சுந்தரேசனும் சாம்சங் கேலக்ஸியும்.....!
>> Sunday, December 23, 2012
பிரபல துணிக்கடையில் இருந்து குலுக்கலில் பரிசு விழுந்திருக்குன்னு போன் செய்து சொன்னாங்க....போஸ்ட் மேன் வந்தா வாங்கி வைன்னு தன் கணவன் சுந்தரேசன் காலையில் சொல்லிவிட்டு ஆபிஸ் போயிட்டான்.
பரிசு விழுந்திருக்குன்னு சந்தோசப் படாம போஸ்ட் மேன் கொடுத்த பார்சலைப் பிரித்த கோகி தலையில் இடிவிழுந்தது போல் உக்கார்ந்திருந்தாள்!
பரிசு விழுந்திருக்குன்னு சந்தோசப் படாம போஸ்ட் மேன் கொடுத்த பார்சலைப் பிரித்த கோகி தலையில் இடிவிழுந்தது போல் உக்கார்ந்திருந்தாள்!
பங்கஜம் மாமி "ஏண்டி பரிசு வந்ததுக்கு இப்படி இடிவிழுந்த மாதிரி இருக்கியேன்னு.." கேட்கின்றாள். "போங்க மாமி உங்களுக்கு என்ன தெரியும்…."என்று சொல்ல ஆரம்பிக்கின்றாள். கோகியின் நினைவில் கொசுவர்த்தி சுத்த ஆரம்பித்தது
***
சுந்தரேசன் படுக்கையில் இருந்து எழுந்தான்…..! தலயணைக்கு அடியில் வைத்திருந்த புதிதாக வாங்கியிருந்த ஆன்ட்ராய்டு சாம்சங் கேலக்ஸியை துழாவினான், கடைசியில் அது எங்கோ சுவர் ஓரமாக கிடந்தது….எடுத்தான் முகநூலை திறந்தான். சமையறையில் இருந்து கோகி காஃபியை கொண்டு வந்து கொடுத்து விட்டு "இங்க பாருங்கோ காலையில் இதை நோண்டாம ஆபிஸ்க்கு கிளம்பர வேலையப் பாருங்கோ….! இன்னைக்காவது உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வருவீங்களா….? மாவு அரைக்கனும் அப்புறம் வக்கனையா இட்லி தோசை கிடைக்காது…! சொல்லிட்டேன்..!"
"வாங்கிட்டு வர்றண்டி சும்மா காலங்காத்தால நொய்….நொய்ன்ட்டு"
பொண்டாட்டி தொல்லை தாங்கலை சாமியாரா போயிடலாம்…! குஜாலா இருக்கும் என்று ஸ்டேட்டஸ் போட்டான்…! மடமடவென பத்து லைக்குகள் விழுந்தது. முதல் கமெண்ட்டாக "சூரக்கோட்டை சூனாதானா" ஆமாம் பாசு பொண்டாட்டிக தொல்லை தாங்கலை….அவ்வ்வ்வ் என்று போட்டான்! விடியாமூஞ்சி வந்து ஒரு லைக்க போட்டிட்டு "சேம்பிளட்" அப்படின்னு போட்டான்…! "ஏங்க...! காஃபி ஆறிடுங்க குடிங்க, சுடுதண்ணி வச்சிட்டேன் காஞ்சிருச்சு கிளம்புங்க…!, பையனை ஸ்கூல்ல வேற விடனும்,அந்த கருமத்தை காலையிலேயே நோண்டாதிங்க…..கிளம்புங்க……கோகி இனி விட்டால் அடித்தாலும் அடித்து விடுவாள் என்ற படி சுந்தரேசன் ஓடினான்.
மச்சிஸ் நான் காஃபி குடிக்கிறேன் என்று கூகுள்ள தேடி ஒரு காஃபி இருக்கிற மாதிரி கோப்பை படம் போட்டு ஸ்டேட்டஸ் போட்டான். சுந்தரேசன் அதற்கு விழும் லைக்குகளைப் பார்த்துக் கொண்டே பல் துலக்கினான். நான் பல்லு வௌக்குறேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டான்…!
அடுத்த வேலையான "முக்கி"யமான வேலை செய்யும் போதும் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு இருந்தான். கெடாகுமார் கமெண்ட் போட்டான் என்ன மாப்ள சாப்பிட்டு இருக்கிறியா…? அப்படின்னு கடுப்பாயிருச்சு சுந்தரேசனுக்கு அடங் கொய்யா……கக்கா போகையில கேள்வி பாரு பிளடி பூல் அப்படின்னு போட்டான்!
போனை வைத்து விட்டு குளிக்க தொடங்கினான்…..! குளித்து முடித்ததும் தலையைத் துவட்டிக் கொண்டே ஸ்டேட்டஸ் போட்டான். சாப்பிடும் போது இன்னிக்கு வத்தக்குழம்பு பப்படம் என்று ஸ்டேட்டஸ் போட்டான். "சாப்பிடும் போது கூட இதை வெச்சிருக்கனுமா…?" என்று கோகி போனை பிடுங்கி வைத்தாள்.
சுந்தரேசன் தெருவில் நடந்து தெரு முனையில் இருக்கும் சினிமா போஸ்டர் ஒட்டிய நிழல் குடையில் கீழ் வந்து நின்றான், போனை நோண்டிக் கொண்டே நின்று கொண்டிருந்தான், சிறிது நேரத்தில் பஸ் வரவும் ஏறினான் கூட்டம் அதிகம் என்றாலும் ஏறி தோதான ஒரு இடத்தில் நின்று கொண்டு போனை எடுத்து நோண்டிக் கொண்டே வந்தான். இறங்கும் இடம் வந்ததும் டூத்பேஸ்ட்டில் இருந்து பேஸ்ட் பிதுங்குவது போல இறங்கி அலுவலகம் நோக்கி நடந்தான்.
****
கோகி இரவு டிபன் செய்து விட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு டிவியைப் போட்டு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன இன்னும் அவரை காணலை, தன்னுடைய போனை எடுத்து அவனுக்கு போன் போட்டாள், "சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது" என்று ஒரு பெண் கூறினாள்..! போனை நோண்டிக்கிட்டே சார்ஜ் போட மறந்துட்டார் போல என்று சொல்லிக் கொண்டே இருக்க சுந்தரேசன் சோர்வாக உள்ளே நுழைந்தான். லுங்கி மாற்றி விட்டு பாத்ரூம் சென்று கை,கால் கழுவிட்டு வந்து தட்டில் இருந்த இட்லியை சாப்பிட்டு விட்டு போய் படுத்துக்கொண்டான்.
கோகிக்கு வியப்பாக இருந்தது! இரவு பன்னிரண்டு வரை போனை வைத்துக் கொண்டு பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருப்பாரே….! இன்னைக்கு என்ன ஆச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையோ….? அவளும் நாலு இட்லிய சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைத்துவிட்டு படுக்கையறைக்கு வந்தாள் கோகி.
கட்டிலில் இரங்கநாதர் போல் படுத்திருந்த கணவன் அருகில் அமர்ந்து என்னங்க தலவலிக்கறதான்னு தலைய தடவி விட்டாள்…!
“ஒன்னுமில்ல கோகி என் போன் தொலைஞ்சிருச்சு” என்றான் சுரத்தேயில்லாமல் சோகமாக…!
“என்னங்க சொல்றீங்க எட்டாயிரம் ரூபா போனாச்சே…!” என்றாள்
பஸ்ல இறங்கும் போது இருந்துச்சு…! ஆபிஸ் போய் பாக்கெட்ல பாக்குறேன் இல்ல எவனோ பிக்பாக்கட் அடிச்சுட்டான் உடனே போனை ஆப் பண்ணிட்டான் போல பப்ளிக் பூத்ல இருந்து கூப்பிட்டுப் பார்த்தேன் சுவிட்ச் ஆப்ன்னு வருது….
சரி விடுங்க….வேற சுமாரான ஒரு போன் வாங்கிக்கலாம். இனிமே இந்த விலை அதிகமான போனே வேண்டாம் என்று கோகி சொன்னதிலும் ஒரு உள் அர்த்தம் இருந்தது. இருபத்தி நாலு மணி நேரமும் பேஸ்புக்கையே நோண்டிக் கொண்டிருப்பதால் ஒரு சந்தோசமாக பேசவோ…!குழந்தைகளிடம் விளையாடவோ நேரமில்லாமல் அதற்கு அடிமை போலவே ஆகிவிட்டான். இனி அந்த தொல்லை இருக்காது என்று மனது சந்தோசப்பட்டாலும் போன் தொலைந்ததில் வருத்தம் இருக்கத்தான் செய்தது.
***
அடுத்த நாள் சாதாரண போன் ஒன்றை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு செல் கம்பனியில் சென்று அதே எண்ணில் ஒரு சிம்மும் வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அவனுடைய செயலில் மாற்றம் தெரிந்தது, குழந்தைகளிடம் விளையாடுகின்றான்…! விடுமுறை நாட்களில் குடும்ப சகிதமாக சினிமா, பார்க் என்று சென்று பொழுதை கழிக்க ஆரம்பித்தான், கோகிக்கும் சந்தோசமாக இருந்தது.
காலை வேளையில் போன் இருந்தால் நோண்டிக் கொண்டு இருப்பான் இப்பொழுது காய்கறி வெட்டிக் கொடுப்பது, குழந்தைகளுக்கு சீருடை அனிவது என்று உதவுகின்றான்.
இப்படி அழகா போய்ட்டிருந்த வாழ்க்கையில சனியன் சைக்கிள்ல வராம பிளைட்ல வந்தான். ஒரு நாள் கோகியின் பிறந்த நாள் வர பரிசாக தர சுந்தரேசன் புடவை எடுக்க நகரில் பிரபலமான ஒரு துணிக்கடைக்குப் போனான் கோகியின் நிறத்துக்கு தகுந்தது போல ஒரு புடவையை செலக்ட் செய்து பில் போட...அவர்கள் ஒரு விண்ணப்பம் மாதிரியொன்றில் முகவரி, போன் எண் எல்லாம் எழுதுங்க சார் என்றார்கள். எதற்கு என்று கேட்டான்?
"சார் நாங்க எங்க வாடிக்கையாளர்களுக்கு வருடம் ஒருமுறை பரிசு கொடுகின்றோம் குலுக்கலில் உங்கள் பெயர் வந்தால் பரிசு கிடைக்கும் சார்...! என்று பில் போடும் ஒல்லியான பையன் சொல்ல...! அசுவராஸ்யமாக பெயர் முகவரி எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விட்டு அதைப் பற்றியே மறந்து விட்டான்.
விதி வலியது என்பது போல போஸ்ட்மேன் கொண்டு வந்த பிரபல துணிக்கடையின் குலுக்கலில் சுந்தரேசன் பெயர் விழ அவர்கள் அனுப்பியிருந்த பரிசுப் பொருள்
"சாம்சங் கேலக்ஸி போன்!"
***
9 comments:
இன்றைய நடப்பு சொன்ன விதம் சூப்பர்
நல்லா சொன்னீங்க நண்பா..பெரும்பான்மையான வீட்டில் இப்படி நடக்கிறது..ஏதாவது ஒரு வகையில் முற்றும் கிடைக்கும்..
எங்க வீட்டுக்காரம்மா இத படிச்சுட்டு சுந்தேரசன்னு வச்சதுக்கு பதில் ராஜான்னு வச்சிருக்கலாம் என சொல்கிறார்கள் ..
அருமை
இதையும் படிக்கலாமே ??
அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25
ஹிஹிஹி ஆட்டம் ஆரம்பம் ஆச்சுல்லே
Mmmmmm......
Suya sarithai .....
Mattum alla.........
Bloggers....
Sarithai..............
நல்ல ஒரு கதை.
:) Nice!
உம்ம கதாநாயகன் மாதிரி ஆட்களை நம்பிதான் முகநூல் நிறுவனமே இயங்குது.
கணக்கு என்னுடைய தளத்தில்
Post a Comment