ஏனுங்க...கொஞ்சனேரம் தூங்கறேனுங்க மெட்ராஸ் வந்தா எழுப்புங்க....!

>> Wednesday, May 8, 2013


சோலையம்மா போன்ற பல படங்களை தயாரித்த கள்ளிப்பட்டி ஜோதி கனவு தொழிற்சாலையில் கையைச் சுட்டுக்கொண்டதால்... சென்னையை விட்டுச் சிறிது காலம் சொந்த ஊரில் குடும்பத்துடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவருடைய மகன் எங்க பள்ளியில் வருடத்தின் நடுவில் புதுப்பையனாக சேர்ந்து படிக்க தொடங்கினான், அவனுடைய நட்பும், ஏழாவது பாட புத்தகத்தில் வந்த தலைநகரம் பற்றிய பாடமும், எனக்குச் சென்னை என்கின்ற நகரத்தையும், அதன் பிரம்மாண்டத்தையும், கனவு காண வைத்தது. நான் சென்னைக்கு வாழ்நாளில் ஒரு நாளாவது செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை ஏற்படுத்தக் காரணம் கடலும், ரயிலும்.

எங்க மாவட்டத்தில் ஈரோட்டைத் தவிர ரயிலை எங்கும் பார்க்க முடியாது, ரயில்ப் பாதையே இல்லாத மாவட்டம் எங்களுடைய மாவட்டம். இரண்டாவது நீர் பிரமாண்டம் கடல். ஏரி, குளம், வாய்க்கால் என்று திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீராக இருக்கும் தண்ணீர் தேசம் எனது ஊர் என்றாலும், கடல் பார்க்க வேண்டும் என்பது கனவு.

முதன் முதலாக திருப்பதி ரயிலில் சென்ற போது ரயில் என்பது இரைச்சல் மிகுந்த ஒரு இரும்புத் தொட்டில் என்று புரிந்து கொண்டேன். பலமுறை சென்ற பிறகு அது ஒரு மனிதன் பயணிக்கும் குப்பைத் தொட்டி என்று புரிந்து போனது. தேனீர் விற்பவனின் சத்தம், குழந்தை அழுகுரல், பெண்களின் பேச்சு, குடிகாரர்களின்  அரசியல் பேச்சு என்று இல்லாமல் அடிக்கடி தடதடக்கும் தண்டவாள உரசல் என ரயில் சீக்கிரம் வெறுத்துப் போய்விட்டது.

கடலினை முதன்முதலாக கேரளாவின் அரபிக் கடலின் கரையில் கால் நனைத்தபோது... காலின் கீழே மணல் நகருவது இந்த பூமியே நகருவது போன்ற ஒரு பிரமை. சிறுஅலை, பெருஅலை என்று கால் நனைந்த போது ஏற்பட்ட ஆனந்தம். இந்த பிரபஞ்சமே பாதிக்கு மேல் கடலால் நிரம்பியிருக்கின்றது அதன் துளியை ஸ்பரிசித்த ஒரு கர்வம். ஒரு கிராமத்தானாக கடல் அன்னையை தரிசித்த பெருமை! என்று இருந்த கடல், ஊர் திரும்பிய போது உப்புத் தண்ணீரால் கால் அரித்த போது கடல் என்பது ஏரி, குளம் போல் கிடையாது என்பது புரிந்தது. 

சென்னை சென்ற போது மெரினா பீச்சின் காற்றும், உப்பு, மிளகு தூவிய கடல் மீனும், ஆங்காங்கே மடியில் படுத்துக் கொஞ்சும் காதலர்களும், குடும்பம் குடும்பமாக வரும் கிராம மக்களும், எம்.ஜி.ஆர் சமாதியில் காதுவைத்துப் பார்ப்பதும், எல்லாமே ஒரு வினோதமான உலகமாக தெரிந்தது. சென்னை மொழியும் ஒரு வித்தியாசம்தான் வார்த்தைக்கு வார்த்தை மரியாதை சொற்களை பயன்படுத்திய எங்களுக்கு ஒரு சின்னப்பையன் கூட "இன்னாப்பா" என்பது ஒரு ஆச்சர்யம்தான். இந்த உலகம் ஆச்சர்யங்கள் நிறைந்தது என்பதை கடலும் ரயிலும் மட்டுமல்ல சென்னையும் எனக்குப் புரிய வைத்தது.

சென்னை நண்பர் ஒருவர் எங்களோடு வேலை பார்த்த போது "என்னப்பா இது இந்த ஊர்க்காரங்க இவ்ளவ் மரியாதை கொடுக்குறாங்க கூச்சமா இருக்கு எனக்கு" என்றார் அவர் பெயர் 'ராமதாஸ்' "ஏங்க ராமதாசுங்க....சாப்பிட்டிங்களாங்க..." என்று வார்த்தைக்கு வார்த்தை மரியாதை தரும் ஊரில் மிகவும் சிரமப்பட்டார். பிறகு பழகிய பிறகு அவரும் "ங்க" போட்டு பேச ஆரம்பித்துவிட்டார் விடுமுறையில் ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்தவுடன் "இன்னாப்பா எங்க ஊருக்கு போனாலும் இந்த மரியாதை வந்து தொலையுது எல்லாரும் பேஜாரா பாக்குறாங்கப்பா...!" என்று புலம்பினார்.

எனக்கு சென்னை ஓர் ஆச்சர்யம்! அவருக்கு திருப்பூர் ஒரு ஆச்சர்யம்!. ஒவ்வொருவருக்கும் ஒரு ஊர் ஆச்சர்யம். இங்கு அவர் வந்த வேலை முடிந்து மீண்டும் சென்னை திரும்பிய போது 'இவ்வளவு நல்ல ஊரை விட்டுப் போவது எனக்கு பிடிக்கலை' என்று நெகிழ்வாகத்தான் கிளம்பினார். ஆனால் எனக்கு சிறிய வயதில் ஏற்பட்ட சென்னை மீதான பிரம்மாண்டம், ஆச்சர்யம் திருப்பூரின் மேல் எப்பொழுதும் இருந்ததில்லை அது ரயில் மீதான காதல் போலத்தான்.

“ஒண்டுக்குடித்தனம்,
புறாக்கூண்டு
மேன்சன்,
'பேய்' வேகத்தில் வரும்
ஆட்டோவிலிருந்து
தப்பித்தல்,
'மீன்பாடி' வண்டியில்
உயிர்பிழைத்தல்,
'நகர பேருந்து' நெரிசலில்
'பர்ஸ்' பாதுகாத்தல்,
உப்புத் தண்ணீர்
குளியல்...,
அறைகளில் தங்க
விருந்தினர்களை அனுமதிக்காத
வீட்டு உரிமையாளர் -என
வாழும் எங்களை விட
நிலாவில் கால் வைத்த
'ஆம்ஸ்ட்ராங் 'என்ன
பெரிய கொம்பா...?”

2 comments:

திண்டுக்கல் தனபாலன் 10:05:00 PM  

நல்லது... கருத்துரைப்பெட்டியை மாற்றியதற்கு...

1. G+ profile இல்லாத எவரும் கருத்து இடம் முடியாது (openID, Anonymous வசதிகள் இல்லை)
2. அனைத்து comment களும் blog owner ஆல் கட்டு படுத்த முடியாது.
3. blogger dashboard இல் Comment எண்ணிக்கை 0 என காட்டுகிறது.
இன்னும் பல முக்கியமான பிரச்சனைகளை அறிய கீழ் உள்ள எனது நண்பர் தளத்தில் அறியவும்...

http://www.tamilcc.com/2013/04/google-comments-box.html

மற்றுமொரு இனிய நண்பர் அவசரப்பட்டு மாறினார்... அதனால் என்ன நடந்தது என்பதை அறிய இங்கு செல்லவும்... கருத்துரைகளை வாசிக்கவும்...

http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_20.html

புதிய பதிவு Reader-ல் வருகிறது... இங்கே காணோம்...?

Unknown 8:14:00 AM  

@ திண்டுக்கல் தனபாலன்
ஒரு சோதனை முயற்சியாக வைத்தேன், சில கோடிங் மாற்றம் செய்தால் குறைகளை போக்கலாம்...! அதைச் செய்ய கடுப்பாக இருந்தது...! அதான் பழையபடி மாற்றிவிட்டேன்..!

@கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP