நமக்கும் வரும் புற்று நோய் (Cancer)

>> Sunday, September 23, 2012


''மாடி வீட்டுச் சன்னல் கூட சட்டை போட்டிருக்கு…..
சேரிக்குள்ள சின்னப் பொண்ணு அம்மணமாயிருக்கு''
என்கின்ற பாடலோடு ஆரம்பிக்கும் ''பாடும் வானம்பாடி'' படத்தில் எனக்கு அறிமுகமாயிருந்த ஆனந்த்பாபுவின் நடனம் ஆச்சர்யப் படுத்தியது !கால்களை எக்ஸ் மாதிரி வைத்து ரப்பர் மாதிரி உடம்பை வளைத்து தன்னுடைய தந்தை நாகேஷ் அவர்களின் நடன அசைவை ஒத்து ஆடிய அவருடைய ஆட்டத்துக்கு பலர் ரசிகர்களாக மாறினார்கள்.


அன்றைய காலகட்டத்தில் இருந்த நடிகர்களில் ரஜினி, கமல், போன்றோரில் கமல் நடனத்தில் சிறந்தவர் என்றாலும் ஆனந்த்பாபுவின்  ''டிஸ்கோ'' நடனத்துக்கு ஒரு தனி "கிரேஸ்" இருந்தது. பல படங்களில் நடித்த அவர் சமீம காலத்தில் அவரை புற்றுநோய் தாக்கி உடல் மெலிந்து, முடிகள் எல்லாம் கொட்டி பார்க்கும் போது மிகுந்த வேதனையளித்தது. ஆனால்...! அந்த நோயை வென்று இப்பொழுது கூட சில படங்களில் வில்லனாக தலைகாட்டினார். இதைப் படிக்கும் போது நமக்கு செய்தியாக இருந்தாலும் அதன் வலி...! உயிர் பிழைப்பதற்கான போராட்டம்..! நாம் அருகில் இருந்தால்தான் உணர முடியும்.


எங்க உறவினரான என் தாத்தாவின் தம்பி ஒருவர் கடுமையான உழைப்பாளி நன்றாகத்தான் இருந்தார், திடீரென்று சிறுநீரில் ரத்தம் கலந்து போக வழக்கமாக பார்க்கும் கோபியில் உள்ள ஒரு கிளினிக்கில் பார்க்க !அந்த மருத்துவருக்கு சந்தேகம் வர... கோவை "யுனைடேட்" மருத்துவமணைக்கு சிபாரிசு செய்ய அங்கு சென்று பல சோதனைகளை செய்ய கேன்சர் கிட்னியில் கேன்சர் இருப்பது உறுதியாகிவிட்டது. "ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ணிட்டா அவர் உயிர் பிழைப்பார்" என்று மருத்துவர்கள் சொல்ல அவரிடம் உண்மையை சொல்ல வில்லையென்றாலும், டெஸ்ட் எடுக்கப் போகும் அறைகளில் இருக்கும் கேன்சர் சம்மதமான வாசகங்களை வைத்து தெரிந்துகொண்டு அழுதார் .சில லகரங்களை செலவு செய்து அறுவை சிகிச்சையும் செய்து வயிற்றில் ஒரு ஓட்டை போட்டு குழாய் வைத்து ஒரு பையை தொங்க விட்டார்கள் கட்டுமஸ்தாக இரண்டு முரட்டு காளைகளை பூட்டி ஏர் உழுத விவசாயி கிழிந்த நாராக படுக்கையில் விழுந்தார்.


நான் சென்ற போது கண்ணில் நீர் வழிய நான் செத்து போயிருவேன் என்று அழுதார்....!நான் சின்ன வயசில பள்ளி விடுமுறையின் போது நானும் என் மாமா பையனும் கிணற்றில் நீச்சல் அடிப்பதற்காக அவர் தோட்டத்துக்கு போனோம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தோட்டம்! விளையாடியதில் நேரம் போனது தெரியாமல் இரவாக அங்கேயே உறங்கி விட்டோம்.


நடு இரவில் யானைக் கூட்டம் கரும்பு காட்டை தேடி துவம்சம் செய்ய படையெடுத்தது சுற்றியுள்ள தோட்டக்காரர்களுடன் சேர்ந்து பட்டாசு கொளுத்திப் போட்டும் ஓடவில்லை! தீப்பந்தங்களை இரண்டு கைகளில் ஏந்திக் கொண்டு காட்டுயானைகளின் அருகில் சென்று விரட்டினார்...!

அப்படிப்பட்ட தைரியம் மிக்க ஒரு விவசாயி! புற்றுநோயின் வீரியத்தையும், வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் குழந்தை போல் அழும்போது எதிரிக்குக் கூட இந்த வியாதி வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். இறைவன் சில நாட்களிலே அவருக்கு வலியிருந்து விடுதலை கொடுத்து விட்டான் "ஆப்ரேசன் பண்ணாம இருந்திருந்தாக் கூட இன்னும் கொஞ்ச நாளைக்கு உசிரோட இருந்திருப்பார்...." என்று அவரின் காரியத்துக்கு வந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பண்ணாம இருந்திருக்கலாமோ..?  எனக்கூட தோன்றியது...! ஆனாலும் பல காலம் வேதனையோடு வாழுவதை விட இது மேல்தான் என்று நினைத்துக் கொண்டேன். எழும்புப் புற்று நோய் தாக்கியவர்கள் வலி தாளாமல் டாக்டர் என்னை கொன்னுடுங்க...என்று அழுவார்களாம்! 


நடிகை ஸ்ரீவித்யா பல படங்களில் அழகு பதுமையாக வந்து கடைசிவரை தன் அழகான அக்காவாக.......அம்மாவாக.....பாட்டியாக வந்து நடிப்பை கவர்ந்தவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு முடியிழந்து, முகம் பொலிவிழந்து, பார்க்கவே பரிதாபமான நிலையில் மரணத்தை தழுவினார். கடைசி காலத்தில் யாரையும் பார்க்க விரும்பவில்லை அவர்கள். இந்த புற்று நோய் ஏழை, பணக்காரன் யாரையும் விட்டுவைக்காமல் தாக்குகின்றது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் அதனால் வருடத்துக்கு ஒரு முறை ஆண்கள், பெண்கள் அனைவரும் புற்றுநோய் சோதனை செய்துகொள்வது நலம் என்று நினைக்கின்றேன், நீங்க என்ன சொல்றீங்க...? 

Read more...

கால ஓட்டத்தில் காணாமல் போன காதல் வாகனம்!

>> Tuesday, September 18, 2012


கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை! ஆனால் தொன்னூறுக்கு முன்னால் சைக்கிள் பலருடைய விருப்ப வாகனமாக இருந்தது, என்னுடைய முதல் சைக்கிள் எங்க தாத்தாவின் அட்லஸ் சைக்கிள்தான் !யாரோ ஒரு வழிப்போக்கன் சாராயத்திற்கு காசு இல்லையென அம்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு சென்று விட்டான், நல்ல எடை இருக்கும். பின்னாடி மக்கார்டில் கிரேக்க கடவுள் பெரிய ஒரு கல்லை சுமந்து கொண்டு இருப்பதைப் போல் ஒரு லோகோ இருக்கும்.


அந்த சைக்கிள்லதான் முதலில் ஓட்டிப் பழகினேன், முக்கோணத்தில் கால் விட்டு குரங்குபெடல் போட்டுப் பழகி, அப்புறம் பார்ல ஏறி... மெதுவா சீட்டுல உக்காந்து... நல்லா ஓட்டிப் பழகுவதற்குள், பல சிராய்ப்பையும், ஒரு பல்லையும் விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது, அப்புறம் எங்க அப்பா எடை குறைந்த ஹீரோ சைக்கிள் பச்சைக்கலர்ல பளபளப்பா புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தார், புதுசுக்கு கொஞ்சம் டைட்டா இருந்தது, ஆறுமாதத்தில் பூ மாதிரி போக ஆரம்பிச்சது அப்புறம் சைக்கிள் ரேஸ்ல கலந்துக்கற அளவுக்கு தயார் ஆனது.

அதுல சினிமாவுக்கு இரண்டு பேர் பெடல் போட்டுப் போவதும், சைட் அடிக்கப் போவதும், ஆற்றுக்கு மீன் பிடிக்க  போவதும், கூடவே நண்பன் போலவே வரும் சைக்கிள். தினம் அதை துடைத்து சக்கரங்களுக்கு எண்ணை விடுவதும் ஒரு ஆத்மார்தமாக செய்வோம்!


அன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஒரு ஆத்மார்த்த நண்பனாக இருந்தது, ஒவ்வொரு சைக்கிளுக்கும் ராசி இருக்கு, சில சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆயிரும், செயின் கழண்டுக்கும் ஆனால் நம்ம ராசிக்கு ஒர்க்கவுட் ஆன சைக்கிள் சரியா பஞ்சர் கடைகிட்டதான் பஞ்சர் ஆகும், ரிப்பேர் ஆகும். ,நடுகாட்டுல தவிக்க விடாது சிலது படுத்திவிடும்! தள்ள வைத்துவிடும், நம்ம ஹீரோ சைக்கிள் நல்ல ராசி! பழி வாங்காது. சைக்கிள்ல பெட்டி மாட்டுவது, டைனமோ லைட், ஹேண்டில்ல பழைய பாட்டு கேஸட் டேப்பை அழகா வெட்டி மாட்டி விடுறது என்பது பேஷன்! சிலர் ரேடியோ வைச்சுக்குவாங்க பாட்டு கேட்டுட்டே சைக்கிள் ஓட்டிப் போறதுல அலாதி மகிழ்ச்சி! மற்றும் பெருமிதம் அவர்களுக்கு, வீல் போஸ் கம்பியில டிசைன் டிசைனா ஒளிரும் பட்டைகளை மாட்டுவது, பாட்டரியில் இயங்கும் ஹாரன் வைப்பது என்று சைக்கிளை அழகு படுத்துவது என்று ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருக்கும், இந்த மாதிரி அழகு படுத்தலை பள்ளிக்குச் செல்லும் சைக்கிளில் வைக்க முடியாது! மாலை சைக்கிளை எடுக்க வரும்போது  ஒரு பொருளும் இருக்காது.

அதே மாதிரி பஞ்சர் ஒட்டுவதும் ஒரு தனிக்கலை. இன்று ரெடிமேடாக இருக்கின்றது, அன்று பழைய டியூப்பிலேயே அழகாக வட்டமாக வெட்டி ஒட்டுவார்கள், ஓவர் வெயில் உடம்புக்கு ஆகுதோ இல்லையே..! இந்த பஞ்சருக்கு ஆகாது! இளம் வயதில் நம்மை ஓர கண்ணால் பார்க்கும் பிகர்களிடம் படம் காட்டும் போது பஞ்சர் புடிங்கிக்கும்! கூடவே பிகரும் பார்ப்பதை நிறுத்திவிடும், இப்படி சைக்கிள் காலை வாரிவிட்டு பல்பு வாங்கியதில் தேவதாஸ் ஆனவர்கள் நிறைய நபர்கள். எனவே சைக்கிள் ஒரு காதல் வாகனமாகவும் இருந்தது.

அப்புறம் நார்மல் சைக்கிள்களை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நுழைந்தது BSA SLR சைக்கிள். தக்கை மாதிரி லைட் வெயிட் விலையும் அப்பவே இரண்டாயிரம்ன்னு நினைக்கிறேன்! லேடிஸ் வண்டி, ஜென்ஸ் வண்டி என்று வந்தது, யமஹா 100க்கு சமம் அந்த வண்டி! அந்த வண்டியில போனால் கண்டிப்பா ஒரு பத்து பிகராவது லுக்கு விடும், சிலது அந்த வண்டியில போக ஆசைப்பட்டு லிப்ட் கேட்பதும் உண்டு, அந்த வண்டி வேணும்ன்னு வீட்டுல கேட்டதுக்கு நீ வாங்குற மார்க்குக்கு BSA சைக்கிள் கேட்குதா? என தூக்கிப் போட்டு குமுறினார்கள், இதற்காகவே படித்து அரையாண்டில் படித்து மார்க் வாங்கி சைக்கிள் கேட்க...இவ்வளவு விலையில் சைக்கிளா...? யாராவது திருடிட்டு போயிருவாங்க என வாங்கித்தரவில்லை...! ஆனாலும் சைக்கிள் ஆசை என்னை விடவில்லை...!

படித்து முடித்து வேலைக்கு(ஆமா பெரிய கலைக்டர் வேலை) போன போது சிறுக சிறுக சேர்த்து சைக்கிள் வாங்கப் போகும் நேரத்தில் கம்பனியில் TVS50 கொடுத்து விட்டார்கள். அதனால் அடுத்த ஆசை சைக்கிளை விட்டு விட்டு மொபட்டுக்கு தாவியது, அதன் பிறகு கியர் பைக் ஓட்டிப்பழக யமஹா வாங்கினேன், அப்புறம் சைக்கிள் ஆசை காணமல் போனது.


ஒருமுறை பவானியில் ஒரு நண்பரை பார்க்க போனபோது வீட்டின் பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தோம், காம்பவுண்ட் சுவர் ஓரமாக சின்ன வயசுல வாங்க ஆசைப்பட்ட BSA SLR சைக்கிள் பயன்படுத்தாமல் மழை வெயில் என துருப்பிடித்து நின்று கொண்டிருந்தது டயர்கள் எல்லாம் காற்று இறங்கி பரிதாபமாக நின்று கொண்டிருந்தது.....நான் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நண்பர் சொன்னார் நான் ஸ்கூல் படிக்கும் போது வாங்கியது தினம் இரண்டு தடவை தேங்காய் எண்ணை போட்டு துடைச்சு பளபளப்பா வெச்சுக்குவேன் அப்படியே மூனாவது வீதியில் மல்லிகா மாலை நேரம் வீதியில் குழந்தைகளோடு உக்காந்து கதை பேசிட்டு இருப்பா ஒரு ரவுண்டு போய் அவளை பார்த்துட்டு வருவேன். அவள் ஞாபகமா வெச்சிருக்கேன், ஆனால் பயன்படுத்துவதில்லைன்னு சொன்னார்.அந்த சைக்கிளைப் பார்த்தேன்  பல கதைகளை அது தனக்குள்ளே வைத்துக் கொண்டு இன்னும் கம்பீரமாக நிற்பதைப் போல் தெரிந்தது அந்த சைக்கிள்!

Read more...

சான்ஸ் கிடைச்சா...? நீயும் ஷகிலா பட ஹீரோ!

>> Sunday, September 9, 2012

இன்னைக்கு இணையம்ங்கறது கைக்குள்ள உலகத்த கொண்டாந்து விட்டுடுது...ஆனா எங்க சின்ன வயசுல கார்குலேட்டரே அதிசயம், அப்ப நமக்கு பொழுது போக்கு புத்தகம்,சினிமா இதை விட்டா...? எதாவது குட்டிச்சுவத்துல உக்காந்து கதை பேசுவது, பதினாறு வயதுக்கு மேல் எல்லா ஆண்களுக்கும் புரியாத புதிராக இருப்பதில் ஒன்று பாலியல் சார்ந்த விசயங்கள். அதை நாம் அணுகிய சம்பவங்கள் பலருக்கு அனுபவமாக இன்று நினைத்தாலும் கேலியாகவும், நம்மை நாமே நினைத்து தலையிலடித்துக் கொள்ளும்படியும் இருக்கின்றது.

கவிதை வருது ஓடுங்க.....ஓடுங்க......!
எங்க பள்ளியில் ஒரு தமிழாசிரியர் இருந்தார் நல்லா பாடம் எடுப்பார். சிரிப்பு கதைகள் சொல்லி செய்யுளை, பாடங்களை மனதில் பதியவைப்பது அவருக்கு கைவந்த கலை...! அவர் வகுப்பு எடுக்கும் போது மகுடிக்கு மயங்கிய பாம்பாக மாணவர்கள் மெய்மறந்து அப்படியே உக்கார்ந்து விடுவார்கள்...! அவருக்கு வயசாகிப் போக ஓய்வு கொடுத்துட்டாங்க அவரும் வீட்டுக்கு போயிட்டாருங்க...!அவருக்கு பதிலா ரொம்ப சின்னபையனா ஆசிரியர் பயிற்சி முடிந்த ஒரு அண்ணனை எங்க வகுப்புக்கு போட்டாங்க....!

அவரு  நல்ல அண்ணன்தான் ஆனா பழைய தமிழாசிரியர் மாதிரியில்லாம அப்படியே ராத்திரியெல்லாம் உக்காந்து மனப்பாடம் பண்ணிட்டு காலையில வந்து வகுப்புல ஒப்பி்ப்பாரு..! அவரு வாத்தியாரா...? நாங்க வாத்தியாரான்னு...? சந்தேகம் வரும்! ஒரு மண்ணும் புரியாது...! கடுப்பா இருந்தது இந்த சூழ்நிலையிலதான் கோபி சாந்தி தியேட்டர்ல ஷகிலா படம் ரிலீஸ்! ஆச்சு! 
கண்மணிகளுக்கு என் ஆசிர்வாதம்...!
வழக்கம் போல என் நண்பன் கணேசன்! அடேய் போலாண்டா...?அப்படிங்கறான்! அதுவரைக்கும் பாலான புத்தகங்கள் மட்டுமே புரட்டிய பாலகன் எனக்கு...!? அதுவும் அந்த புத்தகம் வாங்க படும்பாடு தலிபான்கிட்ட தீவிரவாதியா சேர்வதை விட கஸ்டம்! கோபி மார்கெட்டுல ஒரு சின்ன பழைய புத்தகக் கடையிருக்கும் அங்கதான் விப்பாங்க.....அங்க போயி “அண்ணே....!ராஜேஸ்குமார் புக் இருக்காண்ணே...? ராஜேந்திரகுமார் புக் இருக்காண்ணேன்னு...” பிட்டப் போட்டுகிட்டே சைஸா மெதுவா “ஹி...ஹி....சரோஜாதேவி புக் இருக்காண்ணே...” அப்படின்னு ஈனஸ்வரத்துல கேட்போம்...!தனியா ஒளிச்சு வச்சிருப்பாங்க...கொடுக்கும் போது சொல்வாங்க “தம்பி படிச்சிட்டு கிழிச்சுடாதப்பா திருப்பி கொண்டு  வாப்பா பாதி விலைக்கு வெச்சுக்கிறேன்பாங்க...” திரும்ப இரண்டு புக் கொடுத்து ஒரு புக் வாங்கிட்டு வருவோம். 

இப்படியாக  சினிமாவும் காண கொள்ளை ஆசை ஆனால் வீட்டுக்கு தெரிஞ்சதுன்னா கொன்னே போடுவாங்க...! இருந்தாளும் இந்த தமிழ் வாத்தி கொடுமை தாங்கவும் முடியலை! மத்தியாணம் இடைவேளை முடிஞ்சதும் தமிழ் வகுப்பு, சாப்பிட்டதுக்கும் அதுக்கும் வாத்தியண்ணன் ஒப்பிக்கிறதை கேட்டா தூக்கம் சொக்கும்! அவன்....அவன்.... சாஞ்சு...சாஞ்சு... விழுவான்....! அவங்களை தொடை சிவந்து போகும் அளவு கிள்ளித் தூக்கத்தை கலைச்சு விடுவாரு தமிழ் வாத்தியண்ணன். மத்தியாணம் சாப்பிட்டு போலாமுடா...!என்று நான் கிரீன் சிக்கனல் காட்ட வகுப்பை கட் அடிச்சிட்டு ஸ்கூல் மதில் சுவரை தாண்டி குதிச்சுட்டு தியேட்டருக்கு போயிட்டோம்...!

இரண்டு மணிக்கு படம் போட்டா மூனு நாலுக்குள்ள படம் முடிஞ்சிரும் பிட்டு படங்களே அப்படித்தான்..சரியா ஸ்கூல் முடிஞ்ச மாதிரி வீட்டுக்கும் போயிறலாம் படம் போட்டவுடன் தான் உள்ள போவோம் அப்பத்தான் யாருக்கும் தெரியாது, படம் போட்டதும் தட்டு தடுமாறி பலர் காலை மிதித்து மன்னிப்பு கேட்டு நடுவில் இருந்த காலியிடத்தில் போய் உக்கார்ந்துட்டோம். பக்கத்துல ஒரு அண்ணன் தலையில முக்காடு போட்டுட்டு லுங்கி கட்டிட்டு மும்மரமா படம் பார்த்திட்டு இருந்தாரு....ஏண்ணே..?படம் இப்பத்தான் போட்டாங்களா...? அப்படின்னு கேட்க முக்காடு மண்டைய மேலும் கீழும் ஆட்டினாரு பெரும்பாலும் இந்த மாதிரி படங்களுக்கு இடைவேளை விடமாட்டாங்க அதிசயமா ஷகிலா படங்களில் பாட்டு டூயட் வரும்....?!இல்லை போரடிக்கிற மாதிரி பேசிக்கிட்டே இருப்பாங்க அந்த வேளையில் மிச்சர் முறுக்குன்னு ஒருத்தன் ஒரு தட்டுல போட்டு வியாபாரத்தை முடிச்சிடுவான்.
சக்சஸ்....! நாஞ்சில் மனோவுக்கு பிரண்டாயிட்டேன்!
நாங்க ஆளுக்கு ஒரு முறுக்கு வாங்கினோம்...சரி பக்கத்துல இருக்கிற அண்ணன் பொக்குன்னு போயிருவார்ன்னு இந்தாண்ணே...!முறுக்குன்னு கொடுத்தோம் மறுபடியும் முக்காடு மண்டை தலைய ஆட்டிக்கிட்டு குமிஞ்சிக்குச்சு...நாங்களும் விட்டுட்டோம்.

படத்துல ஒரு விசயமும் இல்லை வழக்கம் போல....!பக்கத்துல இருந்த அண்ணன் வேக...வேகமா வெளிய போகவும் நாங்களும் வேகமா வெளிய வந்து..யார்ராவன்னு மூஞ்சியப் பார்த்தா...ஆத்தாடி! எங்க தமிழ் வாத்தியண்ணன்! தலவலின்னு லீவு போட்டிட்டு படத்துக்கு வந்திருக்காப்டி...!அதுக்கப்பறம் அவர் வகுப்புல நாங்கதான் ராஜாங்கறது உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன...?

Read more...

பன்னிக்குட்டி ராமசாமியின் பயங்கரடேட்டா...!

>> Wednesday, September 5, 2012



பெயர் : பன்னிக்குட்டி ராமசாமி!

இயற்பெயர் : தெரிஞ்சு மெரினாவுல செலை வெக்க போறீயா..?

இருப்பது : ஒட்டகம் இருக்கிற ஊரு..!

தொழில்: நாலு கப்பல் வாங்கி விட்டுருக்கிறேன்..! கப்பல் வேவாரி!

நீங்க சயிண்ட்டிஸ்ட்டா : பை த பை...! அப்படித்தான் சொல்லிக்கிறாங்க...!

உங்களுக்கு பிடிச்ச விசயம் : வேற என்ன..? கவுண்டர் காமடி...!

உங்களுக்கு நெருங்கிய நண்பர் : எல்லாரும் நமக்கு நெருங்கிய
நண்பர்கள்தான்...!

உங்களுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவீங்க..? : சிரிப்பு போலீஸ்சை தூக்கிப் போட்டு மிதிப்பேன்..!

சினிமாவுல கவுண்டமணிக்கு செந்தில்! பதிவுலகில உங்களுக்கு...? : வேற யாரு டெரர்தான்..!

இவ்வளவு நகைச்சுவையா இருக்கிறீங்க இயல்பாகவே இப்படித்தானா...? : ஹே....ஹே...! எப்பவும் இப்படித்தான்..!

பதிவுலகில் வந்து என்ன சாதிச்சிங்க....? : சாதிக்கிறதுக்கு வேற தொழில், வேலை இருக்கு! நல்ல நண்பர்களை சம்பாரிச்சேன்..!நெக்ஸ்ட் கொஸ்டீன்..!

உங்க வயசு என்ன...? :  அது கிடக்குது கழுதை...!நெக்ஸ்ட்...! கொஸ்டீன்..!

ப.ராவின் அரிய புகைப்படம்

நீங்க பாதி அஜித் மாதிரி..! பாதி விஜய் மாதிரின்னு சொல்றாங்க....! : முற்றிலும் வதந்தி டைட்டானிக் ஹீரோ டீகாப்ரியா மாதிரி இருப்பேன்..!

நீங்க விரும்பி படிக்கின்ற புத்தகம் : ஏன் சொன்னா வாங்கித் தரப் போறீயா...?

உங்களுக்கு பிடிச்ச இசை...: வேறன்ன....ஸ்டார்ட்.. மியூசிக் குஞ்சாங்.....குஞ்சாங்

உங்களுக்கு பிடிச்ச பதிவர் நாய்நக்ஸ்சாமே...! : போன்ல என் காதுல ரத்தம் வர கடிச்ச பதிவர்!

பேஸ்புக்குல உங்களுக்கு தெரியாதது என்ன...? : அதோட அட்டைப் படம்தான் ரொம்ம வருசமா தேடிட்டு இருக்கிறேன்!

உங்க நண்பர் மனோவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க....! : ரொம்ம வருசமா ஒரு அருவாளை வச்சிருக்கிறாரு...! அது வாழைக்காய் கூட வெட்டாதுன்னு ஊருக்கே தெரியும்!

விக்கி பற்றி உங்கள் கருத்து : சிஸ்டம் ஆன் பண்ண மறந்துட்டு...! பிளாக் ஓப்பன் ஆகுல...!பிளாக் ஓப்பன் ஆகுல...! அப்படின்னு புலம்பிகிட்டு இருக்காரு!

நீங்க வீடு சுரேஸ்குமார் தீவிர வாசகராமே...? : எட்டி மிதிச்சு போடுவே ஓடிப் போயிரு...!ஓசில எழுதுற நாய்க்கு லவுச பாரு..? லோலாயத்தைப் பாரு...! கொன்னியா மக்கா இனி இந்த பக்கம் வந்தே.....! ஹிட்ஸ் அடிச்சு கொன்னு போடுவே அடேய் நாராயணா கொசுத் தொல்லை தாங்கமுடியலைடா நாராயணா.

Read more...

என் பெயர் கல்யாணராமன்!

>> Saturday, September 1, 2012



இந்த பதிவுலகம் பல விசித்திரமான பதிவுகளை கண்டிருக்கின்றது..! புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கின்றது...! இந்த பதிவு விசித்திரமானதும் அல்ல...!எழுதிய நானோ..! கொஞ்சம் விசித்திரமானவன்.!   இங்கே பாருங்கள்..! என் தலையில் கொம்பு முளைத்துக் கொண்டிருக்கின்றது.

பல காலம் பதிவுலகில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் சாதாரண ஜீவன்களில் நானும் ஒருவன். தமிழ்மணத்தில் இணைத்துப் பார்த்தேன். இண்ட்லி,யுடான்ஸ் என்று இணைத்துப் பார்த்தேன் எலக்கியம் என்று பிதற்றினேன்...திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூட த.ம.4 எனக் கருத்திடவில்லை அய்யகோ..! என்ன கொடுமை.

வெறுத்துப் போய் கூகுள் பிளஸ் பக்கம் ஒதுங்கினேன்... ஏழுமலை, ஏழுகடல் தாண்டி ஒரு மரம்! மரத்தினில் ஒரு பொந்து, பொந்தினில் ஒரு மடல், ஏதோ பதிவர் சந்திப்பாம்...! எனக்கு ஏது? நேரம் தம்பி! அதைப் படிக்க... அதனால் விட்டுவிட்டேன்....ஆனாலும் வேகின்றது என் கும்பி!

எங்களால் முடியாததை யாரோ...?சாதிக்கின்றார்கள் அவர்களுக்கு யார் கொடுத்தது அத்தாரிட்டி! அவர்கள் எதையாவது அறிவுப்பூர்வமான செய்து வைக்க நாங்களும் அறிவாளிகள் என்று உலகம் நம்புமே...! அதை நாங்கள் விரும்பவில்லை...!

சந்திப்பு, சென்னை, பதிவர், நாய்நக்ஸ் இந்த பெயர்களை கேட்டாலே எனக்கு வாந்தி...வாந்தியாக வருகின்றது. பேதி நிற்காமல் போகின்றது....! மற்றும் இதில் கலந்து கொண்டவர்களில் இருவரை மட்டும் எனக்குத் தெரியும் ஒன்று உ.த, இரண்டு மண்டபத்தின் வாட்ச்மேன் தாத்தா?!

பதிவர் சந்திப்பிலே எப்படி போண்டா தரலாம்...? அதுவும் சட்னியோடு.... யார் இந்த அதிகாரம் கொடுத்தது...? சாம்பாரிலே முருங்கக்காய் எப்படிப் போடலாம்....? கில்மா பதிவர் சிபிய வைத்துக்கொண்டு.....! அடல்ட் கார்னர் கேபிளை வைத்துக் கொண்டு....! யார் இந்த அதிகாரம் கொடுத்தது...?

அட்லீஸ்ட் என்னை மூத்த பதிவர்கள், இளையபதிவர்கள், என்றில்லாமல் நட்டநடுசென்டர் பதிவர் லிஸ்டிலாவது சேர்த்திருக்கலாம் இந்த பதிவுலகம்..! செய்ததா...? செய்யவில்லை..!

கடைசிக்கு ஒரு குருவி காலிலாவது கட்டித் தூது அனுப்பியிருக்கலாம்.....! செய்ததா...? செய்யவில்லை..! கேட்டால் நான் வறுத்து தின்றதாக கூறுகின்றார்கள்.

என்னை அந்தியூர் வெற்றிலை, கும்பகோணம் கொட்டைப்பாக்கு, வைத்து அழைத்திருக்க வேண்டும்! என் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்....செய்ததா இந்த பதிவுலகம்..? செய்யவில்லை.....!

அதனால் கடுப்பில் ஓடினேன்.....ஓடினேன்.......ஓடினேன்.......ஓடினேன்....... சென்னையின் எல்லை வரை ஓடினேன்..! கடல் வந்து விட்டது. கால் உவாய்க்கு சுண்டல் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டேன்...!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP