முகம் - மொட்டையப்பர்.

>> Friday, February 7, 2014



மொட்டையப்பரைப் பற்றி ஊருக்கே தெரியும். நெல் வியாபாரி, நெல் தரகர் எனப் பல பரிணாமங்களை எடுப்பவர். நெல்லுக்குள்ளும் தவிட்டுக்குள்ளும் புழங்குவதால் அவர் அழுக்கான ஒரு கிராமத்தான் என்று நினைத்தீர்களானால் அதை அழித்துவிடுங்கள். 

கதர் வேட்டி இரண்டு வாங்கிவந்து தவசி கடையில் கொடுத்து கை இல்லாத பனியனும்; அதில் இரண்டு பக்கமும் பை வைத்து தைத்துக் கொள்வார். மீதமாகும் துணியை துண்டாக பயன்படுத்துவார். குறைந்த பட்சம் ஐம்பது ஆடைகள் இப்படி வைத்திருப்பார். அண்டர்வேர் முதற் கொண்டு வெண்மையான ஆடைகளையே பயன்படுத்துவார், நெல், கம்பு, சோளம், தினை, வரகு எதாகினும் ஒரு பிடி எடுத்து ஊதி வாயில் போட்டு மென்றுவிட்டு அட வக்காலோலிது புது கம்பு பாலா வருதுஎன்பார் நெல்லை இரு உள்ளங்கையில் வைத்து தேய்த்து உமி ஊதி வாயில் போட்டு மென்று பார்ப்பார் ஏப்புனு உன்ற காடு வெங்கச்சாங்கல்லு காடா சக்கரையா இனிக்குதுஎன்பார்.

அப்படிக் கேட்கப்படும் கேள்விகள் பொய்யாகப் போனதில்லை! கண்ணில் பார்த்தே மலையில் விளைந்ததா, மடியில் விளைந்ததா என துல்லியமாகக் கணிப்பார். ஊராளிகளின் ராய், கம்புகள் கருப்பு நிறத்தில் இருக்கும் காரணம் அவர்கள் மண் மொடாவில் சேமித்து வைக்கும் பழக்கமுடையவர்கள். அம்பத்தினாலு, அப்பத்திஅஞ்சு, அடங் கொப்பனோலி சீக்கரம் அளநெல் அளக்கும் போது அவரின் சம்பாஷைணைகள் இவ்விதமாகத்தான் இருக்கும்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி... அற்றினையாக இருந்தாலும் கூட இவருடைய பாஷையில் கொப்பணோலி, வக்காலோலிதான். அடங்கொப்பணோலி மாடு வெள்ளாமைக்குள்ள போவுது பாரு வாக்காலலோலி சின்னான் எங்கடா இருக்கே..?”, “அடங்கொப்பணோலி சைக்கிளு பஞ்சரு ஆயிடுச்சு...வாக்காலோலிது சைக்கிள் கடையும் பக்கத்தால இல்ல...தள்ளீட்டுப் போவோணும்என்பார்.

தாய், தந்தையை சிறுவயதிலேயே இழந்த அவர் கவுந்தப்பாடியில் உள்ள ஓர் அரிசி மில்லில் வளர்ந்தார், பிறகு அரிசி மில் மூடிவிட கொங்கர்பாளையம் ஒரு சோலியாக வந்தவர் ஊர் பிடித்துப் போக ஈசுக்கவுண்டர் சாளையில் தங்கிக்கொண்டார். இப்படியாக அவருக்கும் இந்த ஊருக்குமான உறவு ஆரம்பித்தது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நெல் தரகு வேலைக்குப் போனால் மாலை ஐந்து மணி வரைக்கும் சோம்பலாக ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேலை செய்வார், வேலை முடிந்து துணியை துவைத்து சுத்தமாக அழுக்கே இல்லாமல் துவைப்பார். இதில் வேடிக்கை என்னவென்றால் துணியை கழட்டி ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு கோவணம் கட்டிக் கொண்டுதான் நெல் அளப்பது போன்ற வேலையில் ஈடுபடுவார், ஆனாலும் மாலையில் துணியை துவைத்துக் கொள்வார் மனுசன் படு சுத்தம் மனுசன். ஆனாலும் அவருக்கு ஓர் உடல் உபாதையிருந்தது அரிப்பு நோயினால் துன்பப்பட்டார் கைகால்கள் திடீரென்று அரிக்க ஆரம்பித்துவிடும் தேங்காயெண்ணைய் தேய்த்தால் கொஞ்சம் அடங்கும்...நெல் மொளகு சிலருக்கு அலர்ஜியாக இருக்கும்...வேறு தொழிலும் மாறமுடியாமல் அதிலேயே உழன்று கொண்டிருந்தார். 

உற்சாகமான பொழுதுகளில் பழைய காதல் பாடல்களை எட்டுக்கட்டையில் ராகமிழுத்துப் பாடுவார் அதை வைத்து இவருடைய வாழ்க்கையில் காதல் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று கருதினேன். ஒரு ஏகாந்தமான பொழுதில் பழைய காதல் பாடல்களைப் பாடிய படி வந்தவரை தடுத்து நிறுத்தினேன், என்னுடைய சந்தேகத்தைக் கேட்ட பொழுது ஒரு ஆழமான பெருமூச்சு விட்டவர் வானத்தைப் பார்த்தார்....! தோளில் இருக்கும் துண்டால் இல்லாத தூசியை தட்டிவிட்டு அருகிலமர்ந்தார்."அடி சிந்தாமணி.......அடி சிந்தாமணி...." என்று ராகமாக பாடிக்கொண்டு கதையைச் சொல்ல ஆரம்பித்தார் என்ற மாமன் பொண்ணுதான் சிந்தாமணி அவ மேல எனக்கு ஒரு கண்ணு, ஒரு நாள் நான் என்னோட ஆசையச் சொன்னேன் அந்த புள்ளையும் என்னை புடிச்சிருக்குன்னு சொல்லிடுச்சு....காடு, மேடு, வாய்க்கா வரப்பு எல்லாம் "போவோமா ஊர்கோலம்......பூலோகம் எங்கெங்கும்...."ஓடும் பொன்னியாறும்....பாடும் பாடல்கள் நூறும்..." பாடலை எட்டுக்கட்டையில் பாடினார். இப்படிப் பாடிக்கிட்டு சிட்டுக்குருவி மாதிரி திரிஞ்ச எங்களை யாரோ என் மாமன் கிட்ட போட்டுக்குடுத்துட்டாங்க....என்ற மாமன் கூப்பிட்டு எதுவும் சொல்லலை மொட்டையப்பா என்ற புள்ளைய உனக்கு குடுக்கறதுக்கு எனக்கொன்னும் இல்ல... ஆனா நீ ரைஸ் மில்லுல தவுட்டயும், தகரத்தையும் பொறுக்கிக்கிட்டு கெடந்தா எப்படிப்பா... உனக்கு சொந்தமா ஒரு ஊடு கோட இல்ல....அட காடு கரையில்லாட்டிப் போவுதுப்பா....ஒரு குடியானவனுக்கு ஊடு முக்கியமில்லையா....?" அப்படின்னு கேட்டாரு "நீ ஒரு ஊட்டைக்கட்டி காட்டு நான்  மகராசியா எம் புள்ளையக் கட்டிக் கொடுக்றேன்"னு சொல்லிட்டாரு....! நானும் என்னடா பண்றதுன்னு இருக்க எனக்குத் தெரிஞ்ச செட்டியாரு ஒருத்தரு வழி சொன்னாரு மலையில நோட்டு மாத்துனா ஒண்ணுக்கு ரெண்டு...கெடைக்கும்ன்னு சொன்னாரு...நானும் சேத்தி வச்சிருந்த ஒரு ஆயிரம் ரூபாய எடுத்துட்டு போயி மலைக்கு (மைசூர்) போயி இரண்டாக்கி கொண்டுட்டு வந்தேன், வந்து புழக்கத்துல விட்டு இரண்டாயிரம் ஆச்சு! அடுத்த தடவை மலைக்கு போக அவன் கோயமுத்தூருக்கு வாகைய மாத்திட்டான்னு சொன்னாங்க திரும்பி கோயமுத்தூரு போனேன். இரண்டாயிரத்துக்கு நாலாயிரம் கொடுக்க ரொம்ப சந்தோஷமா பாட்டுப் பாடிட்டு இதுல செங்கக்கல்லு வச்சு ஓடு போட்டு ஒரு சின்ன ஊட்டைக் கட்டிப் போடலாம்.....கல்யாணச் செலவும் பண்ணிப் போடலாமுன்னு கனவோட சந்தை வழியா நடந்து வந்துட்டு இருந்தேன் யாருன்னே தெரியாத ஒரு பத்து பேரு வழி மறிச்சு என்னை அடிச்சுப் போட்டுட்டு வக்காலோலிக பணத்தைக் கொண்டுட்டு ஓடிட்டாங்க.....பைத்தியம் மாதிரி கோயமுத்தூர்ல இரண்டு மாசம் சுத்தினேன்......போனது...போனதுதான். அப்புறம் அப்படி..இப்படின்னு மூட்டையும் கீட்டையும் தூக்கி பஸ்க்கு காசு புடிச்சு ஊருக்கு வந்தேன்....நான் வரும் போது சிந்தாமணிக்கு வேற ஒருத்தரோட கண்ணாலம் முடிஞ்சு எதுத்தாப்ல ஊர்வலமா வர்றா.....என்னை நிமிந்து கோட பாக்கல......"பாடிப் பறந்த கிளி......பாதை மறந்தடி பூ மானே..........ஆத்தாடி தன்னால......."எட்டுக்கட்டையில் மறுபடியும் ராகம் இழுத்தார்.... நான் "எந்தப் படத்துல இந்தக் கதை ஸ்ரீதேவி கொட்டாயில நேத்துப் பாத்த படமா...?" அப்படின்னேன் "போடா.....உனக்கென்ன தெரியும்?" அப்படின்னு சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கிட்டு போய்விட்டார். மறுபடியும் பார்க்கும் பொழுதெல்லாம் "உண்மையைச் சொல்லுங்க...யாரைக் காதல் செய்தீங்க..? .எத்தனை பேரை காதலிச்சீங்க...?" என்று கேட்பேன் "போடா...உனக்கு பொழப்பில்ல நான் வடக்க நெல்லளக்க போகோணும்" என்று ஓடி விடுவார்....! நானும் பலமுறை கேட்பேன் அவரும் எதாவது ஒரு பதிலைச் சொல்லி மழுப்புவார், இது உண்மையா எனத் தெரிந்து கொள்ள அவருடன் நெருக்கமான பலரிடம் கேட்க....அவனெங்கத்த காதல் புடுங்கறான்...சும்மா வெளையாட்டுக்கு சொல்லிட்டுத் திரிவான் என்று சொல்வார்கள்...! அவரிடம் நானும் இதை வைத்தே கிண்டலடிப்பது வழக்கம் நான் கிண்டலடிப்பதை அவர் விரும்பினார்...பழைய ஞாபகங்களை கிளற ஆரம்பிப்பது சிலருக்கு ஒரு சுகமான அனுபவம். அவரின் போக்கிலேயே நூல் பிடித்துப் போனால் அவருடைய அந்தரங்கத்தின் கதவுகளைத் திறந்து வாழ்க்கையை ருசிக்க வைத்த சில பெண்களின் அழகுகளைப் பற்றி சிலாகிப்பார்.

ஒரு பழைய நடிகையைப் பற்றிச் சொல்லும்போது..."அவினாசி மில்லுக்காரரு ஒருத்தரு....அந்தம்மா மேல ஆசைப்பட்டுட்டாரு..."வர்றியா" அப்படின்னு கேட்டிருக்காரு அதுக்கு "மில்ல எழுதி வைய்யி வரேன்"னுச்சாம் மனுசன் மில்ல எழுதி வச்சு ஒரு ராத்திரி சொகம் அடைஞ்சிருக்காரு...!"என்று பழங்காலக் கிசுகிசுக்களை நேரில் பார்த்தாற் போல் கண்களில் ஆர்வம் மிக சொல்லுவார்.

"கண்ணதாசன் மாதிரி அனுபவிச்சவனும் இல்ல.....துன்பப்பட்டவனும் இல்ல....பொம்பள விசயம் ஆளை மேல கொண்டு போயிம் வெக்கும், கீழ கொண்டு போயிம் வெக்கிம்....."மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ள அவன் ஆடியடங்குவதும் பெண்ணுக்குள்ளே.."ச்சோடேய்....என்று இல்லாத நாயை முடுக்குவார்!


இப்படியாகப்பட்ட ஒரு சுவாரஸ்யமான மனிதர் ஒரு நாள் விட்டத்தில் தன் வேட்டியினால் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போனார்...என்ன காரணம்...எதனால் என்று யாருக்குமே தெரியாது! ஊர்க்காரர்கள் அரிப்பு நோயின் வேதனை தாளாமல் தொங்கிவிட்டார் என்றே பேசிக்கொண்டார்கள் நானோ காதலியின் பிரிவு தாளாமல் முடிவைத் தேடிக்கொண்டார் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றேன் நீங்களும் அப்படியாகவே நம்பிக் கொள்ளுங்கள்..!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP