பங்களாப்புதூர் ஸ்கூல் பத்து கிலோமீட்டர்....!

>> Saturday, September 14, 2013

காதல் என்பதை பருவ வயதில்தான் நாம் உணர்கின்றோம் அதற்கு முன் பால்யத்தில் அது காதல் என்று சொல்லமுடியாது ஒருவகையான ஈர்ப்பு எனலாம். அன்பு நிறைந்த ஒரு வகையான புரிதலற்ற காலமது. அந்த வயதில் என் வீட்டுக்கு அருகில் சாமிநாதன் என்பவர் சைக்கிள் கடை வைத்திருந்தார். அவர் மனைவி மக்களுடன் இருந்தாலும் சத்தியமங்கலத்தில் ஒரு விதவைப் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார். அடிக்கடி அங்கே போய் வருவார் சில நாட்கள் வேலை அதிகமாக இவர் ஒரு மாதமாக அங்கு போகவில்லை அந்த விதவைப் பெண் தன் ஒரே மகளைக் கூட்டிக் கொண்டு சைக்கிள் கடையில் வந்து உக்கார்ந்து கொண்டது. அவரும் பல சமாதானங்களைச் செய்தும் அப்பெண் மசியவில்லை.

யாரோ சென்று அவர் மனைவியிடம் சொல்ல... சரியான சண்டை ஊரே கூடிவிட்டது. ஊர் பெரிசுகள் கூடி விடிய...விடிய...பஞ்சாயத்து நடந்தது அந்த விதவைப் பெண் இவருடன் இதே ஊரில்தான் இருப்பேன் இல்லை பவானி ஆற்றில் விழுந்து நானும் என் குழந்தையும் இறந்து விடுவோம் எனக் பிடிவாதமாக இருக்க...ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து கடைக்கு அருகில் ஒரு வீட்டைப்பார்த்து சைக்கிள் கடைக்காரர் விதவைப் பெண்ணை குடிவைத்து விட்டனர்.

அந்த விதவைப் பெண்ணின் மகள் பெயர்தான் "சுதா" சுதா சும்மா சொல்லக்கூடாது நல்ல கேரளாப் பொண்ணு மாதிரி நல்ல அழகு. சத்தியில் இருந்து டி.சி வாங்கிக் கொண்டு வந்து எங்க ஊர்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள், எங்கள் வகுப்பில் இடமிருக்க அங்கு உக்கார வைக்கப்பட்டாள். வௌக்கெண்ணெய் முகங்களாக பார்த்த எங்களுக்கு பான்ட்ஸ் பவுடர் வாசமும், சாயம் போகாத பூப் போட்ட பாவாடை சட்டையும் வெள்ளைவெளேரென்ற காலில் அணிந்திருக்கும் கால் கொலுசும் ஒரு மாதிரியான கிறக்கத்தை உண்டாக்கின. அவளைப் பற்றி பல கிசுகிசுக்கள் பசங்க மத்தியில் புழங்க ஆரம்பித்தது.

ஊருக்குள் சுதாவின் அம்மாவைப் பற்றிய செய்திகள் நல்லவிதமானதானதாக இல்லை. அவள் ஒரு மாதிரி என்கின்ற ரீதியில் பல கதைகள் உலாவந்தன சில இளைஞர்கள் சைக்கிள் கடைக்காரர் இல்லாத போது அவள் வீட்டுக்குப் போவதாகவும், ஊருக்குள் நிறைய நபர்களை வளைத்துப் போட்டிருப்பதாகவும் பக்கத்து வீட்டு அக்காக்கள் நாங்கள் சிறுவர்கள் என்பதால் தைரியமாக பேசிக்கொண்டிருப்பார்கள். அன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சி என்பது நுழையவில்லை அதனால் பெண்களின் பொழுதுபோக்கே இது போன்ற பொரணிகள்தான். அவர்கள் பேசுவதை விளையாடுவது போன்று பாசாங்கு செய்து கொண்டே கேட்டு கொண்டு வகுப்பறையில் நாங்க கூடிப் பேசுவோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சுதா என் வீட்டுக்கு வர ஆரம்பித்தாள்...காலாண்டுக்குப் பிறகுதான் இந்தப் பள்ளியில் சேர்ந்ததால் எழுதாத பாடங்களை என் நோட்டை வாங்கி எழுத ஆரம்பிக்க மிக இயல்பாய் அவள் பேச ஆரம்பித்தாள். அவள் வருவதை என் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது கரித்துக் கரித்து கொட்டிக் கொண்டிருப்பாள்.

"ஏண்டி நீ பள்ளிக் கூடத்துல எழுதுவியா மாட்டியா...?" என்று காரணமில்லாமல் கோபப்படுவாள் எனக்கு சங்கடமாக இருக்கும் ஆனால் சுதா ஒரு துளி முகம் சுருங்காமல் மென்மையாக "இல்ல அத்தை நான் பாதியில் தான் சேந்தனா அதனால எழுதலை" என்று விளக்கமளிப்பாள்.

நானும் வகுப்பறையில் அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன். காரணம் ஒரு பெண்ணிடம் பேசினாலே பல கதைகள் கட்டி விடுவார்கள். ஆனாலும் என் பக்கத்துவீட்டுப் பையன் ஒருவன் அவள் அடிக்கடி என் வீட்டுக்கு வருவதையும்...நான் அவளுடன் பேசுவதையும்...ஒன்றாகப் படிப்பதையும் போட்டுக் கொடுத்து விட்டான். அவளுடைய ரெக்கார்டு நோட்டில் நான் வரைந்து கொடுத்த படங்களைக் காட்டி நாம கேட்டா வரைஞ்சு கொடுக்கமாட்டிங்கறான் அவளுக்குப் பாரு எப்படி டிசைன் டிசைன்னா வரைஞ்சு கொடுக்கறான் என்று பெரிய களோபரம் ஆகவும். நான் மிகவும் பயந்து போனேன் பள்ளியெல்லாம் தெரிந்து அம்மா அப்பாவுக்கெல்லாம் தெரிந்து அவள் கழுத்தில் நான் தாலி கட்டுவது போல எல்லாம் கனவு வேறு வந்து தொலைத்தது அவளை கொஞ்சம்...கொஞ்சமாக உதாசினப்படுத்த ஆரம்பித்தேன்.

நான் விலகி போவதை உணர்ந்த அவள் ஒரு நாள் நேரடியாகவே கேட்டாள் "ஏன்...? நான் வந்தா பேச மாட்டிங்கற நான் என்ன தப்புச் செஞ்சேன்" என்று குழந்தைத்தனமாக கேட்டாள். நான் சமாளித்தாலும் அவளை முழுவதுமாக விலக்க முடியவில்லை..நட்பு தொடர்ந்தது. என் நண்பர்கள் கொஞ்ச நாள் புரளி பேசியவர்கள் பிறகு ஒரு ஆசிரியை புதிதாக எங்கள் பள்ளியில் சேர அவருக்கும் கணக்கு வாத்தியாருக்கும் "லவ்ஸ்" ஏற்பட அதைப் பற்றி பேச ஆரம்பித்து எங்களைப் பற்றி மறந்து போனார்கள்.

பத்தாவது முடிந்தவுடன் நானும் வேறு பள்ளிக்குச் செல்ல... அவள் வேறு பள்ளிக்குச் செல்ல...பிறகு வேலை என்று காலங்கள் உருண்டோட அவளைப் பற்றி மறந்த ஒரு சூழ்நிலையில்தான் ஒருநாள் நான்வேலை முடிந்து வந்து சாப்பிட உக்கார அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சுதாவைப் பற்றி. பத்தாவது பெயில் ஆக அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு தையல் கற்றுக் கொள்ள போய்க் கொண்டிருந்த இடத்தில் எவனோயோ...! டைலரை காதலித்தததாகவும் அவன் அவளை கர்ப்பமாக்கி விட்டு திருப்பூர் ஓடிவிட்டானாம்...அவள் அம்மா ஏதோ மருத்துவச்சியை வைத்து கலைத்துவிட்டாளாம். அதன் பிறகு ஏதேச்சையாக நான் வீட்டிலிருக்கும் சமயம் "அத்தை கொஞ்சம் குழம்பு குடுங்க...கடுகு கொடுங்க" என்று வருவாள்...என்னைப் பார்த்தாள் என்றால் சிநேகமாக சிரித்து "நல்லாருக்கியா" என்பாள்..."படிக்க எதாவது கதை புக்கு கொடேன்" என்பாள். நானும் எதாவது புத்தகத்தைக் கொடுத்து விட்டு சிரிப்பேன். அதன் பிறகு அம்மா என் மேல் எரிந்து...எரிந்து விழுவாள் அவள் என்னை மயக்கி விடுவாள் என்று அம்மா கூட நினைக்கிறாளா...? என்று வேதனையாக இருக்கும்.

நீண்ட நாள் வேலையாக தொடர்ந்து வெளியூரில் இருந்த நான் ஆறு ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு வந்தேன் குளித்துவிட்டு அப்படியே கோயில் வரை போனேன். திரும்பி வந்த போது சைக்கிள் கடையில் சாமிநாதன் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தார்...சுதாவின் அம்மா கடையில் உக்காந்து வேஸ்ட் பனியன் துணியை பிரித்துக் கொண்டிருந்தாள்...சுதாவை காணவில்லை. கல்யாணம் ஆகியிருக்குமோ...? என்று யோசனை செய்தபடியே வந்தேன்.

வீட்டுக்கு வந்த பிறகு அம்மா சாப்பாடு போட சாப்பாட்டைப் பிசைந்து கொண்டே....சுதாவைப் பற்றி அம்மாவிடம் கேட்கலாமா...? என்று யோசனையில் இருந்தேன். என் எண்ணங்களை புரிந்து கொண்டாளோ என்னவோ அம்மாவே ஆரம்பித்தாள் "இந்த சுதாவைப் பாத்தியாடா...? அம்மா மாதிரியே பண்ணிட்டா...!" 

"என்னம்மா என்ன ஆச்சு...?" என்றேன்...! 

"பக்கத்து வீதியில ஒருத்தன் மளிகைக்கடை வச்சிருந்தான்... தூக்கநாயக்கன்பாளையத்துக்காரன் இவ சாமான் வாங்கப் போக பழக்கம் ஆயிடுச்சு போல ஒரு நாளு இவளைக் கூட்டிட்டுப் போயிட்டான். கடைசியில அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை வேற இருக்காம். அவங்க இவளை அடிச்சு உதைச்சு பங்களாப்புதூர் ஸ்டேசன்ல வச்சு கேஸ் குடுத்து! பஞ்சாயத்துப் பேசி இப்ப இருகுடியா வாழறா...! ரொம்ப சீரழியறா பாவம்...!" 

"இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட்டுக்க...."என்றாள் அம்மா...!

"வேணம்மா போதும்.....வயிறு சரியில்லை" என்றேன் 

"ரசம் இருக்குடா...."

"இல்லம்மா போதும் விடு....!"தட்டில் கைகழுவிவிட்டு எழுந்து நின்றேன்.

துண்டை எடுத்து நீட்டியவள்....."ம்ம்ம்.....நல்ல பொண்ணுடா அவ அம்மாவே கெடுத்துட்டா....."என்ற அம்மா கண்ணைத் துடைத்தாள்... அவளுக்காக அழுகின்றாளா என்ன...? மனசு ஒரு மாதிரியாக இருக்க வெளியில் கிளம்பினேன்.

1 comments:

MANO நாஞ்சில் மனோ 4:49:00 PM  

இவர்களின் வாழ்கையை சமூகம் சீரழித்ததா இல்லை அவர்களே சீரழித்து கொண்டார்களா ?

மனசுக்கு வேதனையாகவே இருக்கிறது பாவம்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP