கஞ்சா-சில குறிப்புகள்!
>> Tuesday, July 30, 2013
கஞ்சா
என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும்
பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' இசை கலைஞரான ''பாப்மார்லி'' தனது இசை எழுச்சிக்கு "கஞ்சா" பெரிதும் உதவுவதாக நம்பினார். போதையின் உச்சத்தில் நரம்புகளை மீட்டும் பல பாடல்களைப் பாடி ஆண் பெண் யுவதிகளை பேயாட்டம் ஆட வைத்த மாபெரும் கலைஞன் 38 வயதில்
மரணமடைந்தற்கு கஞ்சா ஒரு காரணமாக ஆயிற்று.
![]() |
பாப்மார்லி |
இப்படிப்பட்ட கஞ்சாவைப் பற்றி எழுதுவதற்கு அதுவும் வலைத்தளத்தில் இதுவரை
யாரும் எழுதியதில்லை. கஞ்சாவைப் பற்றிய செய்தியில் ஒன்று சங்க இலக்கியப் பாடல்களில் பண்டைய தமிழச்சிகள் மணம்மிகுந்த கஞ்சா செடியின் பூவைக் கூந்தலில் சூடிக் கொண்டதாக ஒரு தகவலும் உண்டு! அதற்கான தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை. குடி, சிகரட் போன்றவற்றை பற்றி எவ்வித கூச்சமும் இன்றி எழுதுகின்ற
யாரும் அகோரிகளால் சிவபாணம் என்று அழைக்கும் கஞ்சாவைப் பற்றி எழுதியதில்லை. நான்
இந்தக் கட்டுரை எழுதவேண்டும் என்று முடிவெடுத்த பிறகு ஒரு வலைதள நண்பரிடம் இதைப்
பற்றி பகிர்ந்த போது தானும் கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை புகைத்துப்
பார்த்த அனுபவத்தைக் கூறினார். அது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் போன்றே இருந்தது.
இதை அதிகம் குடிப்பவர்களுக்கு கல்லீரல், கணையத்தில் நீர் கோர்த்துக் கொள்ளும், நோய் முற்றிய நிலையில் மரணம்தான் விடுதலை. சிலருக்கு மூளை பாதிப்படைந்து மனநிலை
பிறழ்வடைந்து சட்டையை கிழித்துக் கொண்டு தானாக பேசிக் கொண்டு திரிவார்கள். ஆனாலும்
இது ஒரு ராஜபோதை என்பதில் போதைப் பிரியர்களின் கூற்று.
நான் திருப்பூர் வந்த பொழுது “கஜலக்ஷ்மி” தியேட்டர் ஒட்டிய பகுதி முற்காடாக இருந்தது. பொரும்பாலான சமூக விரேதிகளின் கூடாரமாகவும், “அரவாணி”கள் “பாலானத் தொழில்” மேற்கொள்ளும் இடமாகவும் இருந்தது. அங்கே தாரளமாக “கஞ்சா” விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. இன்று அந்த இடத்தை சுத்தம் செய்து சாலையும் போடப்பட்டு
விட்டது.
நான் தங்கியிருந்த
கட்டிடத்தின் வாட்ச்மேன் ஒரு “கஞ்சாக்குடிக்கி”. உசிலம்பட்டியைச் சேர்ந்தவன் வயது ஐம்பது இருக்கும். இரவு முழுவதும் கஞ்சா புகைத்துக்
கொண்டேயிருப்பான், நான் தூக்கம் வராத இரவுகளில் அவனுடன் எதாவது
பேசிக்கொண்டிருப்பேன். எங்க ஊர்ல மலைப்பகுதியில் “கடம்ப“ இன பழங்குடி மக்கள்
வாழுகின்றார்கள். இவர்கள் நாட்டுப்பகுதிக்கு மூங்கில், தானியங்களை விற்பதற்காக
கொண்டு வருவார்கள், அப்படி குழுவாக வருபவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து ராகிக் களி
கிண்டி அதற்கு தொட்டுக்க காரமாக ஒரு தொக்கு செய்வார்கள். பச்சை மிளகாய், புளி,
உப்பு போட்டு அரைகுறையாக நசுக்கி செமக் காரமாக இருக்கும் நன்றாக உண்டு விட்டு, எருக்கலையில்
கூம்பு மாதிரி சுருட்டி, அதில் கஞ்சா நிரப்பி, வரிசையாக கையை மடித்து; விரல்களில்
சொருகி; ஆழமாக இழுப்பார்கள்..... அந்த இடமே கஞ்சாப்புகையால் நிரம்பி சுவாசிக்கும்
நமக்கும் போதையேற்றும். நமது நாட்டு ஆட்கள் கஞ்சா அடிமையாக மாறிய பிறகு பைத்தியமாக
திரிந்து சீக்கிரம் செத்துப் போவார்கள், ஆனால் அவர்களை அது எந்த விதப் பாதிப்பும்
ஏற்படுத்தாது! 102 வயது வரை உறுதியாக இருப்பார்கள். எங்க ஊர் ஆட்களில் ஏராளமான
நபர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மரணத்தைத் தழுவியதால் இதன் மேல் எனக்கு ஒரு
பிரியமோ, ஆசையோ எப்பொழுதும் கிடையாது! ஆனாலும் அன்று ஏனோ குடித்துப் பார்க்க
வேண்டும் என்கின்ற ஆவல் உண்டானது.
நான் அவனிடம் ஒரு சிகரட்டைக்
கொடுத்து கஞ்சா போட்டு தரச்சொன்னேன். முதலில் மறுத்தவன் என் வற்புறுத்தலால்
போட்டுக் கொடுத்தான், கொடுத்த போதேச் சொன்னான் “சாமீ இது மோசமான கழுதை! எதை
நினைக்கறமோ அதுவே திரும்ப…திரும்ப போதை தெளியும் வரை நெனைப்புல வந்துட்டே இருக்கும்
அதனால மனச சுத்தமா வச்சிட்டு குடிங்க” என்றான்.
முழு சிகரட்டையும் இழுத்து முடித்தவுடன்... மெல்ல இரத்தத்தில் கஞ்சா ஊடுருவ ஆரம்பித்தது... கிர்ர்ர்ர்ரென்று மூளையை கிறுகிறுக்க வைத்தது.... பாரதிராஜா பட வெள்ளைத் தேவதைகள் பறக்க ஆரம்பித்தார்கள்... சிரிப்பு…சிரிப்பு….நிறுத்தவே முடியாத ஒரு தொடர்ச் சிரிப்பு... காரணமேயில்லாத சிரிப்பு.... மேகமாக மாறிப் பறக்க ஆரம்பித்தேன். எந்த
வாகனமும் இல்லாமல் தேசாந்திரியாக உலகை வலம் வந்தேன், பசி……பயங்கரப் பசி வாழ்நாளில்
இப்படியொரு பசி நான் அனுபவத்ததேயில்லை....! நாக்கு மரத்துப் போன மாதிரியிருக்கின்றது. வழக்கமாக சாப்பிடும் அளவை விட ஆறு மடங்கு உண்டேன். தண்ணீர் தாகம் இந்த
பிரபஞ்சத்தின் முழுத் தண்ணீரையும் உறிஞ்சிக் குடித்து விடுவேனோ...! என்கின்ற
அச்சமேற்ப்பட்டது. மனம் லேசாக துடைத்து வைத்த மாதிரி இருந்தது தத்துவங்கள் தானாகவே
என் வாயிலிருந்து பொழிந்தன சிரிப்பு…சிரிப்பு…என் ஆயுளின் முழுச் சிரிப்பையும்
சிரிக்க முற்பட்டேன்... விடியும் வரை சுற்றியலைந்து விட்டு அதிகாலையில் படுத்தவன்
அடுத்த நாள்தான் விழித்தேன்.
அந்த வாரம் முழுவதும் ஒரு
மயக்கநிலையில் இருந்தேன். வாழ்நாளில் இனி இதைத் தொடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இதுவரை தொடவில்லை. காசியில் சுற்றியலையும் அகோரிகளும், எங்க ஊர் கடம்ப இன
மக்களையும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத கஞ்சா நம்மைப் போன்றவர்களை ஏன்
இப்படிப் செய்கின்றது ராஜபோதை என்பது சிலருக்கு மட்டும்தானா…? சிவபாணம் என்பதால்
சிவனின் அனுக்கிரகம் இருப்பவர்களுக்கு மட்டும்தானா…? என்கின்ற கேள்விகள் இந்த
இப்புவியில் அறியப்படாத பல ரகசியங்களில் ஒன்றாகவே இருக்கின்றது.
படங்கள் : கூகுள் தேடல்