மரண சாவி

>> Friday, March 13, 2015

          நாங்கள் இரயில் நிலையத்தை அடைந்தவுடன் சுரேஷ் கேட்ட கேள்வி எத்தனை மணிக்கு ரயில்என்பதாக இருந்தது. பத்து மணிக்கு என்றவுடன் தன் மொபைலில் மணியைப் பார்த்தவன் இன்னும் அரை மணி நேரம் இருக்கு என்றவனிடம் நான் எதுவும் கேட்கவில்லை அவன் எதை விரும்புகின்றான் என்பதை என் மனம் உணராமல் இல்லை! இருந்தும் தயங்கியதற்கு காரணம் வானம் இருண்டு கிடந்தது! எந்த நேரமும் மழை வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. மழ வர்ற மாதிரி இருக்கு..!என்றேன்.
அது அப்படித்தான் இருக்கும், வராது; நீங்க வர்றீங்களா இல்லையா? என்று வழக்கம் போல கேட்டான். இவன் எப்பவும் இப்படித்தான் எதையும் நாசூக்காய் சொல்லத் தெரியாது. புதுசா ஒரு படம் போட்டிருக்காங்க போலாமா? என்று அழைத்தால் ஒற்றை வார்த்தையில் நான் வரலை, காசு இல்லை, கூட்டிட்டுப் போறீங்களா..? இப்படித்தான் இருக்கும் இன்றும் அப்படித்தான் கேட்கின்றான். நீ போயிட்டு வா என்று ரயில்நிலைய ப்ளாட்பாரத்தில் தனிமையாக அமர்ந்து கொண்டிருக்க விரும்பவில்லை, வண்டி எண் சொல்லி டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியேறினேன்.
காதர்பேட்டையில ஒரு பார் இருக்கு அங்க போவோம் என்றான் சுரேஷ். பாதி தூரம் போகும் போதே சடசடவென மழை பிடித்து விட்டது. நான் அப்பவே சொன்னேன் எம் பேச்ச கேட்குறியா..! என்ற என்னை சும்மா வாங்க சரக்கடிச்சா சரியா போய்டும் என்றபடி அந்த பாருக்குள் நுழைந்தான். ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள், நேரமில்லை என்பதாலும் மழை கசகசப்பும் ஒரு மாதிரியாய் இருக்க ஆளுக்கு இரண்டு லார்ஜ் மட்டும் அருந்திவிட்டு கடலை, முறுக்கை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது மழை சற்று ஓய்ந்திருந்தது.
போன் அடிக்க எடுத்துப் பார்த்தால் சசி! என்னடா ஈரோட்டிலும் மழையா ஸ்டேசன் வந்துட்டியா..? சரி சரக்கு வாங்கிட்டியா..? ஓகே கூல்ட்ரிங்ஸ் பாட்டில் வாங்கி கலந்து வச்சுக்க சென்னை போறவரைக்கும் வேணும்.
என்ன மாம்ஸ் என்ன சொல்றான் சசி? என்றான் சுரேஷ்!
சரக்கு வாங்கி பாட்டில்ல கலந்து எடுத்துட்டு வர்றானாமாநாம கம்முன்னு ட்ரையின்ல அடிச்சிருக்கலாம்இப்ப பாரு மழையில நனைஞ்சாச்சு..! என்றேன் கொஞ்சம் கோபமாக..
இப்ப என்ன முளைச்சா போயிட்டிங்க..வாங்க சீக்கிரம் என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தான். நான் கையில் இருந்த சிகரட்டை வீசிவிட்டு அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தேன்.
ரயில் நிலையம் முழுக்க சனங்களால் நிரம்பியிருந்தது. ப்ளாட்பாரம் தேடி அங்கு இருந்த ஒரு திண்டில் இருவரும் அமர்ந்தோம். மழை காரணமாக லேசாக குளிர் அடித்தது. ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தேன். தூரத்தில் போலீஸ்காரன் ஒருவன் வந்து கொண்டிருந்தான், எழுந்து ஓரமாக இருட்டில் நின்று கொண்டேன். நல்லவேளை அவன் என்னைக் கவனிக்கவில்லை.
மணி பத்தாகியும் இரயில் வரவில்லை சசி வேறு அடிக்கடி போன் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அரைமணி நேரம் ஆகும் போல என்று சுரேஷ் நான் கொண்டு வந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து அதில் முழுகிவிட்டான் நானும் பாதி சிகரட் பாக்கெட்டைக் காலி செய்து விட்டேன். தொண்டை எரிந்தது.
பக்கத்தில் ஒருவன் காதலியோ மனைவியோ தெரியவில்லை அவன் கை எங்கங்கோ தடவியதுஅவர்களின் சேட்டையை குடும்பத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு கூட்டத்தில் இருந்த சிறுவன் பார்த்து அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தான்.
அங்க பாரு சுரேஷ் என்றேன்.
பாத்துட்டுத்தான் இருக்கேன் என்றான்.
சரியாக ஒரு மணிநேரம் தாமதமாக இரயில் வந்தது.
பர்த் பிடித்து அமர்ந்து ஆசுவாசப்படுவதற்குள் இரயில் ஈரோடு வந்து விட்டது முழுக்க நனைந்தபடி சசி கம்பார்ட்மெண்ட்டில் ஏறி எங்களைத் தேடி வந்து சேர்ந்தான்.
இரயில் கிளம்பியதும் ஆளுக்கு கொஞ்சம் சரக்கை அடித்து விட்டு கொஞ்சம் குளிர் பான போத்தலில் ஊற்றிக் கொண்டு வாசலில் வந்து நின்று கொண்டேன். ஏற்கனவே ஒரு பெரியவர் வாசலில் நின்று கொண்டிருந்தார், பார்க்க ஒரு சாமியார் மாதிரி இருந்தார், வெளியே வெளிச்சப் புள்ளிகளோடு மறையும் கட்டிடங்களை சிறு குழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் அவரைத் தொந்தரவு செய்ய மனமின்றி வலது புறம் இருந்த கதவருகே நின்று கொண்டேன். ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தேன், காற்று முகத்தில் வேகமாக மோத நெருப்பு முகத்தில் படும் என்று எதிர் புறமாக திரும்ப அந்த பெரியவர் என்னைப் பார்த்தார்.. தயக்கத்துடன் தம்பி ஒரு சிகரட்டு கிடைக்குமா..? என்றார். பாக்கெட்டை எடுத்து நீட்டினேன் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார்.. அவர் புகை பிடிக்கும் விதமே ஒரு மாதிரியாக இருந்த்து இரு விரல்களில் பிடித்து நடிகர் சிவாஜி அந்த மாதிரிதான் புகைப்பார்
என்ன பெரிசு சிவாஜி ரசிகரா..? என்றேன்
நான் சிகரட் குடிக்கறதப் பார்த்து கேட்குறேரசிகன்னு சொல்ல முடியாது சிவாஜி குடிக்கற ஸ்டைல் எனக்கு பிடிக்கும்ய்யா! நடுவிரலுக்கு மேல வச்சு விரலை திருகி உப்புன்னு அவரு புகைய உறிஞ்சர ஸ்டைலப் பார்த்தாவே குடிக்கணும்னு தோணும்அன்னிக்கு டுரிங் கொட்டாய்ல சிவாஜி சிகரட்ட பத்தவச்சா இங்கிட்டு தியேட்டரே பொகை மண்டலமாயிடுமல்ல..
என்ன பெரிசு மதுரையாபேச்சிலயே தெரியுதே..!
இல்லைய்யா கமுதிக்குப் பக்கம் இங்கன வந்து ரொம்ப வருசமாச்சுப்பா..!
சென்னைக்கு போறீங்களா
ஆமாப்பா
பாட்டில் இருந்த சரக்கு கலந்த குளிர் பானத்தைக் காட்டி குடிக்கிறியாஎன்றேன்!
எதுவும் பேசாமல் வாங்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு என்னிடமே நீட்டியது. என்னய்யா பெப்சி கலந்து வச்சிருக்ய எமுக்கு ஒமட்டும்ல..அவரின் முகத்தில் தெரிந்த சுளிப்புகளுக்கான அர்த்தம் புரிந்தது, பையில் இருந்த சரக்கைக் கொண்டு வந்து கொடுத்தேன் ராவாக குடித்த்து பெரிசு.
இரவு பயணங்களில் நான் எப்பொழுதும் தூங்கியதில்லை, முக்கியமாக இரயில் பயணங்கள் நம்மை தூங்க விடுவதில்லை! எதாவது ஒரு இரைச்சல் இருக்கும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பயணங்கள் தூங்குவதற்கான சூழ்நிலைகளில் இல்லை. இன்றைய இரவு எனக்கு அப்படிக் கழியப் போகின்றது போலும் சசியும், சுரேஷ்ம் கொஞ்ச நேரம் படித்து விட்டு பிறகு தூங்கி விட்டார்கள். இனி வழிதுணையாக, பேச்சுத் துணையாக இருக்கும் இந்த பெரியவர்தான் என முடிவான பிறகு அவருடன் உரையாடலைத் தொடர்ந்தேன். கழுத்தில் உத்திராட்சை, நெற்றியில் விபூதித் தடம், காவி வேட்டி என ஒரு சாமியார் போல் தோற்றமளித்தாலும் அவர் பிச்சைக்காரர் அல்ல என்பது பேச்சினூடே நான் அறிந்து கொண்டேன். போதையில் அவர் சில விசஷயங்களை சொல்லத் தொடங்கினார். சினிமா, பாட்டு, எம்.ஜி.ஆர், பானுமதி என சினிமா கிசுகிசுக்கள் என சுவாரஸ்யமாக பேசத் தொடங்கிய பேச்சு அவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்கின்ற கேள்விக்கு அவரிடம் ஒரு பலத்த மௌனம் நிலவியது.
என்ன பெரிசு கள்ளக்கடத்தல் கீது பண்றியாஅமைதியாயிட்ட என்றேன்
இல்லப்பா..இங்கன மூலப்பட்டரையில ஒரு கம்பனியில வாட்ச்மேனா இருக்கேன் என்றது.
இப்ப சென்னைக்கு புள்ளை பசங்கள பாக்கப் போறியா..?
இல்லப்பா நா கண்ணாலமே கட்டிக்கல..
ஏம் பெரிசு லவ் பெயிலியரா
வெறுமனே சிரித்து வைத்தது
கையில் வைத்திருந்த சரக்கை மறுபடியும் கொஞ்சம் குடித்த பெரிசு! நீ என்னய்யா பண்ணிட்டு இருக்கஎன்றது
நான் என் வேலையை சொன்னால் புரியாது என்பதற்காகவே சொல்லும் பனியனுக்கு மேல படம் வருமே அத வரையறது பெரிசுஎன்றேன்!
ஆர்ட்டிஸ்டா இந்த பனியன் மேல பிலிம ஒட்டி வரைவீங்களே அதா என்றார்..!
ஆமாம் என்றேன்
நானும் திருப்பூர்ல அஞ்சு வருசம் பிரிண்டிங் பட்டரையில வேல பாத்தம்ய்யா…”
அப்புடியா பெரிசு
ஆமாய்யாசின்ன வயசுல ஊரை விட்டு வந்தது அப்படியே சுத்திக்கிட்டு இருக்கேன்!
ஆமா சென்னைக்கு எதுக்குப் போற பெரிசு…”
சொந்தக்காரவங்க ஒருத்தரு முடியாம கெடக்காரு பாக்கப் போறய்யா..
நீங்க எதுக்கு சென்னை போறீங்க..? என்று என்னிடம் கேட்டார்.
நாங்க வலைதளத்துல எழுதறவங்க ஒரு மீட்டிங் நடக்கு அதுல கலந்துக்கப் போறோம்..!
புரிந்த மாதிரி தலையை ஆட்டியது பெரிசு! பத்திரிக்கைக்காரவங்களா..?
அந்த மாதிரிதான் கம்யூட்டர்ல எழுதறவங்கநாங்க..! நீ கூட உன் கதைய சொன்னா எழுதுவோம்!
நம்ம கதை என்னப்பா பெரிய கத என்ற பெரிசு அமைதியாக வெளியே பார்த்தது, வண்டி சேலம் தாண்டி சென்று கொண்டிருந்தது. இரண்டு இடங்களில் லெவல் கிராசிங்கில் நின்ற பொழுது இறங்கி சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் வந்து ஏறிக் கொண்டது. சிகரட்டுகளின் இருப்பு வேறு குறைந்து விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் குளிர்பாணம் கலந்த சரக்கை குடிக்க முடியவில்லை. சும்மா பேசிக் கொண்டிருக்கலாம் என வாசலில் அமர்ந்து கொண்டோம், கழிவரை வந்த சசி என்ன மாம்ஸ் தூங்கலையா? என்று கேட்டுவிட்டு போய்விட்டான் மறுபடியும் பல விசயங்களைப் பேசத் தொடங்கும் போதுதான் பெரிசு தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
எனக்கு சின்ன வயசா இருக்கும் போதே பெத்தவங்க செத்துப் போயிட்டாங்க எங்க பாட்டன்கிட்டதான் வளந்தேன், பாட்டன் ஒரு மருத்துவன்ய்யா..அவரு கிட்டதான் நான் வளந்தேன்.
சித்த வைத்தியரா பெரிசு
அந்த மாதிரிதான் ஆனா வேற வைத்தியம்
வேற வைத்தியம்ன்னா..புரியலையே..
அது ஒண்ணுமில்லைய்யா.சாவு வருமான்னு இழுத்துக்கிட்டு இழுத்துக்கிட்டு கெடக்குற பெரிசுகளை தொண்டைக் குழிய இரண்டு விரல்களால அமுக்கிட்டு லேசா பால ஊத்தினா கபக்குன்னு உசிர் போயிரும் அதுதான் வைத்தியம்.
அவர் சொல்வது சட்டபூர்வமில்லாத கருணைக் கொலை! உடலுக்குச் செல்லும் பிராணவாயுவை நிறுத்தி சாவடித்தல்..நினைத்துப் பார்த்த போது ஒரு நிமிடம் நான் அடித்த சரக்கு போதை சட்டென்று இறங்கிவிட்டது.
நான் கெழவன் கூடவே வளர்ந்த்தாலஅவர் செய்யற ஒவ்வோரு காரியத்துக்கும் கூட அழைச்சுட்டு போவாரு பீ,மல்லு அள்ள முடியாம, வேதனைய தாங்க முடியாம நெறைய பேரு கூப்பிடுவாங்க இவரு போயி சோலிய முடிச்சுட்டு வருவாரு. நல்ல காசு கொடுப்பாங்கஆனா வாங்க மாட்டாருநூறு, அம்மது மட்டும் வாங்குவாரு!
நான் என் கூட்டு இளந்தாரிகளோடு திருப்பூர் வேலக்கி போயிட்டேன்..கெழவன் ஒரு நாள் போதையில கம்மால விழுந்து செத்துப் போயிட்டான். எங்க எங்கோயோ அலைஞ்சு திரிஞ்ச நானு ஒருநாளு ஊருக்கு வந்தப்ப இழுத்துக்கிட்டு கெடந்த ஒரு பெரிசு உசிர எம்பாட்டன் செஞ்ச மாதிரியே தொண்டைக்குழிய வச்சு ஒரு அமுக்கு கொஞ்சம் பாலு சட்டுன்னு உசிர் போயிருச்சு அதோட நானும் இதைச் செய்ய ஆரம்பிச்சேன், ஆரம்பத்தில பிடிக்கல ஆனா அந்த சீவன்களின் கண்ணுல நன்றிய நான் உணர்ந்தேன்.அதுக்குப் பிறகு மனசு உறுத்தல
நிலை குத்திப் போன விழிகளில் நன்றியுணர்ச்சி பொங்கியபடியே உயிர் விட்ட அந்த உடம்பு எத்தனை வலிகளை அநுபவிச்சிருக்கனும் உசிர் போறதுதான் விடுதலைன்னு அந்த ஆன்மா சாவுக்கு எப்படி ஏங்கியிருக்கும்ன்னு அன்னிக்கு யோசிச்சேன் இது வரைக்கு பதினாலு பதினெட்டு உசிர எடுத்திருக்கேன்.
ஏம் பெரிசு எதுவும் உயிர் வாழ ஆசைப்பட்டது இல்லையா..?
ம்ம்ம்ஒரு கெழவி வயசு தொன்னூறுக்கு மேல இருக்கும் அது சாவ விரும்பலஉயிர் வாழ ஆசைப்பட்டுச்சு போல. கண்ணுல தண்ணீர் வர கேவுது என்னை விட்டுடுன்னு கெஞ்சுதுபாலை குடிக்காம வாய இறுக மூடிக்கிச்சுஆனா ஒரே பொம்பளைப்புள்ள அதுனால பாக்க முடியலை பாவமாப் போச்சு. ஒரே அழுத்து உசிர் போயிருச்சு ஆனா அது என்னை விடல கழுத்தை பிடிச்சு என்னைக் கொல்லப்பாத்தது, அதுகிட்ட இருந்து மீளறதுக்குள்ள பெரும்பாடு பட்டுட்டேனப்பா!
அதுல பயந்து போன அதோட சரி விட்டுடலாமுன்னுபாவத்தை தீர்க்கலாமுன்னு காசிக்கு போனேன்ஒரு சாமிகிட்ட கால்ல விழுந்து என் கதையச் சொன்னேன்போடா முட்டாள் நீ செய்றது பாவமில்லடா..! உபகாரம் ஆயிரம் தவங்களுக்கு ஈடானது ஈமகாரியம் செய்வதும்வலியில் துடிக்கும் உயிர்களை விடுவிப்பதும்ன்னு சொல்லி இந்த உத்ராட்சைய என் கழுத்தில் போட்டு விட்டுச்சுஇதுக்கு பிறகு எந்த உசிரும் என் கழுத்தைப் பிடிப்பது இல்ல..!
உசிர் போறது உங்க கண்ணுக்கு தெரியுமாய்யா!
நல்லா தெரியும்! நம்மை நன்றியோடு சிலது தழுவிச் செல்லும் சிலது ஆக்ரோஷமா இருக்கும் அப்ப இந்த உத்திராட்சைய கையில பிடிச்சுட்டு
புல்லாகி பூண்டாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதாராய் பேயாய் கணங்களாய்
வல் அசுராகி முனிவாராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
ஈசனே என்னைக் காப்பாத்துய்யா…! அப்படின்னு சொல்லுவேன் அந்த ஆன்மா பக்கத்துல வராது! இது அந்த சாமிதான் சொல்லிக் கொடுத்துச்சு..!
நீங்க உசிர் எடுத்ததுல ரொம்ப பாவப்பட்டது எதுன்னு சொல்ல முடியுமா..?
              “பதினெட்டு வயசுதான் இருக்கும..சொந்தக்கார புள்ளைதான் எதோ பெயர் தெரியா நோவுஇரண்டு வருஷமா படுக்கையில் கெடக்கு முடிக்க கூப்பிட்டாங்கஅறையில யாருமில்ல...நான் மட்டும்தான் இருக்கேன் தங்க விக்ரகம் மாதிரியிருக்கு பொண்ணு.  எனக்கு மனசே சரியில்ல இரண்டு விரலால ஒரே அமுக்கு உசிர் அவ்வளவு சீக்கிரம் பிரியலை, எனக்கே கை நடுங்குச்சு கடைசியில நெல்மணிய கொஞ்சம் பால்ல போட்டு மனச கட்டுப்படுத்திக்கிட்டு எடுத்தேன். இப்பவும் சில சமயம் அந்த பொம்பளப் புள்ள மூஞ்சி வந்து போகும் அந்த மாதிரி சமயத்துல ராத்தூக்கமில்லாம அழுதுகிட்டே கெடப்பேன்.
அந்த புள்ளைய கொலை பண்ணிட்டாங்கன்னு போலீஸ் புடிக்கலையா...?
அதெல்லாம் பணத்தைக் குடுத்து சரிகட்டிட்டாங்க ராவோடராவா சுடுகாட்டுக்கு எடுத்துட்டுப் போயி நான்தேன் எரிச்சேன். ஆமணக்கு, வெள்ளை சீனி மூட்டை மூட்டையா கொட்டி எரிச்சுப் போட்டேன்...
அது எதுக்கு பெரிசு ஆமணக்கு, சீனி..?
தம்பி நம்ம உடலுறுப்புல நுரையீரல் நெறைய தண்ணிய வெச்சிருக்கும், ஒரு சவத்துல நெஞ்சுக்கூடு வேகனும், அப்பத்தா முழு ஒடம்பும் வெகும். நெருப்புல நுரையீரல் உருகி தண்ணியாகும் போது இந்த சீனியும் ஆமணக்கும் சேந்து கரைஞ்சு நல்லா எரியும் நெருப்ப அணைய விடாதுல்ல ஒரு துளி எலும்பு கூட இல்லாம எரிஞ்சுடுமில்ல...
உனக்கு பயமா இல்லைய்யா பெரிசு?”
எதுக்கு பயம்..! கருவக்காட்டுக்குள்ள ராத்திரி பகலுன்னு திரிஞ்சவங்கதான்ய்யா நாங்க..!
ஆமா பெரிசு காதல் கீதல்ன்னு உனக்கு இருக்கா..?
எங்கய்யா நாம ஒரு எடத்தில இருந்தோம்....இரண்டாவது நமக்கு ஆரம்பத்துல இருந்தே பொம்பள சவகாசமில்ல! நான் ஊருக்குள்ள காலடி வச்ச உடனே பொம்பள புள்ள, சிலுவண்டி பசய்ங்க ஓடி ஒளிஞ்சுக்குவாங்க..அது மட்டுமா கெழவிக, கெழவனுகளுக்கு திக்குங்கும் மருமக்காரிக காசு குடுத்து வரவச்சிருக்காளுகளோ என்னவோன்னு பயந்து கெடக்கும்க..நமக்கு பிறகு எப்படிய்யா பொண்ணு குடுப்பாய்ங்க.
கடைசியாய் இருந்த இரண்டு சிகரட்டுகளை இரண்டு பேரும் குடித்து விட்டு காலி பெட்டியை வீசும் போது இரயில் சென்னையை நெருங்கிவிட்டது லேசாக விடியத் தொடங்கியது இரவு தூக்கம் இன்றியும் போதை இன்னும் தலையில் இருந்ததாலும் லேசாக தலையை வலிக்க...பெட்டிக்குள் வந்த டீக்காரனிடம் இரண்டு டீ அட்டை டம்ளரில் வாங்கினேன் பெருசுக்கு கொடுக்க குடித்தோம்...டீக்கு தலைவலி ஓரளவு மந்தப்படும் ஆனால் இரயில் கொடுப்பது டீயல்ல சுடுதண்ணீரை விட கேவலமாக இருந்த்து. பாதி டம்ளருடன் வெளியே வீசினேன். சசியும், சுரேஷ்சும் எழுந்து  வாஷ்பேசனில் முகம் கழுவிக் கொண்டிருந்தார்கள்.
என்ன மாம்ஸ் தூங்கலையா..?
இல்லப்பா பேசிட்டே வந்தோம்
பெரிச பாத்தா கஞ்சா குடிக்கி மாதிரியிருக்கு வாங்கி கீங்கி இழுத்துட்டிங்களா கண்ணு இப்படி செவந்து இருக்கு.
அடப் போங்கப்பா...!
சென்டரல் இரயில் நிலையத்தை அடைந்தவுடன் அனைவரும் இறங்க நாங்களும் இறங்கி நடந்தோம், பெரிசு தூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தது நீங்க போய் முன்னாடி நில்லுங்க நான் வந்துர்றேன் என்றபடி பெரிசை நோக்கிச் சென்றேன் பெரிசு என்னைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்தது.
பெரிசு நாங்க வர்றோம்.. இந்தா என இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை திணித்தேன் எனக்கு எதுக்குய்யா பணம் இந்த இரண்டு நாள் சோலியிருக்கு முடிஞ்சதும் கௌம்பிருவேன்.என்று மறுத்து விட்டது சரி கௌம்புறேன் பெரிசு என்று அவரின் கையைப் பிடித்தேன். என்னுடல் ஒரு முறை சிலிர்த்தது இனம் புரியாத ஒரு உணர்ச்சி என் மன ஓட்டத்தில் எழுந்தது. மரணத்தைத் தரும் சாவியான வரின் விரல்களைத் தீண்டும் பொழுது இனம் புரியாத ஓர் உணர்வு என்னை ஆட்கொண்டது சில நிமிடங்களா மணிகளா என அறியாமல் நின்றிருந்த நான் நினைவுக்கு வந்து பார்த்தபோது தூரத்தில் பெரிசு புள்ளியாக  மறைந்து கொண்டிருந்தார்.


Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP