VALAIபாயுதே......!28-12-12!

>> Thursday, December 27, 2012

அன்புள்ள மக்காஸ்

வணக்கம் இப்பொழுதெல்லாம் அதிகமாக பதிவு போடுவதில்லை (சந்தோசம்) முகப்புத்தகத்தில் ஒன்றோ...இரண்டோ இடுகையிடுவதோடு சரி!(அதுக்கென்ன இப்ப.....) சரி அதுல ரசிச்ச....விரும்பிய.....புன்னகைக்க வைத்த, ஆத்திரப்பட வைத்த எதாவது ஒன்று என்னை தீண்டியவைகளை இங்கு பதிகின்றேன் விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்...! ஏற்கனவே படித்தவர்கள் அப்பீட் ஆயிக்குங்க........!

அப்புறம் முக்கியமான விசயம் (என்ன...?)இந்த முயற்சி என் வாசகர்கள் பதிவு போடுங்க என்று கதறி அழுதார்கள் அதனால் போடுகின்றேன் என்று பொய் சொல்ல விரும்பல (கர்ர்ர்ர்ர்தூ...உனக்கு வாசகர்களா....இதெல்லாம் ஓவர்) காலையில் கழிவறையில் தோன்றிய கண நேரச் சிந்தனை மட்டுமே!

Bhakkiyam Ramasami Jarasu
நிறைய எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டு முகப்புத்தகத்தில் தன் மனதுக்கு பிடித்த விசயங்களை எதாவது எழுதிக் கொண்டிருப்பார்கள்..!அப்படி கண்ணில் பட்டவர்தான் அய்யா பாக்கியம் ராமசாமி! வாரமலர்ல வருகின்ற அப்புசாமி,சீதா பாட்டி கதையதான் முதல்ல படிப்பேன்! அன்றைய காலக்கட்டத்தில் நாங்க பசங்க கூட்டாக இரண்டு பேர் மூன்று பேர் புத்தகத்தை இழுத்து இழுத்து படித்து சிரிப்போம்....! அவர் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்

எண்ணக் கிணறு!

இளமையில்

பொற் சால்வைகள்

நிறைய வந்தன

குளிரவில்லை

கொடுத்துவிட்டேன் தானம்.

இப்போது -

பார்வையும் இல்லை

போர்வையும் இல்லை.

- ஜ

ஒரு கணினி நிபுணரால ஒரு கணினி நிபுணரைத்தான் உருவாக்க முடியும்! ஒரு விஞ்ஞானியால ஒரு விஞ்ஞானிய உருவாக்க முடியும்! ஆனால் ஒரு எழுத்தாளரால் மட்டுமே ஒரு நல்ல சமூகத்தையே உருவாக்க முடியும்! அவர்களை மறந்து விடாமல் நம்ம ஆளுக சென்னையில் எதாவது விழா, சந்திப்பு வைத்தால் இந்த மாதிரி மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கலாம்! நம்மால் முடிந்த ஒரு பொன்னாடை...ஒரு புத்தகம் கொடுக்கலாம்..! அவர்கள் தமிழ் மக்களின் பொக்கிஷங்கள்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------


பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும்,ஏனென்றால்,மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார்,அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே! (சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்)இதில் அடங்கும்,மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார்,கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார்.நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்... இப்ப சொல்லுங்க நன்பர்களே...(இதை SHARE செய்து மத்தவங்களுக்கும் சொல்லுங்கப்பா.

நன்றி : · நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்

~தமிழ்ப்பொடியன்

----------------------------------------------------------------------------------------------------------------------------

13 hours ago நல்லா கருத்தா பேசுவாப்ல........!

-----------------------------------------------------------------------------------------------------------
நம்ம சாப்பாட்டு கடை அதிபர் கேபிள்ஜியின்! புதிய கெட்டப்பு

----------------------------------------------------------------------------------------------------------
பல நுகர்வோர் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு வழிகாட்டியாக இருப்பது முகப்புத்தகத்தில் உள்ள கேட்டால் கிடைக்கும் குழுமம்! அதில் மின்சார துறைக்கே சாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த திருப்பூர் சரவணபிரகாஷ் அவர்களின் அனுபவம்! 


டிஸ்கி : இந்த பதிவு முகப்புத்தகத்தில் இல்லாத நண்பர்களுக்கான பகிர்தலே! இந்த ஆக்கங்களை படைத்த நண்பர்கள் விரும்பாத பட்சத்தில் கருத்துரையில் தெரிவித்தால் நீக்கப்படும்

அன்புடன், நட்புடன்....

வீடு.சுரேஸ்குமார்

Read more...

வாருங்கள் பதிவர்களே திருப்பூரில் சங்கமிப்போம்!

>> Monday, December 24, 2012

அன்புடைய வலையுலக மற்றும் சமூக வலைதளங்களில் இருக்கும் பதிவுலக நண்பர்களே! வரும் 30-12-2012 ஞாயிறு அன்று

தொழிற்களம் மின்னிதழ் 
மற்றும் 
தமிழ் மீட்சி இயக்கம் 

இணைந்து  தமிழ் உறவோடு உறவாடுவோம் என்று ஒரு நிகழ்ச்சி திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட முனனாள் ஆட்சியர் திரு.உ.சகாயம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

அதைப் பற்றிய தொழிற்களம் விழாவிற்கான சிறப்பு வலை தளத்தில் பதிவுகள் 
உள்ளது கிளிக் செய்து படித்துப் பாருங்கள்

அழைப்பிதழ்அது சமயம் விழா மதியம் 2.30 லிருந்து 5.00மணி வரை நடை பெறவுள்ளது, காலை 10.00மணியில் இருந்து 1.00மணி வரை பதிவர்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவர்களும் திருப்பூர் பதிவர்களும் சங்கமிக்கின்றார்கள் வாருங்கள் தோழர்களே நாம் சந்திப்போம்!

அன்புடன், நட்புடன்,

வீடு.சுரேஷ்குமார்
திருப்பூர்
போன் : 98439 41916
email : sureshkumar.artist@gmail.com

Read more...

சுந்தரேசனும் சாம்சங் கேலக்ஸியும்.....!

>> Sunday, December 23, 2012
பிரபல துணிக்கடையில் இருந்து குலுக்கலில் பரிசு விழுந்திருக்குன்னு போன் செய்து சொன்னாங்க....போஸ்ட் மேன் வந்தா வாங்கி வைன்னு தன் கணவன் சுந்தரேசன் காலையில் சொல்லிவிட்டு ஆபிஸ் போயிட்டான்.

பரிசு விழுந்திருக்குன்னு சந்தோசப் படாம போஸ்ட் மேன் கொடுத்த  பார்சலைப் பிரித்த கோகி தலையில் இடிவிழுந்தது போல் உக்கார்ந்திருந்தாள்!

பங்கஜம் மாமி "ஏண்டி பரிசு வந்ததுக்கு இப்படி இடிவிழுந்த மாதிரி இருக்கியேன்னு.." கேட்கின்றாள். "போங்க மாமி உங்களுக்கு என்ன தெரியும்…."என்று சொல்ல ஆரம்பிக்கின்றாள். கோகியின் நினைவில் கொசுவர்த்தி சுத்த ஆரம்பித்தது

***

சுந்தரேசன் படுக்கையில் இருந்து எழுந்தான்…..! தலயணைக்கு அடியில் வைத்திருந்த புதிதாக வாங்கியிருந்த ஆன்ட்ராய்டு சாம்சங் கேலக்ஸியை துழாவினான், கடைசியில் அது எங்கோ சுவர் ஓரமாக கிடந்தது….எடுத்தான் முகநூலை திறந்தான். சமையறையில் இருந்து கோகி காஃபியை கொண்டு வந்து கொடுத்து விட்டு "இங்க பாருங்கோ காலையில் இதை நோண்டாம ஆபிஸ்க்கு கிளம்பர வேலையப் பாருங்கோ….! இன்னைக்காவது உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வருவீங்களா….? மாவு அரைக்கனும் அப்புறம் வக்கனையா இட்லி தோசை கிடைக்காது…! சொல்லிட்டேன்..!"

"வாங்கிட்டு வர்றண்டி சும்மா காலங்காத்தால நொய்….நொய்ன்ட்டு"

பொண்டாட்டி தொல்லை தாங்கலை சாமியாரா போயிடலாம்…! குஜாலா இருக்கும் என்று ஸ்டேட்டஸ் போட்டான்…! மடமடவென பத்து லைக்குகள் விழுந்தது. முதல் கமெண்ட்டாக "சூரக்கோட்டை சூனாதானா" ஆமாம் பாசு பொண்டாட்டிக தொல்லை தாங்கலை….அவ்வ்வ்வ் என்று போட்டான்! விடியாமூஞ்சி வந்து ஒரு லைக்க போட்டிட்டு "சேம்பிளட்" அப்படின்னு போட்டான்…! "ஏங்க...! காஃபி ஆறிடுங்க குடிங்க, சுடுதண்ணி வச்சிட்டேன் காஞ்சிருச்சு கிளம்புங்க…!, பையனை ஸ்கூல்ல வேற விடனும்,அந்த கருமத்தை காலையிலேயே நோண்டாதிங்க…..கிளம்புங்க……கோகி இனி விட்டால் அடித்தாலும் அடித்து விடுவாள் என்ற படி சுந்தரேசன் ஓடினான்.

மச்சிஸ் நான் காஃபி குடிக்கிறேன் என்று கூகுள்ள தேடி ஒரு காஃபி இருக்கிற மாதிரி கோப்பை படம் போட்டு ஸ்டேட்டஸ் போட்டான். சுந்தரேசன் அதற்கு விழும் லைக்குகளைப் பார்த்துக் கொண்டே பல் துலக்கினான். நான் பல்லு வௌக்குறேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டான்…!

அடுத்த வேலையான "முக்கி"யமான வேலை செய்யும் போதும் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு இருந்தான். கெடாகுமார் கமெண்ட் போட்டான் என்ன மாப்ள சாப்பிட்டு இருக்கிறியா…? அப்படின்னு கடுப்பாயிருச்சு சுந்தரேசனுக்கு அடங் கொய்யா……கக்கா போகையில கேள்வி பாரு பிளடி பூல் அப்படின்னு போட்டான்!

போனை வைத்து விட்டு குளிக்க தொடங்கினான்…..! குளித்து முடித்ததும் தலையைத் துவட்டிக் கொண்டே ஸ்டேட்டஸ் போட்டான். சாப்பிடும் போது இன்னிக்கு வத்தக்குழம்பு பப்படம் என்று ஸ்டேட்டஸ் போட்டான்.  "சாப்பிடும் போது கூட இதை வெச்சிருக்கனுமா…?" என்று கோகி போனை பிடுங்கி வைத்தாள்.

சுந்தரேசன் தெருவில் நடந்து தெரு முனையில் இருக்கும் சினிமா போஸ்டர் ஒட்டிய நிழல் குடையில் கீழ் வந்து நின்றான், போனை நோண்டிக் கொண்டே நின்று கொண்டிருந்தான், சிறிது நேரத்தில் பஸ் வரவும் ஏறினான் கூட்டம் அதிகம் என்றாலும் ஏறி தோதான ஒரு இடத்தில் நின்று கொண்டு போனை எடுத்து நோண்டிக் கொண்டே வந்தான். இறங்கும் இடம் வந்ததும் டூத்பேஸ்ட்டில் இருந்து பேஸ்ட் பிதுங்குவது போல இறங்கி அலுவலகம் நோக்கி நடந்தான்.

****

கோகி இரவு டிபன் செய்து விட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு டிவியைப் போட்டு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன இன்னும் அவரை காணலை, தன்னுடைய போனை எடுத்து அவனுக்கு போன் போட்டாள், "சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது" என்று ஒரு பெண் கூறினாள்..! போனை நோண்டிக்கிட்டே சார்ஜ் போட மறந்துட்டார் போல என்று சொல்லிக் கொண்டே இருக்க சுந்தரேசன் சோர்வாக உள்ளே நுழைந்தான். லுங்கி மாற்றி விட்டு பாத்ரூம் சென்று கை,கால் கழுவிட்டு வந்து தட்டில் இருந்த இட்லியை சாப்பிட்டு விட்டு போய் படுத்துக்கொண்டான்.

கோகிக்கு வியப்பாக இருந்தது! இரவு பன்னிரண்டு வரை போனை வைத்துக் கொண்டு பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருப்பாரே….! இன்னைக்கு என்ன ஆச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையோ….? அவளும் நாலு இட்லிய சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைத்துவிட்டு படுக்கையறைக்கு வந்தாள் கோகி.

கட்டிலில் இரங்கநாதர் போல் படுத்திருந்த கணவன் அருகில் அமர்ந்து என்னங்க தலவலிக்கறதான்னு தலைய தடவி விட்டாள்…! 

“ஒன்னுமில்ல கோகி என் போன் தொலைஞ்சிருச்சு” என்றான் சுரத்தேயில்லாமல் சோகமாக…! 

“என்னங்க சொல்றீங்க எட்டாயிரம் ரூபா போனாச்சே…!” என்றாள்

பஸ்ல இறங்கும் போது இருந்துச்சு…! ஆபிஸ் போய் பாக்கெட்ல பாக்குறேன் இல்ல எவனோ பிக்பாக்கட் அடிச்சுட்டான் உடனே போனை ஆப் பண்ணிட்டான் போல பப்ளிக் பூத்ல இருந்து கூப்பிட்டுப் பார்த்தேன் சுவிட்ச் ஆப்ன்னு வருது….

சரி விடுங்க….வேற சுமாரான ஒரு போன் வாங்கிக்கலாம். இனிமே இந்த விலை அதிகமான போனே வேண்டாம் என்று கோகி சொன்னதிலும் ஒரு உள் அர்த்தம் இருந்தது. இருபத்தி நாலு மணி நேரமும் பேஸ்புக்கையே நோண்டிக் கொண்டிருப்பதால் ஒரு சந்தோசமாக பேசவோ…!குழந்தைகளிடம் விளையாடவோ நேரமில்லாமல் அதற்கு அடிமை போலவே ஆகிவிட்டான். இனி அந்த தொல்லை இருக்காது என்று மனது சந்தோசப்பட்டாலும் போன் தொலைந்ததில் வருத்தம் இருக்கத்தான் செய்தது.

***

அடுத்த நாள் சாதாரண போன் ஒன்றை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு செல் கம்பனியில் சென்று அதே எண்ணில் ஒரு சிம்மும் வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அவனுடைய செயலில் மாற்றம் தெரிந்தது, குழந்தைகளிடம் விளையாடுகின்றான்…! விடுமுறை நாட்களில் குடும்ப சகிதமாக சினிமா, பார்க் என்று சென்று பொழுதை கழிக்க ஆரம்பித்தான், கோகிக்கும் சந்தோசமாக இருந்தது.

காலை வேளையில் போன் இருந்தால் நோண்டிக் கொண்டு இருப்பான் இப்பொழுது காய்கறி வெட்டிக் கொடுப்பது, குழந்தைகளுக்கு சீருடை அனிவது என்று உதவுகின்றான். 

இப்படி அழகா போய்ட்டிருந்த வாழ்க்கையில சனியன் சைக்கிள்ல வராம பிளைட்ல வந்தான். ஒரு நாள் கோகியின் பிறந்த நாள் வர பரிசாக தர சுந்தரேசன் புடவை எடுக்க நகரில் பிரபலமான ஒரு துணிக்கடைக்குப் போனான் கோகியின் நிறத்துக்கு தகுந்தது போல ஒரு புடவையை செலக்ட் செய்து பில் போட...அவர்கள் ஒரு விண்ணப்பம் மாதிரியொன்றில் முகவரி, போன் எண் எல்லாம் எழுதுங்க சார் என்றார்கள். எதற்கு என்று கேட்டான்?

 "சார் நாங்க எங்க வாடிக்கையாளர்களுக்கு வருடம் ஒருமுறை பரிசு கொடுகின்றோம் குலுக்கலில் உங்கள் பெயர் வந்தால் பரிசு கிடைக்கும் சார்...! என்று பில் போடும் ஒல்லியான பையன் சொல்ல...! அசுவராஸ்யமாக பெயர் முகவரி எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விட்டு அதைப் பற்றியே மறந்து விட்டான்.

விதி வலியது என்பது போல போஸ்ட்மேன் கொண்டு வந்த பிரபல துணிக்கடையின் குலுக்கலில் சுந்தரேசன் பெயர் விழ அவர்கள் அனுப்பியிருந்த பரிசுப் பொருள் 

"சாம்சங் கேலக்ஸி போன்!"

***

Read more...

நான் குயில் பேசுகின்றேன்.....!

>> Monday, December 10, 2012


மனிதன் காது குடைய
இறகு கேட்ட போதே
எங்களினம் எச்சரிக்கை
அடைந்திருக்க வேண்டும்.
அப்படி இல்லாததால்.....

பெட்ரோல் புகை,
டீசல் புகை,
ஆலைப்புகை - என
சுவாசித்து.....சுவாசித்து....!
தொண்டை கமறுகின்றது
“இனிய சங்கீதம்”
அபஸ்வரமாய் ஒலிக்கின்றது!

உங்கள் அலைபேசியில்
என் குரலை ரிங் டோனாக
வைத்துக் கொண்டே
நாங்கள் வாழ்ந்த மரங்களை
வெட்டி காங்ரீட் கட்டிடங்களை
எழுப்பிக் கொண்டீர்கள்!

என் காதலன் நீங்கள்
காடழித்து உருவாக்கிய
சாலையில் வேகமாக வந்த
லாரியின் சக்கரத்தில்
கூழாகுவதற்கு - முந்திய
அலறல்அடிக்கடி
ஞாபகம் வருவதால்
என் பாடலில் முகாரி மட்டுமே
இசைக்கின்றது....!

ஒரு கிறுக்கு முண்டாசு
கவிஞன் எங்களைப் பாடிவிட்டு
போய்விட்டான்.....!
அவனையும் மதிக்க வில்லை
எங்களையும் மதிக்க வில்லை
வாழ்க சனநாயகம்!

சனங்கள் நீங்கள்
ஆலைக்கழிவு,
அனுக்கழிவு எனக் கொட்டி
நோய்களை நீங்கள்
பெற்றுக் கொண்டீர்கள் சரி
உங்கள் தொகுதியில் இல்லாத
ஓட்டும் இல்லாத
எங்களுக்கும் இலவசமாக
தந்து மொத்தச் சிறகையும்
பிடுங்கிக் கொண்டீர்கள்...!

உங்களுக்கு நேரமிருந்தால்
உங்கள் வீட்டருகில்
மரம் என்று ஒன்றிருந்தால்
நானிருப்பேன் கூவுகின்றேன்
கேளுங்கள் காது கொடுத்து
கேளுங்கள் இனிய கானமல்ல அது
உங்களுக்கு வரப்போகும்
ஆபத்துக்கான
“அபாயச்சங்கு”

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP