நமக்கும் வரும் புற்று நோய் (Cancer)

>> Sunday, September 23, 2012


''மாடி வீட்டுச் சன்னல் கூட சட்டை போட்டிருக்கு…..
சேரிக்குள்ள சின்னப் பொண்ணு அம்மணமாயிருக்கு''
என்கின்ற பாடலோடு ஆரம்பிக்கும் ''பாடும் வானம்பாடி'' படத்தில் எனக்கு அறிமுகமாயிருந்த ஆனந்த்பாபுவின் நடனம் ஆச்சர்யப் படுத்தியது !கால்களை எக்ஸ் மாதிரி வைத்து ரப்பர் மாதிரி உடம்பை வளைத்து தன்னுடைய தந்தை நாகேஷ் அவர்களின் நடன அசைவை ஒத்து ஆடிய அவருடைய ஆட்டத்துக்கு பலர் ரசிகர்களாக மாறினார்கள்.


அன்றைய காலகட்டத்தில் இருந்த நடிகர்களில் ரஜினி, கமல், போன்றோரில் கமல் நடனத்தில் சிறந்தவர் என்றாலும் ஆனந்த்பாபுவின்  ''டிஸ்கோ'' நடனத்துக்கு ஒரு தனி "கிரேஸ்" இருந்தது. பல படங்களில் நடித்த அவர் சமீம காலத்தில் அவரை புற்றுநோய் தாக்கி உடல் மெலிந்து, முடிகள் எல்லாம் கொட்டி பார்க்கும் போது மிகுந்த வேதனையளித்தது. ஆனால்...! அந்த நோயை வென்று இப்பொழுது கூட சில படங்களில் வில்லனாக தலைகாட்டினார். இதைப் படிக்கும் போது நமக்கு செய்தியாக இருந்தாலும் அதன் வலி...! உயிர் பிழைப்பதற்கான போராட்டம்..! நாம் அருகில் இருந்தால்தான் உணர முடியும்.


எங்க உறவினரான என் தாத்தாவின் தம்பி ஒருவர் கடுமையான உழைப்பாளி நன்றாகத்தான் இருந்தார், திடீரென்று சிறுநீரில் ரத்தம் கலந்து போக வழக்கமாக பார்க்கும் கோபியில் உள்ள ஒரு கிளினிக்கில் பார்க்க !அந்த மருத்துவருக்கு சந்தேகம் வர... கோவை "யுனைடேட்" மருத்துவமணைக்கு சிபாரிசு செய்ய அங்கு சென்று பல சோதனைகளை செய்ய கேன்சர் கிட்னியில் கேன்சர் இருப்பது உறுதியாகிவிட்டது. "ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ணிட்டா அவர் உயிர் பிழைப்பார்" என்று மருத்துவர்கள் சொல்ல அவரிடம் உண்மையை சொல்ல வில்லையென்றாலும், டெஸ்ட் எடுக்கப் போகும் அறைகளில் இருக்கும் கேன்சர் சம்மதமான வாசகங்களை வைத்து தெரிந்துகொண்டு அழுதார் .சில லகரங்களை செலவு செய்து அறுவை சிகிச்சையும் செய்து வயிற்றில் ஒரு ஓட்டை போட்டு குழாய் வைத்து ஒரு பையை தொங்க விட்டார்கள் கட்டுமஸ்தாக இரண்டு முரட்டு காளைகளை பூட்டி ஏர் உழுத விவசாயி கிழிந்த நாராக படுக்கையில் விழுந்தார்.


நான் சென்ற போது கண்ணில் நீர் வழிய நான் செத்து போயிருவேன் என்று அழுதார்....!நான் சின்ன வயசில பள்ளி விடுமுறையின் போது நானும் என் மாமா பையனும் கிணற்றில் நீச்சல் அடிப்பதற்காக அவர் தோட்டத்துக்கு போனோம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தோட்டம்! விளையாடியதில் நேரம் போனது தெரியாமல் இரவாக அங்கேயே உறங்கி விட்டோம்.


நடு இரவில் யானைக் கூட்டம் கரும்பு காட்டை தேடி துவம்சம் செய்ய படையெடுத்தது சுற்றியுள்ள தோட்டக்காரர்களுடன் சேர்ந்து பட்டாசு கொளுத்திப் போட்டும் ஓடவில்லை! தீப்பந்தங்களை இரண்டு கைகளில் ஏந்திக் கொண்டு காட்டுயானைகளின் அருகில் சென்று விரட்டினார்...!

அப்படிப்பட்ட தைரியம் மிக்க ஒரு விவசாயி! புற்றுநோயின் வீரியத்தையும், வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் குழந்தை போல் அழும்போது எதிரிக்குக் கூட இந்த வியாதி வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். இறைவன் சில நாட்களிலே அவருக்கு வலியிருந்து விடுதலை கொடுத்து விட்டான் "ஆப்ரேசன் பண்ணாம இருந்திருந்தாக் கூட இன்னும் கொஞ்ச நாளைக்கு உசிரோட இருந்திருப்பார்...." என்று அவரின் காரியத்துக்கு வந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பண்ணாம இருந்திருக்கலாமோ..?  எனக்கூட தோன்றியது...! ஆனாலும் பல காலம் வேதனையோடு வாழுவதை விட இது மேல்தான் என்று நினைத்துக் கொண்டேன். எழும்புப் புற்று நோய் தாக்கியவர்கள் வலி தாளாமல் டாக்டர் என்னை கொன்னுடுங்க...என்று அழுவார்களாம்! 


நடிகை ஸ்ரீவித்யா பல படங்களில் அழகு பதுமையாக வந்து கடைசிவரை தன் அழகான அக்காவாக.......அம்மாவாக.....பாட்டியாக வந்து நடிப்பை கவர்ந்தவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு முடியிழந்து, முகம் பொலிவிழந்து, பார்க்கவே பரிதாபமான நிலையில் மரணத்தை தழுவினார். கடைசி காலத்தில் யாரையும் பார்க்க விரும்பவில்லை அவர்கள். இந்த புற்று நோய் ஏழை, பணக்காரன் யாரையும் விட்டுவைக்காமல் தாக்குகின்றது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் அதனால் வருடத்துக்கு ஒரு முறை ஆண்கள், பெண்கள் அனைவரும் புற்றுநோய் சோதனை செய்துகொள்வது நலம் என்று நினைக்கின்றேன், நீங்க என்ன சொல்றீங்க...? 

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP