முகம் - கெழக்கே போவும் புல்லட்டு
>> Tuesday, April 1, 2014
பெரியார் மாவட்டம், தூக்கநாயக்கன்
பாளையம் ஒன்றியம், கொங்கர்பாளையம் கிராமம், வடக்குத் தோட்டத்தில் வசிப்பவருமான ஆறுமுகச்சாமியின்
மகன் நடேசனாகிய நான்; முத்தப்பகவுண்டர் மகன் கொன்னவாயக்கவுண்டன் என்கின்ற பாட்டையன்
அவர்களுக்கு எழுதிக்கொடுத்த பிராமசரி என்ன வென்றால். TAP 5635 எண் உடைய கறுப்பு நிறமுடைய 1937ம் வருடம் தயாரிக்கப்பட்ட புல்லட் வாகனத்தை
நான் பயன்படுத்திவந்தேன். தற்பொழுது அதை விற்பனை செய்யும் விதமாக முழு பாத்தியத்தையும், வண்டி ரிஜிஸ்டர் புத்தகத்தையும், ஒப்படைத்து! அதற்கு ரூ5001 பெற்றுக் கொண்டேன்.
இனி எனக்கும், இந்த குறிப்பிட்ட வாகனத்துக்கும், எந்த விதமான பாத்தியமும் இல்லை! என்பதை
உறுதிப்படக் சுயநினைவுடன் கூறுகின்றேன்.
இப்படிக்கு
சாட்சிகள் :
1.குப்பன்
2.சக்கரை
பிராமசரியை படித்துப் பார்த்த நடேசன் மேலும் கீழும் கொன்னவாயக்கவுண்டரைப்
பார்த்தார், வாசலில் பவ்யமாக நின்று கொண்டிருந்த குப்பனையும், சக்கரையையும் பார்த்தார் “நல்ல திருவாத்தான்டா நீயி...!”
என்று சிரித்தார்.
"எதுக்கு சிரிக்கற நீ...? வண்டிய நீ குடுக்கற நான் வாங்குற
அதுக்கு ஒரு எழுத்து வேண்டாமா..?" என்றார் கொன்னவாயர் வேகமாக பேசியதில் சிறிது மூச்சு வாங்கியது
போல தோன்றியது...!
"சரி...சரி....கையெழுத்துப் போட்டுத்
தரேன் விடு.." என்று பத்திரத்தை சுவற்றில் வைத்து ந டே ச ன் என்று இந்தியா மேப்
மாதிரி போட்டுக் கொடுத்தார். அதே பேனாவில் பெருவிரலைக் காட்டிய குப்பனின்
ரேகையும், சக்கரையின்
ரேகையும் பதிக்கப்பட்டது ராத்திரி கொன்னவாயர் வாங்கித்தரும் சாரயத்திற்காக சப்புக்
கொட்டிக் கொண்டனர். "வண்டிய இப்பவே எடுத்துட்டு போயிரு என்ன" என்றார் நடேசன்
"பின்னே இன்னிக்கு நல்ல நாளு இன்னிக்கே
எடுத்துட்டு போயிடுறோம்...!"என்றவர் தன்னுடைய
மீசையைத் தடவி விட்டுக் கொண்டார் கொன்னவாயக்கவுண்டர்.
வீட்டுக்குப் பின்புறம்
இருந்த சாலையில் அந்த வாகனம் நின்றிருந்தது அதை வாகனம் என்பதை விட பழைய இரும்பு என்றுதான் சொல்ல
வேண்டும் வாகனத்தின் நிறம் கறுப்பு என்பதற்கான அடையாளம் எதுமில்லை பைக்கின் சீட்டு
கிழிந்து பஞ்சு வெளியே வந்திருந்தது உக்காருமிடத்தில் ஒரு பெரிய துளை வேறு இருந்தது
குப்பன் "சீட்டுல என்ன வங்காட்டம் இருக்குது..? உள்ள பாம்பு....கீம்பு இருக்கப்போவுது
கொன்னவாய் கவண்டரே" என்றான். ஆழமாக ஊடுருவிப் பார்த்து பாம்பு இருக்கின்றதா என்று
பார்த்த கொன்னவாயக்கவுண்டர். சீட்டை இரண்டு தட்டு தட்டினார் அந்த பொந்திலிருந்து ஒரு
சிட்டுக்குருவி புர்ர்ர்ரென்று பறந்து போனது...! கண்டிப்பாய் பாம்பு உள்ளே இருக்க வாய்ப்பில்லை
என்பதை நம்பினார்...ஆனால் குருவிகள் உள்ளே என்ன செய்து கொண்டிருக்கும்.... என்கின்ற
சிந்தனையில் குருவி பறந்த திசையில் பார்த்தார் அந்த குருவி ஒரு கருவேல மரத்தில் அமர்ந்தது,
அது ஒரு கூடு கட்டிக்
கொண்டிருந்தது கூடு சொகுசாக பஞ்சை பிய்த்தெடுத்து மொத்தை போல உருவாக்குகின்றது போல...என்று
பல விதமான சிந்தனையில் இருந்தவரை நடேசனின் குரல் இவ்வுலகிற்கு வரவைத்தது.
"சரி எடுத்து தொடைச்சுட்டு இருங்க மாட்ட
கட்டீட்டு வர்றன்"என்ற நடேசன் அங்கிருந்து போய்விட்டார்.
சாலைத் தடுக்கில் சொருகி வைத்திருந்த பழைய துணியை எடுத்து
ஒரு தட்டு தட்டிவிட்டு மேல ஏறிக் உக்கார்ந்து கிக்கரை இரண்டு பம்ப் செய்து ஒரு அடி
அடிக்க இடிவிழுந்த மாதிரி புடும்புடும்புடும் துடும்...ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........என்றது.
குப்பன் அதன் கர்ணகடூரமான சத்தம் தாளாமல் இரு காதுகளின் துளைகளில் தன்னுடைய விரல்களை
அழுத்தமாக சொருகிக் கொண்டான் அதையும் மீறி சத்தம் காதுகளில் ஒலித்தது. "காண்டாரஓலிது காது போயிருமாட்ட
இருக்குது" என்றான்.
கட்டுத்தாரையில் கட்டியிருந்த டில்லி எருமை கயிற்றை அறுத்துக்
கொண்டு மிரண்டு தோட்டத்தை விட்டு பாய்ந்து ஏரித்தடத்தில் புயல் மாதிரி
ஓடியது. எதிரே வந்த சித்தய நாசுவன் எருமை வருகின்ற வேகத்தைப் பார்த்து அடப்புப் பொட்டிய
தூக்கிப் போட்டு விட்டு கிலுவை மரத்துல் ஏறி வவ்வால் மாதிரி ஒட்டிக் கொண்டான்....எருமை
கொஞ்ச தூரம் ஓடி மூச்சு வாங்கிய படி நின்றது. மறுபடியும் திரும்பிப் போய் சித்தய
நாசுவன் மரத்திலிருந்து இறங்கினால் குண்டியில் குத்தலாமா என சிந்தனையிலிருப்பதாய்
சித்தய நாசுவனுக்கு தோன்றியது அதனால் மரத்தில் தொங்கிய படியே எருமையை
நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் நடேசன் தூரத்திலிருந்து எருமை ஓடுவதைப் பார்த்ததும்
கையிலிருந்த மாட்டை ஒரு மரத்தில் கட்டிவிட்டு ஓடி வந்தார்...நேரத்திற்கு 5லிட்டர்
கறக்குற எருமை மிரண்டு எங்காவது போய்விட்டால் பிடித்துக் கொண்டு போய் குன்னத்தூர்
சந்தையில் விற்றுவிடுவார்கள் என்கின்ற பதற்றம் மனதினில் தோன்ற வேகமாக வெறும் காலில் ஓடினார்.
நடேசன் அருகில் வரும் வரைக்கும்
போக்கு காட்டி விட்டு ஓடப் பார்த்தது மட்டைப்பந்தை பிடிக்கும் விளையாட்டு வீரன்
போல தாவி கயிற்றைப் பிடித்துக் கொண்டார் கையில் வைத்திருந்த விராலிக்குச்சியில்
இரண்டு வைத்தார் அதற்கு உரைத்ததோ என்னவோ சாதுவாய் அவருடன் வந்தது முதுகில் விராலிக்குச்சியின்
தடம் பதிந்திருந்தது.
சித்தயன் கிலுவை மரத்தில் இருந்து இறங்கி வாய்க்காலில்
திறந்து கிடந்த அடப்புப் பெட்டியில் இருந்த படிகாரக் கல் கரைந்து கொண்டிருந்தது,
தீட்டு இரும்பு ஒரு பக்கம் கிடந்தது, சவரக் கத்தி மண்ணில் புதைந்து இருந்தது,
குட்டிக்குரா பவுடர் டப்பி தண்ணீரில் குப்புறக் கிடக்க வெள்ளையாய் தண்ணீரில்
கரைந்து மணக்க...மணக்க தண்ணீர் வயலில் பாய்ந்து கொண்டிருந்தது. “பவடரு இத்துனூன்டுதான்
இருந்துச்சு அதும் போச்சா…!” என்றபடி
பொறுக்கியெடுத்த பொருட்களை தோளில் போட்டிருந்த
துண்டால் துடைத்து அடப்புப் பெட்டியில் அதனதன் இடத்தில் வைத்து விட்டு வாய்க்காலை விட்டு மேலேறி வரப்புக்கு வந்தான்
எருமையை இழுத்துக் கொண்டு வந்த நடேசன் “என்றா கிலுவை மரத்துல ஏறிக்
குச்சுட்ட ஒரு எருமைய புடிக்க முடியாதாடா...?” என்றார். “அதென்னங் கவண்டரே எரும மாதிரியா இருக்குது ஆனைச்
சோடு இருக்குதுங்க..!” என்றான்.
எருமைக்குப் பின்னாடியே போனான் சித்தையன், எருமையை கட்டிவிட்டு நடேசன் சாளைக்குப் போனார் பேயடித்தாற்
போல் நின்றிருந்த மூவரையும் பார்த்து “நான் வண்டி விக்குறதே
இந்த எருமை மெரளுதுதான்….அதை எதுக்கப்பா இங்க ஸ்டார்ட் பண்ணுனீங்க…?“ என்றார்.
கொன்னவாயக்கவுண்டர்
மனதில் தான் ஏமாந்து விட்டோமோ என்கின்ற ஒரு அச்சம் மனதில் தோன்றியது. ஆனாலும் இந்த
சத்தம் தேவைதான் என்று மகிழ்ச்சி கொண்டார். அவருக்கு அரைகுறையாக ஓட்டத்
தெரிந்தாலும் என்ன அரைகுறை! முற்றிலுமாகவே அவருக்கு வாகனம் எதையும் சரியாக ஓட்டத்
தெரியாது. சைக்கிளையே தக்கிடி..புக்கிடி என்றுதான் ஓட்டுவார்…! இந்த சில நூறு கிலோ
எடையுள்ள வாகனத்தை எப்படி ஓட்டப் போகின்றோம்! என்கின்ற அச்சம் துளியும் அவர்
மனதில் இல்லாததற்கு பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே காரணமாகும். பக்கத்து
தோட்டத்தில் இருக்கும் துரை புதிதாக வாங்கிய புல்லட்டில் வந்து கொண்டிருக்க
வரப்பில் நின்ற கோனவாயக்கவுண்டர் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டு நிற்க... அவன்
அடித்த “ஹாரன்” சத்தம் அவர் காதில் விழவில்லை பக்கத்தில் வந்து ஒரே தூக்காய் தூக்கி
வயல்ச் சேற்றில் தள்ளிவிட்டுச் சென்று விட்டான்…களை எடுத்துக் கொண்டிருந்த பெண்கள்
சிரித்து விட்டார்கள், சேற்றில் இரண்டு முறை புரண்டு எழுந்த பிறகு துரையின்
புல்லட் தூரப் போய் விட்டது. மனதில் அவமானத்தின் வடு வெகு நாளாய் நெருடிக்
கொண்டிருக்க. அந்த நெருடலுக்கு மருந்தாய் தானும் ஒரு புல்லட் வாங்கி அவனை மிரள
வைக்க வேண்டும் என்பது திட்டம். அவருடைய திட்டத்திற்கு தகுந்த வண்டியாக இது
இருக்கும் என்று நம்பினார். காது செவுடாகும் இதன் சத்தம் அவன் ஆசையாக வளர்க்கும்
பல பிராணிகளை துன்புறுத்தும், அவன் காதை செவுடாக்கும் என்கின்ற மகிழ்ச்சியில்
திளைத்தார்.
மூவரும் அந்த பெரும் வாகனத்தை தள்ளிக்கொண்டு செல்ல தான் முன்னால் நிற்பது அபசகுனம் என்று பேசுவார்கள் எனக் கருதிய சித்தையன் மறைவிடத்தில் நின்று கொண்டான், ஆனால் அந்த வாகனமே ஒரு அபசகுனம் என்று நினைத்து சிரித்தான்.

கொன்னவாயக்கவுண்டரின்
மாமியார் மதிய உணவுக்கு வாழையிலை அறுத்துக் கொண்டிருந்த போது அந்த காதை அடைக்கும்
சத்தத்தைக் கேட்டாள், தாளப்பறக்கும் விமானத்தின் சத்தமாக இருகக் கூடும் என்று
கருதியவள் அன்னாந்து வானத்தைப் பார்த்தாள் விமானம் எதுவுமில்லை...சத்தம் மிக
நெருக்கமாகக் கேட்க வண்டிப் பாதையைப் பார்த்தாள். கொன்னவாயக்கவுண்டர் ஒரு இரும்பு
சாமானைக் கொண்டு செய்த வாகனத்தில் எருமை மேல் அவர்ந்து வரும் எமன் போன்று வந்து
கொண்டிருந்தார் சீரற்ற குண்டும் குழியுமான மண் சாலையில் அங்கும் இங்கும் அலைய வரும் வாகனம் மருமகன் தன்னைக் கொல்ல
செய்யும் சதி என்று நினைத்த மாமியார் “காப்பாத்துங்க....காப்பாத்துங்க...”என்று
இலையை தூக்கி எரிந்து விட்டு ஓடினாள்....
கட்டிலில் அமர்நது வெற்றுடம்பு, கோமணத்துடன் வெற்றிலையை மென்று கொண்டிருந்த கொ.வா.கவுண்டரின் மாமனார் வேகமாக ஓடிவரும் பாரியாளும் பின்னால் பெருத்த சத்தத்துடன் வரும் மருமகனும் பீதியைக் கிளப்ப கட்டிலை விட்டு எழுந்து ஓடினார். கொன்னவாயக்கவுண்டர் பிரேக் கட்டையை தேடி மிதிப்பதற்குள் கட்டிலை அடித்து நொறுக்கிவிட்டு கீழே சாய்ந்தது வண்டி. புல்லட்டின் அடியில் கிடந்தார்....பின்னால் அமர்ந்து இருந்த குப்பனும் சக்கரையும் தாவிக்குதித்து வண்டியை தூக்க முனைந்தார்கள், ஒரு அடி தூக்கியிருப்பார்கள்... மாமனார் ஓடிவந்து வண்டியை உதைத்து தள்ளினார் “சாவுடா நாயே என்னைக் கொல்லப் பாக்குறியா” என்று பலமாக உதைக்க... “டேய் தூக்குங்கடா...” என்று கத்தினார்... மாமனாரின் மேலான ஆத்திரமும், சக்கரையும் குப்பனும் கைகொடுக்க ஒரே முனைப்பில் தூக்கி நிறுத்தி சைடு ஸ்டேண்ட் போட்டுவிட்டு சுற்றும் முற்றும் பார்த்த கொன்னவாயக்கவுண்டரின் பார்வையில் பட்ட நெல் குத்த வைத்திருந்த உலக்கையை எடுத்துக் கொண்டு மாமனாரைத் தேடினால் இரண்டு கொப்பு கடலை காட்டைத் தாண்டி கோமணத்துடன் ஓடி நின்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார்....! உலக்கையை இங்கிருந்தே தூக்கி வீசினார் அது நடுக்காட்டில் போய் விழுந்தது...! இது வழக்கமாக நடக்கும் காட்சி என்பதால் அவரவர் வேலையை சிரித்துக் கொண்டே பார்ததுக் கொண்டிருந்தனர். கல்யாணம் முடிந்த கையோடு ஆண் வாரிசு இல்லாத மாமனார் வீட்டுக்குள் வந்து ஐக்கியமாகிக் கொண்ட கொன்னவாயக்கவுண்டர் பல அவமானங்களைக் கடந்து இங்கு ராஜா! போல் வாழ்ந்து கொண்டிருந்தார்! முதலில் மருமகன் என்கின்ற மரியாதையோடு இருந்தவர்கள் இவரின் கோமாளித்தனங்களால் எரிச்சலடைந்து இவரை தூற்ற ஆரம்பித்தார்கள்...இவரும் திருப்பி தாக்க தொடங்கினார். சில நாட்களில் பெரிய போர்க்களம் போல் காட்சியளிக்கும். களை பிடுங்க வருபவர்களுகளில் இருந்து கள் இறக்க வரும் சாணார் வரைக்கும் வேடிக்கை இவர்களின் கூத்துதான்.

புல்லட் ஏதோ
தைரியத்தில் வாங்கி வந்து விட்டார். ஆனால் பல மாதங்களாகியும் வண்டி சரியாக ஓட்டக்
கற்றுக் கொள்ள முடியவில்லை அவரால். தன் எதிரி துரையை எதுவும் செய்ய இயலவில்லை, அவர் தக்கிடி புக்கிடி என்று ஓட்டிக் கொண்டிருக்க அவன் புயல் மாதிரி பறந்தான். அந்த காற்றே இவரைப் பலசமயம் குப்புறத்தள்ளி விட்டது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கொன்னவாயக்கவுண்டர் தன் இயலாமையின் வெறியில் சாட்டையால் புல்லட்டை
அடிக்க தொடங்கினார். யார்.. யாரோ வந்து கற்றுக் கொடுக்க வந்தார்கள் முடியாமல் அவர்களும் சென்று விடுவார்கள்.
தன் முயற்சியில் தோல்வியடைந்த கொன்னவாயக்கவுண்டர். அதை விற்கும் பொருட்டு முயற்சி செய்தார், ஆனால் விதி வலியது பழைய இரும்பு வியாபாரி கூட அந்த
கிராமத்தில் வாங்க வில்லை! கடைசியில் சும்மாவாச்சும் எடுத்துப் போகச் சொல்லியும்
யாரும் எடுத்துப் போகவில்லை...கேட்பாரற்று கிடந்தது.
சிலர் அதில் ஆடு, மாடுகளை
கட்டி வைத்தனர், சிறுவர்கள் அதன் மேல் ஏறி வண்டி ஓட்டி விளையாடினார்கள். நாய் அதன் அடியில் படுத்து உறங்கியது, காலைத் தூக்கி ஒண்ணுக்கடித்து அதையே கழிவறையாகப் பயன்படுத்தியது மட்டுமில்லாமல் அனைத்துப் பறவைகளும் தங்கள் எச்சங்களை அதன் மேல் பேண்டு சென்றது. சக்கரங்கள் இரண்டும் காற்று இறங்கி பரிதாபமாக நின்று கொண்டிருந்த
வாகனத்தை நோக்கி எங்கிருந்தோ வந்த ஒரு சிட்டுக்குருவி சீட்டின் பொந்தில் நுழைந்து
கொஞ்சம் பஞ்சை எடுத்துக் கொண்டு புர்ர்ர்ர்ர்ரென்று பறந்து சென்று தன்னுடைய சொகுசு
பங்களாவை கருவேலம் மரத்தில் கட்ட ஆரம்பித்தது.