Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

முகம் - மொட்டையப்பர்.

>> Friday, February 7, 2014



மொட்டையப்பரைப் பற்றி ஊருக்கே தெரியும். நெல் வியாபாரி, நெல் தரகர் எனப் பல பரிணாமங்களை எடுப்பவர். நெல்லுக்குள்ளும் தவிட்டுக்குள்ளும் புழங்குவதால் அவர் அழுக்கான ஒரு கிராமத்தான் என்று நினைத்தீர்களானால் அதை அழித்துவிடுங்கள். 

கதர் வேட்டி இரண்டு வாங்கிவந்து தவசி கடையில் கொடுத்து கை இல்லாத பனியனும்; அதில் இரண்டு பக்கமும் பை வைத்து தைத்துக் கொள்வார். மீதமாகும் துணியை துண்டாக பயன்படுத்துவார். குறைந்த பட்சம் ஐம்பது ஆடைகள் இப்படி வைத்திருப்பார். அண்டர்வேர் முதற் கொண்டு வெண்மையான ஆடைகளையே பயன்படுத்துவார், நெல், கம்பு, சோளம், தினை, வரகு எதாகினும் ஒரு பிடி எடுத்து ஊதி வாயில் போட்டு மென்றுவிட்டு “அட வக்காலோலிது புது கம்பு பாலா வருது” என்பார் நெல்லை இரு உள்ளங்கையில் வைத்து தேய்த்து உமி ஊதி வாயில் போட்டு மென்று பார்ப்பார் “ஏப்புனு உன்ற காடு வெங்கச்சாங்கல்லு காடா சக்கரையா இனிக்குது” என்பார்.

அப்படிக் கேட்கப்படும் கேள்விகள் பொய்யாகப் போனதில்லை! கண்ணில் பார்த்தே மலையில் விளைந்ததா, மடியில் விளைந்ததா என துல்லியமாகக் கணிப்பார். ஊராளிகளின் ராய், கம்புகள் கருப்பு நிறத்தில் இருக்கும் காரணம் அவர்கள் மண் மொடாவில் சேமித்து வைக்கும் பழக்கமுடையவர்கள். “அம்பத்தினாலு, அப்பத்திஅஞ்சு, அடங் கொப்பனோலி சீக்கரம் அள” நெல் அளக்கும் போது அவரின் சம்பாஷைணைகள் இவ்விதமாகத்தான் இருக்கும்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி... அற்றினையாக இருந்தாலும் கூட இவருடைய பாஷையில் கொப்பணோலி, வக்காலோலிதான். “அடங்கொப்பணோலி மாடு வெள்ளாமைக்குள்ள போவுது பாரு வாக்காலலோலி சின்னான் எங்கடா இருக்கே..?”, “அடங்கொப்பணோலி சைக்கிளு பஞ்சரு ஆயிடுச்சு...வாக்காலோலிது சைக்கிள் கடையும் பக்கத்தால இல்ல...தள்ளீட்டுப் போவோணும்” என்பார்.

தாய், தந்தையை சிறுவயதிலேயே இழந்த அவர் கவுந்தப்பாடியில் உள்ள ஓர் அரிசி மில்லில் வளர்ந்தார், பிறகு அரிசி மில் மூடிவிட கொங்கர்பாளையம் ஒரு சோலியாக வந்தவர் ஊர் பிடித்துப் போக ஈசுக்கவுண்டர் சாளையில் தங்கிக்கொண்டார். இப்படியாக அவருக்கும் இந்த ஊருக்குமான உறவு ஆரம்பித்தது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நெல் தரகு வேலைக்குப் போனால் மாலை ஐந்து மணி வரைக்கும் சோம்பலாக ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேலை செய்வார், வேலை முடிந்து துணியை துவைத்து சுத்தமாக அழுக்கே இல்லாமல் துவைப்பார். இதில் வேடிக்கை என்னவென்றால் துணியை கழட்டி ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு கோவணம் கட்டிக் கொண்டுதான் நெல் அளப்பது போன்ற வேலையில் ஈடுபடுவார், ஆனாலும் மாலையில் துணியை துவைத்துக் கொள்வார் மனுசன் படு சுத்தம் மனுசன். ஆனாலும் அவருக்கு ஓர் உடல் உபாதையிருந்தது அரிப்பு நோயினால் துன்பப்பட்டார் கைகால்கள் திடீரென்று அரிக்க ஆரம்பித்துவிடும் தேங்காயெண்ணைய் தேய்த்தால் கொஞ்சம் அடங்கும்...நெல் மொளகு சிலருக்கு அலர்ஜியாக இருக்கும்...வேறு தொழிலும் மாறமுடியாமல் அதிலேயே உழன்று கொண்டிருந்தார். 

உற்சாகமான பொழுதுகளில் பழைய காதல் பாடல்களை எட்டுக்கட்டையில் ராகமிழுத்துப் பாடுவார் அதை வைத்து இவருடைய வாழ்க்கையில் காதல் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று கருதினேன். ஒரு ஏகாந்தமான பொழுதில் பழைய காதல் பாடல்களைப் பாடிய படி வந்தவரை தடுத்து நிறுத்தினேன், என்னுடைய சந்தேகத்தைக் கேட்ட பொழுது ஒரு ஆழமான பெருமூச்சு விட்டவர் வானத்தைப் பார்த்தார்....! தோளில் இருக்கும் துண்டால் இல்லாத தூசியை தட்டிவிட்டு அருகிலமர்ந்தார்."அடி சிந்தாமணி.......அடி சிந்தாமணி...." என்று ராகமாக பாடிக்கொண்டு கதையைச் சொல்ல ஆரம்பித்தார் என்ற மாமன் பொண்ணுதான் சிந்தாமணி அவ மேல எனக்கு ஒரு கண்ணு, ஒரு நாள் நான் என்னோட ஆசையச் சொன்னேன் அந்த புள்ளையும் என்னை புடிச்சிருக்குன்னு சொல்லிடுச்சு....காடு, மேடு, வாய்க்கா வரப்பு எல்லாம் "போவோமா ஊர்கோலம்......பூலோகம் எங்கெங்கும்...."ஓடும் பொன்னியாறும்....பாடும் பாடல்கள் நூறும்..." பாடலை எட்டுக்கட்டையில் பாடினார். இப்படிப் பாடிக்கிட்டு சிட்டுக்குருவி மாதிரி திரிஞ்ச எங்களை யாரோ என் மாமன் கிட்ட போட்டுக்குடுத்துட்டாங்க....என்ற மாமன் கூப்பிட்டு எதுவும் சொல்லலை “மொட்டையப்பா என்ற புள்ளைய உனக்கு குடுக்கறதுக்கு எனக்கொன்னும் இல்ல... ஆனா நீ ரைஸ் மில்லுல தவுட்டயும், தகரத்தையும் பொறுக்கிக்கிட்டு கெடந்தா எப்படிப்பா... உனக்கு சொந்தமா ஒரு ஊடு கோட இல்ல....அட காடு கரையில்லாட்டிப் போவுதுப்பா....ஒரு குடியானவனுக்கு ஊடு முக்கியமில்லையா....?" அப்படின்னு கேட்டாரு "நீ ஒரு ஊட்டைக்கட்டி காட்டு நான்  மகராசியா எம் புள்ளையக் கட்டிக் கொடுக்றேன்"னு சொல்லிட்டாரு....! நானும் என்னடா பண்றதுன்னு இருக்க எனக்குத் தெரிஞ்ச செட்டியாரு ஒருத்தரு வழி சொன்னாரு மலையில நோட்டு மாத்துனா ஒண்ணுக்கு ரெண்டு...கெடைக்கும்ன்னு சொன்னாரு...நானும் சேத்தி வச்சிருந்த ஒரு ஆயிரம் ரூபாய எடுத்துட்டு போயி மலைக்கு (மைசூர்) போயி இரண்டாக்கி கொண்டுட்டு வந்தேன், வந்து புழக்கத்துல விட்டு இரண்டாயிரம் ஆச்சு! அடுத்த தடவை மலைக்கு போக அவன் கோயமுத்தூருக்கு வாகைய மாத்திட்டான்னு சொன்னாங்க திரும்பி கோயமுத்தூரு போனேன். இரண்டாயிரத்துக்கு நாலாயிரம் கொடுக்க ரொம்ப சந்தோஷமா பாட்டுப் பாடிட்டு இதுல செங்கக்கல்லு வச்சு ஓடு போட்டு ஒரு சின்ன ஊட்டைக் கட்டிப் போடலாம்.....கல்யாணச் செலவும் பண்ணிப் போடலாமுன்னு கனவோட சந்தை வழியா நடந்து வந்துட்டு இருந்தேன் யாருன்னே தெரியாத ஒரு பத்து பேரு வழி மறிச்சு என்னை அடிச்சுப் போட்டுட்டு வக்காலோலிக பணத்தைக் கொண்டுட்டு ஓடிட்டாங்க.....பைத்தியம் மாதிரி கோயமுத்தூர்ல இரண்டு மாசம் சுத்தினேன்......போனது...போனதுதான். அப்புறம் அப்படி..இப்படின்னு மூட்டையும் கீட்டையும் தூக்கி பஸ்க்கு காசு புடிச்சு ஊருக்கு வந்தேன்....நான் வரும் போது சிந்தாமணிக்கு வேற ஒருத்தரோட கண்ணாலம் முடிஞ்சு எதுத்தாப்ல ஊர்வலமா வர்றா.....என்னை நிமிந்து கோட பாக்கல......"பாடிப் பறந்த கிளி......பாதை மறந்தடி பூ மானே..........ஆத்தாடி தன்னால......."எட்டுக்கட்டையில் மறுபடியும் ராகம் இழுத்தார்.... நான் "எந்தப் படத்துல இந்தக் கதை ஸ்ரீதேவி கொட்டாயில நேத்துப் பாத்த படமா...?" அப்படின்னேன் "போடா.....உனக்கென்ன தெரியும்?" அப்படின்னு சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கிட்டு போய்விட்டார். மறுபடியும் பார்க்கும் பொழுதெல்லாம் "உண்மையைச் சொல்லுங்க...யாரைக் காதல் செய்தீங்க..? .எத்தனை பேரை காதலிச்சீங்க...?" என்று கேட்பேன் "போடா...உனக்கு பொழப்பில்ல நான் வடக்க நெல்லளக்க போகோணும்" என்று ஓடி விடுவார்....! நானும் பலமுறை கேட்பேன் அவரும் எதாவது ஒரு பதிலைச் சொல்லி மழுப்புவார், இது உண்மையா எனத் தெரிந்து கொள்ள அவருடன் நெருக்கமான பலரிடம் கேட்க.... “அவனெங்கத்த காதல் புடுங்கறான்...சும்மா வெளையாட்டுக்கு சொல்லிட்டுத் திரிவான்” என்று சொல்வார்கள்...! அவரிடம் நானும் இதை வைத்தே கிண்டலடிப்பது வழக்கம் நான் கிண்டலடிப்பதை அவர் விரும்பினார்...பழைய ஞாபகங்களை கிளற ஆரம்பிப்பது சிலருக்கு ஒரு சுகமான அனுபவம். அவரின் போக்கிலேயே நூல் பிடித்துப் போனால் அவருடைய அந்தரங்கத்தின் கதவுகளைத் திறந்து வாழ்க்கையை ருசிக்க வைத்த சில பெண்களின் அழகுகளைப் பற்றி சிலாகிப்பார்.

ஒரு பழைய நடிகையைப் பற்றிச் சொல்லும்போது..."அவினாசி மில்லுக்காரரு ஒருத்தரு....அந்தம்மா மேல ஆசைப்பட்டுட்டாரு..."வர்றியா" அப்படின்னு கேட்டிருக்காரு அதுக்கு "மில்ல எழுதி வைய்யி வரேன்"னுச்சாம் மனுசன் மில்ல எழுதி வச்சு ஒரு ராத்திரி சொகம் அடைஞ்சிருக்காரு...!"என்று பழங்காலக் கிசுகிசுக்களை நேரில் பார்த்தாற் போல் கண்களில் ஆர்வம் மிக சொல்லுவார்.

"கண்ணதாசன் மாதிரி அனுபவிச்சவனும் இல்ல.....துன்பப்பட்டவனும் இல்ல....பொம்பள விசயம் ஆளை மேல கொண்டு போயிம் வெக்கும், கீழ கொண்டு போயிம் வெக்கிம்....."மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ள அவன் ஆடியடங்குவதும் பெண்ணுக்குள்ளே.."ச்சோடேய்....என்று இல்லாத நாயை முடுக்குவார்!


இப்படியாகப்பட்ட ஒரு சுவாரஸ்யமான மனிதர் ஒரு நாள் விட்டத்தில் தன் வேட்டியினால் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போனார்...என்ன காரணம்...எதனால் என்று யாருக்குமே தெரியாது! ஊர்க்காரர்கள் அரிப்பு நோயின் வேதனை தாளாமல் தொங்கிவிட்டார் என்றே பேசிக்கொண்டார்கள் நானோ காதலியின் பிரிவு தாளாமல் முடிவைத் தேடிக்கொண்டார் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றேன் நீங்களும் அப்படியாகவே நம்பிக் கொள்ளுங்கள்..!

Read more...

அங்கே நூத்தம்பது ரூபாய் அதிகச்சம்பளம்...!

>> Tuesday, May 21, 2013


"நூத்தம்பது ரூபாய் சம்பளம் அதிகம்ங்கறதுக்காக....இந்த கடைக்கு வேலைக்கு வந்தது தப்பாப் போச்சு..!" என்று சோமு நினைத்தான் "இப்ப நெனைச்சு என்ன பண்ணறது இம்மாம் பெரிய திருப்பூர்ல வேற கடை கெடைக்கலையா எனக்கு!" என்னடா புலம்புற என்றான் பக்கத்தில் இருந்த குண்டன் சரக்கு வாசம் அவனிடம் அதிகமாக வீசியது கண்கள் இரத்த நிறத்தில் இருந்தது. "வண்ணாரத் தாயே இவனுககிட்ட இருந்து என்னை உசிரோட காப்பாத்து ஆத்தா" என்று மனம் வேண்டியது.

சோமு ஒரு நூல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான், வாரச்சம்பளம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கு வரும் ஒரு ஆள் வேறு இடத்தில் வேலை வாங்கித்தருவதாக நூத்தம்பது ரூபாய் அதிகம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை காட்டவும், தினம் சத்தியமங்கலம் போக வர பஸ் செலவுக்கு ஆச்சுன்னு இந்த வாரம் திங்கக்கிழமையில் இருந்து புதிய கடைக்கு வேலைக்கு வந்தான்.

பழைய கடை போல் இல்லாமல் கண்ணாடி போட்டு மறைச்சு குளுகுளுன்னு ஏசிபூசின்னு கடை இருந்தது வயசுப்புள்ளைகளும் நல்ல செவத்த புள்ளைக நாலஞ்சு வேற இருந்தது. என்னமோ சொர்க்கம் மாதிரி இருந்தது சோமுவுக்கு, பிஸ்கட்டு, டீ, போண்டா, வடைன்னு கவனிப்பு வேற, பழைய கடையில வயசாளி செட்டியாரு பத்து பைசா செலவு பண்ண மாட்டாரு. ஆனால் இங்க ஓனர் கார்த்திக் சின்னப்பையன் ஹீரோ கணக்கா இருந்தாரு. சாயங்காலம் ஆறுமணிக்கு கார்த்திக் பிரண்டுக நாலஞ்சு பேரு வந்து ஒரே கும்மாளமா பேசிக்கிட்டு இருந்தாங்க அவங்க பேச்ச அரசல்புரசலா கேட்டதுல கார்த்திக் அந்த வழியா போகின்ற ஒரு டீச்சரை காதலிக்கின்றான் என்று தெரிந்தது. ஒரு நாளைக்கு அந்த டீச்சர் புள்ளைய பாக்கோணும் என்று சோமு நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது, கொரியர் அனுப்பிட்டு திரும்பி வரும் போது, சந்துல இரண்டு பேரும் பேசிட்டு இருந்ததைப் பார்த்தான் புள்ள நல்லா செவப்பா இலட்சணமா இருந்திச்சு, கார்த்திக்கு ஏத்த ஜோடிதான்னு சோமு நினைத்துக் கொண்டான்.

எதிர்பாராத ஒரு நாள் அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டான் கார்த்திக். அந்த புள்ள ரொம்ப பணக்கார வூட்டுப் புள்ள போல....சாதியும் வேற! இரண்டு அம்பாசிடர் கார்ல குண்டுகுண்டா ரவுடிகளை ஏத்திக்கிட்டு வந்த அந்தப்புள்ளையோட அண்ணங்காரன். விசயம் தெரியாம கடைக்கு ஏதோச்சையா வந்த கார்த்திக் பிரண்டு லட்சு என்கின்ற லட்சுமணனை எங்க போயிருக்காங்க என்று கேட்டு பின்னி பெடலெடுக்கறாங்க...அவன் அடிதாங்க முடியாம சோமுக்கு தெரியும்ன்னு உளற...சோமுவுக்கு ஏழ்ரை ஸ்டார்ட் ஆச்சு இரண்டு பேர் சோமுவைப் பிடித்துக் கொள்ள ஒரு வயசான ரவுடி ரொம்ப ஒல்லியா இருந்தான் அவன்தான் தலைவன் போல....புல் மப்புல நிக்கமுடியாம இருந்தான்.

"யார்ரா...இவன்? கரிச்சட்டிக்கு காட்டன் சட்டை போட்ட மாதிரி...! இரண்டு பேரும் எங்க ராஸ்கல் சொல்லு இல்ல மூக்குல குத்திருவேன்" என்ற படி கை ஆடி...ஆடி....சரியாக கண்ணைக் குத்தினான்.

"யோவ்...! நீ நல்லா இருப்பே கண்ணை கெடுத்திறாதைய்யா....! ஒண்ணு செய்யு கண்ணைக் குத்துறேன்னு சொல்லிட்டுக் குத்து அப்ப கரைக்ட்டா மூக்குல குத்துவே" என்றான் சோமு.

"ராஸ்கல் எகத்தாளமா.....என்றாலும் பெருசு சோமு சொல்லியபடி "கண்ணைக் குத்திருவேன் ஒழுக்கமாச் சொல்லு" என்று சரியாக வாயில் குத்தியது!

பாவம் சோமுவை அவங்கப்பன் முத்துச்சாமி கூட கை நீட்டி அடிச்சதில்லை.....! அடிக்கிற அளவுக்கு அதுவும் ஒர்த் இல்லை குடிச்சிட்டு ஊர்ல அப்பாவியா இருக்கிறவனா பாத்து ஒரண்டையிழுக்கும் அவனும் "யோவ்....!" அப்படின்னு எகிருனா "சார்..! நீங்க போங்க சார்...! அப்படின்னு பம்பும்...! 

ஒருத்தன் லட்சுவின் மூஞ்சியில் சிகரட்டை ஊதினான்....! "அண்ணே...! இந்த சரக்கு அவ்வளவு கிக் இல்லை இத ஏண்ணே குடிச்சே...?" என்று வாடையை வைத்தே சரக்கை  கண்டுபிடித்து அட்வைஸ் செய்தான். கடுப்பான அவன் இடுப்பைக் கிள்ளினான் சூழ்நிலை மறந்து அவன் கிள்ளியது கிச்சுகிச்சு மூட்டியது போல் இருக்க ஹ...ஹ.....ஹ....என்று சிரித்தான்! ஒரு அடி ஜம்ப் செய்து மண்டையில் நங்கென்று கொட்டு வைத்தான் அவன் லட்சு மிக கேவலமாக நாய் மாதிரி ஊளையிட்டான்.

சோமு பாத்தான் விட்டா இவனுக அடிச்சே ஒரு பக்க ஒரண்டைய கழட்டிடுவாணுக அப்படின்னு நினைச்சு பழனிக்கு போயிருக்காங்க.......என்றான். தூக்கி கார்ல போட்டுகிட்டு பழனி போறாங்க....! மணி எட்டு இருக்கும் லட்சுவையும், சோமுவையும் நடுவில் போட்டு இரண்டு புறமும் இரண்டு குண்டன்கள் உக்காந்து கொள்ள கார் கொடுவாய் தாண்டி போகுது, பழனியில யாரு வீட்டுக்குடா போறாங்க....என்று கேட்கறான் புள்ளையோட அண்ணன். கார்த்திக் ஒருமுறை நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது பழனியில் தன்கூடப் படிச்ச தன்ராஜ் இருப்பதாகவும் அந்த புள்ளைய கூட்டிட்டு ஓடுனா அங்கதான் போவேன்னு அரசல்புரசலா காதில் விழ சோமு அடியில் இருந்து தப்பிக்க சொல்லிவிட்டான். லட்சுவை தன்ராஜ் வீடு தெரியுமாடான்னு கேட்டதுக்கு தெரியும்ன்னு சொல்ல கார் பழனி நோக்கிப் பறந்தது.

நல்ல பனி காலம் வேற சரக்கு வேற ஓசிக்குடி குடிச்ச குண்டனுகளுக்கு ஒன்னுக்கு முட்டிக்கிட்டு வரவும், ஒரு இருட்டுக்குள்ள காரை நிறுத்தி ஒரு குண்டனை மட்டும் காவலுக்கு வச்சுட்டு ரோட்டோரம் ஒன்னுக்கடிச்சிட்டு இருந்தாணுக...சோந்து படுத்துகிட்டு இருந்த லட்சு பாத்தான் அந்த குண்டன் தம் அடிச்சிட்டு அசால்ட்டா நிக்கவும் காரை விட்டு இறங்கி அவன் உயிர்நாடியில் முட்டியை மடக்கு ஒரு உதைவிட அவன் 'ஹஸ்புக்' என்று வினோதமான ஒலியெழுப்பி கீழே விழுந்தான்.

கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒரே ஓட்டமா காட்டுக்குள்ள ஓடிப்போனான். சோமுக்கு கெதக்குன்னுச்சு அவன் கிடைக்கலைன்னா நம்மளை மறுபடியும் குமிய வச்சு கும்முவாணுக அப்படின்னு யோசனை பண்ணி அவன் ஓடிய எதிர் திசையில் காட்டுக்குள்ள ஓடினான். கொஞ்ச தூரம் வேகமா ஓடி ஒரு நல்ல புதர்க்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டான், அவங்களும் ரொம்ப நேரம் காட்டுகுள்ள தேடுனாங்க, சோமு பாங்காட்டு ஆசாமிங்கறதால நல்லா வங்குப்புதராப் பாத்து ஒளிஞசிக்கிட்டான், காருக்குள்ள இருக்கிற ஒரு சின்ன டார்ச்லைட் வச்சு தேடிப்பாத்தாங்க, அப்பவும் அகப்படலை...லட்சுவும் எங்க போனான்னு தெரியலை....விடிய...விடிய...அங்கியே கிடந்தான் சோமு. அவர்களும் தேடிதேடி வெறுத்துப் போயி திருப்பூர்க்கு திரும்பி போயிட்டாங்க...! ரோட்டுக்கு வந்து ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி லிப்ட் கேட்டான் சோமு. திருப்பூர் மார்க்கெட் போற ஆட்டோங்கறதால அதில் திருப்பூர் வந்து சேந்தான். பஸ் ஸ்டேன்ட்டில் கடை வச்சிருக்கும் ஊர்க்காரர் மாணிக்கத்திடம் கொஞ்சம் காசு வாங்கிட்டு ஊருக்குப் போனான்.

                                                                            ***

சோமு பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு திருப்பூர் வந்தான். இனி அங்க வேலைக்குப் போவக் கூடாது, சம்பள பாக்கி மட்டும் வாங்கிட்டு, வேற கடை பாக்கோணும், இல்ல செட்டியார்கிட்டியே மறுபடியும் போயிறணும். என்ற படி விடியக்காலையில் எழுந்து வந்திருந்தான்.

தூரத்தில் இருந்து பார்த்தான், கடை திறந்து இருந்தது, பிரச்சனையெல்லாம் ஓஞ்சு போச்சு போல..."வக்காலிக இவனுக சரக்குக்கு நம்மள ஊறுகா ஆக்கிட்டாங்க என்னா அடி....யம்மா! இன்னியோட இந்தக் கடை வாசல்ல தல வச்சுப் படுக்கக்கூடாது" என்று மனதில் நினைத்தபடி கடைக்குள் நுழைந்தான் இவன் தலயப் பாத்ததும் கார்த்திக் சிரித்தான், கொஞ்சம் வெளுத்து உடம்பு பூசியிருந்தது, பயபுள்ள நல்லா ஜாலியா இருந்திருப்பான் போல, நாமதான் மிதிபட்டோம் கடுப்புடன் சிரிக்கவில்லை சோமு.

"என்னண்ணா ரொம்ப அடிச்சிட்டாங்களா...? சாரிண்ணா....!" என்றான்.

"சரி...சரி...வுடுங்க....என் சம்பள..." பேசி முடிக்க வில்லை கார்த்திக், "கவிதா இங்க சீக்கிரம் வா...."!என்று அழைத்தான். "ஓ......அந்த டீச்சர் புள்ள இங்க கடையிலதான் இருக்கா...?" என்று நினைத்தான் சோமு அந்தப் புள்ள புதுசா மினுமினுக்கும் மஞ்சத்தாலியுடன் வந்து நின்றது இருவரும் ஜோடியாக காலில் விழுந்து  "வீட்டுக்கு நான் ஒரே பையன் என் அண்ணனா ஆசிர்வாதம் பண்ணங்கண்ணா" என்றான் கார்த்திக் சோமுவுக்கு என்னவோ போலாகிவிட்டது "நல்லாயிருங்க.....நல்லாயிருங்க..."என்றான் 

"சோமண்ணா மத்தியானம்  எங்க வூட்டுலதான் சாப்பாடு! ஓட்டலுக்கு போக வேண்டாம்" என்றார்கள். "சரி நீங்க கடைய பாத்துகங்க, நான் கவிதாவை வீட்டுல விட்டுட்டு வந்திடுறேன், பத்து நாளா நீங்க இல்லாம ஒரு வேலையும் ஆகலை" என்று சொல்லிவிட்டு பைக்கில் பறந்து போனார்கள். சோமு எதுவும் புரியாமல் கொஞ்ச நேரம் நின்று விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அவன் மனதில் வேலையை விட்டு நிற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.....!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP