இரவென்னும் நரகம்.

>> Sunday, August 18, 2013


றக்கம் வராத ஒரு இரவில் பாலகுமாரனின் ஒரு நாவலை படித்துக் கொண்டிருந்தேன். நடுஇரவின் அமைதியில் என் அலைபேசியில் ஜென்ஸியின் தெய்வீக ராகம்.......தெவிட்டாத பாடல் மெலிதாக பாடிக்கொண்டிருந்தது, மனதுக்கு ரம்யமாக இருந்தது. நாவலும், பாடலும் என்னை முழுவதும் ஆட்க்கொண்டு விட்ட பொழுதில் அதைக் கலைப்பதுபோன்று ஒரு பேரொலி அதுவும் ஒரு பெண்ணினுடையது கேட்டது, என்னுடைய முழு உற்சாகமும் வடிந்து போனது.

இங்கு குடிவந்து இரண்டு வாரம்தான் ஆகின்றது...வந்த மூன்றாவது நாளில் அருகிலிருந்த வீட்டில் இருந்து வீரிடல் கேட்டுப் பயந்து போனேன். காலையில் கீழ் வீட்டில் இருக்கும் ஒரு பெரியவர் தினமும் பார்க்கும் பொழுதுகளில் சினேகமாகச் சிரிப்பார். அவரிடம் கேட்ட பொழுது அது மனநிலை சரியில்லாத ஒரு இளம்பெண் என்றும், நன்றாக இருந்த பெண்தான்; வயதுக்கு வந்த பிறகு இந்த மாதிரியாகிவிட்டது, பேய் பிடித்திருப்பதாகவும், அமாவாசை நெருங்கும் சமயத்தில் கொஞ்சம் சத்தம் போடும் என்றும் கூறினார்.

நானிருக்கும் அறை மூன்றாவது மாடியில் இருக்கின்றது, தரைத்தளத்தில் நான்கு போர்சன்மேல் தளத்தில் நான்கு போர்சன் என இருக்கின்றதுஎங்கும் வீடு கிடைக்காத நிலையில், என் அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் என் நண்பன் செந்தில் இதைப் பிடித்துக் கொடுத்தான். அதிகம் யாரிடமும் ஒட்டாத தனிமை விரும்பியான எனக்கு இந்த வீடு மிகவும் பிடித்திருந்தது மட்டுமில்லாது, வாடகையும் குறைவுதண்ணீர்ப்பிரச்சனையும் இல்லை. ஆனால்! இந்த பெண்ணின் அலறல் சிலநேரங்களில் பலமணி நேரம் உறக்கத்தை தொலைக்க வைத்துவிடுகின்றது. அறையின் மூலையில் வைத்திருந்த பானையில் தண்ணீரைக் மொண்டு குடித்துவிட்டு விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டேன்.

அடுத்து பலநாட்களுக்கு அந்த பெண்ணின் அலறல் தொல்லையில்லாமல் கழிந்தது எனக்கு மனநிம்மதியை தந்தது! ஆனால் அன்று இரவு அலுவலகம் முடிந்து வந்து அழுக்கு துணிகளை துவைத்துப் போட்டுவிட்டு, கடையில் வாங்கிக் கொண்டு வந்த உணவை உண்டு கொண்டிருக்கும் போதே ஃபேன் சுற்றாமல் நின்று விட்டது. உணவருந்தி விட்டு இரண்டு மூன்று முறை சுவிட்சை ஆப் செய்து மீண்டும் போட்டும் மௌனத்தையே கடைப்பிடித்தது. இந்த இரவில் இதை சரி செய்வது உத்தமமில்லை என்று நினைத்து தலையணை, பாய் மற்றும் போர்வை எடுத்துக் கொண்டு மொட்டைமாடியில் சென்று படுத்துக் கொண்டேன். மொட்டை மாடிக்கு வரும் கதவை தினமும் நான் பூட்டிவிடுவேன். அதனால் யாரும் மேலே மாடிக்கு வருவதில்லை,பகலில் மட்டும் ஒரு மாமி மட்டும் வந்து வத்தல், கோதுமை என்று எதையாவது காயப்போடுவாள் மற்றபடி கீழ்ப் போர்சன் ஆட்கள் மேலே வரவே மாட்டார்கள்எனக்கு இருட்டு, தனிமை என்றாலே பயம்! அப்பா இருக்கும் வரை நான் அவரில்லாமல் எங்கேயும் போக மாட்டேன், சின்ன வயதிலேயே அம்மா இறந்து விட்டாள். என்னை நன்றாக படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு நான்தான் உலகம் என்னை நல்ல நிலையில் கொண்டு வந்து வைத்துவிட்டு, நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார். அவரை நான் எப்படியெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று என்னை தனிமையில் விட்டுச் சென்று விட்டார். அப்பாவின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்திருந்தபோது, அந்த பெண்ணின் அலறல் மீண்டும் வீச்ச்ச்ச்.......என்று கொடூரமாக கேட்டது. நான் மெதுவாக எழுந்து தவழ்ந்து மாடிக் கைப்பிடிச் சுவரை ஒட்டியபடி மெல்ல எட்டிப்பார்த்தேன், நான் கண்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்தது! அந்தப் பெண்ணின் தந்தை பலமுறை வீட்டின் முன் நின்று கொண்டிருப்பான்சில சமயம் நான் வேலை முடிந்து வரும் போது குடி போதையில் சாலையை அளந்து கொண்டு வருவான் கீழ் வீட்டுப் பெரியவர் கூட சொல்லியிருக்கின்றார் அந்தப் பெண்ணின் தந்தை என்று.

அவன் முழு நிர்வாணமாக நின்று கொண்டு போதையில் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான், மனநிலை சரியில்லாத தன்னுடைய மகளையே....ச்சே என்ன ஜென்மம் இவன்..? எனக்கு ஆத்திரம் மூளைக்கு ஏறியது, மீண்டும் பார்த்த போது அந்தப் பெண் அவனின் முழு பிடியில் இருந்தாள். கதவை திறந்து வைத்துக் கொண்டு, விளக்கையும் போட்டுக் கொண்டு, எந்த பிரஞ்சையும் இல்லாமல் மகளுடனே உறவு கொண்டிருந்தான் அந்த தகப்பன். எனக்கு வாந்தி வரும் போல் இருந்தது. ஓடிச் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டேன், அன்றைய இரவு கொடுமையான ஒரு நரகமாகவே எனக்கு கழிந்தது.

காலையில் எழுந்தவுடன், கீழ்வீட்டுப் பெரியவரைப் சென்று பார்த்து நான் பார்த்த நடந்த சம்பவங்களைக் கூறினேன்அவர் மிக சாதாரணமாக நாம ஒண்ணும் பண்ண முடியாது..! அவன் ஒரு பழைய ரௌடி. இந்த இடமே ஒரு அரசியல்வாதி அவனுக்கு இனாமாக கொடுத்தது. அவன் மேல் இரண்டு கத்திக்குத்து கேஸ்  கூட இருக்கு, மடியில எப்பவும் ஒரு பிச்சுவா வச்சிருப்பான்எனக்கு இது ரொம்ப நாளாத் தெரியும்! என்ன பண்ண முடியும்? அவன் மனைவிக்கும் இது தெரியும்! அவளே அவனை எதிர்க்க பயந்திட்டு சும்மா இருக்கா....! இவனுடைய பாலியல் தொல்லை காரணமாகத்தான் அந்தப் பெண் மனநிலை பாதிக்கப் பட்டிருக்காள் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும்! அப்படியே நாம கேஸ் கொடுத்தாலும் பத்து நாள்ல வெளிய வந்து கேஸ் கொடுத்தவங்கள குத்திருவான் அதனால இதைக் கண்டுக்காதே என்றார்.

எனக்கு அதன் பிந்தைய இரவுகள் நரகமாகவே கழிந்ததுச்சே…! என்ன வகையான மனிதர்கள்..? தெரிந்தும், எப்படி இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்கின்றார்கள்? அன்றைக்கு இரவு அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்தது. இரவு பன்னிரெண்டுக்கு மேல் கடந்துவிட்டது நான் என்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் என் குடியிருக்கும் வீதியின் முனை வரை... செந்தில்பாவனாசாந்தி வருவார்கள் அதன் பிறகு ஒரு இருநூறு அடி வரை தனியாகச் செல்ல வேண்டும் செந்தில் “வீடு வரை வருகிறேன்” என்றான், நான்தான் ”வேண்டாம் செந்தில், நான் போயிக்கிறேன் நீ கிளம்பு” என்று விடை கொடுத்துவிட்டு, மெதுவாக ஸ்கூட்டரை ஓட்டிய படி வந்தேன்....வழியில் எங்கள் வீதியில் பாதாளச்சாக்கடைக்காக இரண்டு ஆள் மூழ்குமளவு ஒரு பெரிய குழி வெட்டியிருக்கின்றார்கள், பல நாட்களாக குழி மூடப்படாமல் கிடக்கின்றது. சாக்கடை நிரம்பியிருக்கும் அந்த இடத்தை கடக்கும் போதுதான் அவனைக் கண்டேன். அந்த பெண்ணின் தந்தை! காமவெறியன் உளறிய படி போதையில் நின்று கொண்டு சாக்கடையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு நெஞ்சுக்குள் ஒரு பாரம் மாதிரி பயம் தோன்றியது, மெல்ல நெருங்கிய போது அவன் என்னைக் கவனிக்கவில்லை, ஏதோ உளறியபடி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். நான் அவனைக் கடந்ததும் தீடீரென்று…. ஒரு மின்னல் போல தோன்றியது அந்த எண்ணம்.ஸ்கூட்டரை அப்படியே நிறுத்தினேன் வேகமாக ஓடி வந்து அவன் முதுகில் ஒரு உதை தலைகீழாக பளுக் என்று சாக்கடைத் தண்ணீர் தெறிக்க உள்ளே விழுந்தான். அணைக்காமல் வைத்திருந்த ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு என் அறையை நோக்கி வேகமாகச் சென்றேன் என்னிடமிருந்த சாவியால் மெயின் கதவை திறந்து ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு மாடிப் படி மெதுவாக ஏறி அறையை அடைந்து குளியலறைக்குச் சென்று வாளியில் இருந்த தண்ணீரை அப்படியே எடுத்து தலையில் இருந்து ஊற்றினேன்......வெளியே வந்து என் நனைந்த என் சுடிதாரை களைந்து விட்டு, பெட்டியில் இருந்த நைட்டியை அணிந்து கொண்டு ஃபேனை வேகமாக வைத்து கூந்தலை துவட்ட ஆரம்பித்தேன்.

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP