கோமதி என்கின்ற கிணற்றுக்காரி!

>> Saturday, July 11, 2015

  வானம் வெளுத்திருந்தது அதன் நீலநிறம் கிணற்று நீரில் பிம்பம் மாறி காட்சிப்பிழையாக கறுப்பாக இருந்தது. இந்த ஊரின் கிணற்று நீர்கள் கொழகொழப்பான காப்பி தண்ணீர் மாதிரியிருக்கின்றது. கிணற்றைச் சுற்றி மனித கூட்டம் சுற்றி நின்று கிணற்றில் குதிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த கோபாலின் மீது மையமாக விழிகளை வைத்திருந்தது அவனை ஒரு மாதிரியாக்கியது!

  திருப்பூரின் சாயக்கழிவு பூமியில் இறங்கி இந்த ஊரின் கிணற்று நீரை சாயமேற்றியிருந்தது. இதைப் பற்றி இங்கு யாருக்கும் கவலையில்லைகாரணம் சாயத் தொழில் செய்பவர்கள் மாமன், மச்சானாக இருந்தார்கள், ஆனால் வெளியூர் நபர்கள் வேற்று சாதியினர் என்றால் ஒரு பெட்டிஷனை எழுதிப் போட்டு தன் சமூக அக்கரையைக் காட்டிக் கொள்வார்கள்.

  கிணற்று மேட்டின் மீது நின்று தண்ணீரையே வெறித்துக் பார்த்துக் கொண்டிருந்த கோபாலின் மனதில் பல எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்த்து, கோமதியின் தலை எங்காவது தென்படுகின்றதா எனத் தேடினான் கிணற்றடியில் இருக்கும் கோமதி வீடு பூட்டிக் கிடந்தது. ஏன் ஒருவரும் இல்லை மணி கூட தெரியாதென்கின்றான்!

  கோபால் நல்ல நீச்சல்க்காரன் பாறைக்குழி, பாங்கிணறு என அஞ்சாமல் குதிப்பவன், இவனே இந்த கிணற்றில் குதிக்க சற்று அறுவறுப்படைந்தான். இந்த உப்பு நீர் தலை, உடல் முழுவதும் பிசுபிசுப்பாக ஒட்டிக் கொண்டு நாள் முழுவதும் உடல்வலியும், மந்தமானதாக மாற்றிவிடும், தண்ணீர் தேசத்தில் இருந்து கல்கண்டு மாதிரி நீரில் குளித்தவன், இந்த நீரில் குதிக்க வேண்டா வெறுப்பாக நின்றாலும் மறுக்கவில்லை. காரணம் கோமதி நீண்ட நாட்களாக இந்த கிணற்றுக் சொந்தக்காரியும்இந்த கிணறு இருக்கும் நாலு ஏக்கர் மேட்டாங்காட்டுக்குச் சொந்தக்காரியுமாக கறுப்பழகி கோமதி அவன் மனதை ஆக்கிரமித்துள்ளாள்! அவளுக்காகவே வந்துள்ளான்!

  எதாவது வேலையாக வரும் போது ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி!

   என்றாவது தன் காதலைச் சொல்லி விட வேண்டுமென அவன் மனதை அரித்துக் கொண்டேயிருக்கின்றது.

 கண்ணை மூடினான் கோமதியின் முகம் மனதில் வந்து போனது, உடல் ஒரு முறை சிலிர்த்த்து அவளுடைய பளபளப்பான மேனியைத் தழுவி அவள் உதட்டைக் கடிக்க வேண்டுமென உடல் தினவெடுத்து மயிர்க்கால்கள் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

 அவளுடைய கட்டுடல் அவனை இரவுகளில் தூங்க விடாமல் தொந்தரவு செய்கின்றது. நினைவே இவ்வளவு சுகமெனில் அவளோடு வாழ்தல் என்பது இப்பிறவியில் பிறந்ததற்கான ஒரு அர்த்தமாகும்!

 “என்னப்பா குதிக்கிறியா?கிக்கத்தில் தொப்பியை இடுக்கிய படி கிணற்றை நோட்டமிட்ட காவலர் கேட்டார்!

 தலையை மட்டும் ஆட்டிய கோபால் லுங்கியைக் கழற்றி எரிந்து உள்ளாடையோடு நின்றான், ஓரமாக நின்று குதிக்கும் பாவனையில் ஒருமுறை நோட்டம் பார்த்தான், சுற்றிலும் இருந்த கூட்டம் இவன் குதிப்பானா மாட்டானா என விழிகளில் கேள்வியுடன் அவனைத் துளைத்தது.

 மணி அருகில் வந்து கேட்டான் என்னணே முடியுமா? தண்ணி கலங்கலா இருக்கே என்றான்..!

 “இங்க இருந்து குதிச்சா ஆழம் போவ முடியாது இந்த பெட்டு மேல ஏறிக்கலாம் என்றபடி பெட்டின் மீது ஏறி நின்றான்.

 கால்களை ஒன்று சேர்ந்து ஒரு உந்து உந்தி கிணற்றில் குதித்தான் காற்றில் ஆகாயத்தில் பறந்து புவிஈர்ப்பு விசை அவனை நீரை நோக்கி இழுத்தது, விரைகள் அடிபடாமல் இருக்க கால்களை இறுக்கிக் கொண்டான் கைகளை உடலோடு பிணைத்துக் கொண்டான், வீசிய ஈட்டி போல கிணற்றில் சொருகினான்.

 தண்ணீர் மிக குளுமையாக இருந்தது. அதன் அடர்ந்த காவி நிறத்தை ஊடுருவிய சூரிய ஒளி தண்ணீரை சற்று மஞ்சளாக்கியது தண்ணீரில் விழுந்தவுடன் கைகால்களை விடுவித்தவன்.கைகளை வேகமாக மேல் நோக்கி தள்ளி தலைகீழாக மாறி ஆழத்தில் பாய்ந்தான் ஒரு சில நிமிடங்களில் தரையைத் தொட்டவன் துழாவினான்.

கோமதியின் முகம் வந்து போனது வரிவரியாக அவளின் மினுமினுக்கும் உதடு ஈரத்துடன் வாய் குவித்து அவன் இதழில் பதித்து உயிரை உறிஞ்சியது! கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தான்! மூச்சு முட்டியது

 கிணற்றின் ஓரமாக நீந்தி மோட்டார் பைப்பைப் பற்றி சரேலெனே மேலே வந்தான் நீருக்குள் மயான அமைதி நிலவியது வெளிவந்தபின் கூச்சல் குழப்பம் மனித குரல் கேட்டது. இரைச்சலாக இருந்த்து!

மேலே பார்த்தான் மணி என்ன ஆச்சு..? என்று சைகை காட்டினான்! கையைத் திருப்பி கிடைக்கவில்லை என்று குறிப்பால் காட்டினான்! சில நிமிட ஆசுவாசத்திற்குப் பின் நீண்ட மூச்சிழுவைக்குப் பின் அடி பாய்ந்தான்!

 கோமதியின் கறுப்பான உடல் நிர்வாணமாக நீந்தி அவனை ஆரத்தழுவியதுஅவளுடைய நீண்ட கூந்தல் நீரில் பிரிந்து ஆட்டோபக்ஸ் போன்று கிணறு முழுவதும் விரிந்து கிடந்தது. சதைப்பற்றுள்ள மார்பு அவன் கண்ணத்தை உரசியது நீரில் அவனுடல் சிலிர்த்ததுஅதனால் அவனைச் சுற்றியுன்ன நீர் சிலிர்த்து ஒரு அலையை உண்டாக்கியது! மென்மையான அவளுடைய வயிறு பிறப்பு ஸ்தானம் வளவளப்பான தொடை என நீரில் மங்கலாக தெரிய அவனை இறுக அணைத்த..

தலையை உதறினான்கோபால்! கோமதி கலைந்து போனாள்!

அடியில் மண்ணில் கையை விட்டுத் துழாவினான் பெரிய மீன்கள் சேற்றில் இருந்து புரண்டு அவனை உரசிய படி வேறிடம் பாய்ந்தது. கிணற்றில் பரப்பு முழுவதும் நீந்தி துளாவினான். படிக்கு எதிர்ப்புறமான பொந்திற்கு அருகில் அது கிடைத்தது!

 முகம் மீனால் அரிக்கப்பட்டு பல்லிளித்தபடி கிடந்தது அது அணிந்திருந்த சிவப்புச் சட்டை யார்.யார்என மண்டை குடைய கொத்தாக சட்டையைப் பிடித்து அதை மேலே கொண்டு வந்தான் நீர் மட்டத்தின் மேலே கொண்டு வந்ததைக் கண்ட பின் சில இளைஞர்கள் நீரில் குதித்து அதை மேலே தூக்கினார்கள். கோபால் இப்பொழுது முகத்தைப் பார்த்தான்.

 மாரி!

 கோமதி வீட்டு பண்ணையத்தாள்! அவன் சாதி சனம் அழுது அரற்றியது காவலர்கள் விரட்டினார்கள்வண்டியில் வைத்து பிணம் அரசு மருத்துவமணை போக கோபால் லுங்கியை எடுத்து உடம்பை துடைத்து விட்டு கட்டிக் கொண்டான்! மணி பக்கத்தில் வந்து இடுப்பில் இருந்த பிராந்தி பாட்டிலைக் கொடுக்க ராவாக அப்படியே கமுத்திக் கொண்டான் குளிருக்கு சற்று இதமாக இருந்தது, பாட்டிலைத் தூக்கியெறிந்து விட்டு நடந்தான் மணி கூடவே நடந்தான் என்னடா மாரி விழுந்து கிடக்கான்? என்றான்!

 “தெரியலைண்ணே!

 ஏரித்தடத்தில் நடந்து வந்தவர்கள் கல்தூண் மேல் ஏறிக் அமர்ந்த கோபாலை வினோதமாகப் பார்த்தான் மணி!

 “ஏண்ணே! போலாம் வாண்ணே!“

 “இருடா போலாம்!“

 “என்னணே ஆச்சு?“

 “டேய்! மணி மாரிய தூக்கையில பாத்தேன்டா.. நெஞ்சுல கோமதின்னு  பச்ச குத்தியிருந்ச்சுடா!

 திக்கென்று நிமிர்ந்தான்! மணி!

 “நான் கல்ல எடுத்து தேய்ச்சு அழிச்சுட்டேன்!“


 அதன் பிறகு கோபாலின் நினைவுகளில் கோமதி வரவில்லை!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP