வாடை-சிறுகதை

>> Tuesday, October 7, 2014

இயக்குநர் நாகு

  நீண்ட முடியுடன், அழுக்கடைந்த ஆடைகளுடன் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தவனை அந்த அலுவலகம் வரும் அனைவரும் ஒரு சந்தேகப் பார்வையை வீசிவிட்டு சென்றார்கள், அவனும் அதைப் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. அவனுடைய பார்வை முழுவதும் தன்னை அழைப்பார்கள் என்கின்ற நம்பிக்கையில் நின்று கொண்டிருந்தான். அவன் தோளில் நைந்து போன ஒரு துணிப் பை இருந்தது அதில் கத்தை கத்தையான காகிதங்கள் குப்பைபோல் இருந்ததை அந்த பை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

  அந்த சினிமா அலுவலகத்திற்கு பொருந்தாத தோற்றமுடையவனாக அவன் இருந்ததாகவே அனைவருக்கும் தோன்றியது. பளிங்கு போன்ற தரையில் அவன் அணிந்திருந்த இரப்பர் காலணியில் ஒரு பின்னூக்கு குத்தப் பட்டிருந்தது, அவனுடைய கால்சட்டையின் கீழ்பகுதி பிரிந்து நூல்களாக தொங்கியது, மண் தரையில் உராய்ந்து அழுக்கடைந்து இருந்தது அந்த தரையின் சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தன அவனுடைய கால்கள்.

பழனிவேல் மாணிக்கம்

     செல்லுலாயிட் ஆர்ட் பிச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பழனிவேல் மாணிக்கம் பற்றி நீங்கள் சில சினிமா பத்திரிக்கையில் படித்திருக்கலாம். அவர் ஒரு சினிமா தீர்க்கதரிசி எனலாம். அவர் புறங்கணித்த கதைகள் ஓடியதாக சரித்திரம் கிடையாது, அனைவரும் நிராகரித்த கதையை அவர் தைரியமாக எடுப்பார் அது பிரமாதமாக ஓடும்.

  வெகுசன திரைப்படங்களில் மாஸ் ஹீரோக்களை வைத்து எடுக்கபடும் குப்பைப் படங்கள் கூட சிலசமயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். அவ்வகையான படங்களை தயாரிப்பது என்பது பல தயாரிப்பாளர்களுக்கு ஆவல்! காரணம்விரைவில் கல்லா நிரம்பி வழியும், பெயரும் கிடைக்கும்.

  பழனிவேல் மாணிக்கம் எடுத்த பத்துப் படங்களில் ஒன்று கூட கலைப்படமோ, உலகப்படமோ இல்லை. இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் ‘டெல்லி’ என்கின்ற படம் கூட பழனிவேல் மாணிக்கம் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான். மாஸ் ஹீரோ ‘குயில்’ நடித்தது, அவருடைய நிஜப் பெயர் வேறு இணையத்தில் இந்தப் பெயரை வைத்து கிண்டலடிப்பதால் அந்தப் பெயரே வைத்து நாம் அழைக்கலாம். அவர் கருப்பாக இருப்பதால் கூடஇருக்கலாம்… தமிழக ரசிகனுக்கு… மன்னிக்கவும் தமிழக மக்களுக்கே சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்கின்ற தியரியை மனதில் யாரோ எழுதி வைத்து சென்று விட்டார்கள் போல…சமீபத்தில் கூட அட்டுபையனான ஒரு இயக்குநர் அழகான பெண் நடிகர் (நன்றி பிச்சைக்காரன்) ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அவரை ஏதோ நாய்க்கு ஏதோ ஒரு பண்டம் கிடைத்தாக கிண்டலடித்திருந்தார்கள்.

  இந்த ‘டெல்லி’ படத்தின் இயக்குநர் இரண்டு தெலுங்கு ஹிட் கொடுத்திருக்கின்றார். படமும் தெலுங்கு மாதிரிதான் இருக்கின்றது நாயக்கர் மஹால் தூணை தன்னுடைய கையால் அடித்து நொறுக்குகின்றார், அதற்கு திரையரங்குகளில் பலத்த கரகோஷம்! இந்த இரசிகர்கள் வரலாறு படித்திருப்பார்களா என ஐயமாக இருக்கின்றது.சுண்ணாம்பு, வெல்லப்பாகு காய்ச்சிய கலவையில் உருவான கட்டிடங்கள் நம்முடைய பாரம்பரிய கலைப் பொக்கிஷங்கள் நவீன பொக்லைன் இயந்திரங்கள் கூட பெயர்த்து எடுக்க முடியாத தூண்கள் அவை அதை மாஸ் ஹீரோ தன் கையால் உடைக்கின்றார் ஆள் பலம் பொருந்திய தோற்றமும் இல்லை, ஆப்பிரிக்க தேசத்தில் பட்டினி கிடக்கும் குலுவான் போல் இருக்கின்றான். அதையும் கைதட்டி இரசிக்கின்றார்கள்.

இயக்குநர் நாகு

  பலரும் பழனிவேல் மாணிக்கத்தை சந்தித்த பிறகு தயங்கிய படி உதவியாளர் ஒரு கந்தலான மனிதன் வந்திருப்பதைச் சொல்ல…வரச் சொல்கின்றார். தயங்கிய படி உள்ளே நுழைந்த அவன் தன் பெயரை ‘நாகு’என்கின்றான். தன்னிடம் ஒரு கதை இருப்பதாக சொல்கின்றான்.

  பழனிவேல் மாணிக்கம் அசுவராஸ்யமாக நாகுவை மேலும் கீழும் நோட்டமிட்ட படியே “ஒன் லைன் மட்டும் சொல்லு” என்கின்றார்.

  நாகு விழிகள் விரிய கைகளை அசைத்து கதையைச் சொல்லி முடிக்க, பழனிவேல் மாணிக்கம் விழிகள் விரிய.. உக்காருப்பா விரிவா ஸ்கிரிப்ட்ட சொல்லு என்று ஆவலாகின்றார்.

  நாகு சொல்லி முடித்த ஸ்கிரிட்டை கேட்டு முடிக்கும் போது பழனிவேல் மாணிக்கத்திற்கு வியர்த்து விட்டது அந்த குளிர் பதனம் செய்யப்பட்ட அறையிலும்!

    சிறிது நேரம் மௌனம் நிலவியது

   மேசையின் மீது இருந்த தண்ணீரைக் குடித்து முடித்த பழனிவேல் மாணிக்கம் “நீ எந்த இயக்குநர் கிட்ட உதவி இயக்குநராக இருந்தே?” என்கின்றார்.

   “நான் யாரிடமும் இயக்குநராக இல்லை” என்கின்றான் நாகு.

   ஒரு நிமிடம் யோசித்த பழனிவேல் மாணிக்கம்

   “இந்த படத்தை நாம பண்ணுறோம்” என்றார்.

   எங்கோ உடுக்கைச் சத்தம் கேட்டது டும்….டும்…..டும்….

யாரோ எவரோ..? வலைதளத்தில் இருந்து வாடை திரை விமர்சனம்

     ஒரு அசாத்தியமான திரைப்படம் இது என்பதை முதல் காட்சியே சொல்கின்றது. 
ஒரு பெண் தன் காதலனுடன் கிராமத்து குடிசை ஒன்றுக்கு வருகின்றாள். அங்கு ஒரு வயதான கிராம செவிலி இருக்கின்றாள் அவர்களின் சம்பாஷைனையில் அவள் கருவுற்றிருக்கின்றாள் எனத் தெரிகின்றது. அதை கலைக்க வந்திருக்கின்றார்கள் என்பதும் புரிகின்றது, செவிலியின் முகமும் அந்தப் பெண்ணின் முகமும் மட்டுமே தெரிகின்றது வசனங்கள் மூலமாகவே அவளுக்கு நடக்கும் கருகலைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கருகலைப்பு முடிந்தவுடன் அதிக இரத்த சேதம் மூலம் அந்தப் பெண் இறந்து போகின்றாள். அந்த செவிலி அவள் பிணத்தை மறைப்பதற்கு இன்னும் அதிகம் பணம் கேட்கின்றாள் அதைக் கொடுத்து விட்டு நடுங்கும் கால்களுடன் அந்தக் காதலன் போகின்றான். சதைப் பிண்டத்துடன் அந்தப் பெண்ணும் சேர்த்து புதைக்கப்படுகின்றாள். இதை இரசிகர்களான நம் கற்பனையில் திரைக் காட்சி போல் மனதினுள் ஓடுகின்றது…ஆனால் திரையில் வெறும் இருட்டு முகம் மட்டும் தெரிகின்றது அந்தப் பெண் வலியில் முகத்தைக் கோணுவதைப் பார்க்கும் போது நமக்கு கை கால்கள் எல்லாம் நடுங்குகின்றது, உண்மையில் எங்காவது நடந்த சம்பவங்களை கேமராவை ஒளித்து வைத்து எடுத்து விட்டார்களா..?

    அதே போல் மலம் நிரம்பியிருக்கும் ஒரு தொட்டியை வெறும் முந்நூறு ரூபாய்க்காக சுத்தம் செய்ய வருகின்றார்கள் இருவர். அவர்களின் பேச்சின் மூலமே நாம் அந்த மல வாடையை அறிந்து கொள்கின்றோம், விஷவாயு தாக்கி இறந்து போகின்றார்கள். அவர்களின் இறப்பை ஒரு சில நிமிடம் நாமும் இறந்து காண்கின்றோம் இது என்ன மேஜிக்கா இது என்ன வகையான திரைப்படம்.

    பிணவரையில் ஒரு பிணத்தின் வயிறு சரியாக தைக்காததால் கிழிந்து புழுக்கள் ஊர்ந்து வெளியே வருகின்றது. ஒன்று இரண்டாக வெளிவந்தது லட்சக்கணக்கில் வெளியே வந்து விழுகின்றது அதை சுடலை என்கின்ற பிணவரை தொழிலாளி தன் கையால் அள்ளி வெளியே போட்டு நெருப்பு வைக்கின்றான்.

    ஒருவன் பேருந்து நிலையத்தின் கழிவரையில் சிறுநீர் கழிக்கின்றான், அந்த சுகாதரமற்ற சூழல் அவனுடைய ஆண்குறியில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. அவன் அதை போன வாரம் இருட்டில் உறவு கொண்ட பெயர் தெரியாத விலைமகளின் மூலம் வந்ததாக நினைக்கின்றான். யாரிடம் போவது எப்படி வைத்தியம் பார்ப்பது என்று தெரியாமல் பயந்து வாழ்கின்றான், தனக்கு எய்ட்ஸ் வந்து விட்டதாகவே கருதுகின்றான். கடைசியில் நோய் முற்றி மயக்கம் வந்து விழுந்து விடுகின்றான். சமூக சேவகர்களால் பயங்கர நாற்றமடைக்கும் அவனை கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றார்கள் பதினைந்து போத்தல் பினாயில் ஊற்றி அவனைக் கழுவி அவனுடைய சீழ் பிடித்த ஆண்குறியை அகற்றுகின்றார்கள்.

   நரிக்குறவர்கள் கூட்டம் ஒன்று கவனிப்பாரற்று கிடக்கின்ற ஒரு சத்திரத்தில் தங்குகின்றது. காமஇச்சை தாளாமல் பிச்சைமுத்து என்கின்ற நரிகுறவர் தன் மனைவியின் போர்வைக்குள் தானும் புகுந்து கொண்டு முயங்குகின்றார், சரியாக இருவருக்கும் ஆர்கஸம் வரும் வேளையில்…எதாவது வாகனம் வருகின்றது. நிறுத்தி…நிறுத்தி ஒருவழியாக உறவை முடிக்கின்றார்கள் அதற்குள் விடிந்து விடுகின்றது.

   இவையனைத்தும் ஒரு நாவலைப் படிப்பது போன்று உள்ளது. துளிகூட விரசமோ, அருவருப்போ இல்லை. இருட்டில் முகம் மட்டும் தெரிகின்றது நரிக்குறவர் ஜோடி உறவு கொள்ளும் காட்சியில் விரசத்தை விட ஒரு நாய்,பன்றி கூட தன் பாலியல் தேவைகளை எந்த வித பாசாங்கு இன்றி தீர்ததுக் கொள்ள முடிகின்றது ஆனால் மனிதன் மட்டும் எவ்வளவு பாடுபட வேண்டியதாக இருக்கின்றது. கழிவரையில் வந்த ஒவ்வாமையைக் கூட ஒருவனால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நம்நாடும், கல்வி முறையும் இருக்கின்றது, படம் முடிந்து வெளிவரும் ஒவ்வொரு முகமும் ஒரு தெளிவுடனும் பயத்துடன் வருகின்றது. இது ஆகச் சிறந்த ஒரு படம் வழக்கமான உலக சினிமா பார்முலாவைக் கூட தெரிக்க வைக்கின்றது இந்த படத்தின் இயக்குநர் ஒரு வித்தியாசமான நபராக இருக்க கூடும்.


வாடை திரைப்படம் பற்றி செய்திகள்

  படம் வெளிவந்து இரண்டு தினங்கள் யாரும் பார்க்க வராததால் அனைத்து திரையரங்குகளிலும் எடுத்து விடக் கூடிய சூழலில் “யாரோ எவரோ..?” என்கின்ற வலைத்தளத்தில் இந்த படத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தைப் படித்தவர்கள். சென்று படம் பார்த்தார்கள்

  ஆளாளுக்கு திட்டி/பாராட்டி விமர்சனம் எழுத…படம் ஓடத் துவங்கியது பிறகு பிரபல பத்திரிக்கை 80 மதிப்பெண் வழங்கியது. இலக்கிய கூட்டங்களில் இந்த படத்தைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.

  பிரபல பின்நவீனத்துவ எழுத்தாளர் இந்தப்படம் ஒரு பின்நவீனத்தின் அடிக்கல் என்றார், இந்த திரைப்படம் ஒரு குப்பை திரைப்படம் எடுக்கத் தெரியாத முட்டாளின் கிறுக்கல் என்றார் ஒரு எழுத்தாளர், ஒரு பாலியல் எழுத்தாளர் இந்த மாதிரி படங்கள் வரவேண்டும் என்றார். ஒரு இளம் எழுத்தாளர் நூறு பக்கத்துக்கு விமர்சனம் எழுதினார். அதை நடுகல் பதிப்பகம் வெளியிட்டது, பத்தாயிரம் பிரதிக்கு மேல் விற்றது. 7 ½ பர்சண்ட்டை தாண்ட மாட்டோமென சொல்லி பதிப்பகம் 2000 பிரதிக்கு காசோலை அனுப்பியது ஒரு மழை நாளில் நடந்தது!

  2014ல் வந்த அந்த திரைப்படத்திற்கு பிறகு அந்த இயக்குநர் வேறு படம் எதுவும் இயக்கவில்லை, வெற்றி விழாவில் கூட அவரைக் காணவில்லை, மொத்த தமிழகமும் அவரை பல இடங்களில் தேடியது, எங்கும் அவரைக் காணவில்லை அவருக்கு உதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் கூட அவரை அதன் பிறகு பார்க்க முடியவில்லை.

  நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே அங்க அடையாளங்களோடு நீண்ட சடை முடியுடன் ஒருவர் திருப்பூர் பேருந்து நிலையத்தின் ஒதுக்குப் புறத்திலிருந்த இலவச கழிப்பிடத்திற்குள் நுழைய முயற்சியெடுத்து மூக்கைப் பிடித்தபடி மனிதக்கழிவை தாண்டி உள்சென்று தன் குறியை ஜிப்பில்லாத பாண்ட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து நின்றவாக்கில் பெய்ய முயற்சியெடுத்தார். குறியில் விண் விண்னென வலியெடுக்க வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு அழுதார். வெள்ளையாய் கொஞ்சம் கஞ்சிபோல குறியிலிருந்து வெளிவந்ததும் அப்படியே மயங்கிச் சாய்ந்தார். யாரோ அவசர சிகிச்சை வண்டிக்கு போன் அடித்தார்கள்.

  உடுக்கையொலி பேருந்து நிறுத்தத்திலிருந்து கேட்டது டும்…..டும்……டும்….! 

Read more...

கடைசித் துளி மது! - சிறுகதை

>> Tuesday, May 27, 2014


(உண்மை சம்பவங்களின் அடிப்படையில்)
பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமர்ந்து இருப்பது ரம்யமாக இருக்கின்றது. வானில் நட்சத்திரங்கள் மினுமினுக்கின்றது... நிலா மேகங்களின் பின்னே ஒளிந்து ஒளிந்து விளையாடுகின்றது. இது என்ன ஒரு குளுமையான பனி காலம் போல் இந்த வெயில் கால இரவு இருக்கின்றது. மலருடன் நான் இருந்த காலம் இப்படித்தானே இருந்தது. மலர் எப்படியிருப்பாள் தெரியுமா..? புசுபுசுவென்ற கன்னம் அவளுக்கு... அடிக்கடி கிள்ளச் சொல்லும். அவ்வளவு அழகு அவள்! ஒரு குழந்தைமை அவளிடத்தில் இருக்கும், முதன் முதலாக காதலைச் சொல்ல நான் பெரிய துன்பமேதும் படவில்லை விளையாட்டுப் போல.....மிதமான போதையில் வாசனை பாக்குப் போட்டுக் கொண்டு இங்க பாரு நான் உன்னை லவ் பண்றன்டி நீ என்ன சொல்ற...?” என்று வழியை மறித்து முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டேன். போதை எனக்கு இரண்டு ஆள் தைரியம் கொடுத்திருக்கின்றது. அதே போதை என் வாழ்க்கையை சூன்யமாக்கியும் விட்டது, என்னடா இது குடிகாரனின் உளறல் எனக் எண்ணிக் கொண்டு நக்கலடிக்க வேண்டாம்... குடிகாரனின் பேச்சில் எப்பொழுதும் ஒரு உண்மை இருக்கும், சரி நான் எதற்கு திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தின் யாருமற்ற மொட்டை மாடியில் தனியாக அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றேன் தெரியுமா..?

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன். என்னடா ஒரு பெக் அடிக்கப் போகின்றேன் என்று சொல்வது போல் சாதாரணமாக சொல்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா...? வாழ்க்கை வெறுத்து விட்டது. துன்பமே என் வாழ்வில் வந்ததால் என பிலாசபி பேசி உங்களை அறுக்க விரும்பவில்லை! உண்மையில் நிரம்ப...நிரம்ப கோப்பையில் தழும்ப..தழும்ப இருக்கும் மதுவைப் போல் என் வாழ்வில் இன்பம் மட்டுமே தழும்ப....தழும்ப கிடைத்தது....ஆனால் தற்கொலை ஏன் செய்து கொள்கின்றேன் தெரியுமா…? மலர் என் வாழ்வில் இழக்கக் கூடாத இன்பம் அதை தொலைத்து விட்டேன்....இனி என்ன இருக்கின்றது வெறுமை மட்டுமே மிச்சம் இருக்கின்றது. இவ்வெளியில் நானும் ஒரு சீவனாய் வாழ்வதற்குறிய ஆசை என் மனதில் இருந்து அகன்று விட்டது.

என்னுடைய தற்கொலை மிக அழகாக அமைய வேண்டும். மரணம் கூட அழகாக அமைவது சிலருக்குத்தான்....உறங்கும் போது சிரித்தபடியே இறந்திருப்பார்கள். துன்பத்தில் உழன்று பல்லை வெறுவியபடி மரணத்தின் வலியை உணர்ந்து, துடித்து இறந்திருப்பார்கள். அவர்கள் பாவப்பட்ட ஆன்மாக்கள் சொர்க்கம், நரகம் இரண்டும் இறந்தபிறகு காண்பதல்ல இங்கேயே இருக்கின்றது. ஒரு பெண்ணை சுகிப்பது சொர்க்கம்...அதே பெண்ணை திருமணம் செய்வது நரகம். குடிப்பது சொர்க்கம் போதை இறங்கிய பிறகு நரகம்... கை கால்கள் வெடவெடவென்று நடுங்குகின்றது... ஒரு துளி சரக்கு தொண்டையில் நனைந்த பிறகு நடுக்கம் நிற்கின்றது. அந்த கைகால்கள் நடுங்கும் போது உடல் வலி உயிர் போகும் வேதனைத் தருகின்றது. மருத்துவ உலகம் அதை நரம்புத் தளர்ச்சி என்கின்றது.

போதைக்கு அடிமையான பிறகு ஆண் குறிகளுக்கு வேலையில்லாமல் போய்விடுகின்றது, பெண் இல்லை போதை இரண்டில் எதாவது ஒரு விரலைத்தான் நாம் தொடமுடியும்! சாத்தான் அவ்வளவு நுட்பமானவன்...எதையும் இரண்டாக தருவதில்லை! 

அதுவுமில்லாமல் சாலையில் விழுந்து புரண்டு துணிகள் அழுக்கடைந்து தலைமுடி எல்லாம் பிசுபிசுத்துப் போய் புளித்த நாற்மடிக்கும் ஒரு ஆடவனை பிச்சைக்காரி கூட கூப்பிடமாட்டாள். நானும் ஒரு காலத்தில் குளித்து, பவுடர் அடித்து, பாடி ஸ்பிரே கிக்கத்தில் அடித்து, டக் இன் செய்து பளபளப்பான கட் ஷூ போட்டுக் கொண்டு கம்பனி கொடுத்த பைக்கில் போய் இறங்குவேன்...ரிசப்ஷனில் இருக்கும் மாலதி காதலுடன் சிரிப்பாள்....வா என்று கூப்பிட்டாள் வந்து படுப்பாள், இன்று வருவாளா...? ஒரு நாள் எதிரில் நான் வந்த பொழுது என்னை உருகி....உருகி காதலித்தவள்.... இதழோடு இதழ் பதித்து எத்தனை நாட்கள் எத்தனை முத்தம் கொடுத்திருப்பாள்....பத்தடி தள்ளி நடந்தாள் எங்கேயோ பார்த்துக் கொண்டு...போகின்றாள். மாலதி.....என்னடி கண்டுக்காம போற....என்ற என்னை ஒரு புழுவைப் போல் கரப்பான் பூச்சியைப் போல், பல்லியைப் போல், இல்லாமல் அதை விட கேவலமாக...பார்த்தாள்! அருவருப்பான பிராணியாகப் அவளுக்குத் தோன்றியிருப்பேன்.

பேசியிருந்தாலும் நான் அவளிடம் காதலுடனா பேசப் போகின்றேன் ஒரு நாற்பது ரூபாய் பணம் கேட்பேன் ஒரு கட்டிங்க்குத்தான் கேட்பேன். நான் பழைய நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் கட்டிங்க்கு பணம் குடுஎன்றுதான் கேட்கின்றேன். எனக்கே கேவலமாக இருக்கின்றது என்ன செய்ய...? உடல் நடுங்குகின்றது...வலி உயிர் போகின்றது... குடிக்க வேண்டும் அதுதான் மருந்து....நான் ஒரு வாரத்திற்கு முன் ஒரு நான்கு இட்லி தின்றதாய் நியாபகம்! ஆனால் சரக்கு குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். மிதமான போதை தலையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்த ஒரு பொழுதில்தானே நான் மலரைத் தொலைத்தேன்....என் குழந்தையை சொல்லச் சொல்ல கேட்காமல் அனாதை ஆசிரமத்தில் சேர்த்தார்கள், என் குழந்தை எப்படியிருக்கின்றாளோ...?

நான் மலருடன் வாழ்ந்த காலத்தில் நான் தொழில் கற்றுக் கொடுத்த பசங்க ஒரு காலத்தில் குரு....குரு...என்று அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள்...இன்று என்னைக் கண்டால் வழியை மாற்றி ஓடிப் போகின்றார்கள்...! ஒரு தடவை தொழில் கற்றுக் கொடுத்தற்கு காலம் முழுவதும் நாற்பது ரூபாய் அழமுடியுமா...?

அது மட்டுமல்லாமல் மலரை நான் கொன்று விட்டேன் என்கின்றார்கள். நான் என் உயிரை எப்படிக் கொல்ல முடியும்...? அது எப்படிச் சாத்தியமாகும்? நண்பர்கள் கூட என்னை வெறுக்கின்றார்கள்.

அந்த நாள் சீழ் பிடித்த புண்ணை ‘ஈ துளைத்துக் கொண்டேயிருக்கும் வேதனையைப் போல் என்னை அந்த நினைவு அரித்துக் கொண்டேயிருக்கின்றது… குற்ற உணர்ச்சி என்னை கொல்லுகின்றது…குழந்தையும் மலரும் விடிய...விடிய காய்ச்சலுடன் கிடந்தார்கள் மிக அதிகமான போதையில் இரவு முழுவதும் கிடந்த எனக்கு எதுவும் தெரியவில்லை....காலையில் எழுந்து பார்த்த பொழுது முனகியபடி கிடந்தாள்...தொட்டுப் பார்த்தேன் உடம்பு நெருப்பு மாதிரி கொதித்தது. அவளுடைய முகம் என்றோ தேஜஸ் இழந்து விட்டது…காய்ந்து போன சருகாக கிடந்தாள்…காதல் திருமணம் செய்ததால் என்னை இரு குடும்பமும் ஒதுக்கி வைத்தால் ஆதரவுக்கு யாருமில்லை....மலர் குடும்பம் பெரிய குடும்பம் மட்டுல்ல அழகானது கூட...அந்த கூட்டை சிதறடித்த பெருமை என்னையே சேரும்...நான் வேலை செய்த ஆட்டோமொபைல் கம்பனியில் சேல்ஸ் கேர்ளாக வேலைக்குச் சேர்ந்தாள் கொஞ்ச நாளில் என் மனதை திருடிக் கொண்டாள். நான் காதலை சொன்ன போது போதையில்தான் சொன்னேன்...எப்படி ஏற்றுக் கொண்டாள் என்று பல தடவை வியப்படைந்துள்ளேன். குடிகாரன் என்பது ஒரு பெரிய குறை மலருக்கு கிடையாது அவளே பல தடவை எனக்கு குடிக்க காசு கொடுத்திருக்கின்றாள்....நான் மாலதியை ஸ்டோர் ரூமில் வைத்து லிப் டு லிப் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததை நேரடியாக பார்த்தும் என் காதலை அங்கீகரித்ததுதான் உலக ஆச்சர்யம்! அதை விட ஆச்சர்யம் நான் மாலதியிடம் காதலிக்கின்றேன் என்றெல்லாம் சொன்னதில்லை…ஏதோ பிடித்துப் போக உறவு வரை கொண்டு சென்றது, நான் மலரை காதலிப்பது தெரிந்ததும் விலகிப் போனாள்! வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாள்! பெண்களுக்கு பிடித்தவனாகிப் போனால் அவனுடைய குற்றங்கள் திருமணத்திற்கு பின் தன்னால் நிவர்த்தி செய்யப்படும், அல்லது திருத்தப்படும் என்று முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள். வீட்டு நாய்க்கு என்னதான் பாலும் மோரும் ஊற்றினாலும்... தெருவில் மலத்தைக் கண்டால் நக்கிப் பார்க்கும்....அதைப் போலத்தான் ஆண் ஜெனமங்கள்... என்பதை பெண்கள் உணர மாட்டார்கள். நான் இன்று எச்சில் இலைகளுக்குள் தெரு நாய்களுடன் நாயாக போதையில் விழுந்து கிடந்திருக்கின்றேன்! பல வித வாடைகள் கலந்தமுடை நாற்றம் எப்பொழுதும் வீசும் உடம்பு, பார்வை கூசும் சிமிட்டும் கண்கள் என உங்களை அச்சப்படுத்தும் தோற்றமுடையவன் நான். ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்..... நான் பெரிய அழகன் எல்லாம் இல்லை மிக...மிக சுமாரானவன், மாநிறம், ஒழுங்கற்ற பல் வரிசை என இருந்தாலும்...என் பேச்சு மென்மையாகவும் வருடிக் கொடுப்பது போல இருக்கும்....அது பெண்களுக்கு பிடித்தமான பேச்சு....கத்திப் பேசுபவர்களை பெண்களுக்கு பிடிக்காது. கண்களை நேரடியாக பார்த்துப் பேசவேண்டும் நம் பார்வை தடம் மாறினால்....பெண்களின் மனதில் நம் மீது ஒரு தவறான பிம்பம் பதிந்து விடும், பின்பு நம்மை மனதில் கொண்ட பிறகு பிடித்த இடத்தைப் பார்ப்பதென்ன பிடித்தே பார்க்கலாம். நான் பேசுவது ஆபாசமாக இருப்பதாக கருதினால்...நீங்கள் இந்த உலகை சரியாக பார்க்கவில்லை என்று அர்த்தம்! இல்லை பெண்ணியவாதிகளுக்கு லைக் போட்டு....லைக் போட்டு... மடச்சாம்பிராணி ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆண்களுக்கு இருக்கும் காமம், கோபம், குரோதம், அன்பு, உணர்ச்சிகள் எல்லாம் மிகையாகவே பெண்களுக்கு இருக்கின்றது என்பதை முதன்முதலாக மலரை உடலுறவு கொண்ட போது உணர்ந்தேன். உட்சகட்டத்தில் என் தலைமுடியை பிய்த்தெடுத்தாள்....இரத்தம் வர என் உதட்டைக் கடித்தாள்...அமைதியாக தலையைக் குனிந்து போகும், வரும் பெண்ணா இவள் என ஆடிப் போனேன்! இரவு பகல் பாராது இன்பத்தை வாரிக் கொடுத்த தேவதை....ஒரு குழந்தை பிறக்கும் வரை....நான் அவளைக் கூட்டிக் கொண்டு ஓடிய பிறகு என்னோடு ஓடி விட்டாள் என்று யாரும் நம்பவில்லை, திரும்ப நாங்கள் வந்த போதுதான் நம்பினார்கள்....சிலர் உச்சுக் கொட்டினார்கள்.....அதற்கான காரணத்தை என்னோடு வாழ்ந்த நரக வாழ்க்கைக்கு பின் அவளுக்குப் புரிந்திருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை அழகாகத்தான் போனது... பெரிய சப்பாத்தியாக தேய்த்து பிஸ்கட் டப்பா மூடியை வைத்து வட்டமாக வெட்டி சப்பாத்தி போடுவாள், தோசை சுட்டாலும் பிசிரில்லாமல் முழு சந்திரன் போல் சுடுவது அவள் இயல்பு...எதிலும் நளினம், நேர்த்தி என இருப்பவள்...நானோ அதற்கு எதிர்மறை!

மாலை வீடு திரும்பும் போது நண்பர்களுடன் சிறிது குடித்துக் கொண்டு ஜாலியாக இருந்தவன் நான்! சில வருடங்களில் குடிக்காமல் இருக்கவே முடியாது என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். வேலைக்கே குடித்துக் கொண்டு போக ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள் என்னிடம் வீசிய புளிச்ச வாசத்தைக் கண்டுணந்து நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க ஒரு கெட்ட யோகம் கெட்ட தினத்தில் என் வேலையைப் பிடுங்கி கழுத்தைப் பிடித்து நடுத் தெருவில் நிறுத்தினார்கள்... ஒரே வாரத்தில் ஏழு கம்பனிகள் மாறினேன். குடிக்க பணம் இல்லாமல் திருட ஆரம்பித்தேன், நண்பர்கள் பாக்கட்டில் இருந்து, போதையில் மட்டையானவர்களிடம் இருந்து, மலர் வேலைக்கு போக ஆரம்பித்தாள்....அவளின் சம்பளத்தைக் கூட திருடிக் குடிக்க ஆரம்பித்தேன். நாகரிக நண்பர்கள் என்னை விட்டு விலகிப்போனார்கள், புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள் எப்படியாவது நாற்பது ரூபாய் தேற்றிவிட்டால் போதும்...யாராவது பாட்னர் மதுக்கடையே கதியென கிடப்பார்கள் ஒரு கோட்டரை வாங்கி சரிசமமாக பிரித்து ராவாக குடித்தால் கொஞ்சம் சுறுசுறுவென்று இருக்கும்...தண்ணீர் கலந்தால் இப்பொழுது போதை ஏறுவதேயில்லை...! ஐஸ் கட்டி போட்டு...சிக்கன் லெக் பீஸை கடித்துக் கொண்டே ரெஸ்டாரண்ட்டில் குடித்த காலம் எங்கே...? இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது...இன்று சைட் டிஸ் ஊறுகாய் மட்டுமே அதுவும் சரக்கு கசப்புத் தெரியாமல் இருப்பதற்கு துளி நக்கிக் கொள்ள மட்டுமே!

மலரை தொலைத்த பிறகு பெரும்பாலும் நான் குடியிருப்பது ஒயின்ஷாப் வாசலில்தான் யாராவது நண்பர்களை கெஞ்சிக் கூத்தாடி பணம் வாங்கிக் குடிப்பேன்... இல்லை எப்பவும் ஒயின்ஷாப் வாசலில் கிடக்கும் என்னுடைய பாட்னர்கள் மட்டையாகிக் கிடப்பவனிடம் பணம், செல்போன் எது கிடைத்தாலும் ஆட்டையப் போட்டு விடுவார்கள். திருட்டு செல்போனை வாங்குவதெற்கென்றே டாஸ்மாக்கை சுற்றி நான்கைந்து செல்ப்போன் கடைகள் இருக்கும். யார் பணத்தை அடித்தாலும் சரிசமமாக பிரித்து சரக்கு அடிப்போம்! மட்டையானவன் தெளிந்து எழும் போது அவன் கோவனம் மட்டுமே மிஞ்சும்.

மலரை அப்படியான ஒரு விருந்தில்தான் தொலைத்தேன்....! மலர் வேலைக்கு போகாமல் இரண்டு நாட்களாய்... முடங்கிக் கிடந்தாள். இரவு முழுவதும் முனகிக் கொண்டேயிருந்தாள்.....அவளுடைய காய்ச்சல் குழந்தைக்கும் தொற்றிக் கொள்ள....இருவரும் கொதிக்கும் உடம்புடன் கிடந்தார்கள். கையில் பத்துப் பைசா இல்லை...தெருவிற்கு வந்து பலபேரைக் ஒரு நூறு ரூபாய் கேட்டேன்...நான் குடிக்க கேட்பதாய் நினைத்து யாரும் தரவில்லை. அப்படியே பித்துப் பிடித்தவன் போல் வந்தவனை என்னுடைய சரக்கு பாட்னர்கள் வழிமறித்து யாரோ மட்டையான வியாபாரியிடம் இருந்த ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடி விட்டார்கள்...அப்பாடா நிம்மதி..! “பணம் ஒரு நூறு குடுங்க பாட்னர்” என்றேன். “தருகிறோம் பாட்னர் முதல்ல சரக்கு அடிக்கலாம்” என்றார்கள்....நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் பணம் தரவில்லை... “சரக்கு அடிப்போம் பிறகு பணம்” என்றார்கள்...அங்கே குடிக்க...குடிக்க... போதை தலைக்கேற... நான் மலரை மறந்து போனேன்! ஒரு கட்டத்தில் என்னால் நடக்க முடியாமல் நினைவிழுந்து நடு பாரில் விழுந்து கிடந்தேன். மாலை நிதானம் வந்த பொழுது மணி ஆறு அய்யோ....இரண்டு பேரும் காய்ச்சலில் கிடந்தார்களே என்னாச்சோ...?” என்று புலம்பியபடி வீட்டுக்கு ஓட்டமாக ஓடினேன் கதவு நான் சாத்தியபடியே இருந்தது, கதவைத் திறந்து பார்த்தேன் இருட்டாக இருந்தது கைகளால் துழாவி விளக்கைப் போட்டேன்..... காலையில் எப்படிப் படுத்திருந்தாளோ அதே நிலையில் கிடந்தாள் மலர்!

மலரு.....அடியேய் மலரு......என்றேன். என் கை, கால்கள் நடுங்கின அவளிடம் எந்த அசைவும் இல்லை... பக்கத்தில் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவளைத் தொட்டுப் பார்த்தேன் உடல் சில்லென்று இருந்தது.... அப்பொழுதுதான் கவனித்தேன் அவள் மூக்கு துவாரத்தில் இருந்து துளி இரத்தம் வந்திருந்தது.... அதை ஒரு செவ்வெறும்பு கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. மூடிய கண்ணுக்குள் இருந்தெல்லாம் எறும்புகள் சாரை....சாரையாய் அவளுடைய சதையை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது....அய்யோ....ஆண்டவா.....நான் வீட்டை விட்டுப் போனதும் மரணித்துவிட்டாள்....போதையில் மனைவி செத்தது கூடத் தெரியாமல் கிடந்திருக்கின்றேன்.....காலையில் இறந்து பிணமானவளை எறும்புகள் மொய்த்து கொண்டிருக்கின்ற கொடுமையை கண்ட நான் அலறினேன், என் அலறலைக் கேட்டுத்தான் அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்து குழந்தைக்கு உயிர் துடித்துக் கொண்டு இருந்தது 108 ஆம்லன்ஸ்க்கு அழைத்து குழந்தையைக் கொண்டு போனார்கள்... மலரின் உறவினர்கள் என்னை அடித்து உதைத்து கை,கால்களை உடைத்து தெருவில் எரிந்து விட்டுப் பிணத்தைக் கொண்டு போய் விட்டார்கள்... இரண்டு நாளாய் தெருவில் கிடந்த என்னைப் பழைய நண்பர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டுப் போய் விட்டார்கள்.

குழந்தையை மலரின் அண்ணன் தன்னால் வளர்த்த முடியாது என்று அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டானாம், அவன் வீட்டுக்கு போய் கேட்டால் சாகின்ற மாதிரி அடிக்கின்றான். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது அதனால்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இதோ சரக்கு ஒரு புல் பாட்டில் இருக்கின்றது...மட்டையான ஒருவனிடம் சில நூறு ரூபாய் இருந்தது. ஒரு புல் வாங்கி வந்து விட்டேன். என் நண்பன் ஒருவன் ஸ்கிரீன் மேக்கர் வைத்திருக்கின்றான்....அங்கே போய் அவன் வைத்திருந்த “அம்மோனியம் பைக்ராமெட்டை ஒரு நூறு கிராம் அளவுக்கு அவனுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். இந்த விஷத்தைத் தேர்ந்தெடுத்தற்கு காரணம் சத்திவேல் என்று ஒரு நண்பன் இருந்தான் பெண்கள் விசயத்தில மோசமானவன்... அவனுடைய பராமக்கிரகங்களை கதைகதையாகச் சொல்வார்கள்! ஆனால் அவன் மனைவி வேறு ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்தாள். ஒரு நாள் நேரடியாக தன் வீட்டில் பொண்டாட்டி வேற ஒருவனோட படுத்துக் கிடந்திருக்கின்றாள் இவன் கேட்டதுக்கு..... போடா ஒம்போது..... நீ சரியா இருந்தா நான் ஏன் அடுத்தவனோட படுக்குறேன்என்று சொல்ல இவன் ஆண் திமிர் அடங்கி கேவலமான புளுவைப் போல் உடைந்து போனான். இவன் ஊர் பெண்களுக்கெல்லாம் இன்பத்தைக் வாரி..வாரிக் கொடுத்தவன் தன் வீட்டை கவனிக்கவில்லை.... இதே விஷத்தை பீர்ல கலந்து குடிச்சுட்டு ஒருமணி நேரத்தில் மரணித்துப் போனான்.

அதனால எனக்கு இதுதான் சரியான தேர்வு என்று முடிவு செய்து திருடிட்டு வந்துட்டேன்.....! இதோ கலந்து வச்சுட்டேன் உங்ககிட்ட பேசிட்டே இரண்டு பெக்கு போட்டுட்டேன்....நல்லா ஜிவ்வுன்னு இருக்கு.... வயிறுதான் லைட்டா எரிச்சலா இருக்கு....இதைக் கலந்து சாப்பிட்டா குடல் அறுந்து உள்ள வயித்துகுள்யேயே... விழுந்துடுமாம்....இரத்தத்தில் கலந்தா....இதய இரத்த நாளங்களில் புகுந்து இதயத்தை அரிச்சு பொத்தலாயிடுமாம்.... வலியில்லாமல் உடனடி மரணம். மரண போதையில் ஒரு தனி சுகம்தான்....வானத்தில் இருந்து மலர் என்னைக் கூப்பிடுறா...? “வாடா ஆம்பளை மேல ஒயின்ஷாப் இல்ல என்னடா பண்ணுவே தேவடியா பையா...?” என்கின்றாள்......மலர்! இப்படித்தான் திட்டுவாள், கண்ணே...மணியேன்னு ஆரம்ப நாட்களில்தான் கொஞ்சினாள்..... பிறகு நான் முழுக்குடிகாரன் ஆன பிறகு யப்பா...என்ன மாதிரி பேசுனா... தண்ணி வாங்கிக் கொடுத்தா என்னைக் கூட கூட்டிக் கொடுப்பீடா தேவடியாப் பையா...அப்படிம்பா...! நான் மூத்திரம் பெய்யற குடி நல்லா போதையேரும் தேவடியாப் பையா.... நான் கஸ்டப்பட்டு சம்பாரிச்சு வச்ச காச எடுத்துட்டுப் போயி குடிச்சிருக்கிறியே....சாக வேண்டியதுதானே.....?” இப்படியெல்லாம் ஒரு படிச்ச பொண்ணு வாயில வருமான்னு நீங்க கேட்காதிங்க...வரும்! சூழ்நிலை மாறினால்...வரும்! எனக்கு வெறியேறி அடிச்சு சாத்தியிருக்கின்றேன்...! தானே தேர்ந்தெடுத்த வாழ்வு தானே பொறுப்பு என்று அடி உதையைப் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தாள்! எங்க வாழ்ந்தாள் இருந்தாள் நடை பிணம் போல....இன்னும் கொஞ்ச நேரத்துல நான் செத்துருவேன்னு நெனைக்குறேன்... மறுபடியும் ஒரு பெக்கு அடிக்கப் போறேன் டம்ளர் கூட தெரியல... எனக்கு கண்ணு கொஞ்சம் மசமசங்குது. இதோ இருக்கு இதுதான் என் கடைசி பெக்கு....
இந்த உலகத்துக்கு சியர்ஸ்...
இந்த ஒயின்ஷாப்புக்கு சியர்ஸ்...
என் பாட்னர்களுக்கு சியர்ஸ்......
யார் அது....? மங்கலா எனக்கு முன்னாடி நிக்குறது.....நாலு பேர் இருக்காங்க....கைய நீட்டி எதோ பேசறாங்க.... அய்யோ என்னை காப்பாத்தப் போறாங்களா....?அவங்க பேசறது எனக்கு கிணத்துக்குள்ள... கேட்குற மாதிரி கேட்குது....பரிட்சையமான குரலாகத் தெரிகின்றது......அய்யோ மிச்ச சரக்க எடுத்துக் குடிக்கறாங்களே.... அதுல வெஷம் கலந்திருக்குறேன்.......அதுல ஒருத்தன் பக்கத்துல வர்றானே.....

என்ன பாட்னர் புல் பாட்டில வச்சுக்கிட்டு எங்களைக் கூப்பிடல.....

அதுல வி.....வி......விஷம் கலந்துருக்குறேன்....குடிக்க வே.....வேண்டாம்........."

"போங்க பாட்னர்....உங்களுக்கு சுயநலம் ஜாஸ்தியாகிடுச்சு.....

“நாலு பேரும் சரக்க ஊத்திக் குடிக்கறாங்களே.......நான் சொல்றது அவங்க காதுல கேட்கலையே.........இப்ப நான் என்ன பண்ணுவேன்......கண்ணு வேற இருட்டிக்கிட்.........”
Read more...

முகம் - கெழக்கே போவும் புல்லட்டு

>> Tuesday, April 1, 2014


பெரியார் மாவட்டம், தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியம், கொங்கர்பாளையம் கிராமம், வடக்குத் தோட்டத்தில் வசிப்பவருமான ஆறுமுகச்சாமியின் மகன் நடேசனாகிய நான்; முத்தப்பகவுண்டர் மகன் கொன்னவாயக்கவுண்டன் என்கின்ற பாட்டையன் அவர்களுக்கு எழுதிக்கொடுத்த பிராமசரி என்ன வென்றால். TAP 5635 எண் உடைய கறுப்பு நிறமுடைய 1937ம் வருடம் தயாரிக்கப்பட்ட புல்லட் வாகனத்தை நான் பயன்படுத்திவந்தேன். தற்பொழுது அதை விற்பனை செய்யும் விதமாக முழு பாத்தியத்தையும், வண்டி ரிஜிஸ்டர் புத்தகத்தையும், ஒப்படைத்து! அதற்கு ரூ5001 பெற்றுக் கொண்டேன். இனி எனக்கும், இந்த குறிப்பிட்ட வாகனத்துக்கும், எந்த விதமான பாத்தியமும் இல்லை! என்பதை உறுதிப்படக் சுயநினைவுடன் கூறுகின்றேன்.

இப்படிக்கு
 

சாட்சிகள் :
1.குப்பன்
2.சக்கரை

பிராமசரியை படித்துப் பார்த்த நடேசன் மேலும் கீழும் கொன்னவாயக்கவுண்டரைப் பார்த்தார், வாசலில் பவ்யமாக நின்று கொண்டிருந்த குப்பனையும், சக்கரையையும் பார்த்தார் நல்ல திருவாத்தான்டா நீயி...!என்று சிரித்தார்.

"எதுக்கு சிரிக்கற நீ...? வண்டிய நீ குடுக்கற நான் வாங்குற அதுக்கு ஒரு எழுத்து வேண்டாமா..?" என்றார் கொன்னவாயர் வேகமாக பேசியதில் சிறிது மூச்சு வாங்கியது போல தோன்றியது...!

"சரி...சரி....கையெழுத்துப் போட்டுத் தரேன் விடு.." என்று பத்திரத்தை சுவற்றில் வைத்து ந டே ச ன் என்று இந்தியா மேப் மாதிரி போட்டுக் கொடுத்தார். அதே பேனாவில் பெருவிரலைக் காட்டிய குப்பனின் ரேகையும், சக்கரையின் ரேகையும் பதிக்கப்பட்டது ராத்திரி கொன்னவாயர் வாங்கித்தரும் சாரயத்திற்காக சப்புக் கொட்டிக் கொண்டனர். "வண்டிய இப்பவே எடுத்துட்டு போயிரு என்ன" என்றார் நடேசன்

"பின்னே இன்னிக்கு நல்ல நாளு இன்னிக்கே எடுத்துட்டு போயிடுறோம்...!"என்றவர் தன்னுடைய மீசையைத் தடவி விட்டுக் கொண்டார் கொன்னவாயக்கவுண்டர்.

வீட்டுக்குப் பின்புறம் இருந்த சாலையில் அந்த வாகனம் நின்றிருந்தது அதை வாகனம் என்பதை விட பழைய இரும்பு என்றுதான் சொல்ல வேண்டும் வாகனத்தின் நிறம் கறுப்பு என்பதற்கான அடையாளம் எதுமில்லை பைக்கின் சீட்டு கிழிந்து பஞ்சு வெளியே வந்திருந்தது உக்காருமிடத்தில் ஒரு பெரிய துளை வேறு இருந்தது குப்பன் "சீட்டுல என்ன வங்காட்டம் இருக்குது..? உள்ள பாம்பு....கீம்பு இருக்கப்போவுது கொன்னவாய் கவண்டரே" என்றான். ஆழமாக ஊடுருவிப் பார்த்து பாம்பு இருக்கின்றதா என்று பார்த்த கொன்னவாயக்கவுண்டர். சீட்டை இரண்டு தட்டு தட்டினார் அந்த பொந்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி புர்ர்ர்ரென்று பறந்து போனது...! கண்டிப்பாய் பாம்பு உள்ளே இருக்க வாய்ப்பில்லை என்பதை நம்பினார்...ஆனால் குருவிகள் உள்ளே என்ன செய்து கொண்டிருக்கும்.... என்கின்ற சிந்தனையில் குருவி பறந்த திசையில் பார்த்தார் அந்த குருவி ஒரு கருவேல மரத்தில் அமர்ந்தது, அது ஒரு கூடு கட்டிக் கொண்டிருந்தது கூடு சொகுசாக பஞ்சை பிய்த்தெடுத்து மொத்தை போல உருவாக்குகின்றது போல...என்று பல விதமான சிந்தனையில் இருந்தவரை நடேசனின் குரல் இவ்வுலகிற்கு வரவைத்தது.

"சரி எடுத்து தொடைச்சுட்டு இருங்க மாட்ட கட்டீட்டு வர்றன்"என்ற நடேசன் அங்கிருந்து போய்விட்டார்.

சாலைத் தடுக்கில் சொருகி வைத்திருந்த பழைய துணியை எடுத்து ஒரு தட்டு தட்டிவிட்டு மேல ஏறிக் உக்கார்ந்து கிக்கரை இரண்டு பம்ப் செய்து ஒரு அடி அடிக்க இடிவிழுந்த மாதிரி புடும்புடும்புடும் துடும்...ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........என்றது. குப்பன் அதன் கர்ணகடூரமான சத்தம் தாளாமல் இரு காதுகளின் துளைகளில் தன்னுடைய விரல்களை அழுத்தமாக சொருகிக் கொண்டான் அதையும் மீறி சத்தம் காதுகளில் ஒலித்தது. "காண்டாரஓலிது காது போயிருமாட்ட இருக்குது" என்றான்.

கட்டுத்தாரையில் கட்டியிருந்த டில்லி எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு மிரண்டு தோட்டத்தை விட்டு பாய்ந்து ஏரித்தடத்தில் புயல் மாதிரி ஓடியது. எதிரே வந்த சித்தய நாசுவன் எருமை வருகின்ற வேகத்தைப் பார்த்து அடப்புப் பொட்டிய தூக்கிப் போட்டு விட்டு கிலுவை மரத்துல் ஏறி வவ்வால் மாதிரி ஒட்டிக் கொண்டான்....எருமை கொஞ்ச தூரம் ஓடி மூச்சு வாங்கிய படி நின்றது. மறுபடியும் திரும்பிப் போய் சித்தய நாசுவன் மரத்திலிருந்து இறங்கினால் குண்டியில் குத்தலாமா என சிந்தனையிலிருப்பதாய் சித்தய நாசுவனுக்கு தோன்றியது அதனால் மரத்தில் தொங்கிய படியே எருமையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் நடேசன் தூரத்திலிருந்து எருமை ஓடுவதைப் பார்த்ததும் கையிலிருந்த மாட்டை ஒரு மரத்தில் கட்டிவிட்டு ஓடி வந்தார்...நேரத்திற்கு 5லிட்டர் கறக்குற எருமை மிரண்டு எங்காவது போய்விட்டால் பிடித்துக் கொண்டு போய் குன்னத்தூர் சந்தையில் விற்றுவிடுவார்கள் என்கின்ற பதற்றம் மனதினில் தோன்ற வேகமாக வெறும் காலில் ஓடினார்.

நடேசன் அருகில் வரும் வரைக்கும் போக்கு காட்டி விட்டு ஓடப் பார்த்தது மட்டைப்பந்தை பிடிக்கும் விளையாட்டு வீரன் போல தாவி கயிற்றைப் பிடித்துக் கொண்டார் கையில் வைத்திருந்த விராலிக்குச்சியில் இரண்டு வைத்தார் அதற்கு உரைத்ததோ என்னவோ சாதுவாய் அவருடன் வந்தது முதுகில் விராலிக்குச்சியின் தடம் பதிந்திருந்தது.

சித்தயன் கிலுவை மரத்தில் இருந்து இறங்கி வாய்க்காலில் திறந்து கிடந்த அடப்புப் பெட்டியில் இருந்த படிகாரக் கல் கரைந்து கொண்டிருந்தது, தீட்டு இரும்பு ஒரு பக்கம் கிடந்தது, சவரக் கத்தி மண்ணில் புதைந்து இருந்தது, குட்டிக்குரா பவுடர் டப்பி தண்ணீரில் குப்புறக் கிடக்க வெள்ளையாய் தண்ணீரில் கரைந்து மணக்க...மணக்க தண்ணீர் வயலில் பாய்ந்து கொண்டிருந்தது. பவடரு இத்துனூன்டுதான் இருந்துச்சு அதும் போச்சா…!” என்றபடி  பொறுக்கியெடுத்த பொருட்களை தோளில் போட்டிருந்த துண்டால் துடைத்து அடப்புப் பெட்டியில் அதனதன் இடத்தில் வைத்து விட்டு வாய்க்காலை விட்டு மேலேறி வரப்புக்கு வந்தான் எருமையை இழுத்துக் கொண்டு வந்த நடேசன் என்றா கிலுவை மரத்துல ஏறிக் குச்சுட்ட ஒரு எருமைய புடிக்க முடியாதாடா...?என்றார். “அதென்னங் கவண்டரே எரும மாதிரியா இருக்குது ஆனைச் சோடு இருக்குதுங்க..! என்றான்.

எருமைக்குப் பின்னாடியே போனான் சித்தையன், எருமையை கட்டிவிட்டு நடேசன் சாளைக்குப் போனார் பேயடித்தாற் போல் நின்றிருந்த மூவரையும் பார்த்து நான் வண்டி விக்குறதே இந்த எருமை மெரளுதுதான்….அதை எதுக்கப்பா இங்க ஸ்டார்ட் பண்ணுனீங்க…?“ என்றார்.

கொன்னவாயக்கவுண்டர் மனதில் தான் ஏமாந்து விட்டோமோ என்கின்ற ஒரு அச்சம் மனதில் தோன்றியது. ஆனாலும் இந்த சத்தம் தேவைதான் என்று மகிழ்ச்சி கொண்டார். அவருக்கு அரைகுறையாக ஓட்டத் தெரிந்தாலும் என்ன அரைகுறை! முற்றிலுமாகவே அவருக்கு வாகனம் எதையும் சரியாக ஓட்டத் தெரியாது. சைக்கிளையே தக்கிடி..புக்கிடி என்றுதான் ஓட்டுவார்…! இந்த சில நூறு கிலோ எடையுள்ள வாகனத்தை எப்படி ஓட்டப் போகின்றோம்! என்கின்ற அச்சம் துளியும் அவர் மனதில் இல்லாததற்கு பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே காரணமாகும். பக்கத்து தோட்டத்தில் இருக்கும் துரை புதிதாக வாங்கிய புல்லட்டில் வந்து கொண்டிருக்க வரப்பில் நின்ற கோனவாயக்கவுண்டர் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டு நிற்க... அவன் அடித்த “ஹாரன்” சத்தம் அவர் காதில் விழவில்லை பக்கத்தில் வந்து ஒரே தூக்காய் தூக்கி வயல்ச் சேற்றில் தள்ளிவிட்டுச் சென்று விட்டான்…களை எடுத்துக் கொண்டிருந்த பெண்கள் சிரித்து விட்டார்கள், சேற்றில் இரண்டு முறை புரண்டு எழுந்த பிறகு துரையின் புல்லட் தூரப் போய் விட்டது. மனதில் அவமானத்தின் வடு வெகு நாளாய் நெருடிக் கொண்டிருக்க. அந்த நெருடலுக்கு மருந்தாய் தானும் ஒரு புல்லட் வாங்கி அவனை மிரள வைக்க வேண்டும் என்பது திட்டம். அவருடைய திட்டத்திற்கு தகுந்த வண்டியாக இது இருக்கும் என்று நம்பினார். காது செவுடாகும் இதன் சத்தம் அவன் ஆசையாக வளர்க்கும் பல பிராணிகளை துன்புறுத்தும், அவன் காதை செவுடாக்கும் என்கின்ற மகிழ்ச்சியில் திளைத்தார்.

மூவரும் அந்த பெரும் வாகனத்தை தள்ளிக்கொண்டு செல்ல தான் முன்னால் நிற்பது அபசகுனம் என்று பேசுவார்கள் எனக் கருதிய சித்தையன் மறைவிடத்தில் நின்று கொண்டான், ஆனால் அந்த வாகனமே ஒரு அபசகுனம் என்று நினைத்து சிரித்தான்.

கொன்னவாயக்கவுண்டரின் மாமியார் மதிய உணவுக்கு வாழையிலை அறுத்துக் கொண்டிருந்த போது அந்த காதை அடைக்கும் சத்தத்தைக் கேட்டாள், தாளப்பறக்கும் விமானத்தின் சத்தமாக இருகக் கூடும் என்று கருதியவள் அன்னாந்து வானத்தைப் பார்த்தாள் விமானம் எதுவுமில்லை...சத்தம் மிக நெருக்கமாகக் கேட்க வண்டிப் பாதையைப் பார்த்தாள். கொன்னவாயக்கவுண்டர் ஒரு இரும்பு சாமானைக் கொண்டு செய்த வாகனத்தில் எருமை மேல் அவர்ந்து வரும் எமன் போன்று வந்து கொண்டிருந்தார் சீரற்ற குண்டும் குழியுமான மண் சாலையில் அங்கும் இங்கும் அலைய வரும் வாகனம் மருமகன் தன்னைக் கொல்ல செய்யும் சதி என்று நினைத்த மாமியார் “காப்பாத்துங்க....காப்பாத்துங்க...”என்று இலையை தூக்கி எரிந்து விட்டு ஓடினாள்....

கட்டிலில் அமர்நது வெற்றுடம்பு, கோமணத்துடன் வெற்றிலையை மென்று கொண்டிருந்த கொ.வா.கவுண்டரின் மாமனார் வேகமாக ஓடிவரும் பாரியாளும் பின்னால் பெருத்த சத்தத்துடன் வரும் மருமகனும் பீதியைக் கிளப்ப கட்டிலை விட்டு எழுந்து ஓடினார். கொன்னவாயக்கவுண்டர் பிரேக் கட்டையை தேடி மிதிப்பதற்குள் கட்டிலை அடித்து நொறுக்கிவிட்டு கீழே சாய்ந்தது வண்டி. புல்லட்டின் அடியில் கிடந்தார்....பின்னால் அமர்ந்து இருந்த குப்பனும் சக்கரையும் தாவிக்குதித்து வண்டியை தூக்க முனைந்தார்கள், ஒரு அடி தூக்கியிருப்பார்கள்... மாமனார் ஓடிவந்து வண்டியை உதைத்து தள்ளினார்
சாவுடா நாயே என்னைக் கொல்லப் பாக்குறியா என்று பலமாக உதைக்க... “டேய் தூக்குங்கடா...” என்று கத்தினார்... மாமனாரின் மேலான ஆத்திரமும், சக்கரையும் குப்பனும் கைகொடுக்க ஒரே முனைப்பில் தூக்கி நிறுத்தி சைடு ஸ்டேண்ட் போட்டுவிட்டு சுற்றும் முற்றும் பார்த்த கொன்னவாயக்கவுண்டரின் பார்வையில் பட்ட நெல் குத்த வைத்திருந்த உலக்கையை எடுத்துக் கொண்டு மாமனாரைத் தேடினால் இரண்டு கொப்பு கடலை காட்டைத் தாண்டி கோமணத்துடன் ஓடி நின்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார்....! உலக்கையை இங்கிருந்தே தூக்கி வீசினார் அது நடுக்காட்டில் போய் விழுந்தது...! இது வழக்கமாக நடக்கும் காட்சி என்பதால் அவரவர் வேலையை சிரித்துக் கொண்டே பார்ததுக் கொண்டிருந்தனர். கல்யாணம் முடிந்த கையோடு ஆண் வாரிசு இல்லாத மாமனார் வீட்டுக்குள் வந்து ஐக்கியமாகிக் கொண்ட கொன்னவாயக்கவுண்டர் பல அவமானங்களைக் கடந்து இங்கு ராஜா! போல் வாழ்ந்து கொண்டிருந்தார்! முதலில் மருமகன் என்கின்ற மரியாதையோடு இருந்தவர்கள் இவரின் கோமாளித்தனங்களால் எரிச்சலடைந்து இவரை தூற்ற ஆரம்பித்தார்கள்...இவரும் திருப்பி தாக்க தொடங்கினார். சில நாட்களில் பெரிய போர்க்களம் போல் காட்சியளிக்கும். களை பிடுங்க வருபவர்களுகளில் இருந்து கள் இறக்க வரும் சாணார் வரைக்கும் வேடிக்கை இவர்களின் கூத்துதான்.


புல்லட் ஏதோ தைரியத்தில் வாங்கி வந்து விட்டார். ஆனால் பல மாதங்களாகியும் வண்டி சரியாக ஓட்டக் கற்றுக் கொள்ள முடியவில்லை அவரால். தன் எதிரி துரையை எதுவும் செய்ய இயலவில்லை, அவர் தக்கிடி புக்கிடி என்று ஓட்டிக் கொண்டிருக்க அவன் புயல் மாதிரி பறந்தான். அந்த காற்றே இவரைப் பலசமயம் குப்புறத்தள்ளி விட்டது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கொன்னவாயக்கவுண்டர் தன் இயலாமையின் வெறியில் சாட்டையால் புல்லட்டை அடிக்க தொடங்கினார். யார்.. யாரோ வந்து கற்றுக் கொடுக்க வந்தார்கள் முடியாமல் அவர்களும் சென்று விடுவார்கள். 

தன் முயற்சியில் தோல்வியடைந்த கொன்னவாயக்கவுண்டர். அதை விற்கும் பொருட்டு முயற்சி செய்தார், ஆனால் விதி வலியது பழைய இரும்பு வியாபாரி கூட அந்த கிராமத்தில் வாங்க வில்லை! கடைசியில் சும்மாவாச்சும் எடுத்துப் போகச் சொல்லியும் யாரும் எடுத்துப் போகவில்லை...கேட்பாரற்று கிடந்தது. 

சிலர் அதில் ஆடு, மாடுகளை கட்டி வைத்தனர், சிறுவர்கள் அதன் மேல் ஏறி வண்டி ஓட்டி விளையாடினார்கள். நாய் அதன் அடியில் படுத்து உறங்கியது, காலைத் தூக்கி ஒண்ணுக்கடித்து அதையே கழிவறையாகப் பயன்படுத்தியது மட்டுமில்லாமல் அனைத்துப் பறவைகளும் தங்கள் எச்சங்களை அதன் மேல் பேண்டு சென்றது. சக்கரங்கள் இரண்டும் காற்று இறங்கி பரிதாபமாக நின்று கொண்டிருந்த வாகனத்தை நோக்கி எங்கிருந்தோ வந்த ஒரு சிட்டுக்குருவி சீட்டின் பொந்தில் நுழைந்து கொஞ்சம் பஞ்சை எடுத்துக் கொண்டு புர்ர்ர்ர்ர்ரென்று பறந்து சென்று தன்னுடைய சொகுசு பங்களாவை கருவேலம் மரத்தில் கட்ட ஆரம்பித்தது.

Read more...

முகம் - மொட்டையப்பர்.

>> Friday, February 7, 2014மொட்டையப்பரைப் பற்றி ஊருக்கே தெரியும். நெல் வியாபாரி, நெல் தரகர் எனப் பல பரிணாமங்களை எடுப்பவர். நெல்லுக்குள்ளும் தவிட்டுக்குள்ளும் புழங்குவதால் அவர் அழுக்கான ஒரு கிராமத்தான் என்று நினைத்தீர்களானால் அதை அழித்துவிடுங்கள். 

கதர் வேட்டி இரண்டு வாங்கிவந்து தவசி கடையில் கொடுத்து கை இல்லாத பனியனும்; அதில் இரண்டு பக்கமும் பை வைத்து தைத்துக் கொள்வார். மீதமாகும் துணியை துண்டாக பயன்படுத்துவார். குறைந்த பட்சம் ஐம்பது ஆடைகள் இப்படி வைத்திருப்பார். அண்டர்வேர் முதற் கொண்டு வெண்மையான ஆடைகளையே பயன்படுத்துவார், நெல், கம்பு, சோளம், தினை, வரகு எதாகினும் ஒரு பிடி எடுத்து ஊதி வாயில் போட்டு மென்றுவிட்டு அட வக்காலோலிது புது கம்பு பாலா வருதுஎன்பார் நெல்லை இரு உள்ளங்கையில் வைத்து தேய்த்து உமி ஊதி வாயில் போட்டு மென்று பார்ப்பார் ஏப்புனு உன்ற காடு வெங்கச்சாங்கல்லு காடா சக்கரையா இனிக்குதுஎன்பார்.

அப்படிக் கேட்கப்படும் கேள்விகள் பொய்யாகப் போனதில்லை! கண்ணில் பார்த்தே மலையில் விளைந்ததா, மடியில் விளைந்ததா என துல்லியமாகக் கணிப்பார். ஊராளிகளின் ராய், கம்புகள் கருப்பு நிறத்தில் இருக்கும் காரணம் அவர்கள் மண் மொடாவில் சேமித்து வைக்கும் பழக்கமுடையவர்கள். அம்பத்தினாலு, அப்பத்திஅஞ்சு, அடங் கொப்பனோலி சீக்கரம் அளநெல் அளக்கும் போது அவரின் சம்பாஷைணைகள் இவ்விதமாகத்தான் இருக்கும்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி... அற்றினையாக இருந்தாலும் கூட இவருடைய பாஷையில் கொப்பணோலி, வக்காலோலிதான். அடங்கொப்பணோலி மாடு வெள்ளாமைக்குள்ள போவுது பாரு வாக்காலலோலி சின்னான் எங்கடா இருக்கே..?”, “அடங்கொப்பணோலி சைக்கிளு பஞ்சரு ஆயிடுச்சு...வாக்காலோலிது சைக்கிள் கடையும் பக்கத்தால இல்ல...தள்ளீட்டுப் போவோணும்என்பார்.

தாய், தந்தையை சிறுவயதிலேயே இழந்த அவர் கவுந்தப்பாடியில் உள்ள ஓர் அரிசி மில்லில் வளர்ந்தார், பிறகு அரிசி மில் மூடிவிட கொங்கர்பாளையம் ஒரு சோலியாக வந்தவர் ஊர் பிடித்துப் போக ஈசுக்கவுண்டர் சாளையில் தங்கிக்கொண்டார். இப்படியாக அவருக்கும் இந்த ஊருக்குமான உறவு ஆரம்பித்தது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நெல் தரகு வேலைக்குப் போனால் மாலை ஐந்து மணி வரைக்கும் சோம்பலாக ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேலை செய்வார், வேலை முடிந்து துணியை துவைத்து சுத்தமாக அழுக்கே இல்லாமல் துவைப்பார். இதில் வேடிக்கை என்னவென்றால் துணியை கழட்டி ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு கோவணம் கட்டிக் கொண்டுதான் நெல் அளப்பது போன்ற வேலையில் ஈடுபடுவார், ஆனாலும் மாலையில் துணியை துவைத்துக் கொள்வார் மனுசன் படு சுத்தம் மனுசன். ஆனாலும் அவருக்கு ஓர் உடல் உபாதையிருந்தது அரிப்பு நோயினால் துன்பப்பட்டார் கைகால்கள் திடீரென்று அரிக்க ஆரம்பித்துவிடும் தேங்காயெண்ணைய் தேய்த்தால் கொஞ்சம் அடங்கும்...நெல் மொளகு சிலருக்கு அலர்ஜியாக இருக்கும்...வேறு தொழிலும் மாறமுடியாமல் அதிலேயே உழன்று கொண்டிருந்தார். 

உற்சாகமான பொழுதுகளில் பழைய காதல் பாடல்களை எட்டுக்கட்டையில் ராகமிழுத்துப் பாடுவார் அதை வைத்து இவருடைய வாழ்க்கையில் காதல் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று கருதினேன். ஒரு ஏகாந்தமான பொழுதில் பழைய காதல் பாடல்களைப் பாடிய படி வந்தவரை தடுத்து நிறுத்தினேன், என்னுடைய சந்தேகத்தைக் கேட்ட பொழுது ஒரு ஆழமான பெருமூச்சு விட்டவர் வானத்தைப் பார்த்தார்....! தோளில் இருக்கும் துண்டால் இல்லாத தூசியை தட்டிவிட்டு அருகிலமர்ந்தார்."அடி சிந்தாமணி.......அடி சிந்தாமணி...." என்று ராகமாக பாடிக்கொண்டு கதையைச் சொல்ல ஆரம்பித்தார் என்ற மாமன் பொண்ணுதான் சிந்தாமணி அவ மேல எனக்கு ஒரு கண்ணு, ஒரு நாள் நான் என்னோட ஆசையச் சொன்னேன் அந்த புள்ளையும் என்னை புடிச்சிருக்குன்னு சொல்லிடுச்சு....காடு, மேடு, வாய்க்கா வரப்பு எல்லாம் "போவோமா ஊர்கோலம்......பூலோகம் எங்கெங்கும்...."ஓடும் பொன்னியாறும்....பாடும் பாடல்கள் நூறும்..." பாடலை எட்டுக்கட்டையில் பாடினார். இப்படிப் பாடிக்கிட்டு சிட்டுக்குருவி மாதிரி திரிஞ்ச எங்களை யாரோ என் மாமன் கிட்ட போட்டுக்குடுத்துட்டாங்க....என்ற மாமன் கூப்பிட்டு எதுவும் சொல்லலை மொட்டையப்பா என்ற புள்ளைய உனக்கு குடுக்கறதுக்கு எனக்கொன்னும் இல்ல... ஆனா நீ ரைஸ் மில்லுல தவுட்டயும், தகரத்தையும் பொறுக்கிக்கிட்டு கெடந்தா எப்படிப்பா... உனக்கு சொந்தமா ஒரு ஊடு கோட இல்ல....அட காடு கரையில்லாட்டிப் போவுதுப்பா....ஒரு குடியானவனுக்கு ஊடு முக்கியமில்லையா....?" அப்படின்னு கேட்டாரு "நீ ஒரு ஊட்டைக்கட்டி காட்டு நான்  மகராசியா எம் புள்ளையக் கட்டிக் கொடுக்றேன்"னு சொல்லிட்டாரு....! நானும் என்னடா பண்றதுன்னு இருக்க எனக்குத் தெரிஞ்ச செட்டியாரு ஒருத்தரு வழி சொன்னாரு மலையில நோட்டு மாத்துனா ஒண்ணுக்கு ரெண்டு...கெடைக்கும்ன்னு சொன்னாரு...நானும் சேத்தி வச்சிருந்த ஒரு ஆயிரம் ரூபாய எடுத்துட்டு போயி மலைக்கு (மைசூர்) போயி இரண்டாக்கி கொண்டுட்டு வந்தேன், வந்து புழக்கத்துல விட்டு இரண்டாயிரம் ஆச்சு! அடுத்த தடவை மலைக்கு போக அவன் கோயமுத்தூருக்கு வாகைய மாத்திட்டான்னு சொன்னாங்க திரும்பி கோயமுத்தூரு போனேன். இரண்டாயிரத்துக்கு நாலாயிரம் கொடுக்க ரொம்ப சந்தோஷமா பாட்டுப் பாடிட்டு இதுல செங்கக்கல்லு வச்சு ஓடு போட்டு ஒரு சின்ன ஊட்டைக் கட்டிப் போடலாம்.....கல்யாணச் செலவும் பண்ணிப் போடலாமுன்னு கனவோட சந்தை வழியா நடந்து வந்துட்டு இருந்தேன் யாருன்னே தெரியாத ஒரு பத்து பேரு வழி மறிச்சு என்னை அடிச்சுப் போட்டுட்டு வக்காலோலிக பணத்தைக் கொண்டுட்டு ஓடிட்டாங்க.....பைத்தியம் மாதிரி கோயமுத்தூர்ல இரண்டு மாசம் சுத்தினேன்......போனது...போனதுதான். அப்புறம் அப்படி..இப்படின்னு மூட்டையும் கீட்டையும் தூக்கி பஸ்க்கு காசு புடிச்சு ஊருக்கு வந்தேன்....நான் வரும் போது சிந்தாமணிக்கு வேற ஒருத்தரோட கண்ணாலம் முடிஞ்சு எதுத்தாப்ல ஊர்வலமா வர்றா.....என்னை நிமிந்து கோட பாக்கல......"பாடிப் பறந்த கிளி......பாதை மறந்தடி பூ மானே..........ஆத்தாடி தன்னால......."எட்டுக்கட்டையில் மறுபடியும் ராகம் இழுத்தார்.... நான் "எந்தப் படத்துல இந்தக் கதை ஸ்ரீதேவி கொட்டாயில நேத்துப் பாத்த படமா...?" அப்படின்னேன் "போடா.....உனக்கென்ன தெரியும்?" அப்படின்னு சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கிட்டு போய்விட்டார். மறுபடியும் பார்க்கும் பொழுதெல்லாம் "உண்மையைச் சொல்லுங்க...யாரைக் காதல் செய்தீங்க..? .எத்தனை பேரை காதலிச்சீங்க...?" என்று கேட்பேன் "போடா...உனக்கு பொழப்பில்ல நான் வடக்க நெல்லளக்க போகோணும்" என்று ஓடி விடுவார்....! நானும் பலமுறை கேட்பேன் அவரும் எதாவது ஒரு பதிலைச் சொல்லி மழுப்புவார், இது உண்மையா எனத் தெரிந்து கொள்ள அவருடன் நெருக்கமான பலரிடம் கேட்க....அவனெங்கத்த காதல் புடுங்கறான்...சும்மா வெளையாட்டுக்கு சொல்லிட்டுத் திரிவான் என்று சொல்வார்கள்...! அவரிடம் நானும் இதை வைத்தே கிண்டலடிப்பது வழக்கம் நான் கிண்டலடிப்பதை அவர் விரும்பினார்...பழைய ஞாபகங்களை கிளற ஆரம்பிப்பது சிலருக்கு ஒரு சுகமான அனுபவம். அவரின் போக்கிலேயே நூல் பிடித்துப் போனால் அவருடைய அந்தரங்கத்தின் கதவுகளைத் திறந்து வாழ்க்கையை ருசிக்க வைத்த சில பெண்களின் அழகுகளைப் பற்றி சிலாகிப்பார்.

ஒரு பழைய நடிகையைப் பற்றிச் சொல்லும்போது..."அவினாசி மில்லுக்காரரு ஒருத்தரு....அந்தம்மா மேல ஆசைப்பட்டுட்டாரு..."வர்றியா" அப்படின்னு கேட்டிருக்காரு அதுக்கு "மில்ல எழுதி வைய்யி வரேன்"னுச்சாம் மனுசன் மில்ல எழுதி வச்சு ஒரு ராத்திரி சொகம் அடைஞ்சிருக்காரு...!"என்று பழங்காலக் கிசுகிசுக்களை நேரில் பார்த்தாற் போல் கண்களில் ஆர்வம் மிக சொல்லுவார்.

"கண்ணதாசன் மாதிரி அனுபவிச்சவனும் இல்ல.....துன்பப்பட்டவனும் இல்ல....பொம்பள விசயம் ஆளை மேல கொண்டு போயிம் வெக்கும், கீழ கொண்டு போயிம் வெக்கிம்....."மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ள அவன் ஆடியடங்குவதும் பெண்ணுக்குள்ளே.."ச்சோடேய்....என்று இல்லாத நாயை முடுக்குவார்!


இப்படியாகப்பட்ட ஒரு சுவாரஸ்யமான மனிதர் ஒரு நாள் விட்டத்தில் தன் வேட்டியினால் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போனார்...என்ன காரணம்...எதனால் என்று யாருக்குமே தெரியாது! ஊர்க்காரர்கள் அரிப்பு நோயின் வேதனை தாளாமல் தொங்கிவிட்டார் என்றே பேசிக்கொண்டார்கள் நானோ காதலியின் பிரிவு தாளாமல் முடிவைத் தேடிக்கொண்டார் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றேன் நீங்களும் அப்படியாகவே நம்பிக் கொள்ளுங்கள்..!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP