உத்தமவில்லன் ஒரு கூத்தாடியின் பார்வை!

>> Monday, June 1, 2015

“நால்வரைக் கடித்த நாகம் அய்ந்தாம் ஆளைக் கடிக்கையிலே
பையில் விஷமில்லையே அதனால் பல் பட்டும் பிழைத்து விட்டான்.
உத்தமன் பிழைத்த கதை பகுத்தறிவாளர்களுக்கு விளங்கிவிடும்”

அதாகப்பட்டது என்ன வென்றால் உத்தமவில்லன் திரைப்பட விமர்சனத்தில் ஒரு சக இணைய மொண்ணை இது ஹாஸ்யப்படம் என்றும் ஓரிடத்திலும் அத்தகைய ஹாஸ்யத்தை தான் காணவில்லையென்றும் புலம்பியிருந்தார். அவருடைய விமர்சனம் படித்து அவருடைய நகைச்சுவை உணர்வு கண்டு யாம் விழுந்து விழுந்து சிரித்தோம். நிற்க அதில் என்ன நகைச்சுவை என்று நீங்கள் வினவலாம், ஜிகர்தண்டா திரைப்படம் கண்டிருக்கின்றீர்களா..? அதில் அசால்ட் சேது நடித்த அ.குமார் திரைப்படத்தில் அவ்வளவு நகைச்சுவையில்லையென்று எழுதினால் எப்படியிருக்கும்...அப்படித்தான் எமக்கும் தோன்றியது.

நானொன்றும் பெரிய அறிவுஜீவியோ உலகத்திரைப்படம் கரைத்துக் குடித்த அதி மேதாவியோ கிடையாது சராசரி கூத்துகளை ரசிக்கும் ரசிகன். அதிலும் கூத்தாடி கமல் படங்களை விரும்பிப் பார்க்கும் சராசரி ரசிகன்!

இதில் எனக்கு தோன்றிய சில அல்லது என் சிற்றறிவுக்கு எட்டிய சில விசயங்களை சொல்லாம் என்று எனக்கு கையறிப்பு ஏற்பட்டதால் எழுத்தாணியில் கிறுக்கி வைத்த்தை இங்கே பதிவிடுகின்றேன்.

இந்தக் கூத்தில் எப்பொழும் கமலுடன் இருக்கும் அதே குழுவும் இதில் இருக்கின்றது, நாசர், K.விஸ்வநாத், டெல்லி கணேஷ் மன்னிக்கவும் அவர் இல்லை அதற்கு பதிலாக M.S.பாஸ்கர் புதிதாக இணைந்திருக்கின்றார், ”அழுகாதிங்க உங்க மூஞ்சிக்கு செட்டாகல” என்று கமலே சொல்லி நம் விமர்சனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது கண்டதுக்குறியது.

பூஜா குமாரி ச்சே.. பூஜா குமார் அவர்கள் நடனமாடும் போதெல்லாம் பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா உயிரே…உயிரே…பாட்டில் ஓடிவரும் பொழுது ஏற்படுகின்ற அதே அதிர்வுகள் என் போன்ற இளைஞர்களுக்கு! ஏற்படுகின்றது.
கமல்ஜீ புகை, மது எவ்வளவு தீங்கானதோ அதே போல் பூஜா குமாரிகளைக் காண்பது சராசரி ரசிகனின் கண்களுக்கு தீங்கானது என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள் என நம்புகின்றேன், ஜநாக்ஸ் திரையில் உங்களுடைய புழு வெட்டு விழுந்த மீசை எவ்வளவு அப்பட்டமாக தெரிகின்றதோ அதே போல் பூஜாவின் விடைத்த நாசியும் தளர்ந்த தொடையும் வயதை காட்டிக் கொடுக்கின்றது அரே சம்போ!
பார்வதியை நம் தமிழ் கூத்துகளில் கருப்பாக காட்டியே தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரிய அவப்பெயரை உண்டாக்கி விட்டார்கள்..இந்த தமிழ் கூத்தாடிகள். புதிதாக பறித்த ரோஜா மலர் போன்று தன்னுடைய உண்மையான தந்தையின் மீதான வெறுப்புடன் அவர் பேசுவதும்/ அவர் பேசுவதை விட கண்கள் பேசுகின்றது… எழுந்து கை தட்ட வேண்டுமென்று தோணுகின்றது. குடோசு மோளே...!
ஆண்ட்ரியா அம்மணி கண்களில் கமல் மீதான காதலும் காமமும் ஒரு சேர உதடுகளை கவ்வும் இடங்களில் ஏனோ கமல் மீது சற்று இல்லை...இல்லை மிகப் பெரிய ஒரு கண்டத்தின் அளவு பொறாமை மேலிடுகின்றது. காருக்குள் இரண்டு ஆண்களுக்கு நடுவில் இருவரும் காமம் மேலிட குற்றவுணர்வுடன் அணைத்துக் கொள்வது ஆண்ட்ரியா ஒரு மிகச்சிறந்த கூத்தி ச்சே கூத்தாடி என்பதில் ஐயமில்லை.
நாசரும் கமலும் மாறி மாறி கூத்தாடும் போது நாசரின் சாயல் கமலிடம் தெரிவது எனக்கு மட்டுமா என அறியவில்லை மக்காள்! ஆனாலும் பரவாயில்லை கமலுக்கு அது இழுக்கு அல்ல செருக்குதான். 
பாலசந்தர் சில காட்சிகளில் வருவார் என நினைத்திருந்தேன் படம் முழுக்க வருகின்றார், “பின்னிட்டடா டேய்...” என்று அடிக்கடி அவர் சிலாகிப்பது உறுத்துகின்றது. கதைப்படி ஒரு கமர்சியல் நடிகர் கூத்து கலைஞனாக நடிப்பது சாவாலான காரியம் உடனடியாக சிறப்பாக நடிப்பதென்பது இயலாததாகும் ஆனால் இயக்குநரான மார்கதரிசி(பாலசந்தர்) ஒவ்வொரு காட்சியிலும் சிலாகிப்பது எப்படி சாத்தியமாகும்.

எந்த நடிகனுக்கு கிடைக்காத விஷயம் நமக்கிருக்கும் சுதந்திரம், மகனுக்கும் தந்தைக்கும் உண்டான புரிதல் பாசப்பிணைப்பில் அச்சுதந்திரத்தை கலைக்கும் விதமான இரசிகர்களின் கூச்சல்…கமல் சற்றே அழுகையுடன் இது பிரைவேட்ப்பா போங்கப்பா…என்று மன்றாடுகின்றார், ஒரு உட்ச நட்சத்திரம் குடும்பத்தைப் பொறுத்த வரை வெறும் பல்புதான் என்பது உணருமிடம்.
ஒரு தீவிர இலக்கியவாதி கமல் படம் வரும் பொழுது மட்டும் ரஜினி ரசிகராக மாறி கமல் படங்களை குறை கூறிக் கொண்டேயிருப்பார், மாஜிக்கல் ரியலிசம், சங்க இலக்கியம், கூத்துக்கள் பற்றி விடிய..விடிய…பேசுவார். கமல் படத்தில் இதை கண்டாரா எனத் தெரியவில்லை…இல்லை அவருக்குப் புரியவில்லையா..? யாராவது அவரை படத்தைப் பாக்கச் சொல்லுங்க..மக்காள்!
வானம் நிமிடத்திற்கு ஒரு தரம் ஏதோ ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டேயிருக்கின்றது..அதே போல்தான் கலைஞனும் கைதட்டலுக்காக தன்னையே சுவராக்கி நடிப்பு எனும் தூரிகையால் வரைந்து கொண்டேயிருக்கின்றான்...இன்று இல்லையென்றாலும் காலம் சொல்லும் கமல் கமல் என்று!

0 comments:

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP