விஸ்வரூபம்

>> Thursday, February 7, 2013


விஸ்வரூபம் பல சர்ச்சைகளுக்கிடையே சில ஆடியோவை  'MUTE'  செய்து, கொஞ்சம் 'சீனை'க் 'CUTE' செய்து, ஒரு வழியாக அதிகச் சேதாரமில்லாமல் தமிழகத்தில் வெளியாகி தன்னுடைய ரூபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

திருப்பூர், கோவையில் தினம் ஐந்து காட்சிகளாக அரங்கம் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது,கமல் விளம்பரதாரர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை! கமல் மகிழ்ச்சியை ஒரு ஆம்பூர் பீப் பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிக் கொள்ளலாம்.

பாலக்காடு டப்பா தியேட்டரில் ரசிகர்களின் கூச்சலுக்கிடையில் பார்த்ததால் நிறைய வசனங்கள் சுத்தமாக புரியவில்லை. இன்று திருப்பூரில் பார்த்தபோதுதான் புரிந்தது இந்த படத்தில் சர்வதேச மொழிகள் அரபி, உருது, ஆங்கிலம் என்று படம் முழுவதும் வியாப்பித்துள்ளது.

பூஜாகுமாரின் 13 வருட வன வாசத்திற்கு பிறகு விஸ்வரூபத்தில் திறந்த மார்பும், அய்யங்கார் பாஷை பேசும் மூடாத வாயும் சில இடங்களில் எரிச்சலையும், எச்சிலையும் உருவாக்குகின்றது.

ஆன்டிரியா பாடகர் அனிருத் உதட்டை கவ்வி இழுத்த காட்சியை யுடுயூப்பில் பார்த்து புளங்கிதம் அடைந்த வாலிப, வயோதிக அன்பர்களே கமல் படத்தில் என்றவுடன் குதூகலமடைந்திருப்பிங்க....அப்படியே மனசை ஒரு போர்வை போட்டு மூடி வைத்துவிடுங்கள் இருவருக்கும் கைகுலுக்கும் காட்சி கூட இல்லை.

சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆப்கன் செட்கள் வயசுக்கு வந்த அத்தை பொண்ணுக்கு கட்டிய குச்சு போல ஆங்காங்கே ஏராளமான ஓட்டைகள். குகை செட்டில் சாக்கு துணி அப்பட்டமாக தெரிக்கின்றது. அதை தவிர்த்துப் பார்த்தால் படம் ஒரு பக்கா ஆங்கிலப்படம். ஒரு சில சினிமாட்டிக் காட்சிகள் மட்டுமே நீ பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமா என்று நியாபகப் படுத்துகின்றது அதை பின்னால் பார்ப்போம்.

எத்தனையோ நடிகர்கள் ஸ்திரீபாட் என்கின்ற பெண் வேடத்தில் நடித்தாலும் கமலின் நளினம் கடுகளவும் வராது. கமலின் Perfect Performance யாருக்கும் வராது நான் இந்திய அளவில் சொல்லுகின்றேன், (நீங்க ஜிம்கேரிய சொல்லுவீங்கன்னு தெரியும்) கதக் கலைஞராக நளினத்துடன் அவர் நடனம் ஆடும் போதும், சாதாரணமாக நடக்கும் போதும், அவர் பேசும் அய்யங்கார் பாஷையும் சான்சே கிடையாது. தான் பிறவிக் கலைஞன் என்பதை அடிக்கடி நிருபிக்கின்றார்.

கமல் உமரின் ஆப்கன் தீவிரவாதப்படையில் சேர்ந்ததும் ரன்வேயில் ஓடி முடித்த விமானம் ஜிவ்வென்று மேலேழும்புவதைப் போல வேகமெடுக்கின்றது. நோட்டோ படையின் தாக்குதல், பின்லேடன் வருகை, துரோகத்திற்காக தூக்கிலிடுதல். தூக்கிட்டு முடித்ததும் கால்களை தடவிப்பார்த்து திரவம் வெளியாகியு்ள்ளதா என சோதித்தல். என நுட்பமான சில காட்சிகள். நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. (தூக்கிலிடப் பட்டவர்கள் எந்த விதமான கழுத்து எழும்பு முறிவில்லாமல் மூச்சுக்குழாய் நசுங்கி இறக்கும் போதுதான் சிறிது மலம், சிறுநீர், விந்து, வெளியாகும் அப்படி திரவம் வெளியானால் மட்டுமே முறையான மரணம் என்று அர்த்தம்)

I am not child என்று ஒரு சிறுவன் ஓடுகின்றான் ஊஞ்சலில் ஆடாமல், அவனை விட மூத்தவனான அண்ணன் ஊஞ்சலில் ஆடுகின்றான். அடுத்த நாள் மனிதவெடி குண்டாக நோட்டோ படையின் வாகனத்தை சிதறடித்து மரித்துப் போகின்றான். அடிப்படைவாதிகள் குழந்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது இந்த காட்சி.

அமெரிக்க FBI இந்திய உளவாளியின் உதவியினால் நகரத்தில் நிகழக்கூடிய ஒரு குண்டு வெடிப்பை தடுக்கின்றது என்பது லாஜிக் இல்லாதது என்றாலும் சில இந்திய வழக்குகள், தமிழக காவல் துறையின் வழக்குகள் குறிப்பிட்ட நாடுகளில் காவல்துறையின் துப்பறியும் பிரிவுக்கு பாடமாக உள்ளது எனும் போது சாத்தியமே என்றும் கூடக் கூறலாம்.

நிறைய நியூக்கிளியர் பாம் பற்றி பல அறிவியல் வார்த்தைகள் சராசரி ரசிகனான எனக்கு புரியாத போதும். இன்னமும் சிகப்பு டேப் சுற்றப்பட்ட டைப்பீசை பாம் என்று காட்டினால் கெக்கபிக்கே என்று சின்ன குழந்தை கூட சிரித்து விடக் கூடிய அபாயமும் இருக்கின்றது.

ஆரம்ப காட்சியில் கை கட்டி வைத்துள்ள கமல் இறந்தவனுக்காக தொழுகின்றேன் என்று கேட்டு தொழுதபின் எடுக்கும் விஸ்வரூபம்

கடைசியில் அமெரிக்க ராணுவ வீரன் கேட்கும் கேள்விக்கு நமக்காக தொழுகின்றார் என FBI அதிகாரியே கூறுவது போன்ற சில இடங்கள் சினிமாட்டிக்காக இருப்பது என்று ஒரு சில குறைகளும் உள்ளது என்றாலும் விஸ்வரூபம் நிறைய விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படம் இஸ்லாமியர்களை சிறுமைப் படுத்துகின்றதா? என்றால் நான் இஸ்லாமியனாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும்…! நான் இஸ்லாமியன் இல்லை அதை எப்படி உணர்வது? ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

இந்த படத்தின் அடுத்த பாகம் இருக்கின்றது என்று கமல் இன்னோரு "பொக்ரானை"ப் போடுகின்றார் பார்க்கலாம். அது எப்படி வெடிக்கின்றது என்று…!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP