அதடு-என்கின்ற ஆண்மையை தொலைத்த நாய்!
>> Tuesday, June 2, 2015
அதடு என்று ஒரு பெயரா..? என நீங்கள் கேட்கலாம், இந்தப் பெயரை எப்படி நான் இவனுக்கு வைத்தேன் என்று தெரியவில்லை....ஆனால் அதடு என்றழைத்தால் நாலுகால் பாய்ச்சலில் ஓடி வருவான். அவன் ஓடி வரும் போது சத்தம் வராது...பூனைப் பாய்ச்சலும் காற்றைக் கிழிக்கும் வேகமும் ஒரு வேட்டையனுக்கு மிக்க அவசியம்.
அவன் வரும் வேகம் எனக்கே சில சமயம் பயம் தரக்கூடியதாக இருக்கின்றது. வேட்டை நாய்களை தேர்ந்தெடுப்பதில் பல நுண்ணிய விசயங்கள் இருக்கின்றது முழு கருப்பு நிறம், சிவந்த கண்கள் வியர்த்த மூக்கு, கால்கள் வலுவாகவும்.. முன்னங்கால்களில் ஜந்து நகங்களும் பின்னங்கால்களில் ஆறு நகம் வீதம் மொத்தம் இருபத்திரண்டு நகங்களும் வால் முதுகு தொடாமலும், காது கிழிய வள்வள்ளென்று குலைக்காமலும் ஆனால் புதிய மனிதர்கள் கண்டால் மெலிதான ஆனால் ஆக்ரோஷமான உறுமலும் மிக்க அவசியம்.
பாம்பு கண்டால் தொடை நடுங்குதல், தேள் கண்டால் துள்ளுதல் வேட்டை நாய்களுக்கு ஆகாது! அதனுடைய பாய்ச்சல் புலியின் பாய்ச்சலுக்கு ஈடானதாக இருந்தாலும் புலி போன்று கழுத்தைக் கவ்வினாலும் இரத்தம் ருசிக்கக் கூடாது, பல் பதியக் கூடாது, வட்டலில் நம் ஆணையை மீறி வாய் வைக்காது இரண்டு நாட்கள் ஆகினும்.
பெரும்பாலும் வேட்டை நாய்களின் வால்கள் முதுகு தொடுமுன் வெட்டி விடுவது நல்லது, இது நாள் வரை அதடு எந்த பிரச்சனையில்லாமல் இருந்தான் இரண்டு நாட்களாக அவனுடைய செயல்பாடுகள் சரியில்லை குருவி முடுக்குவதில்லை, சீழ்க்கையொலி கேட்பதில்லை... ஒரு மாதிரியாக திரிகின்றான் என்ன வென்று ஆராய்ந்தால் வள்ளியூரானின் பெட்டை நாயை மாட்டிவிட்டு வந்திருக்கின்றான், காலைத் தூக்கி அடிக்கடி குறியை நாவால் நக்கியபடி சுகம் அனுபவித்த கிறக்கத்தில் கிடக்கின்றான்...
இனி விடக் கூடாது என முடிவெடுத்து அடுப்பு சாம்பலும், சூப்பர் மேக்ஸ் புது ப்ளேடும் வாங்கி அசந்த நேரத்தில் அவனுடைய விரையை சரக்க்க்க்கென்று அறுத்து சாம்பலை அடித்து விட்டேன். விரையை மூணு முக்கு ரோட்டில் புதைத்து விட்டேன்....அதடு இப்பொழுதெல்லாம் சீழ்க்கையொலிக்கு உடனே அடி பணிகின்றான் ஆனால் என்ன மூணு முக்கு ரோட்டில் அவன் ஆண்மையைப் புதைத்த இடத்தை அடிக்கடி முகர்ந்து பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்கின்றான்..!
0 comments:
Post a Comment