என்பிலதனை வெயில் காயும்!

>> Tuesday, April 16, 2013




''உசிர் போயிருச்சு கண்ணு…….!''

ரங்கசாமி தாத்தா சொல்லிவிட்டு வீட்டுப் படியிறங்கி தளர்வாக நடந்து போனார், சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தது. பால்ய நட்பு அவருக்கும் எங்க அப்பாவுக்கானது, எங்க அம்மாயின் கடைசி தம்பி அவர் இருவருக்கு சம வயது. எங்களுக்காக உறவாடாமல் இருந்தார்….இன்று உயிர் போனவுடன் "தானாடா விட்டாலும் தன் சதையாடும்" என்பதைப் போல காரியத்துக்கு போகின்றார். அவரை நான் தடுக்க விரும்பவில்லை!

எங்க அப்பா எங்களுக்கென்று தூணாக இருந்ததும் இல்லை; நாங்க அவருக்கு பாரமாக இருந்தும் இல்லை, எல்லாருக்கும் முதல் ஹீரோ அப்பாதான் ஆனால் எங்க அப்பா நிஜ ஹீரோ……! ஆமாம் நல்ல பிராமணச் சிகப்பு, மடிப்புக் கலையாத வெள்ளை முழுக்கைச் சட்டை, இரட்டை மடிப்பு பாலியஸ்டர் வேஸ்டி என கையில் பிரம்பு பள்ளி வரந்தாவில் நடந்து வந்தாலே பள்ளியே அமைதி காக்கும்! பாடம் நடத்துவதில் அவ்வளவு சிறப்பு பள்ளியில் சிரித்து நான் பார்த்தில்லை, ஆனால் வீட்டில் தோழனைப் போல் எங்களுடன் விளையாடுவார்…., கறி பெண்களைப் போல் மிளகு அம்மியில் அரைத்து கைப்பக்குவத்துடன் செய்வார்….வாசம் ஊரே மணக்கும்.

கைவசம் பல கதைகள் அவரிடமிருக்கும். வெயில் காலங்களில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு அப்பாவின் மார்பில் இருக்கும் அடர்த்தியான முடிகளை நிரவியபடி மெத்தை போல படுத்துக் கொண்டு கதை கேப்பேன்…! அப்படியே தூங்கி விடுவேன்…! திடகாத்திரமான அந்த மார்பு இன்று எலும்பு தெரிய இருக்குமா…? மூப்பு அந்த அழகை சிதைத்து விட்டிருக்குமா…? பழைய முகம்தான் மனதில் இருக்கின்றது இன்றைய முகம் எப்படியிருக்கும்....? அப்பாவுடன் பேசி கிட்டத்தட்ட 24 வருசம் ஆச்சு...! நான்கு ஜந்து வருடங்களுக்கு முன் ஒரு முறை ஒரு கோயில் விழாவில் பார்த்தது. பழைய கம்பீரம் இழந்து, முடி நரைத்து, வழுக்கை விழுந்து, தோல் சுருங்கி....நான் பேச மாட்டேனா...? என ஏங்கினார் நான் பார்ப்பதை கூடத் தவிர்த்தேன்.

அவருடைய அழகுதான் எங்க அம்மாவை இவரைத்தான் கட்டிக்கணும் என்று அடம் பிடிக்க வைத்திருக்குமா...? அம்மா இன்னிக்கு உயிரோடு இருந்திருந்தா.....?நான் படுத்துறங்கிய அந்த மார்பில் புரண்டு...புரண்டு...அழுதிருப்பேனோ...! இருக்கலாம்!

அம்மா கையில் ஆனந்தவிகடன்! கண்களில் நிரந்தர கண்ணாடி, குடை சகிதம் பள்ளிக்கு வருவார்... தமிழ் இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆசிரியர் குழுவில் என் அம்மா பேர் இருக்கும், மாதம் ஒன்றிரண்டு கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்துவிடும், புத்தகப் பிரதி தபால்காரர் கொண்டு வந்த பிறகு அதைக்காட்டி பெருமைப்படுவார்கள். மாலை பள்ளி பியூன் அனைத்து ஆசிரியர்களுக்கும் டீயும், கேக்கும் கொண்டு வந்து கொடுத்தால் எங்க அம்மாவின் கவிதை ஏதோ புத்தகத்தில் வந்திருக்கின்றது என்று அர்த்தம். சில சமயம் கோகுலத்தில் குழந்தை கதைகள், பாடல்கள், எங்க அப்பாவிக்கு கவிதை, எழுத்து கிலோ என்ன விலையென்று கேட்பார். துக்ளக் படிப்பார், இல்லை தினத்தந்தி பெரிய...பெரிய...ஆங்கில புத்தகங்களை புரட்டிக் கொண்டிப்பார் சில சமயம், தமிழ் புத்தகங்களை பெரும்பாலும் படிப்பதில்லை...!

இருவரும் அன்பாகத்தான் இருந்தார்கள் கமலா டீச்சர் வரும் வரை. பள்ளிக்கு மாற்றலாகி வந்த கமலா டீச்சர் புருசனை இழந்தவர். தனியாக வீடு எடுத்து தங்கி பள்ளிக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தார்....சகஜமாக பேசத் தொடங்கிய நட்பு அடிக்கடி இரவு அப்பா காணமல் போனார், நானே பலமுறை பார்த்திருக்கின்றேன் கமலா டீச்சர் வீட்டின் முன் எங்கப்பாவின் பச்சை நிற அட்லஸ் சைக்கிள் நின்று கொண்டிருந்தை அந்த வயதில் புரியவில்லை.

அழுதாள், சண்டை போட்டாள்....அப்பா மயிரைப் பிடித்து அடித்தார் அமைதியான கூட்டை மந்தி கலைத்தது போல... தினமும் சண்டை ஒரு நாள் நான் விளையாடி விட்டு வந்த போது மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டாள் அம்மா...! ஊரே எங்க வீட்டுக்கு முன்னாடிதான் நின்றது, கருகிய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த உடலை மருத்துவமணையில் இரண்டு நாள் வாழையிலை போர்த்தி வைத்திருந்தார்கள்....! ஒரு நடுஇரவில் எங்க அம்மாயின் ஓலம் அம்மாவின் மரணச் செய்தி அறிவித்தது அந்த ஏழு வயதில் அழக் கூடத் தோணவில்லை...!

அடுத்த சில ஆண்டுகள் அம்மா இல்லாத கவலை அம்மாயின் அரவணைப்பும் தாத்தாவின் அன்பும் மறையச் செய்தன! ஊர்க்காரர்கள் உங்கம்மா ஊருக்கே அறிவு சொல்றவ.....! இப்படி அறிவு கெட்டத்தனமா பண்ணிட்டாளே என்று அழுதார்கள், திண்டுக்கல் கஸ்தூரிபா கிராமத்தில் ஆசிரியர் பயிற்சி செய்த போது திமுகவினரின் மகள் என்பதை தெரிந்த கல்லூரி நிர்வாகம் வெளியேற்றிய போது இங்கிருந்து சென்று ஊர் காங்கிரஸ் பிரமுகர்கள் எங்க ஊர்ல மாவட்ட அளவில் முதலிடம் எடுத்த முதல் பெண் என்பதை கூறி ''அந்தப் பிள்ளை படிப்பில மண்ணைப் போடாதிங்க..!'' என்று கூறி மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள். அப்படியெல்லாம் படிச்சது தீயில் வெந்து சாவதற்கா...? என்று அழுதார்கள். ஏழை சனத்திற்கு சாதி தெரியாது! கிராம சனத்திற்கு எல்லாம் நம் பிள்ளை என்கின்ற பாசம்! அந்த அன்பு எத்தனை கோடி கொட்டினாலும் கிடைக்காதது.

திடீரென்று எங்கப்பா ஒருத்தியை தாலிகட்டிக் கூட்டிக்கிட்டு வந்து விட்டார் அறிவு பெட்டகம் எங்க அம்மா இருந்த இடத்தில அஞ்சாவது படித்த ஒருத்தி மனம் ஒப்புக் கொள்ளவில்லை..! திருமணத்தை ஏற்றுக் கொண்ட எங்கள் தாத்தா என்னையும் அவர்களுடன் அனுப்பினாள் தாயன்பிற்காக...! அம்மாவின் இடத்தை கடவுளாலும் நிரப்ப முடியாது....! ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் தாத்தா, அம்மாயை தேடி வந்தவன்தான் இதுவரை அப்பாவிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை.....!

கிழவனும்...கிழவியும் மிகவும் சிரமத்தில் எங்களைப் படிக்க வைத்தார்கள் அவர்களின் ஏழ்மையறிந்து படிப்பை விட்டுவிட்டு வேலைக் போகத் தொடங்கினேன்...எந்த துன்பத்திலும் எங்கப்பா எங்களை வந்து பார்க்கவேயில்லை தன் மனைவி, தன் குழந்தை என்று எங்களை மறந்து போனார். இன்று பணி ஓய்வுக்கு பிறகு இதே ஊரில் ஒரு வீட்டை வாங்கி அடுத்த தெருவில் வசிக்கின்றார்...!

காரியத்திக்கு போகலாமா வேண்டாமா....? மனம் அலை பாய்ந்தது...! உயிரோடு இருக்கும் வரை அந்த உறவு எங்களுக்காக என்ன செய்தது இன்று பிணமாக...! ஆனால் ஏழு எட்டு வயிசிலேயே எங்கப்பா என் மனசில இருந்து இறந்து விட்டார், இது யாரோ...? போகக் கூடாது என்று வைராக்கியத்துடன் உள் அரையில் போய் படுத்துக் கொண்டேன். ஆனால் காரணம் புரியாத துக்கம் மனதை அழுத்தியது. அழுகை வந்துவிடும் போல் இருந்து.....

தூரத்தில் பறையொலி கேட்டது..!

Read more...

மல்லி என்கின்ற ராதா!

>> Tuesday, April 9, 2013



இரவு நேரப் பனி குளிர்ச்சியாக கொட்டிக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் புளியமரங்கள் வானில் கைகோர்த்துக் கொள்ள குகை மாதிரியிருந்தது அந்தச் சாலை. மையிருட்டாக இருந்த போதிலும் நிலா வெளிச்சம் புளியமர இலைகளைத் தாண்டிக் கொண்டு மரத்தோடு ஒட்டிக் கொண்டு தலையை மட்டும் எட்டிப் பார்த்து எதாவதொரு வாகனம் தென்படுகின்றதா என பார்த்துக் கொண்டிருந்த மல்லியை ஒரு கறுப்புதாளில் வரைந்த புகை ஓவியம் போல காட்டிக்கொண்டிருந்தது இரவு.

அவள் மூக்கில் இருந்த மூக்குத்தியை திருகிக் கொண்டிருந்தாள், மெலிதான உருவம் மாநிறமாக இருந்தாள், பழைய நூல் சேலை, கூந்தலில் நான்கு முழம் மல்லிகையை வைத்திருந்தாள், ஏதோ மட்டமான பவுடரை தீட்டியிருந்தாள், ரவிக்கையை தாண்டி வெள்ளைநிற உள்ளாடை வெளியே தெரிந்தது, தொப்புளைத் தாண்டி சரிவாக புடவையை தளர்வாக கட்டியிருந்தாள் அந்த நிலவொளியில் ஒரு மாதிரி கிறங்கடிக்கும் விதமான விதத்தில் மல்லி அவ்வழியே ஆந்திரா போகும் லாரிக்காக காத்திருக்கின்றாள். நீண்ட பயணமாக செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு இந்தச்சாலை ஒரு தன் உடல் இச்சை தீர்க்கும் இடமாகும். புளியமரங்களைத் தாண்டி இருக்கும் வயல்களில் முளைத்திருக்கும் ஆளுயற புல்களுக்கு நடுவே சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள். உடற்சூட்டைத் தணிக்க வருபவர்களுக்கு விவசாயம் பொய்த்துப் போன இந்த ஊரில் சில பெண்கள் தங்கள் வயிற்றுச் பாட்டைத் தணிக்க உடல் விற்பனையை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருத்திதான் மல்லி!

இதோ இந்த வயலுக்கு நடுவே ஒரு ஒற்றையடிப்பாதை தெரிகின்றதே இதில் சில அடிகள் நடந்தால் பத்து பதினைந்து குடிசைகள் தெரியும், அதுதான் மல்லியின் வாழ்விடம், பத்தாவது வரை நன்றாக படித்தவள்தான் மல்லி, குடும்ப வறுமையை கணக்கில் கொண்டு அவசரஅவரமாக பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த பதினொன்றாவது போகும் கனவில் இருந்தவளை மாரிக்கு கட்டிவைத்தார்கள். “பொம்பளைப் புள்ள படிச்சு என்ன ஆவப் போகுது” என்று வியாக்கியானம் பேசிய மல்லியின் அப்பன் மல்லியின் கழுத்தில் தாலி ஏறுவது கூடத்தெரியாமல் சாராய போதையில் கிடந்தான். இனம்இனத்தோடு சேரும் என்பதைப் போல மாரி மகாக்குடிகாரன், வேலை முடிந்து வரும்போது இதே புறவழிச்சாலையில் இருட்டில் தள்ளடியபடி சைக்கிளில் வந்தவனை அரைத்தூக்கத்தில் வந்த வாழைக்காய் ஏற்றி வந்த லாரி அரைத்துக் கூழாக்கி விட்டுப் போய்விட்டது. அவன் இறந்த போது கையில் ஆறுமாதக் குழந்தை...குடிகார தகப்பன், தாயுமில்லை, கட்டிட வேலைக்குப் போனாள் வேலியுள்ள பயிரே மேயப்படும் இந்த உலகில் இது வேலியில்லாத காடு சும்மா விடுவார்களா...? மேஸ்திரி யாருமற்ற ஒரு வேளையில் இடுப்பைக் கிள்ளினான், மார்பை உரசினான் இவள் செருப்பைக் காட்ட வேலையும் போனது. 

பல வேலைகள், பல தீண்டல்கள், கூட வேலை செய்த பாபு அன்பாக பேசினான் குழந்தைக்கு பால், பிஸ்கட் வாங்கிக் கொடுத்தான் இவள் நம்பினாள், ஒரு நாள் இரவில் வந்து குடிசைக்குள் புகுந்து இச்சைக்கு அழைக்க இவள் மறுக்க முரட்டுத்தனமான அவனிடம் தோற்றுப் போனாள், அவன் வீசிவிட்டுப் போன சில நூறு ரூபாய்கள்...நல்லவர்கள் என்று நம்பியவர்கள் எல்லாம் அவள் உடலை பயன்படுத்த இதையே தொழிலாக செய்தால் என்ன என்று கேள்வி கேட்டு இந்தப் பகுதியில் தொழில் செய்து வரும் தேவி இந்த பகுதிக்கு மல்லியை அழைத்து வந்து ஆயிற்று ஆறு ஏழு வருடங்கள்.

ஏதோ யோசனையில் இருந்தவள் லாரி வெளிச்சம் தூரத்தில் தெரிந்ததும் உற்சாகமானாள் மரத்தின் மறைவில் இருந்து வெளிப்பட்டாள் ஒரு கையினாள் சேலையை முட்டிவரைக்கும் தூக்கி கட்டிக் கொண்டாள், லாரி வெளிச்சத்தில் அவளின் தொடை பளபளத்தது லாரி நெருங்க....நெருங்க....மார்பகச் சேலையை ஒரு புறம் ஒதுக்கி ஒரு அரைநிர்வாண சிலையாக நி்ன்றாள், அவளைக் கடந்து லாரி ஒரு ஓரமாக ஒதுங்கியது அதிலிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி வாயில் பீடியுடன் இறங்கினான் அதன் ஓட்டுநர்! நடந்து வந்து அவளை நெருங்கினான்.

“எவ்வளவு ரேட்டு” என்றான் 

“என்ன ஆயிரமா கேட்கப் போறேன்...!”

“இடம் இருக்கா...?” என்றான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு.

“வாங்க உள்ள போலாம் இடம் இருக்கு..!” என்றபடி புல் புதருக்குள் நடந்தாள் அவனும் பின்னால் சென்றான் 

“உம் பேரு என்ன..?” என்றான் அவன் “ராதா” என்றாள் யாரிடமும் உண்மைப் பெயர் அவள் சொல்லுவதில்லை. வயலுக்கு நடுவில் புற்களை வெட்டி சுத்தப்படுத்தியிருந்த இடத்துக் சென்று அங்கே சென்று கீழே கிடந்த பழைய துணியைப் கீழே விரித்துப் போட்டு அதில் படுத்துக் கொண்டாள் மல்லி. அவன் நிலா வெளிச்சத்தில் அவளை ஒரு முறை ரசித்து விட்டு அவள் மேல் படர்ந்தான். 

                                                                             ****

இரண்டு நூறு ரூபாய் தாளை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பினான். ''ஒரு நிமிசம் இருங்க நானும் வர்றேன்'' என்றாள் மல்லி ''எதுக்கு..?'' என்றான் ''இல்லங்க குழந்தைக்கு இரண்டு நாளா காய்ச்சல் மருந்து வாங்கணும்..! என்னைப் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுடுங்க...! நான் வரும்போது எதாவது வண்டி படிச்சு வந்துக்கறன்'' என்றபடி அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் கூடவே நடந்தாள்.லாரியில் இருவரும் ஏறி அமர்ந்து கொள்ள லாரியை கிளப்பினான்...!

“உங்களை எனக்குத் தெரியும் நீங்க.....ரவிதானே...?”என்றாள்!

“ஆமா எம் பேர் ரெவிதான் உனக்கு எப்படி...தெரியும்..?”

நான்தான் மல்லி உன்கூட பத்தாவது படிச்சனே..! ஞாபகம் இருக்கிறதா..? நீ கூட என் நோட்டில ஜ லவ் யூன்னு எழுதி நான் முருகசாமி வாத்தியார்கிட்டச் சொல்லி அவரு உன்னை அடி பின்னி எடுத்தாரே..?

“நீ..... எப்படி மல்லி இப்படி....? என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சே...?”

“நீ படிக்கும் போது மாடு முட்டி ஆஸ்பத்திரியில் இருந்தப்ப நாங்க ஸ்கூல் பசங்க புள்ளைக எல்லாம் பாக்க வந்தமே....!அப்ப உன்ற இடுப்புல ஒரு தையல்  போட்டிருந்தாங்க....அந்த தழும்புதான் எனக்கு உன்னைக் காட்டிக் கொடுத்ச்சு! நீ புழங்கி எந்திரிச்சு சட்டையப் போடும் போதுதான் பார்த்தேன்...அப்புறம்தான் உம்மூஞ்சிய நல்லா பாத்து நீதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்....நீ நல்லா இருக்கியா...? கல்யாணம் பண்ணிட்டியா..?”

ம்ம்ம்.....!இரண்டு குழந்தைக...! உன்னை இந்த நிலையில் பார்க்க மனசு கஸ்டமா இருக்கு மல்லி...! அதுவும் இல்லாம உன்னை நானும் என்றான்..!

“அடப் போடா...! நீ சின்ன வயசுல என்னை விரும்பினே..! இன்னிக்கு உனக்கு கிடைச்சிருக்கேன். சந்தோசப்பட்டுக்கோ..!எல்லா ஆம்பளையும் யோக்கியனாகிட்டா நாங்க எப்படிப் பிழைக்கறது.....!மனசப் போட்டு குழப்பிக்காத இந்தப்பக்கம் வந்தா வா..!” பேருந்து நிலையம் வரவே லாரியை நிறுத்தினான் 

மேலும் ஒரு இரண்டு நூறு ரூபாயை எடுத்துக்அவள் கையில் திணித்தான் ரவி. “வேண்டாம் நீ கொடுத்ததே அதிகம்தான்...!வச்சுக்கோ..!” என்று திரும்ப அவன் கையிலேயே கொடுத்து விட்டு இறங்கி கையசைத்தாள் அவன் மல்லியை இறக்கிவிட்டு மறைந்தான்...! மருந்துக் கடையைப் பார்த்து நடந்தாள்....அன்னிக்கு மட்டும் வாத்தியார்கிட்ட சொல்லாம இருந்திருந்தா லாரிக்காரன் பொண்டாட்டியாயிருப்பேன்...! என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டாள்..! பிறகு உணர்ந்து தலையில் தட்டிக் கொண்டு சிரித்தாள்..! வாய்விட்டுச் சிரித்தாள்...!

Read more...

பழனி முருகனுக்கு....அரோகரா..! பக்தர்களுக்கு வேதனைதானா...?

>> Friday, April 5, 2013


பழனி என்றாலே எனக்கு முதலில் பிடிக்காமல் இருந்தது. ஏனென்றால் உலகத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலத்தில் மிக அதிகமான பிராடுகளை கொண்ட தலம் இத்தலம்தான். கையில் சந்தனத்தை வைத்துக் கொண்டு ஒளிந்து கொள்வார்கள் திடீரென்று ஓடி வந்து  பொட்டு வைத்து காசு பிடுங்கும் பெண்கள் கூட்டம், பிற மாநிலத்தவர்கள் வந்தால் கீழே அடிவாரத்திலேயே டோக்கன் வாங்க வேண்டும் என்று ஸ்பெசல் தரிசனம் என்று ஆயிரம் ஜநூறு என்று இரக்கமேயில்லாமல் பிடிங்கிவிடுவார்கள். மேலே சென்றால் அந்த டோக்கனை வைத்துக் கொண்டு பத்து ரூபாய் வரிசையில் கூட போகமுடியாது  நிறைய சேட்டன்கள் குடும்பத்துடன் பரிதாபமாக நிற்பதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். 

அர்ச்சகர்கள் அதற்கு மேல் தனிவழியில் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவார்கள். செருப்பு, நம் உடமைகளை இங்கே வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறும் கடைக்காரர்கள் உடமைகளை திருடிக் கொள்வதும். ஏமாந்தால் மொட்டையடிக்கும் கூட்டம் இந்த தலத்தில்தான் ஏராளம். ஆனால் இப்பொழுது காவலர்களை வைத்து பொட்டு வைக்கும் பெண்களை அறவே இல்லாமல் செய்து விட்டார்கள். மற்ற ஏமாற்றச் செயல்கள் ஓரளவு குறைந்திருக்கின்றது.

பழனி சென்று மகனுக்கு இரண்டாவது மொட்டையடிக்க வேண்டும் என்பது மனைவியின் வேண்டுதல், வெயில் காலத்தில் குழந்தைகளின் அதிகப்படியான முடி இருப்பது அவர்களுக்கு எரிச்சலையும், வியர்த்து எந்த நேரமும் வியர்வை ஈரத்துடன் இருந்தால் சளி பிடித்துக் கொண்டு நம்முடைய பாக்கெட்டில் இருந்து சில ஜநூறு ரூபாய்களை மருந்து மாத்திரைகளுக்கு அழவேண்டியிருக்கும் என்பதால் இந்த வாரம்... அடுத்த வாரம் என காலம் தாழ்த்தி போன ஞாயிறு குடும்பத்துடன் காலை 5.00மணிக்கு எழுந்து அதிகாலை தூக்கத்தை தொலைத்து காலை 7.00மணிக்கு திருப்பூரில் அதிக கூட்டத்தை சுமந்து கொண்டு விழிபிதுங்கியபடி மெதுவாக அரசு பேருந்தில் பழனி போனோம்.

பழனி சென்று அடிவாரத்தில் மொட்டையடித்து படியில் மெதுவாக ஏறினால் முருகனை தரிசிக்க பங்குனி கொடுமுடி தீர்த்தம், காவடி எடுக்கும் பக்தர்கள், சேரநாட்டவர்கள் (சேச்சிகள் அதிகப்படியாகவே தமிழ்அழகனை தரிசிக்க நின்றிருந்தார்கள்). பத்து ரூபாய் கட்டணம், இலவச தரிசனம், நூறுரூபாய் கட்டணம் என ஒரு லட்சத்தைத் தாண்டும் கூட்டம். காலை பதினொன்று மணிக்கு வரிசையில் நின்று மாலை நான்கு மணிக்கு இராஜஅலங்காரத்தில் முருகனை தரிசித்தோம், ரோப் கார் என்று அழைக்கப்படும் ஒரு கழுதை வண்டியில் ஏற மூணு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம்!  மறுபடியும் படியில் இறங்கலாம் என்று முடிவு செய்து யானைத்தடத்தில் இறங்கினோம். நாங்க படியில் இறங்கி பல மணி நேரம் கழித்து ரோப் காரில் வந்தவர்கள் வந்தார்கள் இந்த ரோப் கார் கழுதையை எதாவது பேரிச்சம் பழத்துக்கு போடுவது நல்லது. அப்புறம் பழனியில் கிடைக்கும் குளிர்ப்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் அத்தனையும் ஒரிஜினல் மாதிரியே இருக்கும் ஆனா இருக்காது அத்தனையும் டூப்ளிகெட்டுகள். பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் பகிரங்கமாக விற்பனை செய்கின்றார்கள்.

மேலே ஏறிக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் மயக்கம் போட்டு கீழே விழ ஒரே கூச்சல், குழப்பம், அந்த பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் தோளில் தூக்கிப் போட்டு வேகமாக இறங்கினார்கள். எந்த மருத்துவ வசதியும் படியில் ஏறுபவர்களுக்கு கிடையாது. ஒரு ஸ்டெச்சர் கூட இல்லை. அதை விட கொடுமை பாதுகாப்புக்கு என குறைவான காவல் துறையினரே உள்ளனர். ஒரு பெண் காவலர் ஒருவரே வரிசையில் நிற்பவர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் அடிக்கின்ற பங்குனி மாத உக்கிரமான வெயிலுக்கு மிகவும் களைத்துப் போனார் அவரும் பாவம். கோயிலில் வரும் வருமாணத்தைப் பெறுவதில் காட்டும் அக்கரையை பக்தர்கள் மேல் துளியும் காட்டாத தமிழக அரசு கொஞ்சம் திருப்பதி நிர்வாகத்தைப் பார்த்தாவது திருந்தினால் நல்லது. சுகாதாரம் மருந்தளவு கிடையாது வரிசையில் நிற்கும் கூண்டு மாதிரியான இடங்களில் அதிக்கப்படியான குரங்குகள், அதன் எச்சங்கள், மக்கள் நெருக்கடியை தாங்காத சில பெண்கள் எடுத்த வாந்திகள், என கடும் துர்நாற்றம் கோவிலா கவர்மெண்ட் கக்கூஸா என ஜயம் ஏற்படுகின்றது. இலவச செருப்பு விடும் இடத்தில் வற்புறுத்தி காசு கேட்பது என்று பழனிக்கே உரித்தான பக்தர்களை மொட்டையடிக்கும் கும்பல் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். முருகன் பாவம் என்ன செய்வாரு அவரு முதுகையே சுரண்டி பாதி திருடி வித்துட்டானுக..! முருகா கோமணத்துக்கு உருவாஞ்சுருக்கு மட்டும் போட்டுறாதே...!படிமுடிச்சு போட்டுக்கோ சொல்லிட்டேன் ஆமா..!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP