுப் போகலாம் என கதிரு சொல்ல. இருவரும் ஆற்றுக்கு போகும் வழியில் சைக்கிளை விட்டோம், குளித்து முடித்து அவள் தந்த அட்ரஸை பார்த்துக் கொண்டிருந்தேன், குளித்து வந்த கதிரு “டேய் அவ கொடுத்தது பொய் அட்ரஸா இருக்குமடா“ என வாங்கி சட்டென்று கிழித்து ஆற்றில் போட்டு விட்டான். “போடா இவனே என்று நான் அவனை கெட்ட வார்த்தையில் திட்டினேன்.

“மாப்ள நாம யாருன்னு அந்த பொண்ணுக்கு தெரியுமா...? உண்மையான அட்ரஸ கண்டிப்பா கொடுக்க மாட்டாளுக....நீ அவளுக்கு கோவில் திருவிழாவில் ஒரு பேச்சுத் துணை அவ்வளவுதான் வீனா மனசை குழப்பிக்காதே“ என்றான் அவன் சொல்லுவதில்லும் உண்மை இருக்கின்றது...! எந்த பொண்ணு, அதுவும் கிராமத்துப் பொண்ணு பிறரை நம்பும் என்று என் மனதைச் அமைதிப் படுத்திக் கொண்டு சிறிது காலத்திற்குப் பிறகு அவளை பற்றிய சிந்தனையின்றி மறந்தே போய் விட்டேன்!

அதன் பிறகு திருப்பூர் வந்து பல வருடங்களுக்குப் பிறகு எங்க ஊருக்குப் போயிருந்த போது ஓட்டுநர் விண்ணப்பம் பெற என்னுடைய பள்ளி சான்றிதழ் ஒன்றைப் ஒரு பழைய மேஜையில் தேடிக் கொண்டிருந்தேன், அப்போது பிரிக்கப்படாத ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை ஒன்று இருந்தது “யாருடா இது அனுப்பியது அதுவும் நமக்கு“ என்று மனதில் நினைத்தபடி பிரித்தேன் அது சுமதி அனுப்பியது இரண்டு இதயமும் ஒரு பூவின் படமும் போட்ட வாழத்து அட்டையில் கீழே
I love you…….
Sumathi
என்று மட்டுமே இருந்தது அவள் கையெழுத்தில் அழகாக எழுதியிருந்தாள் ஆறு வருடங்களாகி விட்டது. இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவே இருப்பாள்….!

டேய்......! கதிரு நீ இதைப் படிப்பேன்னு நினைக்குறேன்! “நீயெல்லாம் நல்லாவே வருவடா……….!“

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP