நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

>> Monday, June 3, 2013


குடி குடியை கெடுக்கும் குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்னடா இது...? சாத்தான் வேதம் ஓதுகின்றது! என்று நீங்கள் சிரிப்பது புரிகின்றது… மேலும் படியுங்கள் ஏன்? இப்படிச் சொல்கின்றேன் என்று புரியும்.

நான் இப்பொழுது இருக்கும் இடம் அரசின் 'டாஸ்மாக்' கடை அருகில் இருப்பதால் பலதரப்பட்ட குடிமகன்களை தினந்தோறும் பார்ப்பது வழக்கம். அவர்களின் அன்றாடச் செய்கைகளைக் காணும் போது மிக சுவாரஸ்யமாக இருந்த போதிலும் நான் குடிப்பதை கொஞ்சம்…கொஞ்சமாக வெறுக்கவே தொடங்கிவிட்டேன்.

நான் தினமும் பார்க்கும் மனிதர்கள் செரிமானத்திற்காக குடிக்கும் பணக்காரர்கள் அல்ல! உடல் வலிக்காக குடிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் அல்ல! பிறந்த நாள் மகிழ்ச்சிக்காக பியர் அருந்தும் இளைஞர்கள் அல்ல! குடியையே தொழிலாக கொண்ட விளிம்பு நிலை மனிதர்கள்.


இவர்கள் எந்த வேலைக்கும் செல்வதி்ல்லை, குடிப்பதற்காக வீட்டில் மனைவியிடமோ…! மகனிடமோ…! பணம் வாங்கிக்கொண்டு சரியாக காலை பத்து மணிக்கு கை நடுக்கத்துடன்  கடையை முற்றுகையிடுகின்றார்கள். சரியாக நான் கணக்கிட்டதில் ஒரு முப்பது நபர்கள் இந்த மாதிரி இருக்கின்றார்கள். குடிப்பழக்கத்தை அதிகமாக கொண்ட மேற்கத்திய நாடுகளில் கூட மது வியாபாரத்தின் மூலம் அரசாங்கம் இயங்குவதில்லை. ஆனால் நம்மை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் மது வியாபரத்தின் மூலமே இயங்குகின்றது என்பதை நினைத்துப் பார்க்கும் போது நாம் தலை குனிய வேண்டும். அதுவும் இது போன்ற மது அடிமைகள் உருவாகுவது நமது இனத்தையே கேவலப்படுத்தும்.

இந்த மது அடிமைகள் கொஞ்சம்…கொஞ்சமாக… மனநோயாளிகளாக மாறிவருகின்றார்கள். உண்மைதான் நேற்று ஒரு சம்பவம். தள்ளாடியபடி சாலையின் போக்குவரத்தை தடை செய்த குடிமகன் ஒருவரை ஒரு காவலர் தடியை ஓங்கிக்கொண்டு அடிக்க வரும் போது கம்பீரமாக நின்று “அடி….அடி….“என்று சட்டையைக் கழட்டி நெஞ்சை நிமிர்த்தி “நீயே விக்குற நீயே அடிக்கற அடி“ என்று நிற்கின்றார். காவலரே திகைத்துப் போய் விட்டார் போய்யா ஓரமா என்ற படி சென்று விட்டார்.

இவர்கள் சரியாக காலை வந்தவுடன் இரண்டிரண்டு பேராகக் கூடி ஒரு 'கோட்டர்' மட்டமான சரக்கை வாங்கி பகிர்ந்து அருந்துகின்றார்கள், எதுவும் சாப்பிடுவதில்லை நிழல் கண்ட இடத்தில் அமர்ந்து 'ஒபாமா' முதல் கிரிக்கெட் சூதாட்டம் 'ஸ்ரீசாந்த்' வரை அலசுகின்றார்கள். பிறகு மதியம் பன்னிரண்டு மணியளவில் மீண்டும் ஒரு சுற்று. மதியம் வீட்டுக்கு ஒரு சிலர் போவார்கள், ஒரு சிலர் அங்கேயே ரோட்டோரக் கடைகளில் எதாவது வாங்கிச் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துப் புரண்டு கொண்டிருக்கின்றார்கள்.

பிறகு மூன்று மணிக்கு ஒரு சுற்று, இரவு கடை மூடும் போது ஒரு சுற்று என்று அதோடு அன்றைய ஆட்டத்தை முடித்துக் கொள்கின்றார்கள். ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது மகன்களே மது அருந்த பணம் தருவதாகவும். சிலர் மனைவி, குழந்தைகள் என வேலைக்குப் போக அவர்கள் கொண்டு வரும் வருமாணத்தை வைத்து சரக்கடிப்பதாகவும், ஒரு சிலர் சின்ன..சின்ன.. வேலைகள் செய்கின்றார்கள் சுண்ணாம்பு அடிப்பது, காலி இடங்களில் உள்ள புற்களை சுத்தம் செய்வது என்று 'சரக்கு'க்கு அளவாக மட்டும் வேலை செய்கின்றனர்.


சில நேரங்களில் அந்த குடி 'அகோரி'களுக்குள் சண்டை வந்து விடும் இரத்தம் வர அடித்துக் கொள்கின்றார்கள், ஆனால் அடுத்த நாளே தோளில் கை போட்டுக் கொண்டு நண்பேன்டா என்று திரிகின்றார்கள். இவர்கள் கூறும் தத்துவத்தை நாம் தலைகீழாக நின்றாலும் சொல்ல முடியாது. அரசியலை கரைத்துக் குடித்திருக்கின்றார்கள், ஒருவர் சேக்ஸ்பியர் தொடங்கி எஸ்.ரா வரை விவாதிக்கின்றார். பட்டினத்தார் பாடல்களை எந்த தடுமாற்றமில்லாமல் சொல்கின்றார் ஒருவர். ஒவ்வொரு குடிமகனும் ஒரு 'சாக்ரடிஸ்' போல...அறிவுக் களஞ்சியமாக இருக்கின்றார்கள். அந்த தத்துவ ஞானிகளுக்கு விஷத்தை தருவதற்கு பதிலாக குப்பியில் குடல் வேகும் ஸ்பிரிட்டை கொஞ்சம்....கொஞ்சமாக நமது அரசு தந்து கொண்டிருக்கின்றது, இந்த அடிமைகள் இருக்கும் வரை கஜானா நிரம்பி வழியும்...அதே அளவு சுடுகாடும் நிரம்பும்.

*படங்கள் கூகுளில் இருந்து பெறப்பட்டது*

13 comments:

ஜோதிஜி 9:41:00 PM  

மகிழ்ச்சியாக வாழ் என்பதாக அரசாங்கம் குடி மகன்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது.

கோகுல் 10:22:00 PM  

பொங்கலுக்கு அரசு கொடுத்த நூறு ரூபாய் திரும்ப அரசுக்கே போன கதையும் இது தான்

திண்டுக்கல் தனபாலன் 10:54:00 PM  

தொட்டு விட தொட்டு விட தொடரும்... விடாது... விடவே விடாது...

வெளங்காதவன்™ 1:32:00 AM  

கள்ளு எறக்குனா இது மட்டுப்படும்னு நெனைக்குறேன்

கோவை நேரம் 3:50:00 AM  

கள்ளு இறக்கனும்...மதுவை மறக்கணும்

பன்னிக்குட்டி ராம்சாமி 9:18:00 AM  

அட்லீஸ்ட் போலி சரக்கையாவது தடுக்கலாம் அரசாங்கம்.

Unknown 1:39:00 AM  

@ஜோதிஜி திருப்பூர் says:
9:41:00 PM
மகிழ்ச்சியாக வாழ் என்பதாக அரசாங்கம் குடி மகன்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது.
////////////////////
அடிமைகளுக்கு தினம் ஒரு ரொட்டி தருகின்றோம்,அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்கின்ற ரோமானிய மன்னனைப் போல்...!அப்படித்தானே ஜோதிஜி!

Unknown 1:41:00 AM  

@கோகுல் said...
பொங்கலுக்கு அரசு கொடுத்த நூறு ரூபாய் திரும்ப அரசுக்கே போன கதையும் இது தான்
//////////////////////
நம் வரிப் பணத்தில் தருவதை தாங்கள் சொத்தில் தருவதைப் போல தருகின்றார்கள் அதையும் வாங்கும் நாம் கொஞ்சம் சொரணை கெட்டத்தனமாகத்தான் இருக்கின்றோம்.

Unknown 1:42:00 AM  

@திண்டுக்கல் தனபாலன் said...
தொட்டு விட தொட்டு விட தொடரும்... விடாது... விடவே விடாது...
///////////////////////
விடாது கறுப்பு...!

Unknown 1:44:00 AM  

@வெளங்காதவன்™ said...
கள்ளு எறக்குனா இது மட்டுப்படும்னு நெனைக்குறேன்
///////////////////
கள்ளுக்குடிப்பதால் 90வயசு வரைக்கும் எழும்பு உறுதியா இருக்கும் அத்தனை கால்சியம்.

Unknown 1:44:00 AM  

@கோவை நேரம் said...
கள்ளு இறக்கனும்...மதுவை மறக்கணும்
/////////////////////////
ஆமாங்க மாப்ளை...!

Unknown 1:46:00 AM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் போலி சரக்கையாவது தடுக்கலாம் அரசாங்கம்.
//////////////////////
போலி சரக்கு, அதிக விலைக்கு விற்பது என முறை கேடாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது மதுபான விற்பனை!

Unknown 1:47:00 AM  

கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP