அம்பது ரூபாய்க்கு ஐநூறு பயம் காட்டுறாங்க-பீட்சா!

>> Wednesday, October 24, 2012


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரில்லர்ப் படம், 100வது நாள் திரைப்படத்துக்கு பிறகு இப்படியான ஒரு படம் வரவில்லை என்பது உண்மை! நூறாவது நாள் திரைப்படத்தில் நீங்கள் அடுத்த காட்சி இது எனக் கணிக்க முடியாது, அதைப் போன்ற ஒரு திரைப்படம்தான் "பீட்சா" தமிழில் பெரும்பாலான ஹாரர்ப் படங்கள் அதிபயங்கரமான ஒப்பனையுடன், கொடூரச் சத்தங்களுடனே பார்வையாளர்களை பயமுறுத்த முனைகின்றன, உதாரணமாக ராம்கோபால்வர்மாவின் சமீமப் படங்கள்..!ஆனால்...! அவை மை டியர் லிசா, யார், ஏழாம் நெம்பர் வீடு போன்ற ஏகப்பட்ட படங்களில் பே…..பே.....எனப் பயமுறுத்தி நமக்கு பயமில்லாமலும், ஒரு வகையான சலிப்பும் ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு படம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ் பாராட்டுக்குறியவர்.


திகில் படங்களில் காதல் காட்சிகள் மொக்கையாக இருக்கும். ஆனால் மனுசன் பூந்து விளையாடியிருக்கின்றார். ரொமான்ஸ் பார்வையாளர்களிடமும் பற்றிக் கொள்கின்றது. இந்த படத்தின் டைட்டிலை யாரும் மிஸ் செய்து விடாதிர்கள்..! நேரத்திலேயே தியேட்டருக்குச் சென்று விடுங்கள்.

ஆரம்ப காட்சிகளில் காதலியுடன் ஒரே வீட்டில் இருக்கின்றார் அவர்களுக்குள் எல்லாம் நடக்கின்றது, "ஏன்? சட்டையை அயர்ன் பண்ணலை...!" என்று திட்டிவிட்டு சமாதானமாக "நான் எதிலாவது கேர்லெஸ்சா இருக்கிறனா...?" என்றுக் கேட்கிறார் விஜய் சேதுபதி! "நான் கர்ப்பமா இருக்கறேன்....!" என்று நம்பீசன் சொல்வது ஒரு மினிக் குறும்படம்.

குடித்து விட்டு நண்பர்களிடம் ஆலோசனைக் கேட்கும் போது ஒரு நண்பன் "காண்டம் கம்பனி மேலக் கேஸ் போடலாமா...?" என்றுக் கேட்பதும் "கடிதம் எழுதி வச்சாலே தூக்குலத் தொங்கறதுதானா...?" என கேட்குமிடம் மற்றும்  "நீ......! ரொம்பப் பயந்தவனாச்சே எப்படிடாச் சாமாளிச்சே...?" என்று நம்பீசன் கேட்பதும் "பயந்தவனாலதான் பேய்க்கதை சரியாச் சொல்ல முடியும்...!" என்பதும் "ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வீக்னெஸ் பெண்,பணம், சிலருக்கு ஆவிபேய்..!" என்பதும் ஆங்காங்கே விஷவல் கவிதைகள் படம் நிறைய! கொட்டிக் கிடக்கின்றது.


விஜய் சேதுபதி மிகச்சிறந்த தேர்வு! விரிவாகக் கூற முடியாது…! ஆனால் மனிதன் தன் முகத்தில் பயத்தைக் காட்டி நம்மை நெளிய வைக்கின்றார் எப்படா…? இடைவேளை விடுவாங்க…! என்று கேட்க வைக்கின்ற நேரத்தில் படம் முடிஞ்சதும் பதினாறு ரீல்தானா என்று நம்பவும் முடியவில்லை…!

நம்பீசன் முகப்பரு நாயகி! கண்ணம், நெற்றி, கண் என முத்தமிடும் விஜய் சேதுபதியிடம் உதட்டைக் காட்டுகின்றார், தியேட்டரே வாய் குவிக்கின்றது.....

என் முன் சீட்டில் ஓர் இளம் ஜோடி உக்கார்ந்திருந்தது திகில் காட்சிகளில் கணவனை கட்டிக் கொண்டது அந்தப்புள்ள! சுப்புராஜ் ஒரு எட்டு வருசத்துக்கு முன்னாடிப் படம் எடுத்திருக்க கூடாது!

நிறைய சேட்ஜிஸ்! குடும்பம் சகிதமான படத்திற்கு வந்திருந்தார்கள், தமிழ்ப் படம் முடிந்துப் போகும் போது ஹிந்தியில் சாருகான் படத்தை சுட்டாக….அமீர்கான் படத்தை சுட்டாக என ரவுசு விட்டுப் போகும் மைதா மாவுக்கள் வெளிரிய முகத்துடன் அமைதியாக வெளியேறியதைப் பார்க்கமுடிந்தது.


மொத்தத்தில் ஒரு தமிழில் மிக அருமையான ஒரு திகில் படம். இயக்குனருக்குக் காதல் காட்சிகளும் நன்றாக வருகின்றது அடுத்த படம் திகில் எடுத்து போரடிக்கவிடாமல் ஒரு காதல் படம் கொடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

அய்யா ராசாக்களா….! படத்தை தியேட்டரில் பாருங்கள்.!சிடியில், இணையத்தில் பார்த்துச் சில விசயங்களை இழந்து விடாதிர்கள்!

Read more...

நான் தேடும் வெளிச்சங்கள்...ஜோஸபின் பாபா/புத்தக விமர்சனம்

>> Friday, October 19, 2012



தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நகைச்சுவையூட்டக்கூடிய நிகழ்வுகளையோ….அல்லது மிகவும் மனது வேதனையுண்டாக்கியத் துயர நிகழ்வுகளையோ நம் மனது நினைவில் வைத்திருக்கும்! பெரும்பாலான எழுத்தாளர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் கற்பனைக் கூட்டி ஒரு சிறுகதையான வடிவோ, சுயசொறிதலாக கலந்து எழுதுவார்கள் இதுதான் எழுத்துலகின் எழுதப்படாத மரபு.


ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது. அதில் என் மனம் கவர்ந்தச் சில விடயங்களைப் பார்க்கலாம்….!

ஒற்றை மரத்தில் நாம் சிறு வயதில் தன் பெற்றோரை விட்டு வேறொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும் போது. அங்கு நமக்கு நடக்கும் அவமாணங்கள் ஆறாத வடுக்களாய் மறையும் வரை மனதின் மூலையில் துருத்திக் கொண்டிருக்கும்.நம் பெற்றோர் மீது இருக்கும் வன்மத்தைக் குழந்தைகளிடம் காட்டுவது வேதனையான விசயம், இன்று பல குடும்பங்களில் கணவன் மீதுள்ள வன்மத்தை மனைவி குழந்தைகளிடமும், மனைவி மீதுள்ள வன்மத்தைத் தன் குழந்தைகளிடமும் மாறி..மாறி…குற்றம் செய்யாக் குற்றவாளிகளாய்ப் பல குழந்தைகள் சிலுவையில் அறையப்படுகின்றன. காரணமில்லாமல் தன் மீது காட்டும் கோபமும் சுடுச் சொற்களும் பிஞ்சு மனதில் எத்தகைய வேதனையை உண்டாக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை என்பதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம் என்பது போல “மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்ததை விட……அம்மா அடிச்சது முதன் முறையாக வலித்தது…” என்கின்ற வரிகளில் சொல்லலாம். 

பால்யக் காலத்தில் பிடித்த ஆசிரியர், உறவினர், தோழி, தோழன் ஒரு சிலர் மனதில் இருப்பார்கள்….அவர்களை ஒரு சிலரைத் தவிர யாரும் தேடிப் போய்ப் சந்தித்துவிட்டு வருவதில்லை அதுவும் பெண்கள் தன் வகுப்புத் தோழனைச் சந்திப்பது மிக அரிது! என் உயிர் தோழனில் தன் கணவனுடன் சென்று அவரின் கடைக்குச் சென்று சந்தித்துப் பால்யக் கதைகளை பேசி வர எத்தனை பேரால் இயலும்…. 

சூத்திரம் போன சுப்பனில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றச் சுப்பனின் பிறப்புறுப்பை அறுத்தெரிகின்றாள் ஓர் அப்பாவிப் பெண். அந்த சுப்பன் மருத்துவ சிகிச்சை முடிந்துத் தேயிலைத் தோட்டதிற்கு பணிக்கு வருகிறான் ,அனைவரிடமும் அந்த இடத்தில் உயிர் இல்லை என்பதை கண்டுபிடிக்க மருத்துவ உலகிற்கு உதவியாக இருந்தேன் என கூறிக் கொண்டிருந்தானாம் வேடிக்கை மனிதர்கள். 

பெண்ணிற்கு மட்டும் பிறந்த வீடு என்பது விருந்துக்கு வந்த விருந்தாளி வீடு போல்தான் என்று வீட்டில் அங்கலாய்க்கின்றார்! அதே போல் சொந்த வீட்டில் வாடகை வீட்டில் படும் துன்பங்களே சொந்த வீடு கட்டத் தூண்டும் காரணியாகிப் போகின்றது என்று கூறுகின்றார். அவர் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வர்ணம் பூசப் பணப் பற்றாக்குறையேற்பட பிறந்த வீட்டுக்கு பேருந்தில் பயணிக்கின்றார், நாமும் கூடவே பயணிக்கின்றோம் ஏனெனில் நம்மில் பலர் சொந்த வீட்டின் ஆசையில்தான் இருக்கின்றோம். 

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள் பூச்செடி விற்பனை வீட்டில் தொடங்க ஒரு வழியாக அதை விற்கப் பட்டச் சிரமங்களை நுணுக்கமாக சொல்லியிருக்கின்றார். பச்சை தாழ்வாரம் என்கின்ற தன் பூந்தோட்டப் பெயர்ப் பலகையை ரிக்கி நாயின் வீட்டுக்குக் குட்டிக் கூரையாக்கிவிட்டு மந்திரப் பெட்டியில் பொழுதைப் போக்கிக் கொண்டு இன்று புத்தகம் போடுமளவுக்கு வந்து விட்டது. 

சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறதில் சேலத்துக் குடும்பத்தின் கத்திப் பேசும் பழக்கம் மொத்தத் தமிழர்களையே கத்திப் பேசுகின்றவர்கள் என்கின்ற எண்ணத்தை மலையாளிகளிடம் உண்டாக்கிவிட்டது, உண்மைதான் தமிழர்கள் கொஞ்சம் கத்திதான் பேசுகின்றார்கள்…..! அதேபோல் மூக்குடைந்த கல் சிலையை சிமண்டு வைத்து மூக்கு வைத்து ஒரு கலையை கற்பழிக்கும் கொலையை பல கோவில்களில் பார்க்கலாம்! இங்கும் அவ்வாறே...!அரண்மனையை நாமும் சுற்றிப் பார்க்கின்றோம்.

என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம் ஓர் உயரதிகாரிப் பெண் "தான்" என்கின்ற அகந்தையில் எப்படி அழிந்துப் போகின்றாள் என விவரிக்கின்றது…எனக்குத் தெரிந்து வட்டாச்சியராக இருந்த ஒரு பெண் இப்படித்தான் இருந்தார். அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் முகத்தில் அடித்தமாதிரிப் பேசியும், குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் ,உறவாடாமல் தனக்கு என்று வட்டம் போட்டு வாழ்ந்த அவரின் கணவருக்கு திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட போது யாரும் உதவிக்கு இல்லாமல் திண்டாடித் தன் கணவரை இழந்தார். அந்த சம்பவம்தான் நினைவில் வந்தது. 

நினைவுகளில் சக்தி ஒரு பழைய சைக்கிள் வாங்க வந்த ஏழைப் பெண்ணைப் பற்றியது, கடைசியில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் அது தெரிந்து தந்தையே மகளை கொன்று விட்டதாகவும் நேரடியாக கூறாமல் பூடகமாக கூறியிருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மனதைப் பாதித்தவள் சக்தி என்றே விளங்குகின்றது. 

நான் ஒரு சில கதைகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கின்றேன் இதைப் போல் ஆங்காங்கே மனதை மெல்லிய மயிலிறகால் வருடியும், கீரியும் நம்மை அவர் உலகத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகின்றார் கன்னி முயற்சி என்றாலும் மிகச் சிறந்த ஒரு தொகுப்பு எனவே கூறலாம் அதைப் படைத்த அவருக்கு வாழ்த்தையும் பாராட்டையும் கூறுகின்றேன்.


புத்தக விலை 75 ரூபாய். 
J.P Josephine Mary, 
Indian Bank, M.S University Branch, 
A/C No : 854576367, IFSC code : IDIB000A107 என்ற விலாசத்தில் D/D எடுத்தும் அல்லது அவர் முகவரியில் M/O அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.

J.P Josephine Baba,
18, Vijayakrishna Nagar,
N.G.O A Colony,
Tirunelveli.
Pin Code 627007 


Read more...

ஆப்பாயில் சாப்பிடுவது எப்படி?

>> Monday, October 8, 2012


நான் கொஞ்ச நாள் பதிவுலகில் இருந்து விலகியிருக்கலாம் என்று நினைத்திருந்தேன். தினம் மூன்று போன்! நான்கு சேட்! ஏழு டுவிட்! என்று என் வாசகர்கள் கதறி அழுததால் சரி ஒரு பதிவு போடலாமே என்று.......கர்ர்ர்ர்ர்ர்ர்தூ.......இங்க பாரு வயலன்ட் ஆகாது நீங்க காரித் துப்பியது என் வீட்டைத் தாண்டி, கடலைத் தாண்டி, மலையைத் தாண்டி உகாண்டாவுல ஒரு காலைத் தூக்கி?! இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்த ஒரு சொரி நாய் தலையில் விழுந்து நாய் சம்பவ இடத்திலேயே மரணம் அது அந்த ஊர் தினத்தந்தியில் கூட வந்து விட்டது. உகாண்டாவில் ஏது தினத்தந்தி? என்று நீங்கள் கேட்கலாம் அங்கியும் "லாரி டயர் டமார்! பத்தொன்பது உயிர்கள் பனால்!" என்று எழவு செய்தியையும் எகனை மொகனையா எழுதுகின்ற பத்திரிக்கை இருக்கும் அதை விடுங்க….மேட்டருக்கு வருவோம்.
 பிளீஸ் கவுச்சி பிடிக்காதவங்க ஆப்பாயில் என்று இருக்கும் இடத்தில் பாயாசம் போட்டுக்கங்க.பாயசம் பிடிக்காதவங்க....வேற நல்ல ஃபிளாக்கா போய் படிங்க....இந்த ஆப்பாயில் சாப்பிடறது ஒரு கலை…..!ஆயகலைகள் அறுபத்திநான்கேமுக்கால் கலையை கத்தவனும் ஆப்பாயிலை லொபக்குன்னு முழுங்க முடியாது! அதுக்கும் தனி திறமை வேனும் இல்லை சட்டை நாறிடும். அது கூட பரவாயில்லை சார்....!வீட்டுக்காரம்மா பாஸ்டன் பிராண்டேடு ஆயிரத்து ஐநூறு ரூவா சட்டையா இருந்தாலும் ஆப்பாயில் விழுந்த சட்டைய துவைக்க கொண்டு போகையில் செத்த எலிய கொண்டு போற மாதிரியே குச்சி வெச்சு தூக்கிட்டுப் போறதை பார்த்தா கண்ணுல பீரு....பீரா வருது சார்!
 கடைக்கு நண்பர்களுடன் போனால் பெரும்பாலும் நான் புல்பாயில், இல்லை ஆம்லட்தான் சாப்பிடுவேன், ஆப்பாயிலை பொறுத்தவரை நமக்கு அலர்ஜி! "அந்தோணி" அப்படிங்கிற நண்பர் ஒருவருடன் சாப்பிடப் போனபோது எனக்கும் சேர்த்து ஆப்பாயில் சொல்லிட்டார்! அழகா சின்னதா இலைய கட் செய்து ஒரு தட்டுல வெச்சு பூப்போல ஆப்பாயில எடுத்து கொண்டு வந்து வச்சிட்டாங்க…நான் ஆப்பாயில் வந்திருச்சு அந்தோணி எப்படிச் சாப்பிடறாருன்னு பார்ப்போம் அப்படியே சாப்பிட்டுக்கலாம்ன்னு இருக்கேன் அவரும் வந்த ஐட்டங்களை எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு கடைசியா ஆப்பாயிலுக்கு வந்தார்.
 ஒரு நாட்டை சூழ்ந்து தாக்குற ஒரு படையோட லாவகத்தில சுத்தியும் இருக்கின்ற வெள்ளை கலர் பாகத்தை கொஞ்சம்…..கொஞ்சம் பிச்சு வட்டத்தை சின்னதாக்கி அப்படியே பூப்போல எடுத்து லபக்குன்னு உள்ள தள்ளிட்டாரு…..!அட்ரா சக்க….! இவ்வளவுதானா…? நானும் முயற்சி செய்து சேதாரம் துளியும் இல்லாம சாப்பிட்டுவிட்டேன்! "ஆஹா நான் ஆப்பாயில் சாப்பிட்டுடேன்....." என்று கத்தியதைக் கேட்ட பக்கத்தில் இருந்த குண்டு பெண்மணியின் வாயில் தினித்த பூரி அதிர்ச்சியில் வெளிய வந்து விழுந்தது கடுப்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
 மறுபடியும் ஒரு ஆப்பாயில்….ஆர்டர்..! இப்படியாக நான்கு, ஜந்து, பத்து என்று ஆப்பாயில் சாப்பிட்டுப் பழகினேன்! அந்தோணி கடுப்பாயிட்டார் அவரால எட்டுத்தான் சாப்பிட முடிந்தது. இப்படியாக ஆப்பாயில் சாப்பிட்டதின் விளைவாக அடுத்த நாள் வயிற்றைக் கெடுத்து நிற்காமல் போனதால் அலுவலகம் போகாமல் அறையிலேயே கிடந்தேன் அது வேற விசயம்! ஆனாலும் ஆப்பாயில் சாப்பிட்டு நானும் ரௌடியாயிட்டேன்….! நானும் ரௌடியாயிட்டேன்….!
 இப்ப என்ன விசயம்ன்னா….! ஒரு நாள் மதியம் அடையார் ஆனந்த பவனுக்கு சாப்பிடப்போனேன் அங்க அந்தோணிய ரொம்ப வருசத்துக்கு பிறகு சந்திச்சேன் "என்னப்பா இங்க ஆப்பாயில் கிடைக்காதே...!" என்றார் சிரித்தபடியே...!"இப்ப சாப்பாடே அதிகமா சாப்பிடறது கிடையாது அந்தோணி இதுல எங்க ஆப்பாயில் சாப்பிடறது" அப்படினேன் "அப்ப புல்லா சரக்குதானா…?" அப்படினார் அதுவும் இல்லை நண்பர்கள் கூடினால் மட்டுமே…என்றேன்..! ஆமா ஃபிளாக்கெல்லாம் எழுதற போல……! நான் படிச்சேன் உன் புரபைல் போட்டா பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன் என்றார் ஏதோ பொழுது போகலைன்னா கிறுக்குவேன் என் ஃபிளாக்கெல்லாம் படிக்காதே அப்புறம் ஒரு மாதிரியாயிருவே என்றேன்…! நான் எப்பமே ஒரு மாதிரிதானே என்றார் ஐய்யா நீவீர் வாழ்க என விடு ஜூட் என்று பறந்து வந்து விட்டேன் இல்லாத இறகை விரித்து.

ஆப்பாயில் : ஆப்பாயில் அப்படின்னு போட்டு கூகுள்ல தேடியதில் வந்த படங்கள் ஆகவே  இதற்கும் எனக்கும் எந்த சம்மதமில்லீங்கோ.......!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP