அசல்

>> Monday, June 1, 2015

   நாங்களும் வர்றோம் என்று அவர்கள் கேட்ட போது நான் மறுத்திருக்க வேண்டும், தொடர்ந்து நாங்கள் நாடகங்களுக்கு நாயகியர்களை சுலமாக பிடிப்பது எப்படி என்று நீண்ட நாட்களாகவே பல குழுவினருக்கும் ஆச்சர்யம் தரும் விசயமாக இருக்கின்றது. வீராப்புடன் ஆண்களே ஸ்திரீகளாக பெண் வேடமிட்டு நடித்தார்கள், அது அவ்வளவாக மக்களை கவரவில்லை. 

   நாங்கள் அழைத்து வருபவர்கள் உண்மையில் பெண்கள் ரப்பர் பந்துகளோ, தேங்காய் ஓட்டினையோ வைக்காத சதையுள்ள மார்புடைய பெண்கள்! சிக்கு பிடித்த டோப்பாக்கள், சவுரிகள் இல்லாத நிஜ கூந்தலுடைய பெண்கள், சாரீரம் கூட இனிமையானதுதான், சரீரம் கூட மினுமினுப்பானதுதான். ஆண்கள் ஸ்திரீ வேடமணியும் போது அவர்களுடைய புகைபிடிக்கும், கஞ்சா புகைக்கும் தொண்டைகள் நீண்ட நேரங்களுக்கு பெண் குரலை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. 

   நாங்கள் கூட்டிவரும் ஜமுனா சிறந்த ஆட்டக்காரி சினிமா பாடலுக்கு எப்படி ஆடினால் ஆண்கள் கிறங்குவார்கள் என முற்றிலும் அறிந்தவள். கடைசியில் எங்கள் காலில் வந்து விழுந்தார்கள், இரண்டாயிரம் ஆகும் வாகனச் செலவு இருநூறுகள்! வாடகை வண்டியில்தான் வருவார்கள், உணவு, சாராயம் கண்டிப்பாக உங்கள் செலவு என்றேன்.

”அப்படியே செஞ்சரலாம்” என்றான் மெல்லிய தேகமுடையவன்.
”பிறகு”
”நாங்களும் கூட வருவோம்” என்றார்கள் கோரஸாக...!
நான் புன்னகைத்துக் கொண்டேன்!

   பேருந்தில் பயணமானோம் கூட வந்தவர்களுக்கு ஜமுனா பற்றிய பெரிய கனவிருந்தது. அதை கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டு வந்தார்கள்.
   சேலத்தில் இன்று நவநாகரீக கட்டிடங்களுடன் வளர்ந்து நிற்கும் ஒரு இடம் ஒரு காலத்தில் விளிம்புநிலை மனிதர்கள் வாழும் குடிசைகள் நிறைந்த பகுதி! பரத்தையர்கள், அரவாணிகள், ஒரு சிலர் நாடகம் கச்சேரிகளுக்கு செல்பவர்கள், ”ரெக்கார்டு டேன்ஸ்” எ்னறு அழைக்கப்படும் நிர்வாண களிகளுக்கு செல்லக் கூடிய பெண்கள் என வாழும் பகுதி! ஜரிகை மினுமினுக்கும் பாவாடைகள், உள்ளாடைகள் குடிசையெங்கும் காய்ந்து கொண்டிருந்தன...!
”அண்ணேய் ஜமுனாதானே?” என்றான் மெல்லிய தேகத்தான் வாயில் சலவாய் ஒழுகிவிடும் போல...!
நான் புன்னகை மட்டும் தந்தேன்!
  கரடு முரடான கழிவுநீர் ஓடும் கரையில் வாழும் சேரிக்குள் நான் பழக்கமான தெரு என்பதால் வேகமாக சென்றேன்! ஜமுனாவின் பாதி மார் தெரியும் ஆட்டத்திற்கு மிகப் பெரிய விசிறிகள் உண்டு, ராத்திரி நேரத்து பூசையில் ட்டிங்கு...ட்டிங்கு...ட்டிங்கு...என்ற பாடலுக்கு அவள் ஆடும் ஆட்டத்திற்கு விசில் சத்தம் பறக்கும். நாடகத்தில் சில சினிமா பாடல்களை இடைச் சொருகலாக வைப்பதென்பது இன்று நடைமுறையாகிவிட்டது.
  ஜமுனா கதவு இல்லாத குடிசையின் வெளியே சிக்குப் பிடித்த பரட்டை தலை, தோல் சுருங்கிய முகமும் அழுக்கு துணியுடன் பஞ்சத்தில் அடிபட்டவள் போல இருந்தாள்...! ஒடுங்கிய கரி அப்பிய ஈயப் பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
  நீண்ட நேரத்திற்கு பிறகுதான் என்னுடன் வந்தவர்களுக்கு அது ஜமுனா எனப் புரிந்தது! முன்தொகை கொடுத்து விட்டு ஊர் வரும் வரை அவர்கள் பேசவில்லை மௌனமாகவே வந்தார்கள்! நான்தான் சொன்னேன் ”அவங்க அப்படித்தாம்ப்பா இருப்பாங்க! என்ன சினிமா நடிகையா எப்பவும் பளபளன்னு இருக்க...! ஆட்டத்துல பாரு ரோஸ் பவுடர பூசிட்டு நூறு வாட்ஸ் லைட்டு வெளிச்சத்துல மினுமினுன்னு ஆடுறத...! அசந்து போயிடுவ..! என்று ஆறுதல் சென்னேன்.

ஆறுதல் அல்ல அசலும் கூட....


0 comments:

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP