ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - யதார்த்த சினிமா!
>> Friday, September 27, 2013
குத்துப்பாட்டு...மொக்க பேஸ்புக் காமடி என்று படம் எடுத்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்தில் முதல் படத் தலைப்பிலேயே "சித்திரம் பேசுதடி" என்று இலக்கிய வாசனையுடனான தலைப்பை வைத்து "யாருடா இவன்...?" என்று தமிழ் சினிமா ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்தவர் மிஷ்கின்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...ஒரு நாவலாக இருக்க கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் உள்ளது. படம் பார்த்த உணர்வை விட ஒரு திரில்லர் நாவலைப் படித்த ஒரு உணர்வைத் தருகின்றது. குண்டடி பட்டுக் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவனை பலரும் கடந்து போக ஒரு மருத்துவ கல்லூரி மணவனான சந்துரு தூக்கிச் சென்று உயிர்காக்க போராடுகின்றார். தனியார் மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ள மறுக்கப்படுகின்றார். காவல் துறையும் சரியான நடவடிக்கை எடுக்காமல் உயிருக்குப் போராடுபவனின் கடிகாரத்தைக் கூட திருடுகின்றார்கள். சாதாரணமாக ஒரு அப்பாவியை நாம் தூக்கிக் கொண்டு சேர்த்தாலே நம்மீதே கொலைப் பழியைப் போடும் நாட்டில் அவன் ஒரு கிரிமினலாக........பதினான்கு கொலை செய்த சிபிசிஜடி போலீசாரால் சுடப்பட்ட ஒரு கிரிமினலாக இருந்தால் அவனும் அவனைச் சார்ந்த குடும்பமும் என்ன நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை முன் காட்சியில் யதார்த்தமாக மிஷ்கின் ஸ்டைலில் சொல்லியிருக்கின்றார். ஆட்டுக்குட்டி சந்துருவாக நடித்த ஸ்ரீ நன்றாக நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றார்.
ஓநாயாக எட்வின் என்று அழைக்கப்படுகின்ற WOLF என்று காவல் துறையால் விளிக்கப்படுகின்ற மிகமோசமான ஒரு கொலைகாரனாக மிஷ்கின். ஒரு இடத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருப்பான் ஒருவன். தன்னுடைய துப்பாக்கியை கிழே வைத்து அதை தள்ளிவிட்டு சிறிய ஒரு கத்தியை எடுத்துக் காட்டுவார். அடுத்த நொடியில் எதிராளியை அந்த கத்தி பதம் பார்த்து துப்பாக்கி ஓநாயின் கைக்கு வரும் கொஞ்சம் பழைய ரஜினி பட ஜெய்சங்கர் பட வகையாறா ஸ்டைலாக இருந்தாலும் எடுக்கப்பட்ட விதத்தில் அப்ளாஸ் அள்ளுகின்றது. ரயிலில் தப்பிச் செல்கின்ற காட்சியிலும். "மூணு என்றதுக்குள்ள துப்பாக்கிய கீழ போடு" என்கின்ற சந்துரு "ஒன்று" என்கின்றார்...."இரண்டு" என்று மிஷ்கினே சொல்லி பினைக்கைதியாக உள்ள பெண்மணியின் நெற்றியில் வைக்கும் காட்சியிலும், வித்தியாசமான சிந்தனையில் இயக்கியிருக்கின்றார். இந்த மாதிரி நுணுக்கமாக பல காட்சிகள் படம் முழுவதும் உள்ளது. விரிவாக இதை அலச ஒரு போஸ்ட் போதாது.
ஓநாய், ஓநாயை சுடத் துரத்தும் புலி போலீஸ், தன்னைத் தாக்கிய ஓநாயை கொல்லத் துடிக்கும் வில்லக் கரடி, தன்னால் பாதிக்கப்பட்ட கண்ணில்லாத ஆட்டுக்குட்டியை காக்கப் போராடும் ஓநாய், தன் குடும்பம் தப்பிக்க வேண்டுமானால் காவல் துறையால் ஓநாயைச் சுட சொல்லி நிர்பந்தப்படுத்தும் ஆட்டுக்குட்டி சந்துரு கிட்டதட்ட ஆடுபுலி ஆட்டம்தான். பரபரப்பான ஆடுபுலி ஆட்டம் அதிக இடங்களில் நம்மை சீட்டு நுனிக்கு அழைத்து வந்துவிடுகின்றது.
பெரிதாக ஒரு பிளாஷ் பேக் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆடியன்ஸை ஒரு கதை சொல்வதின் மூலமே புரியவைக்கும் உத்தி தமிழ் சினிமாவுக்கு புதிது. இதுவே சிலருக்கு குறையாகக் கூடத் தெரியலாம் அது அவரவர் ரசனையைப் பொருத்து இருக்கின்றது.
இளையராஜாவின் பின்னணியிசை யாராலும் மிஞ்ச முடியாது ரசிகனின் இதயதுடிப்பை இசையால் மீட்டுகின்ற வித்தை மொட்டையால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய சொத்து இந்த மாபெரும் இசைக்கலைஞன். ஒளிப்பட கலைஞரும் மிகவும் உழைத்திருக்கின்றார் படம் ஓர் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் படம் முழுவதும் இரவு காட்சிகளாகவே வருகின்றது பல நாள் தூக்கத்தை துறந்திருப்பார்கள்.
சிபிசிஜடி அதிகாரி புலியாக வரும் "ஷாஜி" அஞ்சாதே பொன்வண்ணனை அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும். நன்றாக நடித்திருக்கின்றார். பாராட்டும் விதமாக இருக்கின்றது. அடிக்குரலில் இயலாமையால் கமிஷனரிடம் ஆவேசப்படும் இடங்களில் 'அட' போட வைக்கின்றார்... ஆனாலும்... ஓவராக 'செக்ஷன்' எல்லாம் சொல்லி பேசுவது புரியவில்லை என்றாலும் வழக்கமான பட வசனங்கள் போல் ஆகிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது.
தற்போதைய தமிழ் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகள் வெற்றியடைந்து வருவது வரவேற்க்கப்பட வேண்டிய விசயமாக இருப்பினும். நமது ரசிகர்கள் அந்நிலைக்கு பக்குவப்பட்டுவிட்டானா எனில் இல்லை என்றுதான் சொல்லமுடியும். தங்க மீன்கள் கூட சிலரால் மட்டுமே ரசிக்கப்பட்டது. பலரால் ஓரம் கட்டப்பட்டது. கமர்சியல் விசயங்கள் இல்லாத யதார்த்த திரைப்படங்கள் நம்முடைய பின்வரும் சந்ததிகளுக்கு வியப்பை அளிப்பனவாக வேண்டுமானால் இருக்கலாம் வயிற்றை நிரப்புமா என்பது சந்தேகமே! மிஷ்கின் போன்றவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றது. கொரிய படத்தை காப்பியடித்தார் என்பன போல இருந்தாலும் நான் விரும்பக்கூடிய இயக்குனர்களில் அவரும் ஒருவர். படம் எனக்கு பிடிச்சிருக்கு...உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நம்புகின்றேன்.