பரதேசி
>> Friday, March 15, 2013
நம்நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் சென்னை மாகாணத்தின் தென் பகுதியில் உள்ள சாலூர் என்கின்ற கிராமத்தில் இருந்து ஆனைமலை எஸ்டேட்டுக்கு கங்காணியின் ஆசை வார்த்தையை நம்பிச் சென்ற மக்களை...பற்றியும் ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக வதைக்கப்பட்ட ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வரலாறைப் பரதேசி என்கின்ற படத்தின் மூலம் இயக்குனர் பாலா ஆவணமாக பதிந்திருக்கின்றார்.
38 வருடங்களுக்கு முன் பி.எச்.டேனியல் “Red Tea” என்று ஆங்கிலத்தில் எழுதிய நூலை 38 வருடங்களுக்குப் பிறகு தமிழில் இரா.முருகவேள் என்பவரால் “எரியும் பனிக்காடு” என்கின்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு செதுக்கப்பட்ட திரைப்படம்தான் பரதேசி. அந்த புத்தகம் பற்றிய விமர்சனத்தை கிரி என்பவர் எழுதியுள்ளார்.
ஒட்டுபொறுக்கி என்று செல்லமாக அழைக்கபடும் அதர்வா ஒரு தண்டோரா போடுபவன், அவனுக்கும் அங்கம்மா என்கின்ற துடிப்பான பெண்ணுக்குமிடையே காதல் உருவாகி காமத்தில் முடிகின்றது, இதற்கிடையில் ஒரு கங்காணியை சந்தித்த ஒட்டுப் பொறுக்கி கங்காணியின் ஆசை வார்த்தைகளை நம்பி ஒரு நெடும் பயணமாக நாற்பத்தெட்டு நாட்கள் ஆனைமலை நோக்கி நகர்கின்றது அவனுடைய கிராமம் அந்த பயணத்தின் போது மயக்கமடைந்த ஒருவனை கைவிட்டுவிட்டு அடிமாட்டு மாடுகளைப் போல் மனிதக்கூட்டம் நகர்கின்றது.
அது சொர்க்கம் என்று அழைத்து செல்லும் கங்காணி அங்கே நரகத்தை விட கொடுமையான சூழலை அந்த மக்களுக்கு தருகின்றான். மருத்துவர் என்கின்ற பெயரில் ஒரு அரைகுறையை வைத்து தப்பித்து ஓடுபவர்களின் கால் நரம்பை துண்டிப்பது, காலரா வியாதியின் போது மொத்தமாக எரிக்கப்படும் சடலம், அவர்களுடைய கூலியை ஒரு இந்து சாமியார், மளிகைப் பொருள் தரும் சாயுபு, கம்பவுண்டர் குரூஸ் என்று பொய் கணக்கு கூறி பிடிங்கிக் கொள்கின்றார்கள். கடும் குளிரில் அட்டைக்கடி மற்றும் உடலைக் கிழிக்கும் தேயிலைச் செடியின் கொடுமைகளில் இருந்து வியர்வை, இரத்தம் சிந்தி உழைத்த காசை அவர்களே கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கின்றார்கள்.
இதற்கு இடையில் அங்கம்மா கர்பிணியாகின்றாள் தாலி கட்டாமலே ஒரு குழந்தையும் பெற்றெடுக்கின்றாள். நாம் ஒவ்வொரு காட்சியிலும் பதைபதைக்க வைப்பதிலும்...குழந்தையைக் காண ஒட்டுப்பொறுக்கி தப்பித்து போகமாட்டானா...? என நம்மை ஏங்க வைப்பதில் எதார்த்தமான ஒரு கதை நகர்தல், இயக்கம் ஒரு காரணம் என்பதில் மிகையில்லை.
மருத்துவம் பார்க்க வருபவர்கள் கிருத்துவத்தை பரப்புவது. இந்த ஆன்மீக கங்காணி நம்ம கங்காணியை விட பயங்கரமானவர்கள் என்று வெள்ளைக்காரர்களே சொல்வது பாலா டச். நாஞ்சில் நாடனின் வசனத்தில் கிராமமக்களின் சிலேடை பேச்சு எந்த கூச்சமும் இன்றி படத்தில் வைத்திருக்கின்றார்கள் அதில் சிலது “ராசா வந்திருக்கேன்” என்கின்ற அதர்வாவிடம் “மந்திரி எங்கடா...?” என்கின்ற பெரிசின் வேட்டியை சரிசெய்து விட்டு “உம்ம மந்திரியை மறைச்சு வை பெரியப்பா“ என்கின்ற இடத்திலும், “வேலை கடுமையா இருக்குமாஞ் சாமி?” என்று கங்காணியிடம் கேட்பவனிடம் “மூலம் வந்தவனுக்கு பேழறது கூட கஸ்டத்தான்“ என்கின்றான் கங்காணி, “சாமீ வெள்ளைக்காரிக நிறைய இருப்பாளுகளாஞ் சாமீ“ “அதெல்லாம் நிறைய இருப்பாளுக குளுருக்கு உன்னைக் கூப்பிடுவாளுக போயிட்டு வா” என்கின்றான் கங்காணி அதற்கு இன்னொருவன் “வெள்ளைக்காரி சூட்டுக்கு நீ வெந்தல்ல போவியே..!” என்கின்ற இடங்களில் எல்லாம் நாஞ்சில் நாடனின் ஆளுமை இருக்கின்றது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரியில் அவத்த பையா...? என்கின்ற பாடலில் காதலும், ஓ.....செங்காடே....சிறு கரடே போய் வரவா...?என்கின்ற பாடலில் வாழுமிடத்தைப் பிரியும் சோகமும், யாத்தே....காலக் கூத்தே......பாடலில் நம் சமுதாயம் வாழ்ந்த அடிமை வாழ்க்கையும் கண் முன்னே கொண்டு வந்தாலும் இளையராஜாவின் சாயல் ஆங்காங்கே இழையோடுவதை தவிர்த்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் கேமரா குடிசை வீட்டின் இடைவெளியில் செல்வதிலும், முன்னால் மாட்டு வண்டியில் கங்காணி செல்ல பின்னால் மந்தைகள் போல ஆட்கள் செல்லும் காட்சியில், பார்வையாளர்கள் எழுப்பும் கரவொலி செழியன் அவர்களுக்குறியது. தேயிலைத் தோட்டத்தின் செடிகளுக்கிடையில் செல்வதும் பிரமிப்பைத் தருகின்றது கதை அமைப்புக்கு உறுத்தாமல் நன்றாக வந்திருக்கின்றது. அறிமுக கலை இயக்குனர் பாலசந்தரின் கலை நுணுக்கத்தில் இயல்பான குடிசைகளும் அதர்வா, வேதிகா சந்திக்கும் சிதிலமடைந்த குடிசை வீடும் வெகு இயல்பு.
புருசன் எஸ்டேட்டை விட்டு ஓடிப் போக புருசனின் கடனை அடைக்க கொத்தடிமையாக இருக்கும் தன்சிகா, கிராமத்து புதுபெண்ணாக திருமணம் முடிந்தவுடன் வேலைக்கு வந்த அந்த பெண் வெள்ளைக்காரனின் காமப்பசிக்கு இரையாகின்றாள் எதையுமே எதிர்க்க முடியாமல் அழும் புருசனாக வருபவர், கூன் விழுந்த கிழவி, கிராமத்து பெரியப்பாவாக வரும் கவிஞர், அங்கமாவாக வருகின்ற வேதிகா என பலரும் மிகவும் கடினமான கடும் பனிக்காட்டில் அந்த மனிதர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்.படத்தைப் பற்றி கூற ஒற்றை வரி போதும் “திரைப்பட இடைவேளையில் தேனீர் குடிக்க விருப்பமில்லை”