பழனி முருகனுக்கு....அரோகரா..! பக்தர்களுக்கு வேதனைதானா...?

>> Friday, April 5, 2013


பழனி என்றாலே எனக்கு முதலில் பிடிக்காமல் இருந்தது. ஏனென்றால் உலகத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலத்தில் மிக அதிகமான பிராடுகளை கொண்ட தலம் இத்தலம்தான். கையில் சந்தனத்தை வைத்துக் கொண்டு ஒளிந்து கொள்வார்கள் திடீரென்று ஓடி வந்து  பொட்டு வைத்து காசு பிடுங்கும் பெண்கள் கூட்டம், பிற மாநிலத்தவர்கள் வந்தால் கீழே அடிவாரத்திலேயே டோக்கன் வாங்க வேண்டும் என்று ஸ்பெசல் தரிசனம் என்று ஆயிரம் ஜநூறு என்று இரக்கமேயில்லாமல் பிடிங்கிவிடுவார்கள். மேலே சென்றால் அந்த டோக்கனை வைத்துக் கொண்டு பத்து ரூபாய் வரிசையில் கூட போகமுடியாது  நிறைய சேட்டன்கள் குடும்பத்துடன் பரிதாபமாக நிற்பதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். 

அர்ச்சகர்கள் அதற்கு மேல் தனிவழியில் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவார்கள். செருப்பு, நம் உடமைகளை இங்கே வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறும் கடைக்காரர்கள் உடமைகளை திருடிக் கொள்வதும். ஏமாந்தால் மொட்டையடிக்கும் கூட்டம் இந்த தலத்தில்தான் ஏராளம். ஆனால் இப்பொழுது காவலர்களை வைத்து பொட்டு வைக்கும் பெண்களை அறவே இல்லாமல் செய்து விட்டார்கள். மற்ற ஏமாற்றச் செயல்கள் ஓரளவு குறைந்திருக்கின்றது.

பழனி சென்று மகனுக்கு இரண்டாவது மொட்டையடிக்க வேண்டும் என்பது மனைவியின் வேண்டுதல், வெயில் காலத்தில் குழந்தைகளின் அதிகப்படியான முடி இருப்பது அவர்களுக்கு எரிச்சலையும், வியர்த்து எந்த நேரமும் வியர்வை ஈரத்துடன் இருந்தால் சளி பிடித்துக் கொண்டு நம்முடைய பாக்கெட்டில் இருந்து சில ஜநூறு ரூபாய்களை மருந்து மாத்திரைகளுக்கு அழவேண்டியிருக்கும் என்பதால் இந்த வாரம்... அடுத்த வாரம் என காலம் தாழ்த்தி போன ஞாயிறு குடும்பத்துடன் காலை 5.00மணிக்கு எழுந்து அதிகாலை தூக்கத்தை தொலைத்து காலை 7.00மணிக்கு திருப்பூரில் அதிக கூட்டத்தை சுமந்து கொண்டு விழிபிதுங்கியபடி மெதுவாக அரசு பேருந்தில் பழனி போனோம்.

பழனி சென்று அடிவாரத்தில் மொட்டையடித்து படியில் மெதுவாக ஏறினால் முருகனை தரிசிக்க பங்குனி கொடுமுடி தீர்த்தம், காவடி எடுக்கும் பக்தர்கள், சேரநாட்டவர்கள் (சேச்சிகள் அதிகப்படியாகவே தமிழ்அழகனை தரிசிக்க நின்றிருந்தார்கள்). பத்து ரூபாய் கட்டணம், இலவச தரிசனம், நூறுரூபாய் கட்டணம் என ஒரு லட்சத்தைத் தாண்டும் கூட்டம். காலை பதினொன்று மணிக்கு வரிசையில் நின்று மாலை நான்கு மணிக்கு இராஜஅலங்காரத்தில் முருகனை தரிசித்தோம், ரோப் கார் என்று அழைக்கப்படும் ஒரு கழுதை வண்டியில் ஏற மூணு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம்!  மறுபடியும் படியில் இறங்கலாம் என்று முடிவு செய்து யானைத்தடத்தில் இறங்கினோம். நாங்க படியில் இறங்கி பல மணி நேரம் கழித்து ரோப் காரில் வந்தவர்கள் வந்தார்கள் இந்த ரோப் கார் கழுதையை எதாவது பேரிச்சம் பழத்துக்கு போடுவது நல்லது. அப்புறம் பழனியில் கிடைக்கும் குளிர்ப்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் அத்தனையும் ஒரிஜினல் மாதிரியே இருக்கும் ஆனா இருக்காது அத்தனையும் டூப்ளிகெட்டுகள். பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் பகிரங்கமாக விற்பனை செய்கின்றார்கள்.

மேலே ஏறிக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் மயக்கம் போட்டு கீழே விழ ஒரே கூச்சல், குழப்பம், அந்த பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் தோளில் தூக்கிப் போட்டு வேகமாக இறங்கினார்கள். எந்த மருத்துவ வசதியும் படியில் ஏறுபவர்களுக்கு கிடையாது. ஒரு ஸ்டெச்சர் கூட இல்லை. அதை விட கொடுமை பாதுகாப்புக்கு என குறைவான காவல் துறையினரே உள்ளனர். ஒரு பெண் காவலர் ஒருவரே வரிசையில் நிற்பவர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் அடிக்கின்ற பங்குனி மாத உக்கிரமான வெயிலுக்கு மிகவும் களைத்துப் போனார் அவரும் பாவம். கோயிலில் வரும் வருமாணத்தைப் பெறுவதில் காட்டும் அக்கரையை பக்தர்கள் மேல் துளியும் காட்டாத தமிழக அரசு கொஞ்சம் திருப்பதி நிர்வாகத்தைப் பார்த்தாவது திருந்தினால் நல்லது. சுகாதாரம் மருந்தளவு கிடையாது வரிசையில் நிற்கும் கூண்டு மாதிரியான இடங்களில் அதிக்கப்படியான குரங்குகள், அதன் எச்சங்கள், மக்கள் நெருக்கடியை தாங்காத சில பெண்கள் எடுத்த வாந்திகள், என கடும் துர்நாற்றம் கோவிலா கவர்மெண்ட் கக்கூஸா என ஜயம் ஏற்படுகின்றது. இலவச செருப்பு விடும் இடத்தில் வற்புறுத்தி காசு கேட்பது என்று பழனிக்கே உரித்தான பக்தர்களை மொட்டையடிக்கும் கும்பல் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். முருகன் பாவம் என்ன செய்வாரு அவரு முதுகையே சுரண்டி பாதி திருடி வித்துட்டானுக..! முருகா கோமணத்துக்கு உருவாஞ்சுருக்கு மட்டும் போட்டுறாதே...!படிமுடிச்சு போட்டுக்கோ சொல்லிட்டேன் ஆமா..!

7 comments:

Ramesh 8:47:00 AM  

ஆமா பாஸ். மக்களுக்கேத்த மன்னன்... மன்னனுக்கேத்த மக்கள்..... nothing to say....

திண்டுக்கல் தனபாலன் 8:51:00 AM  

அதிகாலை 7 மணிக்கு அல்லது இரவு 7 மணிக்கு செல்வது நல்லது...

வின்ச் என்றால் குறைந்தது 3 மணி நேரம்... 'லன்ச்' நேரத்தில் (அடிக்கடி மாறும் !) ரோப் கார் என்றால் குறைந்தது 4-5 மணி நேரம்...

இலவச சாப்பாடு - கூட்டத்தைப் பொறுத்து ஐந்து மணி நேரம் கூட ஆகலாம்...

மற்றபடி சிறிது ஏமாந்தாலும் முதல் மொட்டை நமக்கு தான் என்பதும் உண்மை...

kathir 10:06:00 AM  

நூறு ரூவா தரிசனம் , தேங்காய் ஓடைக்க 20 ரூவா கமிசன் : எங்க பாத்தாலும் குப்பை ,சாக்கடை , முரட்டு வியாபாரம் ..சந்தோசமா நம்மல திரும்ப விட மட்டங்கி . அரோகரா அரோகரா தான் .

வ.மு.முரளி. 10:20:00 AM  

சுடும் உண்மைகள். நன்றி நண்பா.
காண்க: http://writervamumurali.wordpress.com/2012/11/15/பழனியிலிருந்து-ஒரு-பாதயா/

-வமுமுரளி

ஜோதிஜி 6:39:00 PM  

இந்த பதிவின் மூலம் அறிந்த நீதி என்ன?


1. காலையில் தூக்கத்தை தொலைத்து விட்டு செல்லும் குடும்ப கடமைகள்

2. அரசு பேரூந்தில் சென்று அரசாங்கத்திற்க லாபம் சம்பாரித்து கொடுத்த கடமைகள்.

3. பல மணி நேரம் காத்திருந்து உடல் ஆரோக்கியத்தை சரியாக வைத்துள்ளேன் என்று நிரூபித்த பாங்கு.

4. தலைமுடி அதிகம் இருந்தால் குழந்தைக்கு வரும் வரக்கூடிய நோய்களை கண்டறிந்த பாங்கு.

ஆனால் இடையில் பார்த்த பல காட்சிகளை விவரிந்த பாங்கு தான் நம்ம பங்காளிங்க அத்தனை பேரும் ரொம்ப நல்லவன்டா என்ற சொல்ல வைத்தது. யாராவது ஒருத்தரு கூட திருட்டு கூட்டத்தை தூக்கிப் போட்டு கும்மினாக்கூட முருகன் பாராட்டடி இருப்பாரோ என்று ஆழ்ந்து யோசித்து வைக்க இந்த பதிவு உதவியது.

ஆனாலும்

உங்க வீட்டுக்காரம்மா எப்படி கஷ்டப்பட்டு உங்களை திருப்பூரில் இருந்து நகர்த்தி கூட்டிக்கிட்டு போனதைப் பற்றி ஒரு பதிவு தனியாக எழுதலாமே.

SNR.தேவதாஸ் 10:49:00 AM  

அன்பு நண்பரே வணக்கம்.
தங்களுடைய பழனி அனுபவம் அனைவருக்கும் நடப்பதுதான்.
ஆதலால் நாங்கள் பழனிக்கு செல்லும் முறையை பாருங்கள்
முதலில் பழனிக்கு விசேசமான நாட்களுக்கு செல்வது இல்லை.
அப்படி கண்டிப்பாக செல்வது என்றால் அறைகள் முன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.தேவஸ்தான அறைகள் விசேசமில்லாத நாட்களில் தாங்கள் தபால் மூலமாகவே பதிவு செய்துகொள்ளலாம்.
விசேச நாட்களில் தங்களுக்கு தெரிந்த அதிகாரமிக்க ஆளும் கட்சி அரசியல்வாதியின் சிபாரிசு கடிதம் வாங்கிக்கொள்ளவும்.அறைகளுக்கு இந்த கடிதம் முன்னுரிமை தரும்.
அடுத்து கண்டிப்பாக ஒரு நாள் புரோகிராம் பழனியில் இருப்பதற்கு செய்து கொள்ளுங்கள்.முடி எடுப்பதற்கு தேவஸ்தானம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் முடி இறக்குங்கள்.பஸ்சை விட்டு இறங்கிய உடன் செருப்பை இங்கே கழட்டி விடுங்கள்,காப்பு கட்டி இருப்பதால் செருப்புடன் செல்லக்கூடாது என முதலில் அமைதியாகவும் பிறகு சப்தமாகவும் சொல்லுவார்கள்.இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்.
முன்பதிவு அறை இருந்தால் ஆட்டோவில் சென்று விடுங்கள்.அதிகபட்சம் பாதவிநாயகர் கோவில் வரையே 40.00ரூபாய்தான்.
ரூம் இனிமேல்தான் போட வேண்டும் என்றால் தேவஸ்தான அறைகள் இருக்குமிடத்துக்குச் சென்று தங்களது குடும்பத்தை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு பிறகு அறை தேடுங்கள்.முடிந்த வரை தேவஸ்தான அறையை எடுக்க முயலுங்கள்.பாதுகாப்பாக இருக்கும்.வாடகையும் குறைவாக இருக்கும்.தங்களுடைய ரேசன் கார்டு போன்ற ஆவணங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவஸ்தான அறை எடுத்துவிட்டால் தேவையான அனைத்து பொருட்களையும் தாங்களே வாங்கிக்கொள்ளுங்கள்.மலைக்குச் செல்ல புறப்படும்போது தங்களது செருப்புகளை தங்களது அறையிலேயே விட்டு விடுங்கள்.
ஏனெனில் மலைக்கு மேலே போகும்போது ரோப்காரில் சென்று கீழே இறங்கும்போது நடந்தோ அல்லது மலை இரயிலில் வருவதாக மாற்றம் ஏற்பட்டால் செருப்பை எடுக்க மறுபடியும் அங்கே ஆட்டோவோ ,அல்லது நடந்தோ வெயிலில் அலைய வேண்டியது வரலாம்.
முருகனுக்கு அபிஷேகம் செய்ய எந்த ஒரு அபிஷேசக பொருளும் வாங்காதீர்கள்.
பால் ஒன்று மட்டுமே மேலே மலையில் அபிசேகத்திற்கு அனுமதி உண்டு.ஆதலால் சித்தனாதன் விபுதி கடைக்கு எதிரில் வரிசையாக உள்ள கடைகளில் ஆவின் பால் கிடைக்கும்.அதில் ஒரு லிட்டரோ இரணடு லிட்டரோ வாங்கி அதற்குண்டான அபிஷேசக இரசீதையும் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு பாத விநாயகரை மனம் உருக வணங்கிவிட்டு முடிந்த வரை மேலே செல்லும்பொழுது மலைப்பாதையில் நடந்து செல்லுங்கள்.வழியில் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி செல்லுங்கள்.தான,தர்மம் செய்வதாய் இருந்தால் மூலக்கடவுளை வணங்குவதற்கு முன் அனைத்தையும் செய்து விடுங்கள்.கடவுளை வணங்கிய பிறகு எந்த தான,தர்மத்தையும் செய்யாதீர்கள்.மலைக்குச் சென்ற பிறகு தங்களக்குத் தேவையான அனுமதி கட்டணங்களை வாங்கிகொண்டு பிரகாரத்தை வலம் வந்து மேற்கு வாசலில் உள்ள பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே சென்று சாமி தரிசனம் செய்யுங்கள்.உள்ளே கொஞ்சம் காசை கணக்கு பாராமல் செலவு செய்யுங்கள்.சிறப்பான தரிசனம் கிடைக்கும்.வீட்டிலிருந்து புறப்பட்டு மறுபடியும் வீடு திரும்ப வரும் வரை அனைத்து செலவுகளும் இறைவனுக்கு செய்யும் செலவே.ஒரு தடவை தரிசனம் செய்தால் போதும் என எண்ணாமல் தங்களால் எவ்வளவு தடவை முடியுமோ தரிசனம் செய்யுங்கள்.
அங்கு எதற்கும் அவசரப்படாதீர்கள்.
அனைத்தையும் மெதுவாகவே செயல்படுத்துங்கள்.யாரும் முண்டி அடித்துக்கொண்டு சென்றால் வழி விட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
கடைசி பக்தர் இருக்கும் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
கடைசியில் பஞ்சாமிர்தம் வேறு எங்கும் வாங்காதீர்கள்.தேவஸ்தான பஞ்சாமிர்தம் மட்டுமே வாங்குங்கள்.கை படாமல்,ஈரம் படாமல் இருந்தால் ஆறு மாதம்வரை கெடாது.பழனி மண்ணில் தங்களது கால் பட்ட உடன் முருகனின் சரணம்,திருநாமம் தவிர தேவையில்லாத அரட்டை,விவாதம்,அடுத்தவர்களுடன் வாக்குவாதம் இவைகளை தவிர்த்துவிடுங்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Unknown 9:57:00 PM  

எல்லாம் சரிங்க அண்ணே....
முடி எடுக்குமிடத்தில் நடக்கும்
கொள்ளையை கண்டுக்கலையா....

எனது மகள் வானதிக்கு 2009 ல்
பழனியில் முடி எடுக்க தேவஸ்த்தான
கட்டணம் ரூ 10 போக அதிகம் ரூ50 கேட்டார்கள்...

அதகளபடுத்தி அவனுகளை மன்னிப்பு
கேட்க வைத்து ரூ 10 மட்டுமே கட்டண ரசீது போட்டு மொட்டை அடித்து விட்டு வந்தோம்.......

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP