வாடை-சிறுகதை
>> Tuesday, October 7, 2014
இயக்குநர் நாகு
நீண்ட முடியுடன், அழுக்கடைந்த ஆடைகளுடன் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தவனை அந்த அலுவலகம் வரும் அனைவரும் ஒரு சந்தேகப் பார்வையை வீசிவிட்டு சென்றார்கள், அவனும் அதைப் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. அவனுடைய பார்வை முழுவதும் தன்னை அழைப்பார்கள் என்கின்ற நம்பிக்கையில் நின்று கொண்டிருந்தான். அவன் தோளில் நைந்து போன ஒரு துணிப் பை இருந்தது அதில் கத்தை கத்தையான காகிதங்கள் குப்பைபோல் இருந்ததை அந்த பை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அந்த சினிமா அலுவலகத்திற்கு பொருந்தாத தோற்றமுடையவனாக அவன் இருந்ததாகவே அனைவருக்கும் தோன்றியது. பளிங்கு போன்ற தரையில் அவன் அணிந்திருந்த இரப்பர் காலணியில் ஒரு பின்னூக்கு குத்தப் பட்டிருந்தது, அவனுடைய கால்சட்டையின் கீழ்பகுதி பிரிந்து நூல்களாக தொங்கியது, மண் தரையில் உராய்ந்து அழுக்கடைந்து இருந்தது அந்த தரையின் சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தன அவனுடைய கால்கள்.
பழனிவேல் மாணிக்கம்
செல்லுலாயிட் ஆர்ட் பிச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பழனிவேல் மாணிக்கம் பற்றி நீங்கள் சில சினிமா பத்திரிக்கையில் படித்திருக்கலாம். அவர் ஒரு சினிமா தீர்க்கதரிசி எனலாம். அவர் புறங்கணித்த கதைகள் ஓடியதாக சரித்திரம் கிடையாது, அனைவரும் நிராகரித்த கதையை அவர் தைரியமாக எடுப்பார் அது பிரமாதமாக ஓடும்.
வெகுசன திரைப்படங்களில் மாஸ் ஹீரோக்களை வைத்து எடுக்கபடும் குப்பைப் படங்கள் கூட சிலசமயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். அவ்வகையான படங்களை தயாரிப்பது என்பது பல தயாரிப்பாளர்களுக்கு ஆவல்! காரணம்விரைவில் கல்லா நிரம்பி வழியும், பெயரும் கிடைக்கும்.
பழனிவேல் மாணிக்கம் எடுத்த பத்துப் படங்களில் ஒன்று கூட கலைப்படமோ, உலகப்படமோ இல்லை. இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் ‘டெல்லி’ என்கின்ற படம் கூட பழனிவேல் மாணிக்கம் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான். மாஸ் ஹீரோ ‘குயில்’ நடித்தது, அவருடைய நிஜப் பெயர் வேறு இணையத்தில் இந்தப் பெயரை வைத்து கிண்டலடிப்பதால் அந்தப் பெயரே வைத்து நாம் அழைக்கலாம். அவர் கருப்பாக இருப்பதால் கூடஇருக்கலாம்… தமிழக ரசிகனுக்கு… மன்னிக்கவும் தமிழக மக்களுக்கே சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்கின்ற தியரியை மனதில் யாரோ எழுதி வைத்து சென்று விட்டார்கள் போல…சமீபத்தில் கூட அட்டுபையனான ஒரு இயக்குநர் அழகான பெண் நடிகர் (நன்றி பிச்சைக்காரன்) ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அவரை ஏதோ நாய்க்கு ஏதோ ஒரு பண்டம் கிடைத்தாக கிண்டலடித்திருந்தார்கள்.
இந்த ‘டெல்லி’ படத்தின் இயக்குநர் இரண்டு தெலுங்கு ஹிட் கொடுத்திருக்கின்றார். படமும் தெலுங்கு மாதிரிதான் இருக்கின்றது நாயக்கர் மஹால் தூணை தன்னுடைய கையால் அடித்து நொறுக்குகின்றார், அதற்கு திரையரங்குகளில் பலத்த கரகோஷம்! இந்த இரசிகர்கள் வரலாறு படித்திருப்பார்களா என ஐயமாக இருக்கின்றது.சுண்ணாம்பு, வெல்லப்பாகு காய்ச்சிய கலவையில் உருவான கட்டிடங்கள் நம்முடைய பாரம்பரிய கலைப் பொக்கிஷங்கள் நவீன பொக்லைன் இயந்திரங்கள் கூட பெயர்த்து எடுக்க முடியாத தூண்கள் அவை அதை மாஸ் ஹீரோ தன் கையால் உடைக்கின்றார் ஆள் பலம் பொருந்திய தோற்றமும் இல்லை, ஆப்பிரிக்க தேசத்தில் பட்டினி கிடக்கும் குலுவான் போல் இருக்கின்றான். அதையும் கைதட்டி இரசிக்கின்றார்கள்.
இயக்குநர் நாகு
பலரும் பழனிவேல் மாணிக்கத்தை சந்தித்த பிறகு தயங்கிய படி உதவியாளர் ஒரு கந்தலான மனிதன் வந்திருப்பதைச் சொல்ல…வரச் சொல்கின்றார். தயங்கிய படி உள்ளே நுழைந்த அவன் தன் பெயரை ‘நாகு’என்கின்றான். தன்னிடம் ஒரு கதை இருப்பதாக சொல்கின்றான்.
பழனிவேல் மாணிக்கம் அசுவராஸ்யமாக நாகுவை மேலும் கீழும் நோட்டமிட்ட படியே “ஒன் லைன் மட்டும் சொல்லு” என்கின்றார்.
நாகு விழிகள் விரிய கைகளை அசைத்து கதையைச் சொல்லி முடிக்க, பழனிவேல் மாணிக்கம் விழிகள் விரிய.. உக்காருப்பா விரிவா ஸ்கிரிப்ட்ட சொல்லு என்று ஆவலாகின்றார்.
நாகு சொல்லி முடித்த ஸ்கிரிட்டை கேட்டு முடிக்கும் போது பழனிவேல் மாணிக்கத்திற்கு வியர்த்து விட்டது அந்த குளிர் பதனம் செய்யப்பட்ட அறையிலும்!
சிறிது நேரம் மௌனம் நிலவியது
மேசையின் மீது இருந்த தண்ணீரைக் குடித்து முடித்த பழனிவேல் மாணிக்கம் “நீ எந்த இயக்குநர் கிட்ட உதவி இயக்குநராக இருந்தே?” என்கின்றார்.
“நான் யாரிடமும் இயக்குநராக இல்லை” என்கின்றான் நாகு.
ஒரு நிமிடம் யோசித்த பழனிவேல் மாணிக்கம்
“இந்த படத்தை நாம பண்ணுறோம்” என்றார்.
எங்கோ உடுக்கைச் சத்தம் கேட்டது டும்….டும்…..டும்….
யாரோ எவரோ..? வலைதளத்தில் இருந்து வாடை திரை விமர்சனம்
ஒரு அசாத்தியமான திரைப்படம் இது என்பதை முதல் காட்சியே சொல்கின்றது.
ஒரு பெண் தன் காதலனுடன் கிராமத்து குடிசை ஒன்றுக்கு வருகின்றாள். அங்கு ஒரு வயதான கிராம செவிலி இருக்கின்றாள் அவர்களின் சம்பாஷைனையில் அவள் கருவுற்றிருக்கின்றாள் எனத் தெரிகின்றது. அதை கலைக்க வந்திருக்கின்றார்கள் என்பதும் புரிகின்றது, செவிலியின் முகமும் அந்தப் பெண்ணின் முகமும் மட்டுமே தெரிகின்றது வசனங்கள் மூலமாகவே அவளுக்கு நடக்கும் கருகலைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கருகலைப்பு முடிந்தவுடன் அதிக இரத்த சேதம் மூலம் அந்தப் பெண் இறந்து போகின்றாள். அந்த செவிலி அவள் பிணத்தை மறைப்பதற்கு இன்னும் அதிகம் பணம் கேட்கின்றாள் அதைக் கொடுத்து விட்டு நடுங்கும் கால்களுடன் அந்தக் காதலன் போகின்றான். சதைப் பிண்டத்துடன் அந்தப் பெண்ணும் சேர்த்து புதைக்கப்படுகின்றாள். இதை இரசிகர்களான நம் கற்பனையில் திரைக் காட்சி போல் மனதினுள் ஓடுகின்றது…ஆனால் திரையில் வெறும் இருட்டு முகம் மட்டும் தெரிகின்றது அந்தப் பெண் வலியில் முகத்தைக் கோணுவதைப் பார்க்கும் போது நமக்கு கை கால்கள் எல்லாம் நடுங்குகின்றது, உண்மையில் எங்காவது நடந்த சம்பவங்களை கேமராவை ஒளித்து வைத்து எடுத்து விட்டார்களா..?
அதே போல் மலம் நிரம்பியிருக்கும் ஒரு தொட்டியை வெறும் முந்நூறு ரூபாய்க்காக சுத்தம் செய்ய வருகின்றார்கள் இருவர். அவர்களின் பேச்சின் மூலமே நாம் அந்த மல வாடையை அறிந்து கொள்கின்றோம், விஷவாயு தாக்கி இறந்து போகின்றார்கள். அவர்களின் இறப்பை ஒரு சில நிமிடம் நாமும் இறந்து காண்கின்றோம் இது என்ன மேஜிக்கா இது என்ன வகையான திரைப்படம்.
பிணவரையில் ஒரு பிணத்தின் வயிறு சரியாக தைக்காததால் கிழிந்து புழுக்கள் ஊர்ந்து வெளியே வருகின்றது. ஒன்று இரண்டாக வெளிவந்தது லட்சக்கணக்கில் வெளியே வந்து விழுகின்றது அதை சுடலை என்கின்ற பிணவரை தொழிலாளி தன் கையால் அள்ளி வெளியே போட்டு நெருப்பு வைக்கின்றான்.
ஒருவன் பேருந்து நிலையத்தின் கழிவரையில் சிறுநீர் கழிக்கின்றான், அந்த சுகாதரமற்ற சூழல் அவனுடைய ஆண்குறியில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. அவன் அதை போன வாரம் இருட்டில் உறவு கொண்ட பெயர் தெரியாத விலைமகளின் மூலம் வந்ததாக நினைக்கின்றான். யாரிடம் போவது எப்படி வைத்தியம் பார்ப்பது என்று தெரியாமல் பயந்து வாழ்கின்றான், தனக்கு எய்ட்ஸ் வந்து விட்டதாகவே கருதுகின்றான். கடைசியில் நோய் முற்றி மயக்கம் வந்து விழுந்து விடுகின்றான். சமூக சேவகர்களால் பயங்கர நாற்றமடைக்கும் அவனை கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றார்கள் பதினைந்து போத்தல் பினாயில் ஊற்றி அவனைக் கழுவி அவனுடைய சீழ் பிடித்த ஆண்குறியை அகற்றுகின்றார்கள்.
நரிக்குறவர்கள் கூட்டம் ஒன்று கவனிப்பாரற்று கிடக்கின்ற ஒரு சத்திரத்தில் தங்குகின்றது. காமஇச்சை தாளாமல் பிச்சைமுத்து என்கின்ற நரிகுறவர் தன் மனைவியின் போர்வைக்குள் தானும் புகுந்து கொண்டு முயங்குகின்றார், சரியாக இருவருக்கும் ஆர்கஸம் வரும் வேளையில்…எதாவது வாகனம் வருகின்றது. நிறுத்தி…நிறுத்தி ஒருவழியாக உறவை முடிக்கின்றார்கள் அதற்குள் விடிந்து விடுகின்றது.
இவையனைத்தும் ஒரு நாவலைப் படிப்பது போன்று உள்ளது. துளிகூட விரசமோ, அருவருப்போ இல்லை. இருட்டில் முகம் மட்டும் தெரிகின்றது நரிக்குறவர் ஜோடி உறவு கொள்ளும் காட்சியில் விரசத்தை விட ஒரு நாய்,பன்றி கூட தன் பாலியல் தேவைகளை எந்த வித பாசாங்கு இன்றி தீர்ததுக் கொள்ள முடிகின்றது ஆனால் மனிதன் மட்டும் எவ்வளவு பாடுபட வேண்டியதாக இருக்கின்றது. கழிவரையில் வந்த ஒவ்வாமையைக் கூட ஒருவனால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நம்நாடும், கல்வி முறையும் இருக்கின்றது, படம் முடிந்து வெளிவரும் ஒவ்வொரு முகமும் ஒரு தெளிவுடனும் பயத்துடன் வருகின்றது. இது ஆகச் சிறந்த ஒரு படம் வழக்கமான உலக சினிமா பார்முலாவைக் கூட தெரிக்க வைக்கின்றது இந்த படத்தின் இயக்குநர் ஒரு வித்தியாசமான நபராக இருக்க கூடும்.
வாடை திரைப்படம் பற்றி செய்திகள்
படம் வெளிவந்து இரண்டு தினங்கள் யாரும் பார்க்க வராததால் அனைத்து திரையரங்குகளிலும் எடுத்து விடக் கூடிய சூழலில் “யாரோ எவரோ..?” என்கின்ற வலைத்தளத்தில் இந்த படத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தைப் படித்தவர்கள். சென்று படம் பார்த்தார்கள்
ஆளாளுக்கு திட்டி/பாராட்டி விமர்சனம் எழுத…படம் ஓடத் துவங்கியது பிறகு பிரபல பத்திரிக்கை 80 மதிப்பெண் வழங்கியது. இலக்கிய கூட்டங்களில் இந்த படத்தைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.
பிரபல பின்நவீனத்துவ எழுத்தாளர் இந்தப்படம் ஒரு பின்நவீனத்தின் அடிக்கல் என்றார், இந்த திரைப்படம் ஒரு குப்பை திரைப்படம் எடுக்கத் தெரியாத முட்டாளின் கிறுக்கல் என்றார் ஒரு எழுத்தாளர், ஒரு பாலியல் எழுத்தாளர் இந்த மாதிரி படங்கள் வரவேண்டும் என்றார். ஒரு இளம் எழுத்தாளர் நூறு பக்கத்துக்கு விமர்சனம் எழுதினார். அதை நடுகல் பதிப்பகம் வெளியிட்டது, பத்தாயிரம் பிரதிக்கு மேல் விற்றது. 7 ½ பர்சண்ட்டை தாண்ட மாட்டோமென சொல்லி பதிப்பகம் 2000 பிரதிக்கு காசோலை அனுப்பியது ஒரு மழை நாளில் நடந்தது!
2014ல் வந்த அந்த திரைப்படத்திற்கு பிறகு அந்த இயக்குநர் வேறு படம் எதுவும் இயக்கவில்லை, வெற்றி விழாவில் கூட அவரைக் காணவில்லை, மொத்த தமிழகமும் அவரை பல இடங்களில் தேடியது, எங்கும் அவரைக் காணவில்லை அவருக்கு உதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் கூட அவரை அதன் பிறகு பார்க்க முடியவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே அங்க அடையாளங்களோடு நீண்ட சடை முடியுடன் ஒருவர் திருப்பூர் பேருந்து நிலையத்தின் ஒதுக்குப் புறத்திலிருந்த இலவச கழிப்பிடத்திற்குள் நுழைய முயற்சியெடுத்து மூக்கைப் பிடித்தபடி மனிதக்கழிவை தாண்டி உள்சென்று தன் குறியை ஜிப்பில்லாத பாண்ட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து நின்றவாக்கில் பெய்ய முயற்சியெடுத்தார். குறியில் விண் விண்னென வலியெடுக்க வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு அழுதார். வெள்ளையாய் கொஞ்சம் கஞ்சிபோல குறியிலிருந்து வெளிவந்ததும் அப்படியே மயங்கிச் சாய்ந்தார். யாரோ அவசர சிகிச்சை வண்டிக்கு போன் அடித்தார்கள்.
உடுக்கையொலி பேருந்து நிறுத்தத்திலிருந்து கேட்டது டும்…..டும்……டும்….!