”X” திரைப்படம் - விலைமகள்களின் வாழ்க்கை!

>> Saturday, November 30, 2013


இரண்டு மாறுபட்ட குணாதிசியங்கள் கொண்ட பெண்கள் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்; இருவரும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் போது இருவரின் மனநிலைகள் என்ன..? என்பதை மிக நுட்பமாக எடுக்கபட்ட திரைப்படம் "எக்ஸ்"! ஆஸ்திரேலியத் திரைப்படம் என்று மட்டும்தான் தெரியும். படம் பார்த்த பிறகு கூகிளிட்டதில் ஆஸ்திரேலியாவில் உருவான சிறந்த உலக திரைப்படங்கள் பத்தில் இது ஒன்று! என அறிந்த போது வியப்படைந்தேன். http://blog.quickflix.com.au/2011/12/01/the-10-best-australian-films-of-2011/

வெறும் பத்து நபர்கள் மட்டுமே அரங்கில் அமர்ந்திருக்க, ஒரு சாதனை படைத்த படம்! கொசுக்கடியோடு திருப்பூரில் ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் இரண்டு முறை மின் தடை வேறு, ஜெனரேட்டர் போட்டு வேறு ஓட்டினார்கள், கண்டிப்பாக நஸ்டமடைந்திருக்க வேண்டும்... அந்த காட்சியில் திரையரங்கு உரிமையாளர்.


அந்த பத்துப் போரிலும்... என்னையும் என் நண்பரையும் தவிர சிலர் போதையில் வீட்டுக்கு போக முடியாமல் ஒதுங்கியவர்கள் சிலபேர், பிட்டை எதிர்பார்த்து வந்த ஒரு சிலர். நாங்களும் மழைக்கு ஒதுங்கியவர்கள் போலத்தான் ஒதுங்கினோம் ஏதோ ஒரு படத்தின் போஸ்ட்டரைப் பார்த்து தவறுதலாக நுழைந்த நாங்கள் மிகச்சிறந்த படத்தினை எந்த ஆரவாரமின்றி காண்போம். என்று எதிர்பார்க்கவில்லை சரி இனி படத்தைப் பற்றிப் பார்ப்போம்.முதல் காட்சியிலேயே ஷாலி(Viva Bianca) என்கின்ற மேட்டுக்குடி விலைமகள். லைவ் செக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு அரபியை அதுவும்  அரபிக் குதிரை போன்றவன் என்று அறிமுகப்படுத்தி பல வயது மேட்டுக்குடி யுவதிகள் அமர்ந்திருக்க இருவரும் உடலுறவு கொள்கின்றார்கள். 

அதே நேரத்தில் போக்கிடமின்றி அலையும் ஒரு இளம் விலைமகள் Hanna பதினேழு வயது செம அழகு, காமம் கொப்பளிக்கும் கண்கள், இதழில் எந்த நேரமும் தேன் வழியும் ஒரு பாவனை சூடேற்றுகின்றாள் பார்வையாளனை. தொந்தரவு இல்லாத வயதான வாடிக்கையாளர்களாக தேடிப் போகின்றாள். அப்படி சம்பாரித்த செற்பத் தொகையையும் அந்த ஏரியாவின் வேறொரு தாதா விலைமகள் பிடிங்கிக் கொள்கின்றாள். போகும் போது காரி உமிழ்ந்து விட்டுப் போகின்றாள்.ஷாலி இரண்டு பெண்கள் வேண்டும் என்று கேட்ட அரபி ஒருவனுக்காக சாலையில் எதிர்பாராமல் சந்தித்த நடைபாதை விலைமகளை முன்நூறு டாலர் தருவதாக கூறி அழைத்துச் செல்கின்றாள்.அங்கு கொண்டாட்டமாக இருந்த பொழுதில் அந்த அரபி இளைஞன் ஒரு போதை வியாபாரியின் அடியாள் என்று தெரிய வருகின்றது. அவன் தன்னுடைய பாஸை ஏமாற்றுகின்றான் ஆத்திரத்துடன் வரும் பாஸ் அவனை சுட்டுக்கொல்கின்றான் அதைப் பார்த்த சாட்சிகளான இருவரையும் கொல்ல துரத்துகின்றான் அந்த போதை வியாபாரி. அவனிமிருந்து தப்பிக்க ஓடுகின்றார்கள் இருவரும். அப்பொழுது அவர்களுக்கு உதவுகின்றான் ஒரு டாக்ஸி டிரைவர் இளைஞன், அவன் Hanna வை விரும்புவதாக சொல்கின்றான்....! அதை ஒரு புன்சிரிப்புடன் மறுக்கின்றாள் அவள். "ஏன் நான் உனக்கு தகுதியானவன் இல்லையா..? " என்கின்றான். அவளோ "நான் உனக்கு தகுதியாவள் இல்லை!" என்கின்றாள் மெல்லிய சோகம் அவள் முகத்தில் இழையோட....புன்சிரிப்புடன் சொல்லும் காட்சி ஒரு கவிதை! 

நடைபாதையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சக விலைமகள், முடியாத நிலையிலும் தொழில் செய்துகொண்டேயிருக்கின்றாள், கடைசியில் ஒரு காண்டம் பாக்கட் கொடு என்று கேட்கும் போது அதிர்கின்றது நம் மனது. போதை பழக்கத்திற்கு அடிமையான ஆண், பெண் இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஊசி கூட போட முடியாமல் தடுமாறுமிடம் மனதை அதிர வைக்கின்றது. சின்ன அதிர்வலைகளையும் அழகியலையும் கலந்து படைத்த இப்படைப்பு சிறந்த ஒரு படைப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. 

Director: Jon Hewitt
Actors: Viva Bianca, Hanna Mangan Lawrence, Peter Docker, Stephen Phillips, Belinda McClory


படத்தின் டிரைலர்  : http://www.youtube.com/watch?v=NIZD7mPli9s 

----------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே வலைப்பதிவர்களுக்கான பேஸ்புக் குழுமம் வெட்டி பிளாக்கர் என்று ஒன்று இருப்பதை அறிவீர்கள். அதில் வலைப் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி நடத்துகின்றோம்.

முதல் பரிசு 5000

இரண்டாம் பரிசு 2500


மூன்றாம் பரிசு 1500


மற்றும் சிறப்புப் பரிசாக சிறந்த கதைகளுக்கு 500 வீதம் ஐந்து நபர்களுக்கு என்று தரப்படுகின்றது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
எழுதுங்கள் வெல்லுங்கள்

கதை போட்டி தொடர்பான தகவல்

கதை வெளியாகும் வலைத்தளம்
------------------------------------------------------------------------------------------------------------

Read more...

அலோவ் நாங்க வோடாப்போனுல இருந்து பேசறோம்.....

>> Tuesday, October 22, 2013

டீ டைமுக்கு கடைக்கு வந்தான் வாசு வரும் போதே புலம்பிக் கொண்டு வந்தான்..... "மச்சான் இந்த கொளத்தூரானோட பெரிய்ய ரவுசா இருக்கு...ஒரு சைனா போன வச்சுட்டு எப்பப்பாரு ஒரே பாட்ட திரும்ப..திரும்ப போட்டுக்கிட்டு கொல்றான்...மச்சான். தூக்கிப் போட்டு ஒடைச்சுப் போடட்டுமா..?" வாசு கேட்கவும்... 

மச்சான் விடுரா "அவன் ஒரு வௌங்காத பய" என்றார்.

"இல்ல மச்சா எதாவது ஒண்ணு பண்டனும்... நிம்மதியா கம்பனியில வேல பாக்க முடியல மச்சான்" என்றான் வாசு!

மச்சான் கொஞ்சம் கிருகதலம் புடிச்ச ஆளு நரை மீசைய நீவிட்டே யோசித்தார் அவன் நெம்பர் குட்ரா என்றபடி அவருடைய போனை எடுத்தார்....
9864........அதான் மச்சான் அவன் நெம்பரு...

ரிங்காகுது...ரிங்காகுது....

"ஹலோ ஆருங்க..?" 

"அலோ சார் நாங்க வோடாப் போனுல இருந்து பேசுறோம்....!"

"அப்படியா நான் ஸ்பைஸ் போனுல இருந்து பேசுறனுங்க...வெலை ஆயிரத்து ஐநூறு உவாய்ங்க...."

"என்னய்யா நக்கலா....? நாங்க நீ ஊஸ் பண்ற சிம்மு கம்பேனியில இருந்து பேசுறோம்....உங்க மேல ஒரு கம்ளைண்ட் வந்திருக்கு..!"

"சொல்லுங் சார்......என்ன கம்ளைண்ட்டுங்க சார்"

"நீங்க அடிக்கடி போனுல சத்தமா பாட்டுப் போடுறீங்களாமா...? என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க மனசுல....."

"அலோ....அலோ.....நான் பாட்டுப் போட்டா உங்களுக்கென்னங்க...?"

"இங்க பாருங்க மிஸ்டர் கொளத்தூர் கணேசன்! நீங்க அடிக்கடி இப்படிப் பாட்டுப் போடறது எங்க நெட்வொர்க்க பாதிக்குது!"

"ஏங்கோ.....எம்பேரு எப்படித் தெரியும்ங்கோ...!"

"பேரு மட்டுமில்ல கணேசன் நீங்க வேல செய்யற கம்பேனி கே.வி.ஆர் நகர்ல, கே.டி.சி ஸ்கூல் பக்கத்துல... வந்தனா பேக்கரிக்கு எதித்தாப்ல இருக்கு!கம்பனிக்கு முன்னாடி ஒரு வேப்ப மரம் கூட இருக்கு ஓகேவா...?"

"நீங்க சொல்றது செரீதான் சார்....! நான் எம்பட போனுல பாட்டுக் கூடப் போடக் கூடாதா சார்?"

"ஆமாங்க.... கணேசன் உங்க கம்பனியில எங்க வோடா போன்தான் நிறைய பேரு ஊஸ் பண்றாங்க...நீங்க சத்தமா பாட்டுப் போடறதால அவிங்க நெட் ஒர்க் பாதிக்குதுன்னு கே.வி.ஆர்.நகர் ஸ்டேசன்ல கம்ளைண்ட் பண்ணியிருக்காங்க...தொடர்ந்து இனி பாட்டுப் போட்டா இன்ஸ்பெக்டரை விட்டு போனை புடிங்கிட்டு வரச் சொல்லலாமுன்னு இருந்தோம் செரி ஒரு தடவை வார்ன் பண்டி வுடுவோம்ன்னு கூப்பிட்டோம் இனி போனுல பாட்டு வக்காதிங்க கணேசன்."

"என்னங்க சார் இது அநியாயமா இருக்குங்க சார்...! நான் சிம்ம மாத்திக்கப் போறேன் உங்க வோடாப் போனும் வேண்டாம்....#%$^% வேண்டாம்...."

"அது முடியாது கணேசன்....நீங்க பழனிச்சாமி ரேசன் கார்டுலதான் சிம்மு வாங்கியிருக்கீங்க....உங்க போட்டாவை நாங்க எல்லா போனு கம்பனிக்காரங்களுக்கும் கொடுத்துட்டோம் உங்க மேல கம்ளைண்ட் இருக்கறதால யாரும் சிம்மு தரமாட்டாங்க.....!"

"அய்யோ...இது என்ன அநியாயமா இருக்கு...ஒரு பாட்டுக்கூட போடக்கூடாதா...? என்ற மெமரி கார்டுல இருந்துதானே போடுறேன்..?"

"என்ன கணேசன் நீங்க புரியாதவரா இருக்கீங்க...? சரி நீங்க ரொம்ப பாவமா கேட்கறதால தெனம் ஒரு பத்துப் பாட்டு மட்டும் போட்டுக்கங்க....!"

"சரீங் சார் நொம்ப டேங்ஸ் சார்...!"

"சரி இன்னோரு விசயம் போன்ல நீங்க கெட்ட..கெட்ட வார்த்தையா பேசுறீங்க.....இப்பக் கூட  #%$^% அப்படிங்கிறீங்க,அப்படிப் பேசாதிங்க...வோடபோனு ஆபிஸ்ல நிறைய லேடிஸ் இருக்காங்க நாகரீகமா பேசுங்க அவங்க சங்கடப்படறாங்க....அவங்களும் உங்க மேல கம்ளைண்ட் கொடுக்க சொன்னாங்க....நாங்கதான் சரி ஒரு டைம் வார்ன் பண்டி வுடுவோம்ன்னு அவங்களை சமாதானப் படுத்தி வச்சிருக்கோம் இது உங்களுக்கே நல்லாயிருக்கா..? கணேசன்!"

"நா... பேசறது முச்சூடும் உங்களுக்கு கேக்கும்ங்களா........?"

"நீங்க என்ன பண்டினாலும் எங்களுக்கு தெரியும்! இப்ப பாருங்க பெர்ரிய ஆபிசர் நான் பேசுறேன் பீடி குடிச்சுட்டே பேசுறீங்க....! இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச மரியாதையா...?"

"அய்யோ சாமீ...இதோ கீழ போட்டுட்டேன் இனி சத்தீயமா குடிக்க மாட்டேன் சார்."

வாசு சன்னலில் எட்டிப் பார்த்துட்டு "மச்சான் கொளத்தூரான் பீடிய கீழ போட்டுட்டான் வேட்டிய கீழ வேற எறக்கி வுட்டுட்டான்...."என்றான்

மச்சான் வாசுவை சும்மாயிருக்குமாரு சைகை காட்டினார் 

"மிஸ்டர் கணேசன் இனி நீங்க பாட்டுப் போடக்கூடாது ஓகேவா....! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் வோடாப் போனைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி"

வாசு விழுந்து...விழுந்து சிரித்தான்...."மச்சான் உம்பட குசும்புக்கு அளவேயில்ல மச்சான்! செரீ டீ டையிம் முடிஞ்சுது நான் போறேன்" என்ற படி கம்பனிக்கு உள்ளே போனான் மச்சான் தன்னுடைய பிளாக்கை திறந்து இதை டைப்பண்ண ஆரம்பித்தார்............

Read more...

ஆகஸ்ட் 15 விடுமுறை நாள்! +18(சிறுகதை)

>> Monday, October 14, 2013

ஆகஸ்ட் 15 காலை 9.05

கீதா பாண்ட்ஸ் பவுடரை கை நிறையக் கொட்டி உடல் முழுவதும் பூசிக் கொண்டாள், குளித்து முடித்த அடையாளமாக சோப்பு வாசம் பவுடருடன் கலந்து ஒரு மாதிரியாக வீசியது. எதிரே பார்த்தாள்... நைட்டிகளுடன் மாலதியும், சாவித்திரியும் அந்த அறையில் இருந்த ஒரு பழைய கட்டிலில் உக்காந்திருக்க அதே கட்டிலில் படுத்தபடியே சாந்தி செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாள்....

"என்னடி கீதா பவுடர் வாசத்திலியே கஸ்டமர பீஸ் போக வச்சு....வேலைய ஈஸியா முடிச்சுக்கலாம்ன்னு ஐடியா பண்ணிட்டியா? உடம்பு பூரா பூசற..." என்றாள் மாலதி!

"அட போக்கா....இரண்டு நாளாச்சு கஸ்டமர் வந்து பத்து பைசா வருமாணமில்ல.... நாலு பேரும் தண்டத்துக்கு உக்காந்துட்டு இருக்குறோம்...இனி இந்த பாபுவ நம்பி வரமாட்டேன். போன வாரம் பாண்டிச்சேரியில தினம் பத்து கஸ்டமர்க்கு மேல வந்தாணுக தண்ணியடிச்சது...சாப்ட்டது போக பத்தாயிரம் கெடைச்சது சரி ஒரே ஊர்ல இருந்தா கஸ்டமர் சலிச்சுடுவாங்க... அப்படின்னு இந்த ஊருக்கு வந்தா பத்துப் பைசா பிரயோஜனமில்ல...!"

"ஆமா கீதா சொல்றதும் சரி இந்த பாபுவ நம்பி இங்க வந்தது தப்பு" இது சாந்தி!

"போங்கடி பாபு நல்ல பார்ட்டி! அவன் கையில ஏகப்பட்ட கஸ்டமர் இருக்கு...போன வருசம் நான் வந்தப்ப வேற ஏரியாவுல வீடு இருந்தது. இது புது ஏரியா, வந்து ஒரு மாசம்தான் ஆகுது! மெல்ல...மெல்லத்தான் கஸ்டமர் வருவாங்க...."என்றாள் மாலதி!

"ஆமாக்கா ஏன்...? பாபு அங்க இருந்து மாறுச்சு...!"

"அதையேண்டி கேட்குற பாவம்...! ஸ்டேசன்ல இருந்து மாமுலுக்கு ஏட்டு வந்திருக்கான், மாமுல் வாங்கிட்டுப் போனவன்...நேரா சீட்டு வெளையாடி பணத்தை வுட்டுட்டான். இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கல! அமுக்கமா இருந்துட்டான், கடுப்பான இன்ஸ்பெக்டரு இருந்த நாலு பீசையும் குறுக்கு உடைய மிதிச்சு இழுத்துட்டு போயி கேஸப் போட்டுட்டான். பாபு ஒரு லட்சத்துக்கு மேல செலவு பண்டி, பீஸையும் காப்பாத்தி ஆஸ்பத்திரி செலவும் வேற பண்டியிருக்காப்ல....அதனால காசு மொடையில இருக்கறாப்ல.....அதனால ஏரியா மாறிட்டாப்ல இந்த ஏரியா இன்ஸ்பெக்டரு பாபுக்கு நல்ல பழக்கம்! அதனால பிரச்சனை வராது.....!"

ஆகஸ்ட் 15 காலை 10.30

பாபு அந்த அறைக்குள் நுழைந்தான். "இன்னிக்கு என்ன கருமம் ஒரு கஸ்டமரும் போனை எடுக்க மாட்டிங்கறான், இன்னிக்கு பழிவாங்கிரும் போல.....!" என்று சலித்தபடி ஹோட்டலில் வாங்கி வந்த பார்சலை வைத்தான். பான்பராக் சரத்தை கிழித்து ஆளுக்கு நாலு கொடுத்தான், காண்டம் பாக்கெட்டை எடுத்து வேட்டியைத் தூக்கி டவுசர் பாக்கட்டில் போட்டுக்கொண்டான்.

"இத்தோட காலி! பத்து பைசா கையில இல்ல இப்பத்திக்கு சாப்பிட்டுக்கங்க... இனி எவனாவது கஸ்டமரைப் புடிக்குறேன் நைட்டு சரக்கோட சாப்புட்டுக்கலாம்" என்றபடி பீடியை பற்ற வைத்து உறிஞ்சினான் நால்வரும் பார்சலைப் பிரித்து இட்லியை சாப்பிடத் தொடங்கினார்கள்.

பாபு பீடியை உறிஞ்சிக் கொண்டே செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்...

"ஹலோ பாஸூ...! எப்படியிருக்கீங்க....? நான் பாபு பேசறன்...!"

"......................................"

"எந்த பாபுவா...? ஆந்திரா பார்ட்டி ஞாபகம் இல்லைங்களா பாஸூ குமரன் நகர்ல......ஹிஹி!"

"....................................."

"என்ன பாஸூ அனுஸ்கா மாதிரி இருக்குதுன்ட்டு மறந்துட்டிங்களே....?"

"....................................."

"நாளைக்கு வர்றீங்களா...? பீஸ் போயிரும் பாஸூ! கேரளா புது ஐட்டம் இன்னிக்கே வாங்க...!"

"...................................."

"ஓ..........அப்படிங்களா பாஸூ! சரி தோது போல வாங்க...!"

போனை வைத்தவன் "இன்னிக்குன்னு பாத்து கையில பத்துக் காசு இல்ல...ச்சே...எழவெடுத்தவனுக எவனும் வரமாட்டிங்கிறான்...! போன் பண்டி...போன் பண்டியே....இருந்த காசு பூராவும் போச்சு......" என்று சலித்தபடி முன்னறையில் இருந்த டிவியை உயிர்ப்பித்து டிவி பார்க்கத் தொடங்கினான்.

ஆகஸ்ட் 15 மதியம் 12.30

"பாபுண்ணே.....டீயும்...பன்னுமாது வாங்கிட்டு வாண்ணே....எங்காவது கடஞ்சொல்லி! பாக்குப்போட்டு....பாக்குப் போட்டு வாயெல்லாம் ஒரு மாதிரி இருக்கு அந்த கீதா புள்யையப் பாக்க பாவமா இருக்கு, தண்ணிய....தண்ணிய...மோந்து குடிக்குது. பாக்கு போடுற பழக்கமும் வேற இல்ல....."என்றாள் மாலதி!

"மாலு இது புது ஏரியாம்மா.....யாருகிட்டியும் இன்னும் பழகலை! கடையும் முக்குல ஒரே...ஒரு...பேக்கரிதான் இருக்கு அவனும் கடந்தரமாட்டான்...பாப்போம் சாயங்காலம் எவனாவது வருவான்." தூங்கிக் கொண்டிருந்த சாந்தி விழித்துப் பார்த்து விட்டு மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டாள் நேற்று அடித்த சரக்கு வேறு வயிற்றை பயங்கரமாக எரித்தது.. வாயில் புளிச்ச உமிழ் நீர் அடிக்கடி வந்தது!

ஆகஸ்ட் 15 இரவு 7.30

முன்னறையில் டிவி ஓடிக் கொண்டிருக்க நால்வரும் பசி மயக்கத்தில் படுத்தே கிடந்தனர்....பாபுவின் போன் அடித்தது. கடுப்பாக போனை எடுத்த பாபு "சுதா" என்ற பெயரைப் பார்த்ததும் மலர்ந்தான்...!

"ஹலோ...! சொல்லு...!"

"....................."

"அட ஏம்மா நீ வேற, காலையில நாலு இட்லி தின்னது ஒரு கஸ்டமரும் வரலை எல்லாம் இன்னிக்கு என்ன பொட்டையாயிட்டானுகளா...?"

"......................"

"அப்படியா செரி ரொம்ப டேங்ஸ் சுதா! நீ பார்ட்டிய ஒரு ஆட்டோப் பிடிச்சு கூட்டிட்டு வந்துரு... வீடு தெரியுமில்ல....?"

"......................"

"ஆமாம் அங்கதான் பேக்கரிய ஒட்டிய சந்து...!"

போனை வைத்த பாபு நால்வரையும் பார்த்தான் "கண்ணுகளா....எழுந்திருங்க மூஞ்சிய கழுவிட்டு பிரஷ்சா ரூம்ல போய் இருங்க....இன்னிக்கு நைட்டு சாப்பாடு கிடைச்சிருச்சு...!"

ஆகஸ்ட் 15 இரவு 8.30

ஒரு அரைமணி நேரத்தில் ஒரு அரவாணியும் ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க வயதானவர் டக்இன் செய்து, கண்களில் குளிர் கண்ணாடி போட்டு டிப்டாப்பாக இருந்தார் முடிக்கு டையடித்தும் ஆங்காங்கே வெள்ளை தெரிந்தது. இருவரும் ஆட்டோவை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தார்கள். பாபு காதுவரை வாய் கிழிய சிரித்தான்....சுதாவைப் பார்த்து 

"என்ன பாபு மாமா! நாலு பீஸ் வெச்சு ஜாம்....ஜாம்ன்னு இருக்கேன்னு சொன்னாங்க...புரோட்டாவுக்கு வழியில்லாம இருக்கறேங்கிறீங்க..."என்று சொல்லி சத்தம் வர படக்கென்று கை தட்டிச் சிரித்து பாபுவை கட்டிப்பிடித்து கண்ணத்தைக் கிள்ளி ஒரு முத்தம் வைத்தது.

இருவரின் அன்யோனியத்தைப் பெரியவர் வியப்பாக பார்த்தார்.

"பாபுமாமா பெரிசு நம்ம கஸ்டமர்தான்... பெரிய மனுசன் பொண்டாட்டிச் செத்து ரொம்ப வருசம் ஆச்சு...நம்ம கிட்டத்தான் அடிக்கடி வரும், நல்ல ஆளு ரொம்ப நாளா குட்டிககிட்ட போகணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு, இன்னிக்கு கறாரா வேணும்ன்னுட்டு ஒரே அடம் புடிச்சுது. எனக்கு உம்பட ஞாபகம் வந்துச்சு போனை பண்ணிக் கேட்டுட்டு கூட்டிட்டு வந்துட்டேன்" என்று பாபுவை அணைத்துக் கொண்டே கடவாயைப் பிடித்தபடி சொல்லியது சுதா!

"வாங்க பெரிசு" என்று நால்வர் இருந்த அறைக்கு கூட்டிக் கொண்டு போனான் பாபு....பெரியவர் நால்வரையும் ஒரு பத்து நிமிடம் மாறி....மாறிப் பார்த்தார்....கீதாவை கைகாட்டினார். மாற்ற மூவரும் அறையை விட்டு வெளியேற பாபு டவுசர் பாக்கட்டில் இருந்த காண்டத்தை பிரித்து இரண்டு பாக்கெட்டை கீதாவிடம் கொடுத்து விட்டு சுதாவும் பாபுவும் பெரியவரை உள்ளே விட்டு விட்டு வர கதவை சாத்தப்பட்டது. 

அனைவரும் முன்னறையில் வந்து அமர்ந்து டிவி பார்த்தார்கள்......ஒரு மணிநேரம் கழிந்து பெரியவர் பேண்ட் ஜிப்பைப் போட்டுக் கொண்டு சட்டையைப் போட்டுக் கொண்டு முன்னறைக்கு வந்தார்....

ஆகஸ்ட் 15 இரவு 9.30 

"சுதா பெரியவரிடம் கண்ணடித்தபடி... என்ன பெரிசு எப்படி கம்பனி?" என்றது.

"சூப்பர்....!"

"இனி என்னை மறந்துருவே பெரிசு!"

"ராஜாத்தி உன்னை நான் மறப்பேனா...?" என்று சுதாவை அணைத்து கண்ணத்தில் முத்தமிட்டது.

"ஆயிரம் ரூபாயை எடுத்து பாபுவிடம் கொடுத்தது. பாப்பாவுக்கு தனியா டிப்ஸ் கொடுத்துட்டேன்.....நீ எழுநூறு வச்சுக்க இந்த பாப்பாக்களுக்கு ஆளுக்கு நூறு கொடுத்துரு...." என்றது!

"காலையில் இருந்து காஞ்சு கெடந்ததுக்கு போதுமா மாமா...?" என்றது சுதா...!

"ரொம்ப அதிகம் இதுவே...., டேங்ஸ்டா சுதா தங்கம், இனி எப்ப வேணாலும் கூட்டிட்டு வா இந்தா என்று நூறு ரூபாயைத் கைகளில் திணித்தான்!"

"வேணாம் மாமா! பெரிசே குடுக்கும்....!"

"சரி...! குட்டிகளா நான் கௌம்பறேன்....." என்ற பெரிசு மூவருக்கும் பிளைன் கிஸ் கொடுத்தது...!

"பெரிசு வயசு பையன் மாதிரி சேட்டயெல்லாம் பண்றீங்க.....உங்க பேரைச் சொல்லுங்க....இனி பேரைச் சொல்லிக் கூப்பிடுறோம் இனி இவரை பெரியவர்ன்னு யாரும் கூப்பிடக்கூடாது" என்றாள் மாலதி நக்கலாக"

"ஹ....ஹ.ஹ..ஹா மை நேம் இஸ் காந்திராஜா!" என்றது பெரிசு!

Read more...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - யதார்த்த சினிமா!

>> Friday, September 27, 2013


குத்துப்பாட்டு...மொக்க பேஸ்புக் காமடி என்று படம் எடுத்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்தில் முதல் படத்  தலைப்பிலேயே "சித்திரம் பேசுதடி" என்று இலக்கிய வாசனையுடனான தலைப்பை வைத்து "யாருடா இவன்...?" என்று தமிழ் சினிமா ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்தவர் மிஷ்கின்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...ஒரு நாவலாக இருக்க கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் உள்ளது. படம் பார்த்த உணர்வை விட ஒரு திரில்லர் நாவலைப் படித்த ஒரு உணர்வைத் தருகின்றது. குண்டடி பட்டுக் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவனை பலரும் கடந்து போக ஒரு மருத்துவ கல்லூரி மணவனான சந்துரு தூக்கிச் சென்று உயிர்காக்க போராடுகின்றார். தனியார் மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ள மறுக்கப்படுகின்றார். காவல் துறையும் சரியான நடவடிக்கை எடுக்காமல் உயிருக்குப் போராடுபவனின் கடிகாரத்தைக் கூட திருடுகின்றார்கள். சாதாரணமாக ஒரு அப்பாவியை நாம் தூக்கிக் கொண்டு சேர்த்தாலே நம்மீதே கொலைப் பழியைப் போடும் நாட்டில் அவன் ஒரு கிரிமினலாக........பதினான்கு கொலை செய்த சிபிசிஜடி போலீசாரால் சுடப்பட்ட ஒரு கிரிமினலாக இருந்தால் அவனும் அவனைச் சார்ந்த குடும்பமும் என்ன நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை முன் காட்சியில் யதார்த்தமாக மிஷ்கின் ஸ்டைலில் சொல்லியிருக்கின்றார். ஆட்டுக்குட்டி சந்துருவாக நடித்த ஸ்ரீ நன்றாக நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றார்.

ஓநாயாக எட்வின் என்று அழைக்கப்படுகின்ற WOLF என்று காவல் துறையால் விளிக்கப்படுகின்ற மிகமோசமான ஒரு கொலைகாரனாக மிஷ்கின். ஒரு இடத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருப்பான் ஒருவன். தன்னுடைய துப்பாக்கியை கிழே வைத்து அதை தள்ளிவிட்டு சிறிய ஒரு கத்தியை எடுத்துக் காட்டுவார். அடுத்த நொடியில் எதிராளியை அந்த கத்தி பதம் பார்த்து துப்பாக்கி ஓநாயின் கைக்கு வரும் கொஞ்சம் பழைய ரஜினி பட ஜெய்சங்கர் பட வகையாறா ஸ்டைலாக இருந்தாலும் எடுக்கப்பட்ட விதத்தில் அப்ளாஸ் அள்ளுகின்றது. ரயிலில் தப்பிச் செல்கின்ற காட்சியிலும். "மூணு என்றதுக்குள்ள துப்பாக்கிய கீழ போடு" என்கின்ற சந்துரு "ஒன்று" என்கின்றார்...."இரண்டு" என்று மிஷ்கினே சொல்லி பினைக்கைதியாக உள்ள பெண்மணியின் நெற்றியில் வைக்கும் காட்சியிலும், வித்தியாசமான சிந்தனையில் இயக்கியிருக்கின்றார். இந்த மாதிரி நுணுக்கமாக பல காட்சிகள் படம் முழுவதும் உள்ளது. விரிவாக இதை அலச ஒரு போஸ்ட் போதாது.

ஓநாய், ஓநாயை சுடத் துரத்தும் புலி போலீஸ், தன்னைத் தாக்கிய ஓநாயை கொல்லத் துடிக்கும் வில்லக் கரடி, தன்னால் பாதிக்கப்பட்ட கண்ணில்லாத ஆட்டுக்குட்டியை காக்கப் போராடும் ஓநாய், தன் குடும்பம் தப்பிக்க வேண்டுமானால் காவல் துறையால் ஓநாயைச் சுட சொல்லி நிர்பந்தப்படுத்தும் ஆட்டுக்குட்டி சந்துரு கிட்டதட்ட ஆடுபுலி ஆட்டம்தான். பரபரப்பான ஆடுபுலி ஆட்டம் அதிக இடங்களில் நம்மை சீட்டு நுனிக்கு அழைத்து வந்துவிடுகின்றது.

பெரிதாக ஒரு பிளாஷ் பேக் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆடியன்ஸை ஒரு கதை சொல்வதின் மூலமே புரியவைக்கும் உத்தி தமிழ் சினிமாவுக்கு புதிது. இதுவே சிலருக்கு குறையாகக் கூடத் தெரியலாம் அது அவரவர் ரசனையைப் பொருத்து இருக்கின்றது. 

இளையராஜாவின் பின்னணியிசை யாராலும் மிஞ்ச முடியாது ரசிகனின் இதயதுடிப்பை இசையால் மீட்டுகின்ற வித்தை மொட்டையால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய சொத்து இந்த மாபெரும் இசைக்கலைஞன். ஒளிப்பட கலைஞரும் மிகவும் உழைத்திருக்கின்றார் படம் ஓர் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் படம் முழுவதும் இரவு காட்சிகளாகவே வருகின்றது பல நாள் தூக்கத்தை துறந்திருப்பார்கள்.

சிபிசிஜடி அதிகாரி புலியாக வரும் "ஷாஜி" அஞ்சாதே பொன்வண்ணனை அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும். நன்றாக நடித்திருக்கின்றார். பாராட்டும் விதமாக இருக்கின்றது. அடிக்குரலில் இயலாமையால் கமிஷனரிடம் ஆவேசப்படும் இடங்களில் 'அட' போட வைக்கின்றார்... ஆனாலும்... ஓவராக 'செக்ஷன்' எல்லாம் சொல்லி பேசுவது புரியவில்லை என்றாலும் வழக்கமான பட வசனங்கள் போல் ஆகிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது.

தற்போதைய தமிழ் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகள் வெற்றியடைந்து வருவது வரவேற்க்கப்பட வேண்டிய விசயமாக இருப்பினும். நமது ரசிகர்கள் அந்நிலைக்கு பக்குவப்பட்டுவிட்டானா எனில் இல்லை என்றுதான் சொல்லமுடியும். தங்க மீன்கள் கூட சிலரால் மட்டுமே ரசிக்கப்பட்டது. பலரால் ஓரம் கட்டப்பட்டது. கமர்சியல் விசயங்கள் இல்லாத யதார்த்த திரைப்படங்கள் நம்முடைய பின்வரும் சந்ததிகளுக்கு வியப்பை அளிப்பனவாக வேண்டுமானால் இருக்கலாம் வயிற்றை நிரப்புமா என்பது சந்தேகமே! மிஷ்கின் போன்றவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றது. கொரிய படத்தை காப்பியடித்தார் என்பன போல இருந்தாலும் நான் விரும்பக்கூடிய இயக்குனர்களில் அவரும் ஒருவர். படம் எனக்கு பிடிச்சிருக்கு...உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நம்புகின்றேன்.

Read more...

ஊசி ஒடைஞ்சு போச்சு….!

>> Monday, September 23, 2013


செல்வம் டிவிஎஸ்ஐ நிறுத்திவிட்டு…கம்பனிக்குள் நுழையும் போதே ஓனர் சாமி படத்துக்கு ஊதுபத்தியை காட்டிக்கொண்டிருந்தார். செல்வம் வந்ததைக் கூட கவனிக்காமல் கண்ணை மூடி பிராத்தனையில் இருந்தார். "பண்றதெல்லாம் மொள்ளமாரித்தனம் காலையில பக்தி பரவசம்" என்று முனகி விட்டு கம்பனிக்கு உள்ளே நுழைந்தான்.

சிங்கர் டைலர் பொன்ராசு மிசினை துடைத்துக் கொண்டே "என்னடா செலுவு பிக்காளித்தனமான வேலைக்கு செக்கிலுத்த செம்மல் மாதிரி வெரைப்பா வர்ற…"  என்றான்.

"யோவ் பொன்சு…! உன்ற எகனை மொகனைக்கு ஒண்ணும் கொரைச்சல் கெடையாது…தெச்ச ஜட்டியெல்லாம் தூல் பிரியுதாம்…கம்பனி மேனஜர் கெட்ட வார்த்தையில திட்டுறான்."

"மிசினாடா இது..? லச்சுமி நகர்ல கூட வாங்க மாட்டான், தூக்கியெறிஞ்சிட்டு நல்ல மிசினு வாங்கச் சொல்லு ஒங்க ஓனர…..வெங்காயம்"

"ஆமா இப்பவே போன வாரச் சம்பளத்துக்கு வாங்குன வாரவட்டி குடுக்க முடியாம…கந்து வட்டிக்காரன் திட்டிட்டு போறான். புது மிசினுக்கு எங்க போவாரு... நீ ஒழுக்கமா வேலையப் பாருய்யா....!அறுக்கமாட்டாதவ அறுவா மொண்ணைனானம்"

"தங்கமணிகிட்ட கொடுத்த காச சேத்தி வச்சிருந்தாக் கூட இன்னும் இரண்டு கம்பனி வச்சிருக்கலாம்...உங்க ஓனரு.....!"

"அவரும் என்னய்யா பண்ணுவாரு...முப்பத்தெட்டு வயசாகுது இன்னும் கண்ணாலமில்ல...புழங்க ஆள் வேணுமில்ல...."

"டேய் செலுவா...!" என்று ஓனர் பழனிச்சாமி சத்தம் கேட்க அவரின் அறையை நோக்கி ஓடினான். 

"ஏண்டா செலுவா நைட்டு தெச்ச பீஸ கொண்டு போய் குடுக்காம பொன்ராசுகிட்ட என்னடா ஞாயம் மேனஜர் கூப்பிட்டு சத்தம் போடறான்டா...போடா சீக்கிரம்."

"இதோ போறங்க....!"

"ஆமான்டா...வெளிய ஒரு பல்சரு வண்டி நிக்குதே ஆருது..?"

"அது அந்த புதுசா வேலைக்கு வந்திருக்கிற தினேஷ் பையனுது"

"பார்ரா...! கைமடி கூட பல்சரு பைக்குல வர்றான் நானு ஓட்டை டிவிஸ்ச மாத்த முடியல...."

"நீங்க தங்கமணிய விட்டுட்டு சீக்கிரம் கண்ணாலம் மூய்ங்க....ஹோண்டா சிட்டி காரே வாங்கலாம்....."

"உள்ளூர்காரன்....சொந்தக்காரன்னு எடம் குடுத்தா....ஓவரா பேசுடா நீ...!" 

"உண்மைய சொன்னா கோவம் வரும் உங்களுக்கு. என்ன பண்றது எனக்கு நாலு வாரம் சம்பளம் பாக்கி...!"

"செரி...காலையில டென்சன் பண்ணாதே...! கம்பனிக்குப் போயிட்டு சீக்கிரம் வா...! வேற பக்கம் போகணும் தங்கமணி வந்திருச்சா...?"

"இன்னும் வர்லைங்க...ஆனா எல்லா செக்கிங்கு பொம்பளைகளும் வந்துட்டாங்க...!"

"கொப்பனோலி மூணு நாளு லீவு போட்டுட்டா பாரு... இவளை மொதல்ல வளைச்சு முடுக்கணும்டா....!"

"முடிக்கிட்டாலும்....." என்று மனதில் நினைத்தபடி 
பதில் எதுவும் சொல்லாமல் செல்வம் அவரின் அறையை விட்டு வெளியேறி கம்பனிக்கு உள்ளே சென்று தைத்து வைத்திருந்த ஜட்டி மூட்டையை டிவிஎஸ்சின் முன்னால் வைத்துக் கொண்டு முகம் மட்டும் தெரிய ஒரு பூதம் மாதிரி சாலையில் வேகமாக போனான்.

---

அவன் போன சிறிது நேரத்தில் ஓட்டமும் நடையுமாக தங்கமணி வர, அறைக்குள் இருந்த பழனிச்சாமி கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்து விட்டான் "லேய் இங்க வாடி" என்றான்.

"என்னங்க...!"

"எத்தனை மணிக்கு வர்ற மணி ஒம்பதாச்சு இதான் வேலைக்கு வர்ற நேரமா...? ரொம்ப ஏத்தமிடி ஒனக்கு! மூணுநாளு புடுங்குனுது பத்தாதா..?"

"ஊருக்கு போயிருந்தனுங்க...வந்ததும்மே நேர கம்பேனிக்கு வர்றேன் வையறீங்க...!"

"செரி...செரி....உள்ள போகாத... என்ற ரூம்மு கூட்டாம...புடிக்காம...கெடக்கு போயி சுத்தம் பண்ணிடு, சோறாக்கிட்டேன் கொழம்பு எதாவது வச்சுட்டு அப்புறம் வேலையப் பாரு போ...!"

போன் டி.எம்.எஸ் பாடிய முருகன் பாடலை ரிங்டோனாய் ஒலிக்க... ரூம் சாவியை அவளிடம் தூக்கி வீசி சைகையால் போகச் சொன்னான்.

"அலோ சொல்லும்மா...!"

"..................................................................."


"என்னது ஜாதகம் பொறுந்தலையாமா...?"

"..................................................................."

"செரி...வுடு...அழுவாதே.....அமையும் போது அமையும்...! நம்ம கையில என்ன இருக்கு..?"

"....................................................................."

"ம்ம்ம்....வேலை நடக்குது, நானு இந்த வாரம் ஊருக்கு வர்றேன் நைய்நைய்ங்காதே போனை வைய்யி...வேலை இருக்கு...!" 

போனை வைத்து விட்டு கம்பனிக்கு பின்னால் இருந்த அவன் தங்கும் சின்ன ரூமுக்குப் போனான்.தங்கமணி தரையைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கதவைச் சாத்தினான்.

---

கட்டைக் கொண்டு சென்று கம்பனியில் போட்டுவிட்டு திரும்ப செக்ஷனுக்கு வந்த செல்வம் கம்பனிக்கு முன்னால் பொன்ராசு பீடி குடித்துக் கொண்டு நின்றிருந்தான்...டிவிஎஸ்சை நிறுத்திக் கொண்டே கேட்டான்.

"யோவ்...! "பொன்சு" ஏய்யா இங்க நிக்கற...? நீ உருப்பிடியா ஒரு நாளைக்காச்சும் வேல பாக்குறீயா...?"

"டேய்...! வௌக்கெண்ணை....ஊசி ஒடைஞ்சிருச்சுடா....! நீயும் இல்ல என்ன பண்றது"

"ஏன்...! ஓனர் இருக்காருல்ல... அவருகிட்ட கேட்க வேண்டியதுதானே...?"

"யாரு...? ஒங்க ஓனரா.....திங்கக்கெழமை காலையிலியே வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காரு....மூணு நாளு ஏக்கம் பாரு செத்த நேரமாகும்....!"

"தங்கமணி வந்துட்டாளா...?"

"ஓ....அம்மணி ஒம்பது மணிக்கு ஆடி அசைஞ்சு வர்றா! அப்படியே மறைச்சு ஒதுங்கிட்டான்யா உங்க ஓனரு...!"

"கருமம் வாய்யா, ஊசிய எடுத்து தர்றேன்! தெச்சுத் தொலை...! அந்த மேனேஜரு தேவடியாப்பைய கெட்டவார்த்தையில சத்தம் போடுறான். இந்தாளு பாட்டுக்கு எனக்கென்னேன்னு காலையில கையில புடிச்சுட்டு ரூமுக்குள்ள போயிட்டான்...ச்சை என்ன பொழப்பு நாலு வாரம் சம்பளம் வேற வரணும் இல்லான்னாக் கோட வுட்டுப் போட்டு இப்படியே போயிருவேன்." புலம்பிய படி செல்வம் மேஜையைத் திறந்து ஊசி எடுத்துக் கொடுக்க....! பொன்ராசு நக்கல் சிரிப்புடன் "சீக்கிரம் உங்க ஓனர் சோத்துப் போசிய தூக்கிட்டு மறுபடியும் டைலாக்ஸ் கம்பனிக்கு வேலைக்கு போவாரு...கூடிய சீக்கிரம் நடக்கும் பாரு...!" என்றான்.

"போய்யா....போய் வேலையப் பாரு உன்ன மாதிரி ஆளுகளை வச்சா வேலைக்கு என்ன..? பிச்சைதான் எடுக்கனும்"

"ஓனரை உட்டுக்குடுக்க மாட்ட....ஆனா உன்ற லவ்வரு தங்கமணிய உட்டுக் குடுப்பே" என்று சிரித்தான் பொன்ராசு.

"போய்யா...பழச கௌறாத...அவள மறந்து பல நாளாச்சு....! லட்டர் குடுத்ததுக்கு என்னிக்கு மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசுனாளோ...அன்னிக்கே மறந்துட்டேன். ஒன் சைட் லவ்வு அது"

"வயசுப் பைய உன்னை வுட்டுட்டு....அரைக் கெழவன் பழனிச்சாமி கோட பகல்லியே படுத்துக் கெடக்கறா பாரு....!"

"யோவ்...பொன்சு போய்யா வேலையைப் பாரு...போ....காலையில மனுசனை டென்சன் பண்ணிட்டு.....எவ எப்படிப் போனா என்ன....?" என்று செல்வம் கத்த பொன்ராசு அமைதியாக மிசினை நோக்கிப் போனான். 

செக்கிங் பெண்கள் பேசிச்சிரித்துக் கொண்டிருக்க..."ஏம்மா...வேல பாக்க வந்தீங்களா...? கும்மாளமடிக்க வந்தீங்களா...? சும்மா பீஸை நீவிக்கிட்டே நில்லுங்க....புதுசா வயசுக்கு வந்தவளுக மாதிரி சீக்கிரம் முடிங்க...ஓவர் லாக் டைலர் அளவு பாத்து புடிங்க கன்னாபின்னான்னு புடிக்காதிங்க....நான் வார்த்தை வாங்க வேண்டியதா இருக்கு...!"

செல்வம் உட்ச பட்ச வெறியில் எல்லாரையும் திட்டிக் கொண்டிருந்தான் நீண்ட நேரமாக......

Read more...

பங்களாப்புதூர் ஸ்கூல் பத்து கிலோமீட்டர்....!

>> Saturday, September 14, 2013

காதல் என்பதை பருவ வயதில்தான் நாம் உணர்கின்றோம் அதற்கு முன் பால்யத்தில் அது காதல் என்று சொல்லமுடியாது ஒருவகையான ஈர்ப்பு எனலாம். அன்பு நிறைந்த ஒரு வகையான புரிதலற்ற காலமது. அந்த வயதில் என் வீட்டுக்கு அருகில் சாமிநாதன் என்பவர் சைக்கிள் கடை வைத்திருந்தார். அவர் மனைவி மக்களுடன் இருந்தாலும் சத்தியமங்கலத்தில் ஒரு விதவைப் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார். அடிக்கடி அங்கே போய் வருவார் சில நாட்கள் வேலை அதிகமாக இவர் ஒரு மாதமாக அங்கு போகவில்லை அந்த விதவைப் பெண் தன் ஒரே மகளைக் கூட்டிக் கொண்டு சைக்கிள் கடையில் வந்து உக்கார்ந்து கொண்டது. அவரும் பல சமாதானங்களைச் செய்தும் அப்பெண் மசியவில்லை.

யாரோ சென்று அவர் மனைவியிடம் சொல்ல... சரியான சண்டை ஊரே கூடிவிட்டது. ஊர் பெரிசுகள் கூடி விடிய...விடிய...பஞ்சாயத்து நடந்தது அந்த விதவைப் பெண் இவருடன் இதே ஊரில்தான் இருப்பேன் இல்லை பவானி ஆற்றில் விழுந்து நானும் என் குழந்தையும் இறந்து விடுவோம் எனக் பிடிவாதமாக இருக்க...ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து கடைக்கு அருகில் ஒரு வீட்டைப்பார்த்து சைக்கிள் கடைக்காரர் விதவைப் பெண்ணை குடிவைத்து விட்டனர்.

அந்த விதவைப் பெண்ணின் மகள் பெயர்தான் "சுதா" சுதா சும்மா சொல்லக்கூடாது நல்ல கேரளாப் பொண்ணு மாதிரி நல்ல அழகு. சத்தியில் இருந்து டி.சி வாங்கிக் கொண்டு வந்து எங்க ஊர்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள், எங்கள் வகுப்பில் இடமிருக்க அங்கு உக்கார வைக்கப்பட்டாள். வௌக்கெண்ணெய் முகங்களாக பார்த்த எங்களுக்கு பான்ட்ஸ் பவுடர் வாசமும், சாயம் போகாத பூப் போட்ட பாவாடை சட்டையும் வெள்ளைவெளேரென்ற காலில் அணிந்திருக்கும் கால் கொலுசும் ஒரு மாதிரியான கிறக்கத்தை உண்டாக்கின. அவளைப் பற்றி பல கிசுகிசுக்கள் பசங்க மத்தியில் புழங்க ஆரம்பித்தது.

ஊருக்குள் சுதாவின் அம்மாவைப் பற்றிய செய்திகள் நல்லவிதமானதானதாக இல்லை. அவள் ஒரு மாதிரி என்கின்ற ரீதியில் பல கதைகள் உலாவந்தன சில இளைஞர்கள் சைக்கிள் கடைக்காரர் இல்லாத போது அவள் வீட்டுக்குப் போவதாகவும், ஊருக்குள் நிறைய நபர்களை வளைத்துப் போட்டிருப்பதாகவும் பக்கத்து வீட்டு அக்காக்கள் நாங்கள் சிறுவர்கள் என்பதால் தைரியமாக பேசிக்கொண்டிருப்பார்கள். அன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சி என்பது நுழையவில்லை அதனால் பெண்களின் பொழுதுபோக்கே இது போன்ற பொரணிகள்தான். அவர்கள் பேசுவதை விளையாடுவது போன்று பாசாங்கு செய்து கொண்டே கேட்டு கொண்டு வகுப்பறையில் நாங்க கூடிப் பேசுவோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சுதா என் வீட்டுக்கு வர ஆரம்பித்தாள்...காலாண்டுக்குப் பிறகுதான் இந்தப் பள்ளியில் சேர்ந்ததால் எழுதாத பாடங்களை என் நோட்டை வாங்கி எழுத ஆரம்பிக்க மிக இயல்பாய் அவள் பேச ஆரம்பித்தாள். அவள் வருவதை என் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது கரித்துக் கரித்து கொட்டிக் கொண்டிருப்பாள்.

"ஏண்டி நீ பள்ளிக் கூடத்துல எழுதுவியா மாட்டியா...?" என்று காரணமில்லாமல் கோபப்படுவாள் எனக்கு சங்கடமாக இருக்கும் ஆனால் சுதா ஒரு துளி முகம் சுருங்காமல் மென்மையாக "இல்ல அத்தை நான் பாதியில் தான் சேந்தனா அதனால எழுதலை" என்று விளக்கமளிப்பாள்.

நானும் வகுப்பறையில் அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன். காரணம் ஒரு பெண்ணிடம் பேசினாலே பல கதைகள் கட்டி விடுவார்கள். ஆனாலும் என் பக்கத்துவீட்டுப் பையன் ஒருவன் அவள் அடிக்கடி என் வீட்டுக்கு வருவதையும்...நான் அவளுடன் பேசுவதையும்...ஒன்றாகப் படிப்பதையும் போட்டுக் கொடுத்து விட்டான். அவளுடைய ரெக்கார்டு நோட்டில் நான் வரைந்து கொடுத்த படங்களைக் காட்டி நாம கேட்டா வரைஞ்சு கொடுக்கமாட்டிங்கறான் அவளுக்குப் பாரு எப்படி டிசைன் டிசைன்னா வரைஞ்சு கொடுக்கறான் என்று பெரிய களோபரம் ஆகவும். நான் மிகவும் பயந்து போனேன் பள்ளியெல்லாம் தெரிந்து அம்மா அப்பாவுக்கெல்லாம் தெரிந்து அவள் கழுத்தில் நான் தாலி கட்டுவது போல எல்லாம் கனவு வேறு வந்து தொலைத்தது அவளை கொஞ்சம்...கொஞ்சமாக உதாசினப்படுத்த ஆரம்பித்தேன்.

நான் விலகி போவதை உணர்ந்த அவள் ஒரு நாள் நேரடியாகவே கேட்டாள் "ஏன்...? நான் வந்தா பேச மாட்டிங்கற நான் என்ன தப்புச் செஞ்சேன்" என்று குழந்தைத்தனமாக கேட்டாள். நான் சமாளித்தாலும் அவளை முழுவதுமாக விலக்க முடியவில்லை..நட்பு தொடர்ந்தது. என் நண்பர்கள் கொஞ்ச நாள் புரளி பேசியவர்கள் பிறகு ஒரு ஆசிரியை புதிதாக எங்கள் பள்ளியில் சேர அவருக்கும் கணக்கு வாத்தியாருக்கும் "லவ்ஸ்" ஏற்பட அதைப் பற்றி பேச ஆரம்பித்து எங்களைப் பற்றி மறந்து போனார்கள்.

பத்தாவது முடிந்தவுடன் நானும் வேறு பள்ளிக்குச் செல்ல... அவள் வேறு பள்ளிக்குச் செல்ல...பிறகு வேலை என்று காலங்கள் உருண்டோட அவளைப் பற்றி மறந்த ஒரு சூழ்நிலையில்தான் ஒருநாள் நான்வேலை முடிந்து வந்து சாப்பிட உக்கார அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சுதாவைப் பற்றி. பத்தாவது பெயில் ஆக அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு தையல் கற்றுக் கொள்ள போய்க் கொண்டிருந்த இடத்தில் எவனோயோ...! டைலரை காதலித்தததாகவும் அவன் அவளை கர்ப்பமாக்கி விட்டு திருப்பூர் ஓடிவிட்டானாம்...அவள் அம்மா ஏதோ மருத்துவச்சியை வைத்து கலைத்துவிட்டாளாம். அதன் பிறகு ஏதேச்சையாக நான் வீட்டிலிருக்கும் சமயம் "அத்தை கொஞ்சம் குழம்பு குடுங்க...கடுகு கொடுங்க" என்று வருவாள்...என்னைப் பார்த்தாள் என்றால் சிநேகமாக சிரித்து "நல்லாருக்கியா" என்பாள்..."படிக்க எதாவது கதை புக்கு கொடேன்" என்பாள். நானும் எதாவது புத்தகத்தைக் கொடுத்து விட்டு சிரிப்பேன். அதன் பிறகு அம்மா என் மேல் எரிந்து...எரிந்து விழுவாள் அவள் என்னை மயக்கி விடுவாள் என்று அம்மா கூட நினைக்கிறாளா...? என்று வேதனையாக இருக்கும்.

நீண்ட நாள் வேலையாக தொடர்ந்து வெளியூரில் இருந்த நான் ஆறு ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு வந்தேன் குளித்துவிட்டு அப்படியே கோயில் வரை போனேன். திரும்பி வந்த போது சைக்கிள் கடையில் சாமிநாதன் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தார்...சுதாவின் அம்மா கடையில் உக்காந்து வேஸ்ட் பனியன் துணியை பிரித்துக் கொண்டிருந்தாள்...சுதாவை காணவில்லை. கல்யாணம் ஆகியிருக்குமோ...? என்று யோசனை செய்தபடியே வந்தேன்.

வீட்டுக்கு வந்த பிறகு அம்மா சாப்பாடு போட சாப்பாட்டைப் பிசைந்து கொண்டே....சுதாவைப் பற்றி அம்மாவிடம் கேட்கலாமா...? என்று யோசனையில் இருந்தேன். என் எண்ணங்களை புரிந்து கொண்டாளோ என்னவோ அம்மாவே ஆரம்பித்தாள் "இந்த சுதாவைப் பாத்தியாடா...? அம்மா மாதிரியே பண்ணிட்டா...!" 

"என்னம்மா என்ன ஆச்சு...?" என்றேன்...! 

"பக்கத்து வீதியில ஒருத்தன் மளிகைக்கடை வச்சிருந்தான்... தூக்கநாயக்கன்பாளையத்துக்காரன் இவ சாமான் வாங்கப் போக பழக்கம் ஆயிடுச்சு போல ஒரு நாளு இவளைக் கூட்டிட்டுப் போயிட்டான். கடைசியில அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை வேற இருக்காம். அவங்க இவளை அடிச்சு உதைச்சு பங்களாப்புதூர் ஸ்டேசன்ல வச்சு கேஸ் குடுத்து! பஞ்சாயத்துப் பேசி இப்ப இருகுடியா வாழறா...! ரொம்ப சீரழியறா பாவம்...!" 

"இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட்டுக்க...."என்றாள் அம்மா...!

"வேணம்மா போதும்.....வயிறு சரியில்லை" என்றேன் 

"ரசம் இருக்குடா...."

"இல்லம்மா போதும் விடு....!"தட்டில் கைகழுவிவிட்டு எழுந்து நின்றேன்.

துண்டை எடுத்து நீட்டியவள்....."ம்ம்ம்.....நல்ல பொண்ணுடா அவ அம்மாவே கெடுத்துட்டா....."என்ற அம்மா கண்ணைத் துடைத்தாள்... அவளுக்காக அழுகின்றாளா என்ன...? மனசு ஒரு மாதிரியாக இருக்க வெளியில் கிளம்பினேன்.

Read more...

அன்புள்ள தெய்வ மச்சானுக்கு ஆசையில ஒரு கடுதாசி!

>> Monday, September 9, 2013

அன்புள்ள....

"மண்ணுளி" தெய்வ மச்சானுக்கு சிலோனிலிருந்து "ராசா"மச்சான் எழுதும் கடிதாசி. மச்சானுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்....மச்சான் நலமா..?அக்கா "சாணி"யின் நலத்தைக் கேட்டதாகச் சொல்லவும்....அப்படியே தங்கச்சி கொரங்காயி, தம்பி ராய்க்கூலு, சகலை ராகாட்டு ஆகியோர்களையும் கேட்டதாக சொல்லவும். இங்க நான் பகல்ல நொம்ப  சந்தோசமா இருக்கிறேன்...ராத்திரியிலதான் எங்காளுக கற்பழிச்ச டமிழ் பொம்பளை பேய்க ரவுசு பண்ணுது.....அதுக தொல்லைதான் கொஞ்சம் தாங்கல.....சீக்கிரம் ஒரு மளையாள ஷகிலாவை..ச்சே....ச்சீ நம்பூதிரியை அனுப்பி வைக்கவும்...ஒரு யாகம் நடத்தினால் சரியாகிவிடும். ஆனாலும் சந்தோசமாத்தேன் இருக்கேன்.....அதுக்கு சாட்சி நான் குடித்து விட்டு சிங்களத்திகளுடன் கும்மாளம் அடித்த ஊடூப் வீடியோவுக்கு ஆறு லைக் போட்ட அணு வெஞ்ஞானி நாரசாமிய கேட்டுப்பாருங்க.... போங்க மச்சான் வெக்கவெக்கமா வருது, செரீ அத வுடுங்க "தயிர்போண்டாத்தலையன்" கோஸ்டி, "எளகினஆயன் கோஸ்டி", "செட்ல டீ ஆறுது" கோஸ்டி  மற்றும் டமிழ்நாட்டு அல்லக்கை நொல்லக்கைகளுக்கு நன்றி கலந்த வணக்கத்த தெரிவிச்சிருங்க.

அப்புறம் மச்சான் ஒரு விசியம் கடலில் வரப்பு வைத்து உங்க ஆசியில் பூண்டு வெவசாயம் பண்ணிட்டு இருக்கோம். அதை அழிக்கறாப்ல டமிழ் மீனவன்கள் வந்து மீன் புடிக்கிறாங்க.....அது மட்டுமில்லாம அங்கியே வறுத்து வேற தின்னுட்டு... நசிக்கி நசிக்கி "குசு" வேற வுடறானுகோ. "வங்கநரி" வுடுறத விட பொண நாத்தம் அடிக்கி. கச்சத்தீவத்தான் அன்னிக்கே எங்களுக்கு தாரை வாத்திட்டீங்கள்ள அப்புறம் எதுக்கு இவனுக ரவுசு பண்றானுக...பிக்காளி பசங்க.....அடிச்சி முடுக்க சொன்னேன் நம்ம பசங்கள.... 

அவிங்களும் கட்டையில அடிக்கறாங்கோ, டுப்பாக்கிய திலுப்பி பொறத்தால நாலு வச்சாலும் டமிழு கருவாப் பயனுக தகீரியமா மறுக்கா...மறுக்கா வந்து மீனு, நண்டு புடிக்க வர்றாணுக...நாத்தம் புடிச்ச டமிழனை எங்களுக்கும் புடிக்காது ஒங்களுக்கும் பிடிக்காது அதனால நீங்களும் கண்டுக்க மாட்டிங்க....கேரளாக்காரனோ..? வடநாட்டுச் சேட்டோ அடிபட்டா மட்டும் உங்க உச்சானி முடி நட்டுக்கிட்டு நிக்க லங்கோட இறுக்கிக்கட்டிக்கிட்டு வீர வசனம் பேசுவீங்க..."இட்டாலியே டக்கால்டி வேணாம்" அப்படின்னு பஞ்ச் பேசி ரோசப்படுவீங்கோ எளைய தளவதி மாதிரி....!

இந்தியாவுல பொறந்த ஈனச்சாதி பயலுக டமிழனுக....அவங்களை அடிச்சா நீங்க டர்பனை எடுத்து வாய மூடிக்கிட்டு சிரிப்பீங்கோ! ஆனாலும் பாருங்க மச்சான்! தலைவர் பிரபாகரன் போட்டாவப் பாத்தா இன்னும் நம்ம பயலுக கழியறானுக. சுதேசி விமானம், நீர்மூழ்கி கப்பல், பீரங்கி  எல்லாம் தயார் பண்ணியிருக்கானுக, ஆனா நீங்க இன்னும் ரஷ்யாகிட்டயும்...இட்டாலிக்காரன் கிட்டியும் "அய்யா சாமி....! இல்லாதப்பட்டவன் வந்திருக்கிறேன்...... ஒரு பீரங்கி பிச்சை போடுங்க சாமீன்னு..!" பிச்சையெடுக்கிறீங்க மச்சான். டமிழன் மூளைக்காரன் ஆனா பாருங்க மச்சான் அவன் எல்லாத்தையும் நம்பிருவான்...அது மட்டுமில்லாம உங்க நெரந்தர அடிமை மஞ்சத்துண்டு சின்னமச்சான் ஈழம்...ஈழம்ன்னு இத்தனை நாளு ஈழமக்களையும் தமிழக கறுவாப்பயலுகளையும் நல்லா ஏமாத்தி நமக்கு விசுவாசமா இருககாரு... அவருக்கு ஒரு ஸ்பெசல் டேங்ஸ் சொல்லிருங்க பெரிய மச்சான்.

அப்புறம் மச்சான் இந்த கருவா டமிழ் மீனவப் பசங்களை வெறகு கட்டை, டுப்பாக்கியில அடிச்சும்...சுட்டும் நம்ம பசங்க கை வலிக்கி....கை வலிக்கி அப்புடின்னு அழுவாச்சியா அழுதாங்க மச்சான். அதை  உங்ககிட்ட சொன்ன மறுநிமிஷமே மனசு கலங்கி ரண்டு போர்க் கப்பலை பெரீய்ய...பெரீய்ய லென்சு டுப்பாக்கி வச்சு கருவா டமிழ் ஈன மீனவ பயலுகளை நல்லாச் சுட்டுக்கடா ராசான்னு அனுப்பினீங்க பாருங்கோ.......மண்ணு மச்சான் நீங்க எங்கியோ போயிட்டிங்க.....!ஒங்க அன்பு, பாசம், பரிவ கண்டு கண்ணுல தண்ணி....தண்ணியா ஊத்தி திரிகோணமலை உசரத்துக்கு கடல் மட்டம் ஏறிக்கிச்சுங்க மச்சான்......! மச்சான் நீங்க தெய்வ மச்சான்......மச்சான்....! அழுவாச்சி...அழுவாச்சியா வருது மச்சான் அதனால் இத்தோட நிறுத்திக்கிறேன் மச்சான்!


என்றும் உங்கள் எசமான்
ராசக்காடைராசய்யா!
கொழும்பு!

Read more...

இரவென்னும் நரகம்.

>> Sunday, August 18, 2013


றக்கம் வராத ஒரு இரவில் பாலகுமாரனின் ஒரு நாவலை படித்துக் கொண்டிருந்தேன். நடுஇரவின் அமைதியில் என் அலைபேசியில் ஜென்ஸியின் தெய்வீக ராகம்.......தெவிட்டாத பாடல் மெலிதாக பாடிக்கொண்டிருந்தது, மனதுக்கு ரம்யமாக இருந்தது. நாவலும், பாடலும் என்னை முழுவதும் ஆட்க்கொண்டு விட்ட பொழுதில் அதைக் கலைப்பதுபோன்று ஒரு பேரொலி அதுவும் ஒரு பெண்ணினுடையது கேட்டது, என்னுடைய முழு உற்சாகமும் வடிந்து போனது.

இங்கு குடிவந்து இரண்டு வாரம்தான் ஆகின்றது...வந்த மூன்றாவது நாளில் அருகிலிருந்த வீட்டில் இருந்து வீரிடல் கேட்டுப் பயந்து போனேன். காலையில் கீழ் வீட்டில் இருக்கும் ஒரு பெரியவர் தினமும் பார்க்கும் பொழுதுகளில் சினேகமாகச் சிரிப்பார். அவரிடம் கேட்ட பொழுது அது மனநிலை சரியில்லாத ஒரு இளம்பெண் என்றும், நன்றாக இருந்த பெண்தான்; வயதுக்கு வந்த பிறகு இந்த மாதிரியாகிவிட்டது, பேய் பிடித்திருப்பதாகவும், அமாவாசை நெருங்கும் சமயத்தில் கொஞ்சம் சத்தம் போடும் என்றும் கூறினார்.

நானிருக்கும் அறை மூன்றாவது மாடியில் இருக்கின்றது, தரைத்தளத்தில் நான்கு போர்சன்மேல் தளத்தில் நான்கு போர்சன் என இருக்கின்றதுஎங்கும் வீடு கிடைக்காத நிலையில், என் அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் என் நண்பன் செந்தில் இதைப் பிடித்துக் கொடுத்தான். அதிகம் யாரிடமும் ஒட்டாத தனிமை விரும்பியான எனக்கு இந்த வீடு மிகவும் பிடித்திருந்தது மட்டுமில்லாது, வாடகையும் குறைவுதண்ணீர்ப்பிரச்சனையும் இல்லை. ஆனால்! இந்த பெண்ணின் அலறல் சிலநேரங்களில் பலமணி நேரம் உறக்கத்தை தொலைக்க வைத்துவிடுகின்றது. அறையின் மூலையில் வைத்திருந்த பானையில் தண்ணீரைக் மொண்டு குடித்துவிட்டு விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டேன்.

அடுத்து பலநாட்களுக்கு அந்த பெண்ணின் அலறல் தொல்லையில்லாமல் கழிந்தது எனக்கு மனநிம்மதியை தந்தது! ஆனால் அன்று இரவு அலுவலகம் முடிந்து வந்து அழுக்கு துணிகளை துவைத்துப் போட்டுவிட்டு, கடையில் வாங்கிக் கொண்டு வந்த உணவை உண்டு கொண்டிருக்கும் போதே ஃபேன் சுற்றாமல் நின்று விட்டது. உணவருந்தி விட்டு இரண்டு மூன்று முறை சுவிட்சை ஆப் செய்து மீண்டும் போட்டும் மௌனத்தையே கடைப்பிடித்தது. இந்த இரவில் இதை சரி செய்வது உத்தமமில்லை என்று நினைத்து தலையணை, பாய் மற்றும் போர்வை எடுத்துக் கொண்டு மொட்டைமாடியில் சென்று படுத்துக் கொண்டேன். மொட்டை மாடிக்கு வரும் கதவை தினமும் நான் பூட்டிவிடுவேன். அதனால் யாரும் மேலே மாடிக்கு வருவதில்லை,பகலில் மட்டும் ஒரு மாமி மட்டும் வந்து வத்தல், கோதுமை என்று எதையாவது காயப்போடுவாள் மற்றபடி கீழ்ப் போர்சன் ஆட்கள் மேலே வரவே மாட்டார்கள்எனக்கு இருட்டு, தனிமை என்றாலே பயம்! அப்பா இருக்கும் வரை நான் அவரில்லாமல் எங்கேயும் போக மாட்டேன், சின்ன வயதிலேயே அம்மா இறந்து விட்டாள். என்னை நன்றாக படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு நான்தான் உலகம் என்னை நல்ல நிலையில் கொண்டு வந்து வைத்துவிட்டு, நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார். அவரை நான் எப்படியெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று என்னை தனிமையில் விட்டுச் சென்று விட்டார். அப்பாவின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்திருந்தபோது, அந்த பெண்ணின் அலறல் மீண்டும் வீச்ச்ச்ச்.......என்று கொடூரமாக கேட்டது. நான் மெதுவாக எழுந்து தவழ்ந்து மாடிக் கைப்பிடிச் சுவரை ஒட்டியபடி மெல்ல எட்டிப்பார்த்தேன், நான் கண்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்தது! அந்தப் பெண்ணின் தந்தை பலமுறை வீட்டின் முன் நின்று கொண்டிருப்பான்சில சமயம் நான் வேலை முடிந்து வரும் போது குடி போதையில் சாலையை அளந்து கொண்டு வருவான் கீழ் வீட்டுப் பெரியவர் கூட சொல்லியிருக்கின்றார் அந்தப் பெண்ணின் தந்தை என்று.

அவன் முழு நிர்வாணமாக நின்று கொண்டு போதையில் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான், மனநிலை சரியில்லாத தன்னுடைய மகளையே....ச்சே என்ன ஜென்மம் இவன்..? எனக்கு ஆத்திரம் மூளைக்கு ஏறியது, மீண்டும் பார்த்த போது அந்தப் பெண் அவனின் முழு பிடியில் இருந்தாள். கதவை திறந்து வைத்துக் கொண்டு, விளக்கையும் போட்டுக் கொண்டு, எந்த பிரஞ்சையும் இல்லாமல் மகளுடனே உறவு கொண்டிருந்தான் அந்த தகப்பன். எனக்கு வாந்தி வரும் போல் இருந்தது. ஓடிச் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டேன், அன்றைய இரவு கொடுமையான ஒரு நரகமாகவே எனக்கு கழிந்தது.

காலையில் எழுந்தவுடன், கீழ்வீட்டுப் பெரியவரைப் சென்று பார்த்து நான் பார்த்த நடந்த சம்பவங்களைக் கூறினேன்அவர் மிக சாதாரணமாக நாம ஒண்ணும் பண்ண முடியாது..! அவன் ஒரு பழைய ரௌடி. இந்த இடமே ஒரு அரசியல்வாதி அவனுக்கு இனாமாக கொடுத்தது. அவன் மேல் இரண்டு கத்திக்குத்து கேஸ்  கூட இருக்கு, மடியில எப்பவும் ஒரு பிச்சுவா வச்சிருப்பான்எனக்கு இது ரொம்ப நாளாத் தெரியும்! என்ன பண்ண முடியும்? அவன் மனைவிக்கும் இது தெரியும்! அவளே அவனை எதிர்க்க பயந்திட்டு சும்மா இருக்கா....! இவனுடைய பாலியல் தொல்லை காரணமாகத்தான் அந்தப் பெண் மனநிலை பாதிக்கப் பட்டிருக்காள் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும்! அப்படியே நாம கேஸ் கொடுத்தாலும் பத்து நாள்ல வெளிய வந்து கேஸ் கொடுத்தவங்கள குத்திருவான் அதனால இதைக் கண்டுக்காதே என்றார்.

எனக்கு அதன் பிந்தைய இரவுகள் நரகமாகவே கழிந்ததுச்சே…! என்ன வகையான மனிதர்கள்..? தெரிந்தும், எப்படி இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்கின்றார்கள்? அன்றைக்கு இரவு அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்தது. இரவு பன்னிரெண்டுக்கு மேல் கடந்துவிட்டது நான் என்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் என் குடியிருக்கும் வீதியின் முனை வரை... செந்தில்பாவனாசாந்தி வருவார்கள் அதன் பிறகு ஒரு இருநூறு அடி வரை தனியாகச் செல்ல வேண்டும் செந்தில் “வீடு வரை வருகிறேன்” என்றான், நான்தான் ”வேண்டாம் செந்தில், நான் போயிக்கிறேன் நீ கிளம்பு” என்று விடை கொடுத்துவிட்டு, மெதுவாக ஸ்கூட்டரை ஓட்டிய படி வந்தேன்....வழியில் எங்கள் வீதியில் பாதாளச்சாக்கடைக்காக இரண்டு ஆள் மூழ்குமளவு ஒரு பெரிய குழி வெட்டியிருக்கின்றார்கள், பல நாட்களாக குழி மூடப்படாமல் கிடக்கின்றது. சாக்கடை நிரம்பியிருக்கும் அந்த இடத்தை கடக்கும் போதுதான் அவனைக் கண்டேன். அந்த பெண்ணின் தந்தை! காமவெறியன் உளறிய படி போதையில் நின்று கொண்டு சாக்கடையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு நெஞ்சுக்குள் ஒரு பாரம் மாதிரி பயம் தோன்றியது, மெல்ல நெருங்கிய போது அவன் என்னைக் கவனிக்கவில்லை, ஏதோ உளறியபடி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். நான் அவனைக் கடந்ததும் தீடீரென்று…. ஒரு மின்னல் போல தோன்றியது அந்த எண்ணம்.ஸ்கூட்டரை அப்படியே நிறுத்தினேன் வேகமாக ஓடி வந்து அவன் முதுகில் ஒரு உதை தலைகீழாக பளுக் என்று சாக்கடைத் தண்ணீர் தெறிக்க உள்ளே விழுந்தான். அணைக்காமல் வைத்திருந்த ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு என் அறையை நோக்கி வேகமாகச் சென்றேன் என்னிடமிருந்த சாவியால் மெயின் கதவை திறந்து ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு மாடிப் படி மெதுவாக ஏறி அறையை அடைந்து குளியலறைக்குச் சென்று வாளியில் இருந்த தண்ணீரை அப்படியே எடுத்து தலையில் இருந்து ஊற்றினேன்......வெளியே வந்து என் நனைந்த என் சுடிதாரை களைந்து விட்டு, பெட்டியில் இருந்த நைட்டியை அணிந்து கொண்டு ஃபேனை வேகமாக வைத்து கூந்தலை துவட்ட ஆரம்பித்தேன்.

Read more...

பேச்சிலர் வாழ்க்கை- ஒரு அய்யாச்சாமியின் டைரி!

>> Wednesday, July 31, 2013

ம்ம வாழ்க்கையில பேச்சிலர் வாழக்கைங்கறது ஒரு அழகான ஒரு கட்டம்ன்னு சொல்லுவாங்க....அந்த அழகான கட்டத்துல நல்ல நண்பர்கள் கெடைச்சுட்டா சந்தோஷம்தான். ஆனா அதுவே அராத்து புடிச்ச அப்பிரண்டிசு பசங்களா அமைஞ்சிட்டா நம்ம பாடு ரொம்ப கஸ்டமுங்க.....! எங்கூர்ல இருந்து திருப்பூர்க்கு வந்ததும் கொஞ்ச நாளு ஆபிஸ்ல தங்கி வேல பாத்தேன். அதுக்கப்பறம் நாலு பிரண்டு சேந்ததும் ஒரு ரூமு புடிச்சு தங்குனோம், அந்த காம்பவுண்டே ஒன்லி பேச்சிலர்தான், வழக்கமான பேச்சிலர் ரூம் போல பாலிவுட் ஊர்மிளா, மணிசா, கோலிவுட் நமீதா, ஹாலிவுட் கேட்வின்ஸ்லெட், ஏஞ்சிலினா ஜோன்ஸ் படங்கள் ஒட்டப்பட்டு, வண்ணத்திரை, போன்ற சினிமா புக்கும் மருதம் போன்ற சரோஜாதேவி வகையராவாகவும் இறைந்து கிடந்த அறையாகத்தான் இருந்தது. அந்த காம்பவுண்டில் உள்ள ரூம்ல ஒவ்வொருத்தனும் ஒரு ஊர்க்காரன் மதுர, திருச்சி, தஞ்சாவூரு, திருநெல்வேலின்னு பல ஊர்க்காரனுகளால நெறைஞ்சு இருக்கும் அதே மாதிரி ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு செய்கையில நம்ம உசிர எடுப்பானுக....அது மட்டுமில்லாம பக்கத்து ரூமு பக்கிக அதுக்கும் மேல சாவடிப்பானுக!
ஹேய் நில்லுய்யா.......மஞ்சசட்டை

ரூமுக்கு போயி மொத நாளு நல்ல மணக்குற பியர்ஸ் சோப்பு வாங்கி வச்சிருந்தேன். காலையில எந்திருச்சுப் பாக்குறேன் சோப்பக் காணம்...! எலி..கிலி...தூக்கிட்டுப் போயிருச்சான்னு தேடிப் பாக்குறேன் எங்கயும் காணல...சரின்னு பாத்ரூம் போனா சோப்பை ஒரு பன்னி எடுத்து தண்ணித் தொட்டிக்கிட்ட எடுத்து வச்சு தேய்ச்சு...தேய்ச்சு குளிச்சிட்டு இருக்கு அதுவும் ஜட்டிக்குள்ள வுட்டு பிளக்கு...பிளக்குன்னு நுரை வர தேச்சுக்கிட்டு இருக்கு கருமம் 

“அடேய்.....அடேய்.....இனி அந்த சோப்ப நான் எப்பர்ரா எம்பட மூஞ்சிக்குப் போடுவேன்....! ”

“மாப்புள பியர்ஸ் சோப்பு நல்லா மணக்குடா“ன்னு வேக்காணம் வேற பேசுறான் சங்கி மங்கி! அவன் குளிச்ச பிறகு அந்த சோப்பு செத்த எலி மாதிரி தூக்கியெறிஞ்சுட்டேன்.

அடுத்தது டூத்பேஸ்ட் நூறு கிராம் பேஸ்ட் வாங்கிவச்சேன் நல்ல குர்குரேய் பாக்கெட்டு மாதிரி உப்பலா இருந்துச்சு...! ஒரே மணி நேரத்துல சரக்கடிச்சுட்டுப் போட்ட சைட் டிஸ் ஊறுகா பாக்கெட்டு மாதிரி சப்பி வச்சுடுவானுக....“ஏண்டா பேஸ்டே வாங்க மாட்டிங்களா...? நானும் வாங்கலைன்னா என்னடா பண்ணுவீங்கன்னு..?” கேட்டா “பேஸ்ட்டு இல்லாதப்ப எதுக்கு பல்லு வௌக்குறோம்ப்பானுக....” இவணுககிட்ட பீர் பாட்டில மூடிய வாயில ஒடைச்சு வாங்கிக் குடிச்சத நெனைச்சா குடிக்காமியே வாந்தி வாந்தியா வருது கருமம். கருமம்..! ஒரு நாளு சோப்பாயில் வாங்கி காலியான டூத் பேஸ்ட்டுல ஊத்தி வச்சுட்டேன் அதையும் பிதுக்கி பல்லு வௌக்கி வாயக் கொப்புளிச்சு கலர் கலரா பப்புள்ஸ்...விடுறானுக....!

சின்ன டிவியிலதான்டா மாப்புள தெளிவா தெரியுது.

அப்புறம் பக்கத்து ரூமுக்காரனுக இருக்காங்களே....! அவங்க அதுக்கு மேல குளிப்பானுக அப்படியே பேசிட்டே வந்து பாராசூட் தேங்கெண்ணைய கை நெறைய ஊத்தி வௌக்கெண்ணை கூட பாக்காத தலை, உடம்பு எல்லாம் பூசிட்டு “தேங்காண்ணை தேச்சாத்தா நல்லா இருக்குலே அப்படிம்பாங்க...” “நன்னாரிப் பயலே காசு குடுத்து வாங்கி தேய்க்கணும்டா...!” அப்படிம்பேன் “விடுலே மக்கா...! சவம் இதுக்கு கணக்கு பாக்க.....”அப்படிம்பாங்க. டூத்ப் பேஸ்ட் மாதிரியே தேங்காண்ணையில பினாயில கலந்து வச்சுட்டேன் அதையும் தேய்ச்சுட்டு இன்னிக்கு நல்லா மணக்குதுங்கறானுக........வெறுத்துப் போயிட்டேன்.

இந்த சட்டை, பேண்ட் இருக்கே....அதுக்கு வாயிருந்தா கதறி அழும். காலையில நான் முழிக்கும் போதே நல்லா குளிச்சிட்டு அயரன் பண்ணி வச்ச சட்டைய போட்டுக்கிட்டு “எலே...எப்பர்ரா இருக்கு எனக்கு அப்படிம்பாங்க....” என்னடா மதுரக்கார இன்னிக்கு  கலக்குறானேன்னு பாத்தா பயபுள்ள நம்ம சட்டைய போட்டுக்கிட்டு இருப்பான் கரைட்டா நம்மை விட அடுத்தவனுக்கு செட்டாகற மாதிரியே சட்டை தெக்குற இந்த டெய்லர ஒதைக்கணும்ன்னு தேவையில்லாம நெனைப்பேன். சட்டயப் போட்டாக் கூட பரவாயில்ல அதுல பீடி குடிச்சு ஓட்ட பண்ணி வச்சிருவானுக...இல்ல சரக்கடிக்கப் போயி தக்காளி சாஸூ சிக்கன் பிஸூன்னு கறையாக்கிருவானுக கேட்டாக்கா “மாப்பு கர நல்லது அப்படிம்பானுக” அறை கூட நல்லதுதான்னு செவுட்டுல ஒண்ணு அறையலாம் போல இருக்கும்.
ஏண்டா சோப்பை பிளேடு மாதிரி ஆக்கி வச்சிருக்கிங்க.....நான் எங்க குளிக்கறது

ஊருக்குப் போயிட்டு வரும்போது எங்கம்மத்தா போட்டுர்ற நார்த்தங்கா ஊறுகா, அரிசி முறுக்க ஒரு வாரத்துல சரக்கடிக்க சைட் டிஸ்சா பயன்படுத்தி முடிச்சுருவானுக அதுவும் மப்புல ஊறுகாய வழிச்சு..வழிச்சு நக்கறதப் பாத்தா எனக்கு கடுப்பாயிரும்.

இதெல்லாம் விடுங்க புது ஜட்டியப் பாத்தா பொறையக் கண்ட நாய் மாதிரி கவ்விருவானுக....சில சமயம் நாம போட்டு கழட்டிய ஜட்டியக் கூடத் தெரியாம போடுற மாதிரி போட்டுக்குவாங்க அதுக்காக ஜட்டியில நம்ம பேரையாங்க அடிக்க முடியும்...?

அவனுக வாங்கற வண்ணத்திரை மாதிரி டைம்பாஸ் புத்தகங்களை பத்திரமா வச்சுக்குவானுக நாம வாங்குற இலக்கிய புத்தகங்களை படிக்கறேங்கற பேர்ல எடுத்துட்டுப் போயி பிலிம் காட்டுவானுக கொஞ்சம் படிச்சு பாப்பாங்க புரியலைன்னா கடுப்பாயி டீகடையில எடைக்குப் போட்டுட்டு போண்டா வாங்கி தின்னுடுவானுக.... கரைக்ட்டா நாம கடைக்குப் போயி போண்டா வாங்கும் போது சாருவோ, ஜெயமோகனோ நான் திங்கற போண்டா பேப்பர்ல எண்ணைப் பிசுக்கோட பரிதாபமா சிரிச்சிட்டு இருப்பாங்க....! 

“ஏம்ப்பா ஒரு பெட்டி போட்டு பூச்சி வச்சிருக்கலாமில்ல அப்படின்னு நீங்க கேட்குறீங்க....!”

உக்கும்...அந்தக் கதைய சொல்றன் கேளுங்க....

அதையும் செஞ்சு பாத்தனே! ஒரு பெட்டி போட்டு பூட்டி வச்சேனே! அதையும் கள்ளச்சாவி.....கள்ளச்சாவி எங்க பின்னூசி, ஆணி வச்சு அழகா திறந்துடுவானுக கடைசிக்கு எதுவும் கிடைக்கலைன்னா பல்லாலியே கடிச்சு துப்பிருவானுக கிரிமினல் பசங்க.....சார் இவனுக...!

கருமம் புடிச்சவனே ஜட்டிய தொவைச்சுத் தொலை....
நல்லா தூங்கிட்டு இருப்பேன் கனவுல நமீதா ஸ்முவிங் டிரஸ்ல (சில சமயம் டிரஸ் இல்லாம....துண்ட மட்டும் கட்டிக்கிட்டு) வந்து  வந்து உதட்டைக் குவிச்சு என்ற உதட்டை லிப்லாக் பண்ண வருவா சரியா அவ ஒதட்டுக்கும் எம்பட ஒதட்டுக்கும் .5MM இருக்கும் போது படுபாவி பசங்க சரியா மூஞ்சியில தண்ணியத் தெளிச்சு எந்திர்ரா அப்படின்னு எழுப்பி விடுவாணுக “மொதோ ராத்திரியன்னிக்கு பக்கவாதம் வரணுமடா ஒங்களுக்கு”ன்னு சாபம் உட்டுட்டே எந்திரிப்பேன்! ஆனா சரக்கு, சைட் டிஸ்ஸூ புரோட்டா, சிக்கன்னு வாங்கிட்டு வந்து சாப்பிர்ரா...சாப்பிர்ரான்னு பாசத்தை பொழிவானுக போதையில....சாபத்தை வாபஸ் வாங்கிட்டு சாப்புடுவேன் ஆனா ஒண்ணுங்க நம்மள இப்படியெல்லாம் இம்சை பண்ணினாலும் இந்த பேச்சிலர் பசங்க நமக்கு காச்சல் தலவலின்னா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறதைலியும் செரி...! எதாவது பிரச்சனைன்னா லுங்கிய தூக்கிக்கட்டிட்டு சவுண்டு குடுக்கறதிலியும் செரி இவங்கள மிஞ்ச ஆளே கெடையாது பிரச்சனை பெரிய எடம்ன்னா எஸ்கேப்பாயிருவானுக அத விடுங்க ஆனா பாசக்காரப் பசங்கய்யா.....பாசக்காரப் பசங்க.....சாவுற வரைக்கும் மறக்க முடியாத ஒரு லைப்பு பேச்சிலர் லைப்புதானுங்க என்னங்கண்ணா நாஞ்சொல்றது...!

Read more...

கஞ்சா-சில குறிப்புகள்!

>> Tuesday, July 30, 2013

ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' இசை கலைஞரான ''பாப்மார்லி'' தனது இசை எழுச்சிக்கு "கஞ்சா" பெரிதும் உதவுவதாக நம்பினார். போதையின் உச்சத்தில் நரம்புகளை மீட்டும் பல பாடல்களைப் பாடி ஆண் பெண் யுவதிகளை பேயாட்டம் ஆட வைத்த மாபெரும் கலைஞன் 38 வயதில் மரணமடைந்தற்கு கஞ்சா ஒரு காரணமாக ஆயிற்று. 

பாப்மார்லி


இப்படிப்பட்ட கஞ்சாவைப் பற்றி எழுதுவதற்கு அதுவும் வலைத்தளத்தில் இதுவரை யாரும் எழுதியதில்லை. கஞ்சாவைப் பற்றிய செய்தியில் ஒன்று சங்க இலக்கியப் பாடல்களில் பண்டைய தமிழச்சிகள் மணம்மிகுந்த கஞ்சா செடியின் பூவைக் கூந்தலில் சூடிக் கொண்டதாக ஒரு தகவலும் உண்டு! அதற்கான தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை. குடி, சிகரட் போன்றவற்றை பற்றி எவ்வித கூச்சமும் இன்றி எழுதுகின்ற யாரும் அகோரிகளால் சிவபாணம் என்று அழைக்கும் கஞ்சாவைப் பற்றி எழுதியதில்லை. நான் இந்தக் கட்டுரை எழுதவேண்டும் என்று முடிவெடுத்த பிறகு ஒரு வலைதள நண்பரிடம் இதைப் பற்றி பகிர்ந்த போது தானும் கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை புகைத்துப் பார்த்த அனுபவத்தைக் கூறினார். அது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் போன்றே இருந்தது.

இதை அதிகம் குடிப்பவர்களுக்கு கல்லீரல், கணையத்தில் நீர் கோர்த்துக் கொள்ளும், நோய் முற்றிய நிலையில் மரணம்தான் விடுதலை. சிலருக்கு மூளை பாதிப்படைந்து மனநிலை பிறழ்வடைந்து சட்டையை கிழித்துக் கொண்டு தானாக பேசிக் கொண்டு திரிவார்கள். ஆனாலும் இது ஒரு ராஜபோதை என்பதில் போதைப் பிரியர்களின் கூற்று.நான் திருப்பூர் வந்த பொழுது “கஜலக்ஷ்மி” தியேட்டர் ஒட்டிய பகுதி முற்காடாக இருந்தது. பொரும்பாலான சமூக விரேதிகளின் கூடாரமாகவும், “அரவாணி”கள் “பாலானத் தொழில்” மேற்கொள்ளும் இடமாகவும் இருந்தது. அங்கே தாரளமாக “கஞ்சா” விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. இன்று அந்த இடத்தை சுத்தம் செய்து சாலையும் போடப்பட்டு விட்டது.

நான் தங்கியிருந்த கட்டிடத்தின் வாட்ச்மேன் ஒரு “கஞ்சாக்குடிக்கி”. உசிலம்பட்டியைச் சேர்ந்தவன் வயது ஐம்பது இருக்கும். இரவு முழுவதும் கஞ்சா புகைத்துக் கொண்டேயிருப்பான், நான் தூக்கம் வராத இரவுகளில் அவனுடன் எதாவது பேசிக்கொண்டிருப்பேன். எங்க ஊர்ல மலைப்பகுதியில் “கடம்ப“ இன பழங்குடி மக்கள் வாழுகின்றார்கள். இவர்கள் நாட்டுப்பகுதிக்கு மூங்கில், தானியங்களை விற்பதற்காக கொண்டு வருவார்கள், அப்படி குழுவாக வருபவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து ராகிக் களி கிண்டி அதற்கு தொட்டுக்க காரமாக ஒரு தொக்கு செய்வார்கள். பச்சை மிளகாய், புளி, உப்பு போட்டு அரைகுறையாக நசுக்கி செமக் காரமாக இருக்கும் நன்றாக உண்டு விட்டு, எருக்கலையில் கூம்பு மாதிரி சுருட்டி, அதில் கஞ்சா நிரப்பி, வரிசையாக கையை மடித்து; விரல்களில் சொருகி; ஆழமாக இழுப்பார்கள்..... அந்த இடமே கஞ்சாப்புகையால் நிரம்பி சுவாசிக்கும் நமக்கும் போதையேற்றும். நமது நாட்டு ஆட்கள் கஞ்சா அடிமையாக மாறிய பிறகு பைத்தியமாக திரிந்து சீக்கிரம் செத்துப் போவார்கள், ஆனால் அவர்களை அது எந்த விதப் பாதிப்பும் ஏற்படுத்தாது! 102 வயது வரை உறுதியாக இருப்பார்கள். எங்க ஊர் ஆட்களில் ஏராளமான நபர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மரணத்தைத் தழுவியதால் இதன் மேல் எனக்கு ஒரு பிரியமோ, ஆசையோ எப்பொழுதும் கிடையாது! ஆனாலும் அன்று ஏனோ குடித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் உண்டானது.
 
கஞ்சா பயிர்

நான் அவனிடம் ஒரு சிகரட்டைக் கொடுத்து கஞ்சா போட்டு தரச்சொன்னேன். முதலில் மறுத்தவன் என் வற்புறுத்தலால் போட்டுக் கொடுத்தான், கொடுத்த போதேச் சொன்னான் “சாமீ இது மோசமான கழுதை! எதை நினைக்கறமோ அதுவே திரும்ப…திரும்ப போதை தெளியும் வரை நெனைப்புல வந்துட்டே இருக்கும் அதனால மனச சுத்தமா வச்சிட்டு குடிங்க” என்றான்.

முழு சிகரட்டையும் இழுத்து முடித்தவுடன்... மெல்ல இரத்தத்தில் கஞ்சா ஊடுருவ ஆரம்பித்தது... கிர்ர்ர்ர்ரென்று மூளையை கிறுகிறுக்க வைத்தது.... பாரதிராஜா பட வெள்ளைத் தேவதைகள் பறக்க ஆரம்பித்தார்கள்... சிரிப்பு…சிரிப்பு….நிறுத்தவே முடியாத ஒரு தொடர்ச் சிரிப்பு... காரணமேயில்லாத சிரிப்பு.... மேகமாக மாறிப் பறக்க ஆரம்பித்தேன். எந்த வாகனமும் இல்லாமல் தேசாந்திரியாக உலகை வலம் வந்தேன், பசி……பயங்கரப் பசி வாழ்நாளில் இப்படியொரு பசி நான் அனுபவத்ததேயில்லை....! நாக்கு மரத்துப் போன மாதிரியிருக்கின்றது. வழக்கமாக சாப்பிடும் அளவை விட ஆறு மடங்கு உண்டேன். தண்ணீர் தாகம் இந்த பிரபஞ்சத்தின் முழுத் தண்ணீரையும் உறிஞ்சிக் குடித்து விடுவேனோ...! என்கின்ற அச்சமேற்ப்பட்டது. மனம் லேசாக துடைத்து வைத்த மாதிரி இருந்தது தத்துவங்கள் தானாகவே என் வாயிலிருந்து பொழிந்தன சிரிப்பு…சிரிப்பு…என் ஆயுளின் முழுச் சிரிப்பையும் சிரிக்க முற்பட்டேன்... விடியும் வரை சுற்றியலைந்து விட்டு அதிகாலையில் படுத்தவன் அடுத்த நாள்தான் விழித்தேன்.

அந்த வாரம் முழுவதும் ஒரு மயக்கநிலையில் இருந்தேன். வாழ்நாளில் இனி இதைத் தொடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இதுவரை தொடவில்லை. காசியில் சுற்றியலையும் அகோரிகளும், எங்க ஊர் கடம்ப இன மக்களையும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத கஞ்சா நம்மைப் போன்றவர்களை ஏன் இப்படிப் செய்கின்றது ராஜபோதை என்பது சிலருக்கு மட்டும்தானா…? சிவபாணம் என்பதால் சிவனின் அனுக்கிரகம் இருப்பவர்களுக்கு மட்டும்தானா…? என்கின்ற கேள்விகள் இந்த இப்புவியில் அறியப்படாத பல ரகசியங்களில் ஒன்றாகவே இருக்கின்றது.

படங்கள் : கூகுள் தேடல்


Read more...

எட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......!

>> Thursday, July 11, 2013


சில நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் எப்பொழுதும் இருக்கின்றது, “சரோஜா” வேறு தீப்பிடித்த காயங்களோடு கருகிய வாசனையுடன் வருகின்றாள் இது எதாவது பில்லி சூனியமா...? இவளுகளை இந்தாளு எப்படிய்யா சாமாளிக்குறாரு...என்கின்ற கேள்வி சில நாட்களாக என் மனதை குடைந்து கொண்டேயிருக்கின்றது.

பாலியல் கதைகளைப் பொறுத்தவரை விந்து வருவதற்கு முன்னிருந்தே ஒரு ஆணிற்கு அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பெரிசுகள் சிலேடையாகவும், அண்ணன்மார்கள் கிணறு, குட்டையில் உக்கார்ந்து உண்மையும், புனைவும் கலந்து கூறிவந்த கதைகள், ஒரு கிளர்ச்சியும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. வாமு கோமுவின் பல கதைகள் திருப்பூரின் மாவட்டத்தை சார்ந்த பாலியல் பிரச்சனைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன என்று நான் நினைக்கின்றேன். அதில் பல பாத்திரங்கள் நாம் கேள்விப்பட்டவைகளாகவும், பழகியவைகளாகவும் இருப்பதும், மிக நுட்பமான பார்வையில் படைப்புகளை படைக்கும் பாங்கும், கொங்கு வட்டார வழக்கை எந்த சமயத்திலும் அனாயசமாக எழுத்துகளில் புகுத்தும் நுட்பம் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றேன். அந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இரவுவானம் சுரேஷ்க்கு நீண்டநாட்களாக இருக்கின்றது. 

அதனால் கிளம்பிப் போனோம் வாய்ப்பாடி கிராமத்தை நோக்கி விஜயமங்கலம் இரயில் நிலையம் ஒட்டியபடியே வீடு,நாவல்களில் வர்ணிப்பதைப் போன்ற ஒரு அழகான கிராமம்! கிராமத்து மனிதராக எங்களை அன்போட வரவேற்றார், பல விசயங்களைப் பேசினார் ஒரு மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை, நாங்கள் ஹென்றி ஷாரியர் எழுதிய 'பட்டாம்பூச்சி' பிரஞ்சு நாவல் தமிழ் மொழி பெயர்ப்பு ரா.கி.ரங்கராஜன் நர்மதா பதிப்பு வெளியிட்டிருந்தது அதை வாங்கிகொண்டு சென்றோம் இது குமுதத்தில் தொடராக வந்தது.அவருடைய “கள்ளி” கிடைக்கவில்லை அதனால் “மங்கலத்து தேவதைகள்” வாங்கினேன்! ஏற்கனவே வாங்கி நான் படிக்காமலே ஒரு நண்பன் வாங்கிச்சென்றது திரும்பி வரவில்லை அதனால் மீண்டும் வாங்கினேன். அன்போட என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் வார்த்தைகளில் மட்டுமல்ல.... கொங்கு மண்ணுக்குறிய அன்பு நிறைய அந்த மனிதரிடம் இருந்தது, பழகுவதற்கு இனிமையான நல்ல எளிமையான மனிதர்.

வாமு கோமுவின் வலைத்தளம் : http://vaamukomu.blogspot.in/

வாமு கோமுவின் முகநூல் : https://www.facebook.com/vaamukomu?fref=ts

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP