ஊசி ஒடைஞ்சு போச்சு….!
>> Monday, September 23, 2013
செல்வம் டிவிஎஸ்ஐ நிறுத்திவிட்டு…கம்பனிக்குள் நுழையும் போதே ஓனர் சாமி படத்துக்கு ஊதுபத்தியை காட்டிக்கொண்டிருந்தார். செல்வம் வந்ததைக் கூட கவனிக்காமல் கண்ணை மூடி பிராத்தனையில் இருந்தார். "பண்றதெல்லாம் மொள்ளமாரித்தனம் காலையில பக்தி பரவசம்" என்று முனகி விட்டு கம்பனிக்கு உள்ளே நுழைந்தான்.
சிங்கர் டைலர் பொன்ராசு மிசினை துடைத்துக் கொண்டே "என்னடா செலுவு பிக்காளித்தனமான வேலைக்கு செக்கிலுத்த செம்மல் மாதிரி வெரைப்பா வர்ற…" என்றான்.
"யோவ் பொன்சு…! உன்ற எகனை மொகனைக்கு ஒண்ணும் கொரைச்சல் கெடையாது…தெச்ச ஜட்டியெல்லாம் தூல் பிரியுதாம்…கம்பனி மேனஜர் கெட்ட வார்த்தையில திட்டுறான்."
"மிசினாடா இது..? லச்சுமி நகர்ல கூட வாங்க மாட்டான், தூக்கியெறிஞ்சிட்டு நல்ல மிசினு வாங்கச் சொல்லு ஒங்க ஓனர…..வெங்காயம்"
"ஆமா இப்பவே போன வாரச் சம்பளத்துக்கு வாங்குன வாரவட்டி குடுக்க முடியாம…கந்து வட்டிக்காரன் திட்டிட்டு போறான். புது மிசினுக்கு எங்க போவாரு... நீ ஒழுக்கமா வேலையப் பாருய்யா....!அறுக்கமாட்டாதவ அறுவா மொண்ணைனானம்"
"தங்கமணிகிட்ட கொடுத்த காச சேத்தி வச்சிருந்தாக் கூட இன்னும் இரண்டு கம்பனி வச்சிருக்கலாம்...உங்க ஓனரு.....!"
"அவரும் என்னய்யா பண்ணுவாரு...முப்பத்தெட்டு வயசாகுது இன்னும் கண்ணாலமில்ல...புழங்க ஆள் வேணுமில்ல...."
"டேய் செலுவா...!" என்று ஓனர் பழனிச்சாமி சத்தம் கேட்க அவரின் அறையை நோக்கி ஓடினான்.
"ஏண்டா செலுவா நைட்டு தெச்ச பீஸ கொண்டு போய் குடுக்காம பொன்ராசுகிட்ட என்னடா ஞாயம் மேனஜர் கூப்பிட்டு சத்தம் போடறான்டா...போடா சீக்கிரம்."
"இதோ போறங்க....!"
"ஆமான்டா...வெளிய ஒரு பல்சரு வண்டி நிக்குதே ஆருது..?"
"அது அந்த புதுசா வேலைக்கு வந்திருக்கிற தினேஷ் பையனுது"
"பார்ரா...! கைமடி கூட பல்சரு பைக்குல வர்றான் நானு ஓட்டை டிவிஸ்ச மாத்த முடியல...."
"நீங்க தங்கமணிய விட்டுட்டு சீக்கிரம் கண்ணாலம் மூய்ங்க....ஹோண்டா சிட்டி காரே வாங்கலாம்....."
"உள்ளூர்காரன்....சொந்தக்காரன்னு எடம் குடுத்தா....ஓவரா பேசுடா நீ...!"
"உண்மைய சொன்னா கோவம் வரும் உங்களுக்கு. என்ன பண்றது எனக்கு நாலு வாரம் சம்பளம் பாக்கி...!"
"செரி...காலையில டென்சன் பண்ணாதே...! கம்பனிக்குப் போயிட்டு சீக்கிரம் வா...! வேற பக்கம் போகணும் தங்கமணி வந்திருச்சா...?"
"இன்னும் வர்லைங்க...ஆனா எல்லா செக்கிங்கு பொம்பளைகளும் வந்துட்டாங்க...!"
"கொப்பனோலி மூணு நாளு லீவு போட்டுட்டா பாரு... இவளை மொதல்ல வளைச்சு முடுக்கணும்டா....!"
"முடிக்கிட்டாலும்....." என்று மனதில் நினைத்தபடி
பதில் எதுவும் சொல்லாமல் செல்வம் அவரின் அறையை விட்டு வெளியேறி கம்பனிக்கு உள்ளே சென்று தைத்து வைத்திருந்த ஜட்டி மூட்டையை டிவிஎஸ்சின் முன்னால் வைத்துக் கொண்டு முகம் மட்டும் தெரிய ஒரு பூதம் மாதிரி சாலையில் வேகமாக போனான்.
---
அவன் போன சிறிது நேரத்தில் ஓட்டமும் நடையுமாக தங்கமணி வர, அறைக்குள் இருந்த பழனிச்சாமி கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்து விட்டான் "லேய் இங்க வாடி" என்றான்.
"என்னங்க...!"
"எத்தனை மணிக்கு வர்ற மணி ஒம்பதாச்சு இதான் வேலைக்கு வர்ற நேரமா...? ரொம்ப ஏத்தமிடி ஒனக்கு! மூணுநாளு புடுங்குனுது பத்தாதா..?"
"ஊருக்கு போயிருந்தனுங்க...வந்ததும்மே நேர கம்பேனிக்கு வர்றேன் வையறீங்க...!"
"செரி...செரி....உள்ள போகாத... என்ற ரூம்மு கூட்டாம...புடிக்காம...கெடக்கு போயி சுத்தம் பண்ணிடு, சோறாக்கிட்டேன் கொழம்பு எதாவது வச்சுட்டு அப்புறம் வேலையப் பாரு போ...!"
போன் டி.எம்.எஸ் பாடிய முருகன் பாடலை ரிங்டோனாய் ஒலிக்க... ரூம் சாவியை அவளிடம் தூக்கி வீசி சைகையால் போகச் சொன்னான்.
"அலோ சொல்லும்மா...!"
"..................................................................."
"என்னது ஜாதகம் பொறுந்தலையாமா...?"
"..................................................................."
"செரி...வுடு...அழுவாதே.....அமையும் போது அமையும்...! நம்ம கையில என்ன இருக்கு..?"
"....................................................................."
"ம்ம்ம்....வேலை நடக்குது, நானு இந்த வாரம் ஊருக்கு வர்றேன் நைய்நைய்ங்காதே போனை வைய்யி...வேலை இருக்கு...!"
போனை வைத்து விட்டு கம்பனிக்கு பின்னால் இருந்த அவன் தங்கும் சின்ன ரூமுக்குப் போனான்.தங்கமணி தரையைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கதவைச் சாத்தினான்.
---
கட்டைக் கொண்டு சென்று கம்பனியில் போட்டுவிட்டு திரும்ப செக்ஷனுக்கு வந்த செல்வம் கம்பனிக்கு முன்னால் பொன்ராசு பீடி குடித்துக் கொண்டு நின்றிருந்தான்...டிவிஎஸ்சை நிறுத்திக் கொண்டே கேட்டான்.
"யோவ்...! "பொன்சு" ஏய்யா இங்க நிக்கற...? நீ உருப்பிடியா ஒரு நாளைக்காச்சும் வேல பாக்குறீயா...?"
"டேய்...! வௌக்கெண்ணை....ஊசி ஒடைஞ்சிருச்சுடா....! நீயும் இல்ல என்ன பண்றது"
"ஏன்...! ஓனர் இருக்காருல்ல... அவருகிட்ட கேட்க வேண்டியதுதானே...?"
"யாரு...? ஒங்க ஓனரா.....திங்கக்கெழமை காலையிலியே வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காரு....மூணு நாளு ஏக்கம் பாரு செத்த நேரமாகும்....!"
"தங்கமணி வந்துட்டாளா...?"
"ஓ....அம்மணி ஒம்பது மணிக்கு ஆடி அசைஞ்சு வர்றா! அப்படியே மறைச்சு ஒதுங்கிட்டான்யா உங்க ஓனரு...!"
"கருமம் வாய்யா, ஊசிய எடுத்து தர்றேன்! தெச்சுத் தொலை...! அந்த மேனேஜரு தேவடியாப்பைய கெட்டவார்த்தையில சத்தம் போடுறான். இந்தாளு பாட்டுக்கு எனக்கென்னேன்னு காலையில கையில புடிச்சுட்டு ரூமுக்குள்ள போயிட்டான்...ச்சை என்ன பொழப்பு நாலு வாரம் சம்பளம் வேற வரணும் இல்லான்னாக் கோட வுட்டுப் போட்டு இப்படியே போயிருவேன்." புலம்பிய படி செல்வம் மேஜையைத் திறந்து ஊசி எடுத்துக் கொடுக்க....! பொன்ராசு நக்கல் சிரிப்புடன் "சீக்கிரம் உங்க ஓனர் சோத்துப் போசிய தூக்கிட்டு மறுபடியும் டைலாக்ஸ் கம்பனிக்கு வேலைக்கு போவாரு...கூடிய சீக்கிரம் நடக்கும் பாரு...!" என்றான்.
"போய்யா....போய் வேலையப் பாரு உன்ன மாதிரி ஆளுகளை வச்சா வேலைக்கு என்ன..? பிச்சைதான் எடுக்கனும்"
"ஓனரை உட்டுக்குடுக்க மாட்ட....ஆனா உன்ற லவ்வரு தங்கமணிய உட்டுக் குடுப்பே" என்று சிரித்தான் பொன்ராசு.
"போய்யா...பழச கௌறாத...அவள மறந்து பல நாளாச்சு....! லட்டர் குடுத்ததுக்கு என்னிக்கு மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசுனாளோ...அன்னிக்கே மறந்துட்டேன். ஒன் சைட் லவ்வு அது"
"வயசுப் பைய உன்னை வுட்டுட்டு....அரைக் கெழவன் பழனிச்சாமி கோட பகல்லியே படுத்துக் கெடக்கறா பாரு....!"
"யோவ்...பொன்சு போய்யா வேலையைப் பாரு...போ....காலையில மனுசனை டென்சன் பண்ணிட்டு.....எவ எப்படிப் போனா என்ன....?" என்று செல்வம் கத்த பொன்ராசு அமைதியாக மிசினை நோக்கிப் போனான்.
செக்கிங் பெண்கள் பேசிச்சிரித்துக் கொண்டிருக்க..."ஏம்மா...வேல பாக்க வந்தீங்களா...? கும்மாளமடிக்க வந்தீங்களா...? சும்மா பீஸை நீவிக்கிட்டே நில்லுங்க....புதுசா வயசுக்கு வந்தவளுக மாதிரி சீக்கிரம் முடிங்க...ஓவர் லாக் டைலர் அளவு பாத்து புடிங்க கன்னாபின்னான்னு புடிக்காதிங்க....நான் வார்த்தை வாங்க வேண்டியதா இருக்கு...!"
செல்வம் உட்ச பட்ச வெறியில் எல்லாரையும் திட்டிக் கொண்டிருந்தான் நீண்ட நேரமாக......
9 comments:
சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
தொய்வில்லாமல் நகர்ந்த வித்தியாசமான கதை...
நிஜம்...
அட! கதை அருமை! கொங்கு தமிழ்!பொங்க நடை! தங்கு தடை!
இல்லை இடை! வாழ்க!
கொங்கு தமிழ் அட்டகாசம்....பேசாம திரைக்கதை எழுத போய்யா....!
வாவ்வ்வ்வ்.... கொங்கு பேச்சு தமிழ் கதையின் ஹைலைட்.
மண்மணத்துடன் அழகான சிறுகதை..
மண்மணத்துடன் அழகான சிறுகதை..
கதையல்ல நிஜம் .... (?)
Post a Comment