தினம்...தினம்...தீபாவளி கொண்டாடியவர்கள்!

>> Tuesday, November 13, 2012தீபாவளி என்பது வடநாட்டு பண்டிகை, கொடநாட்டுப் பண்டிகை என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்க....எந்த பண்டிகையா...? இருந்தா என்ன நமக்கு சந்தோசம் தருதா தன் குழந்தைகள் சந்தோசமா இருக்காங்களா அது போதும் என்று பல காமன்மேன்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், இந்த தீபாவளி பண்டிகை பணக்கார குழந்தைகள் தங்கள் சந்தோசத்தை பட்டாசுகளில் வெடித்து காட்டிக் கொண்டிருக்க அவர்கள் வெடித்ததில் வெடிக்காததை பொறுக்கி எடுத்து வெடித்து சந்தோசப்பட்டும் ஏழைக் குழந்தைகள் ஏக்கத்துடன் ஒரு தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது, அந்த ஏழைக் குழந்தை பெரியவனாகிய பிறகு தன் குழந்தைகளும் நம்மைப் போல் ஏங்கித் தெருத்தெருவாக வேடிக்கை பார்க்கக் கூடாது என்று ஏராளமான வெடியை, வாங்கித் தந்து வெடிக்கும் போது எதாவது ஒரு குழந்தை வேடிக்கை மட்டும் பார்க்க வரும். ஆகவே இது சுழற்சிதான்.

திருப்பூரில் இன்று முதலாளியான நண்பன் போனஸ் கொடுக்கனும் வசூல் ஆகலைன்னு புலம்பறான், ஒரு காலத்தில் நானும் அவனும் போனஸ்க்காக காத்திருந்த போது "வருசம் பூரா வேலை வாங்குறானுக சீக்கிரம் போனஸை கொடுத்தா போவமல்லோ" என்று முதலாளியை திட்டியவன் இன்று அவனை எவனோ திட்டிக் கொண்டிருப்பான் என்று புரியாமல் புலம்புகின்றான்.

பண்டிகைகள் என்பது இந்தியாவில் மட்டும் சமதர்மமாய் இருப்பதில்லை அது எம்மதப் பண்டிகைகள் என்றாலும் ஒன்றே..! புத்தாடை, இனிப்பு, நல்ல உணவு, இதுவே பண்டிகை என்றாகிவிட்டது, வெளிநாடுகளைப் போல் ஒயின்,ரம் விஸ்கி, ஒரு பெக் அடித்து சியர்ஸ் சொல்லி விடிய..விடிய வீதிகளில் ஆட்டம் போடும் கலாச்சாரம் இந்தியாவில் இல்லை,அதனால்தான் பணம் இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் பிரித்துக் காட்டுகின்றது, பண்டிகைக் கொண்டாட்டங்கள் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்றாலும் குழந்தைப் பருவத்தில் மூன்று மாதங்ககளுக்கு முன்பாகவே பண்டிக்கைக்கான நாளை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காலண்டரைப் பார்த்து ஏங்கித் தவித்த குழந்தைதான் நானும் ஒரு காலத்தில்.

அன்றைய எண்ணெய்க் குளியல் வெறுப்பேத்தியது! இன்று அதுவே மருத்துவம் என்று விரும்பி செய்கின்றேன், வெடி! வெடி! என ஏங்கிய மனசு....!இன்றைய தூக்கத்தைக் கெடுப்பதால் எரிச்சலாக இருக்கின்றது, ஆனாலும் இந்த குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காணும் போது கோ ஆப் டெக்ஸ் துணியோடு விளையாடிய அன்றைய தீபாவளியை நினைக்க வைக்கின்றது. தூங்கிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நாயின் காதருகில் வைத்த அனுகுண்டின் சத்தத்தில் வெகுண்டு ஓடியதுதான் நான்கு நாட்கள் கழித்துதான் திரும்பி வந்தது! அந்த அப்பாவி ஜீவன்!

விளையாட்டாக கழுதைக்குட்டியின் வாலில் கட்டி விட்ட சரம்வெடியில் மிரண்டு பயந்து தெரித்து ஓடிய கழுதைக்குட்டி ரோட்டோரம் இட்லி விற்றுக் கொண்டிருந்த கிழவியை தள்ளிவிட்டு ஓடியது கிழவி வசைமாரி பொழிய ஒரு தாத்தா "கிழவி உன் இட்லிய தின்னிருக்கும் கழுத அதான் வசமா இன்னிக்கு பழி வாங்கிருச்சு..." என்று ஜோக்கடித்துக் கொண்டே உருண்டு ஓடிய பாத்திரங்களை எடுத்துக் கொடுத்தார். கிழவி கழுதைக்கு சொந்தக்காரரிடம் போட்டுக் கொடுக்க சலவை துணி கொடுக்க வந்தவர் எங்க வீட்டுல போட்டுக் கொடுக்க மாத்து வாங்கியது.

எப்பவும் லூசான டவுசர் போட்டுக் கொண்டு அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு திரியும் யோகா எங்க மாமா பத்த வச்ச வானம் கடைசி நேரத்தில் குடை சாய்ந்து அவன் டவுசருக்குள் புகுந்து கொள்ள டவுசரை விட்டுவிட்டு ஓடினான் எல்லாரும் சிரிக்க......! அவனைப் பிடித்து டவுசரை மாட்டிவிட்டு "எங்கடா குஞ்ச காணம் வானம் கொண்டு போயிருச்சு போல....."என்றார்கள் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள். அவன் அம்மாவிடம் போய் "அம்மா...அம்மா....வானம் என்னதை தூக்கிட்டுப் போய்ச்சு" என்றான். பிறகு விளையாட்டாக டவுசர்ல வானம் விட்டுருவே...என்று மிரட்டினாலே அழுது ஓடிவான். இதைப் போன்ற பல சம்பவங்கள் பலதும் நினைவில் மங்குவதில்லை 

கல்லுவெடின்னு ஒன்னு இருக்கும் இப்ப தடை பண்ணிட்டாங்க......களிமண் வச்சு பெசைஞ்சு உருண்டையா வச்சிருப்பாங்க செவுத்துல இல்ல தரையில அடிச்சா டமார்ன்னு காது பொளக்கும்.பிடிக்காத ஆளுகளை பயமுறுத்த தகுந்த வெடி அது....! சைக்கிளை ஒருத்தன் ஓட்ட, ஒருத்தன் கேரியர்ல உக்காந்துட்டு டவுசர் பாக்கெட்ல வெடிய வெச்சுக்குவோம்....இரவில் அவன் நடந்து போயிட்டு இருக்கும் போது பின்னாடியே போயி எதிரியோட காலடியில வீசுனா அவ்வளவுதான் அலரியடிப்பானுக....! நாங்க சைக்கிள்ல பறந்துருவோம். அதே மாதிரி ஓலை வெடி முக்கோண வடிவில் இருக்கும் அதுவும் தடை பண்ணிட்டாங்க வெடிச்சா காது ஜவ்வு கிழியும் இரண்டுமே ரொம்ப ஆபத்தானதாக இருந்ததால் தடை செய்யப்பட்டது.

பழைய வீட்டு பரணைச் சுத்தம் செய்த போது கிழவிகள் வெற்றிலை கொட்டும் கொட்லா மாதிரி சிறிய உருவத்தில் கனமான இரும்பில் ஒரு வித்தியாசமான பொருளாக இருக்கவே எடுத்து என் தாத்தாவிடம் கேட்டேன் இது என்ன ?என்று வாங்கிப் பார்த்தவர் இதுதான்டா எங்க பட்டாசு என்றார் எப்படி என்று கேட்டபோது கந்தகத்தை வாங்கி வந்து குழியில் சிறிது போட்டு உலக்கை மாதிரியானதில் அடிச்சா டமார்ன்னு வெடிக்கும் என்று கொள்ளுப் பட்டாசைப் போட்டு வெடித்துக் காட்டினார்......சுயமான வெடியை சிலர் தயாரிப்பார்கள் இரண்டு இரும்பு வாசர்களின் நடுவே கொள்ளு பட்டாசை நிறைய வைத்து போல்டு நட்டுப் போட்டு முறுக்கி தரையில் அடித்து வெடிப்பார்கள்.

கோவில் திருவிழாவின் போது திரியே இல்லாத வானத்தை சாதாரணமாக கையிலே வைத்து பற்ற வைத்து வீசுவார்கள், அப்படி ஒருவர் ஒரு திருவிழாவில் ஒத்தைக் கையுடன் வெடித்துக் கொண்டிருந்தார். விசாரித்தேன் வெடி தயார் செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்ப்பட்டு மணிக்கட்டுடன் கையிழந்த போதும் அந்த தொழிலை கர்ம சிரத்தையுடன் செய்து கொண்டிருக்கின்றார்....வேறு வேலை அவர்களுக்கு தெரியாது அரசு அவர்களுக்கு காப்பீடு மாதிரி எதாவது உதவி செய்யலாம்.

மண்ணில் புதைத்து ஒரு வெடி வைப்பார்கள் ஊரே அதிரும் பூகம்பம் வந்த மாதிரி! திருச்சூர் பூரம்  திருவிழாவில்  பிரசித்திப் பெற்றது அந்த வெடி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல கட்டிடங்கள் விரிசல் ஏற்ப்பட்டதால் பூரத்தில் அந்த வெடியின் சக்தியை குறைத்து வெடிக்கின்றார்கள். அது வெடிக்கும் போது காலிலிருந்து ஒரு அதிர்வலை தோன்றி மூளையை அதிர வைத்து நிற்கும் அது ஒரு பரவசம் என்றே கூறலாம் ஆனால் அரசாங்கம் கட்டிய பல பாலங்கள் பொடிந்து உதிர்ந்து விடும் என்பதால் தடை செய்து விட்டது, சட்ட விரோதமாக கிராமங்களில் வெடிக்கின்றார்கள்.

எங்க வீட்டுக்கு கிணறு வெட்டலாம் என்று முடிவு செய்தார்கள் ஆயிபாளைத்துக்காரர் என்று ஒருவர் இருந்தார் கிணறு வெட்டுபவர், அவரைக் கூப்பிட்டுச் சொல்ல பூசையெல்லாம் செய்து குச்சி மாதிரி எதையோ வைத்து நீர் ஓட்டம் பார்த்து கிணறு வெட்டத் தொடங்கினார், அவர் சுமார் ஒரு அம்பது அடி தோண்டியிருப்பார் ஒரு பெரிய பாறை குறுக்கிட்டது வேட்டுத்தான் போடனும் என்று சொல்லி விட்டார் கந்தகம் மருந்து, டெட்டனேட்டர் அன்றைய காலக்கட்டத்தில் சுலபமாக கிடைத்தது. சாதாரணமாக சைக்கிள் கேரியரில் வைத்து வாங்கிக் கொண்டு வந்தார், தோட்டாவை துளையிட்டு டெட்டனேட்டரை வைத்து பாறையில் ஆங்காங்கே ஓட்டை போட்டு அதில் வைத்து மெல்லிய ஒயரை இணைத்து கிணறுக்கு வெளியே பல மீட்டர் தூரம் கொண்டு வந்து சைக்கிள் டைனமோவில் இணைத்து எல்லாரும் ஒளிந்து கொண்டு சைக்கிளை வேகமாக சுற்றினார்கள்கள். ஒரு அதிர்வில் பாறை சுக்கு நூறாக உடைய தண்ணீர் ஊற்று உடைய கிணற்றில் தண்ணீர் நிரம்பி வழிய கையெட்டும் தூரத்தில் தண்ணீர் மோந்து....மோந்து குளிப்போம், குடிப்போம். வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்கள் குளிச்சியான கிணற்று நீரை ஒரு சொம்பு மோந்து குடித்து தேவாமிர்தம் என்பார்கள்.

நான் முதன் முதலாக ஒரு மிகப்பெரிய வெடியை காதுக்குள் ஒரு அரை மணி நேரம் அடைக்கும் ஒரு பேரழிவைப் போன்ற சத்தத்தை கேட்டது அன்றுதான் அதன் பிறகு நமது நாட்டில் வெடித்த பல வெடிகள் மற்றும் போர்வெலெ் கம்பனிகள் இந்த கிணறு வெட்டுபவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து விட்டது. அவர்கள் இப்பொழுது வேறு வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டார்கள்...! தினம்...தினம்...தீபாவளி கொண்டாடிய அவர்கள் இன்று எங்கோ ஒரு மூலையில் முடங்கி படுத்துக் கொண்டிருப்பார்கள்....இன்று நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த வெடிச் சத்தம் பல ஞாபகங்களை அவர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும். 

8 comments:

பட்டிகாட்டான் Jey 1:21:00 AM  

//சுயமான வெடியை சிலர் தயாரிப்பார்கள் இரண்டு இரும்பு வாசர்களின் நடுவே கொள்ளு பட்டாசை நிறைய வைத்து போல்டு நட்டுப் போட்டு முறுக்கி தரையில் அடித்து வெடிப்பார்கள். //

பங்காளி இது நான் இஸ்கூல் படிக்கும்போது நானே பண்ணி வெடிச்சது...

கிடத்தட்ட பத்து வாசர்ஸ் வரையிலும் நீளமான நட்டுல கோத்து, அதை ஒரு ஒரும்புக்கபியில் மாட்டி, இந்த பொடுக் கேப்சின்ன போட்டு வடிவுல இருக்கும் (துப்பாகியில போடுற ரோல் பகேப் மாதிரி இல்லாம உதிரியா இருக்கும்)அதை எவாசயர்களுக்கிடையில் வச்சி போடல்டை அல்லா முறுக்கு , தரையில அடிச்சா, அனுகுண்டு சவுன்ட் கிடைக்கும்....:-))))

முத்தரசு 1:24:00 AM  

ம் . வித்தியாசமான அலசல்

Robert 2:06:00 AM  

எந்த பண்டிகையா...? இருந்தா என்ன நமக்கு சந்தோசம் தருதா தன் குழந்தைகள் சந்தோசமா இருக்காங்களா அது போதும்// அதேதான்.... கையெட்டும் தூரத்தில் தண்ணீர் // ஆமா இப்ப மோட்டாருக்காச்சும் எட்டுதா அந்த தண்ணீர்!!!!!!

”தளிர் சுரேஷ்” 2:12:00 AM  

சுகமான நினைவுகள்! பாராட்டுக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

MARI The Great 3:47:00 AM  

சில நினைவுகளை மீட்டி சென்றது பதிவு!

sakthi 4:49:00 AM  

பழைய நினைவுகள் ! நன்றி நண்பா

உலக சினிமா ரசிகன் 1:49:00 AM  

என் நினைவிலிருக்கும் ஓலை வெடியையும்,கல் வெடியையும் மீட்டெடுத்தமைக்கு நன்றி நண்பரே...

அதை ஏன் தடை செய்தார்கள் ?

கலாகுமரன் 2:16:00 AM  

அந்த நட்டு வெடி, வெங்காய வெடி,ஓல வெடி இன்றும் நினைவுகளாக...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP