கலைஞர் மு.கருணாநிதி எனக்கும் பிடிக்கும்!

>> Monday, June 1, 2015

எங்க தாத்தா சொல்வார் இந்திராகாந்தி பீரியட்ல மிசா சட்டம் நடைமுறையில் இருந்தது, திமுக ஆட்களைக் கண்டாலே போலீஸ் அடித்து நொறுக்கும் சூழ்நிலையில் நானும், என் அண்ணனும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கையில் போலீஸ் படை தடியுடன் திமுக ஆட்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கையில் ஓடி வந்தவர் எங்களை தூக்கி வைத்துக் கொண்டாராம்...! குழந்தைகளை வைத்திருந்ததால் அன்று அடியில் இருந்து தப்பித்தாராம்!
தீவிர திமுக அனுதாபமுள்ள எங்கள் தாத்தா எங்களிடம் கலைஞர் பற்றி சொல்லியே வளர்த்தார், ஒரு முறை சத்தி கூட்டத்திற்கு வந்தவர் நேராக எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார், இரவு பத்து மணி அப்பொழுது டீக்கடை வைத்திருந்தோம், சாப்பிடுங்க என்று தொண்டர்கள் சொல்ல...சரி என்று சொல்லிவிட்டார் அவசரஅவசரமாக எங்கள் டீக்கடையில் உப்புமா கிண்டியிருக்கின்றார்கள் அதை சாப்பிட்டு இருக்கின்றார் அவருடன் தொண்டர்களும் சாப்பிட்ட அந்த புகைப்படம் இன்னும் எங்க ஊர் திமுக ஆட்கள் அனைவர் வீட்டிலும் உண்டு. இப்படி நிறைய கதைகளை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்!

கருணாநிதி பேச வருகின்றார் என்றால் அதிமுக ஆட்கள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து விடுவார்கள் அந்த கரகர குரல் அனைவரையும் ஈர்த்து விடும்.
அதிமுக கோலோச்சிய எங்களது மாவட்டத்தில் திமுக ஆட்கள் மிக குறைவு, தூக்கநாயக்கன் பாளையம் டி.கே.சுப்பு ஒவ்வோரு முறையும் தோல்வியடைவார் ஆனாலும் உற்சாகமாக நிற்பார் பிரச்சாரம் செய்வார். பிரச்சாரம் செய்யும் போதே ”கருணாநிதி ஒழிக” என்று குரல் வரும், டி.இராஜேந்தர் பேசும் போதெல்லாம் கல் வீச்சு சம்பவம் நடை பெறும். ”கட்கட் கம்மரக் கட் கருணாநிதிய ஒழிச்சுக் கட்டு” என்று அவர் பிரச்சார வேன் வரும் போதே கூச்சலிடுவார்கள், சுவற்றில் ”நாசுவன் கருணாநிதி ஒழிக” என்று எழுதி வைப்பார்கள், ஆனால் அதையெல்லாம் துச்சமாகக் கடந்து தன் பேச்சால் மகுடி ஊதுவார்.
நால்ரோட்டில் ஒருமுறை கூட்டம் நடந்தது. ”என் பேச்சுக்கு கூட்டம் சேரும் ஆனால் ஓட்டு விழாது” என்றார். இரட்டைப் புறா, சேவல் என அதிமுக பிரிந்த போது நீண்ட காலங்களுக்குப் பிறகு திமுக ஆமோக வெற்றி பெற்றது, பழைய ஆட்கள் ஓரங்கட்டப்பட்டார்கள், பணக்காரர்கள் நெருங்கினார்கள், சாதிக் கட்சியுடன் கூட்டணி வைத்தார்கள். ஊழல் திமுகவிற்கு புதிதில்லை சர்க்காரியா, புழு விழுந்த அரிசி புழுத்துப் போன மாவு என நிறைய கறைகள் இருந்தாலும் தமிழுக்காக போராடிய போராட்ட குணமும், அன்று நேரடியான விமர்சனங்களையும், இன்று முகநூல் விமர்சனங்களையும் எதிர் கொண்டு அரசியல் நடத்தும் திராவிட சாணக்கியன் கலைஞர் கருணாநிதி! எனக்கும்

0 comments:

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP