VALAIபாயுதே......!28-12-12!

>> Thursday, December 27, 2012

அன்புள்ள மக்காஸ்

வணக்கம் இப்பொழுதெல்லாம் அதிகமாக பதிவு போடுவதில்லை (சந்தோசம்) முகப்புத்தகத்தில் ஒன்றோ...இரண்டோ இடுகையிடுவதோடு சரி!(அதுக்கென்ன இப்ப.....) சரி அதுல ரசிச்ச....விரும்பிய.....புன்னகைக்க வைத்த, ஆத்திரப்பட வைத்த எதாவது ஒன்று என்னை தீண்டியவைகளை இங்கு பதிகின்றேன் விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்...! ஏற்கனவே படித்தவர்கள் அப்பீட் ஆயிக்குங்க........!

அப்புறம் முக்கியமான விசயம் (என்ன...?)இந்த முயற்சி என் வாசகர்கள் பதிவு போடுங்க என்று கதறி அழுதார்கள் அதனால் போடுகின்றேன் என்று பொய் சொல்ல விரும்பல (கர்ர்ர்ர்ர்தூ...உனக்கு வாசகர்களா....இதெல்லாம் ஓவர்) காலையில் கழிவறையில் தோன்றிய கண நேரச் சிந்தனை மட்டுமே!

Bhakkiyam Ramasami Jarasu




நிறைய எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டு முகப்புத்தகத்தில் தன் மனதுக்கு பிடித்த விசயங்களை எதாவது எழுதிக் கொண்டிருப்பார்கள்..!அப்படி கண்ணில் பட்டவர்தான் அய்யா பாக்கியம் ராமசாமி! வாரமலர்ல வருகின்ற அப்புசாமி,சீதா பாட்டி கதையதான் முதல்ல படிப்பேன்! அன்றைய காலக்கட்டத்தில் நாங்க பசங்க கூட்டாக இரண்டு பேர் மூன்று பேர் புத்தகத்தை இழுத்து இழுத்து படித்து சிரிப்போம்....! அவர் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்

எண்ணக் கிணறு!

இளமையில்

பொற் சால்வைகள்

நிறைய வந்தன

குளிரவில்லை

கொடுத்துவிட்டேன் தானம்.

இப்போது -

பார்வையும் இல்லை

போர்வையும் இல்லை.

- ஜ

ஒரு கணினி நிபுணரால ஒரு கணினி நிபுணரைத்தான் உருவாக்க முடியும்! ஒரு விஞ்ஞானியால ஒரு விஞ்ஞானிய உருவாக்க முடியும்! ஆனால் ஒரு எழுத்தாளரால் மட்டுமே ஒரு நல்ல சமூகத்தையே உருவாக்க முடியும்! அவர்களை மறந்து விடாமல் நம்ம ஆளுக சென்னையில் எதாவது விழா, சந்திப்பு வைத்தால் இந்த மாதிரி மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கலாம்! நம்மால் முடிந்த ஒரு பொன்னாடை...ஒரு புத்தகம் கொடுக்கலாம்..! அவர்கள் தமிழ் மக்களின் பொக்கிஷங்கள்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------


பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும்,ஏனென்றால்,மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார்,அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே! (சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்)இதில் அடங்கும்,மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார்,கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார்.நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்... இப்ப சொல்லுங்க நன்பர்களே...(இதை SHARE செய்து மத்தவங்களுக்கும் சொல்லுங்கப்பா.

நன்றி : · நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்

~தமிழ்ப்பொடியன்

----------------------------------------------------------------------------------------------------------------------------

13 hours ago 



நல்லா கருத்தா பேசுவாப்ல........!

-----------------------------------------------------------------------------------------------------------
நம்ம சாப்பாட்டு கடை அதிபர் கேபிள்ஜியின்! புதிய கெட்டப்பு

----------------------------------------------------------------------------------------------------------
பல நுகர்வோர் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு வழிகாட்டியாக இருப்பது முகப்புத்தகத்தில் உள்ள கேட்டால் கிடைக்கும் குழுமம்! அதில் மின்சார துறைக்கே சாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த திருப்பூர் சரவணபிரகாஷ் அவர்களின் அனுபவம்! 


டிஸ்கி : இந்த பதிவு முகப்புத்தகத்தில் இல்லாத நண்பர்களுக்கான பகிர்தலே! இந்த ஆக்கங்களை படைத்த நண்பர்கள் விரும்பாத பட்சத்தில் கருத்துரையில் தெரிவித்தால் நீக்கப்படும்

அன்புடன், நட்புடன்....

வீடு.சுரேஸ்குமார்

Read more...

வாருங்கள் பதிவர்களே திருப்பூரில் சங்கமிப்போம்!

>> Monday, December 24, 2012

அன்புடைய வலையுலக மற்றும் சமூக வலைதளங்களில் இருக்கும் பதிவுலக நண்பர்களே! வரும் 30-12-2012 ஞாயிறு அன்று

தொழிற்களம் மின்னிதழ் 
மற்றும் 
தமிழ் மீட்சி இயக்கம் 

இணைந்து  தமிழ் உறவோடு உறவாடுவோம் என்று ஒரு நிகழ்ச்சி திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட முனனாள் ஆட்சியர் திரு.உ.சகாயம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

அதைப் பற்றிய தொழிற்களம் விழாவிற்கான சிறப்பு வலை தளத்தில் பதிவுகள் 
உள்ளது கிளிக் செய்து படித்துப் பாருங்கள்

அழைப்பிதழ்



அது சமயம் விழா மதியம் 2.30 லிருந்து 5.00மணி வரை நடை பெறவுள்ளது, காலை 10.00மணியில் இருந்து 1.00மணி வரை பதிவர்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவர்களும் திருப்பூர் பதிவர்களும் சங்கமிக்கின்றார்கள் வாருங்கள் தோழர்களே நாம் சந்திப்போம்!

அன்புடன், நட்புடன்,

வீடு.சுரேஷ்குமார்
திருப்பூர்
போன் : 98439 41916
email : sureshkumar.artist@gmail.com

Read more...

சுந்தரேசனும் சாம்சங் கேலக்ஸியும்.....!

>> Sunday, December 23, 2012




பிரபல துணிக்கடையில் இருந்து குலுக்கலில் பரிசு விழுந்திருக்குன்னு போன் செய்து சொன்னாங்க....போஸ்ட் மேன் வந்தா வாங்கி வைன்னு தன் கணவன் சுந்தரேசன் காலையில் சொல்லிவிட்டு ஆபிஸ் போயிட்டான்.

பரிசு விழுந்திருக்குன்னு சந்தோசப் படாம போஸ்ட் மேன் கொடுத்த  பார்சலைப் பிரித்த கோகி தலையில் இடிவிழுந்தது போல் உக்கார்ந்திருந்தாள்!

பங்கஜம் மாமி "ஏண்டி பரிசு வந்ததுக்கு இப்படி இடிவிழுந்த மாதிரி இருக்கியேன்னு.." கேட்கின்றாள். "போங்க மாமி உங்களுக்கு என்ன தெரியும்…."என்று சொல்ல ஆரம்பிக்கின்றாள். கோகியின் நினைவில் கொசுவர்த்தி சுத்த ஆரம்பித்தது

***

சுந்தரேசன் படுக்கையில் இருந்து எழுந்தான்…..! தலயணைக்கு அடியில் வைத்திருந்த புதிதாக வாங்கியிருந்த ஆன்ட்ராய்டு சாம்சங் கேலக்ஸியை துழாவினான், கடைசியில் அது எங்கோ சுவர் ஓரமாக கிடந்தது….எடுத்தான் முகநூலை திறந்தான். சமையறையில் இருந்து கோகி காஃபியை கொண்டு வந்து கொடுத்து விட்டு "இங்க பாருங்கோ காலையில் இதை நோண்டாம ஆபிஸ்க்கு கிளம்பர வேலையப் பாருங்கோ….! இன்னைக்காவது உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வருவீங்களா….? மாவு அரைக்கனும் அப்புறம் வக்கனையா இட்லி தோசை கிடைக்காது…! சொல்லிட்டேன்..!"

"வாங்கிட்டு வர்றண்டி சும்மா காலங்காத்தால நொய்….நொய்ன்ட்டு"

பொண்டாட்டி தொல்லை தாங்கலை சாமியாரா போயிடலாம்…! குஜாலா இருக்கும் என்று ஸ்டேட்டஸ் போட்டான்…! மடமடவென பத்து லைக்குகள் விழுந்தது. முதல் கமெண்ட்டாக "சூரக்கோட்டை சூனாதானா" ஆமாம் பாசு பொண்டாட்டிக தொல்லை தாங்கலை….அவ்வ்வ்வ் என்று போட்டான்! விடியாமூஞ்சி வந்து ஒரு லைக்க போட்டிட்டு "சேம்பிளட்" அப்படின்னு போட்டான்…! "ஏங்க...! காஃபி ஆறிடுங்க குடிங்க, சுடுதண்ணி வச்சிட்டேன் காஞ்சிருச்சு கிளம்புங்க…!, பையனை ஸ்கூல்ல வேற விடனும்,அந்த கருமத்தை காலையிலேயே நோண்டாதிங்க…..கிளம்புங்க……கோகி இனி விட்டால் அடித்தாலும் அடித்து விடுவாள் என்ற படி சுந்தரேசன் ஓடினான்.

மச்சிஸ் நான் காஃபி குடிக்கிறேன் என்று கூகுள்ள தேடி ஒரு காஃபி இருக்கிற மாதிரி கோப்பை படம் போட்டு ஸ்டேட்டஸ் போட்டான். சுந்தரேசன் அதற்கு விழும் லைக்குகளைப் பார்த்துக் கொண்டே பல் துலக்கினான். நான் பல்லு வௌக்குறேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டான்…!

அடுத்த வேலையான "முக்கி"யமான வேலை செய்யும் போதும் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு இருந்தான். கெடாகுமார் கமெண்ட் போட்டான் என்ன மாப்ள சாப்பிட்டு இருக்கிறியா…? அப்படின்னு கடுப்பாயிருச்சு சுந்தரேசனுக்கு அடங் கொய்யா……கக்கா போகையில கேள்வி பாரு பிளடி பூல் அப்படின்னு போட்டான்!

போனை வைத்து விட்டு குளிக்க தொடங்கினான்…..! குளித்து முடித்ததும் தலையைத் துவட்டிக் கொண்டே ஸ்டேட்டஸ் போட்டான். சாப்பிடும் போது இன்னிக்கு வத்தக்குழம்பு பப்படம் என்று ஸ்டேட்டஸ் போட்டான்.  "சாப்பிடும் போது கூட இதை வெச்சிருக்கனுமா…?" என்று கோகி போனை பிடுங்கி வைத்தாள்.

சுந்தரேசன் தெருவில் நடந்து தெரு முனையில் இருக்கும் சினிமா போஸ்டர் ஒட்டிய நிழல் குடையில் கீழ் வந்து நின்றான், போனை நோண்டிக் கொண்டே நின்று கொண்டிருந்தான், சிறிது நேரத்தில் பஸ் வரவும் ஏறினான் கூட்டம் அதிகம் என்றாலும் ஏறி தோதான ஒரு இடத்தில் நின்று கொண்டு போனை எடுத்து நோண்டிக் கொண்டே வந்தான். இறங்கும் இடம் வந்ததும் டூத்பேஸ்ட்டில் இருந்து பேஸ்ட் பிதுங்குவது போல இறங்கி அலுவலகம் நோக்கி நடந்தான்.

****

கோகி இரவு டிபன் செய்து விட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு டிவியைப் போட்டு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன இன்னும் அவரை காணலை, தன்னுடைய போனை எடுத்து அவனுக்கு போன் போட்டாள், "சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது" என்று ஒரு பெண் கூறினாள்..! போனை நோண்டிக்கிட்டே சார்ஜ் போட மறந்துட்டார் போல என்று சொல்லிக் கொண்டே இருக்க சுந்தரேசன் சோர்வாக உள்ளே நுழைந்தான். லுங்கி மாற்றி விட்டு பாத்ரூம் சென்று கை,கால் கழுவிட்டு வந்து தட்டில் இருந்த இட்லியை சாப்பிட்டு விட்டு போய் படுத்துக்கொண்டான்.

கோகிக்கு வியப்பாக இருந்தது! இரவு பன்னிரண்டு வரை போனை வைத்துக் கொண்டு பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருப்பாரே….! இன்னைக்கு என்ன ஆச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையோ….? அவளும் நாலு இட்லிய சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைத்துவிட்டு படுக்கையறைக்கு வந்தாள் கோகி.

கட்டிலில் இரங்கநாதர் போல் படுத்திருந்த கணவன் அருகில் அமர்ந்து என்னங்க தலவலிக்கறதான்னு தலைய தடவி விட்டாள்…! 

“ஒன்னுமில்ல கோகி என் போன் தொலைஞ்சிருச்சு” என்றான் சுரத்தேயில்லாமல் சோகமாக…! 

“என்னங்க சொல்றீங்க எட்டாயிரம் ரூபா போனாச்சே…!” என்றாள்

பஸ்ல இறங்கும் போது இருந்துச்சு…! ஆபிஸ் போய் பாக்கெட்ல பாக்குறேன் இல்ல எவனோ பிக்பாக்கட் அடிச்சுட்டான் உடனே போனை ஆப் பண்ணிட்டான் போல பப்ளிக் பூத்ல இருந்து கூப்பிட்டுப் பார்த்தேன் சுவிட்ச் ஆப்ன்னு வருது….

சரி விடுங்க….வேற சுமாரான ஒரு போன் வாங்கிக்கலாம். இனிமே இந்த விலை அதிகமான போனே வேண்டாம் என்று கோகி சொன்னதிலும் ஒரு உள் அர்த்தம் இருந்தது. இருபத்தி நாலு மணி நேரமும் பேஸ்புக்கையே நோண்டிக் கொண்டிருப்பதால் ஒரு சந்தோசமாக பேசவோ…!குழந்தைகளிடம் விளையாடவோ நேரமில்லாமல் அதற்கு அடிமை போலவே ஆகிவிட்டான். இனி அந்த தொல்லை இருக்காது என்று மனது சந்தோசப்பட்டாலும் போன் தொலைந்ததில் வருத்தம் இருக்கத்தான் செய்தது.

***

அடுத்த நாள் சாதாரண போன் ஒன்றை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு செல் கம்பனியில் சென்று அதே எண்ணில் ஒரு சிம்மும் வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அவனுடைய செயலில் மாற்றம் தெரிந்தது, குழந்தைகளிடம் விளையாடுகின்றான்…! விடுமுறை நாட்களில் குடும்ப சகிதமாக சினிமா, பார்க் என்று சென்று பொழுதை கழிக்க ஆரம்பித்தான், கோகிக்கும் சந்தோசமாக இருந்தது.

காலை வேளையில் போன் இருந்தால் நோண்டிக் கொண்டு இருப்பான் இப்பொழுது காய்கறி வெட்டிக் கொடுப்பது, குழந்தைகளுக்கு சீருடை அனிவது என்று உதவுகின்றான். 

இப்படி அழகா போய்ட்டிருந்த வாழ்க்கையில சனியன் சைக்கிள்ல வராம பிளைட்ல வந்தான். ஒரு நாள் கோகியின் பிறந்த நாள் வர பரிசாக தர சுந்தரேசன் புடவை எடுக்க நகரில் பிரபலமான ஒரு துணிக்கடைக்குப் போனான் கோகியின் நிறத்துக்கு தகுந்தது போல ஒரு புடவையை செலக்ட் செய்து பில் போட...அவர்கள் ஒரு விண்ணப்பம் மாதிரியொன்றில் முகவரி, போன் எண் எல்லாம் எழுதுங்க சார் என்றார்கள். எதற்கு என்று கேட்டான்?

 "சார் நாங்க எங்க வாடிக்கையாளர்களுக்கு வருடம் ஒருமுறை பரிசு கொடுகின்றோம் குலுக்கலில் உங்கள் பெயர் வந்தால் பரிசு கிடைக்கும் சார்...! என்று பில் போடும் ஒல்லியான பையன் சொல்ல...! அசுவராஸ்யமாக பெயர் முகவரி எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விட்டு அதைப் பற்றியே மறந்து விட்டான்.

விதி வலியது என்பது போல போஸ்ட்மேன் கொண்டு வந்த பிரபல துணிக்கடையின் குலுக்கலில் சுந்தரேசன் பெயர் விழ அவர்கள் அனுப்பியிருந்த பரிசுப் பொருள் 

"சாம்சங் கேலக்ஸி போன்!"

***

Read more...

நான் குயில் பேசுகின்றேன்.....!

>> Monday, December 10, 2012


மனிதன் காது குடைய
இறகு கேட்ட போதே
எங்களினம் எச்சரிக்கை
அடைந்திருக்க வேண்டும்.
அப்படி இல்லாததால்.....

பெட்ரோல் புகை,
டீசல் புகை,
ஆலைப்புகை - என
சுவாசித்து.....சுவாசித்து....!
தொண்டை கமறுகின்றது
“இனிய சங்கீதம்”
அபஸ்வரமாய் ஒலிக்கின்றது!

உங்கள் அலைபேசியில்
என் குரலை ரிங் டோனாக
வைத்துக் கொண்டே
நாங்கள் வாழ்ந்த மரங்களை
வெட்டி காங்ரீட் கட்டிடங்களை
எழுப்பிக் கொண்டீர்கள்!

என் காதலன் நீங்கள்
காடழித்து உருவாக்கிய
சாலையில் வேகமாக வந்த
லாரியின் சக்கரத்தில்
கூழாகுவதற்கு - முந்திய
அலறல்அடிக்கடி
ஞாபகம் வருவதால்
என் பாடலில் முகாரி மட்டுமே
இசைக்கின்றது....!

ஒரு கிறுக்கு முண்டாசு
கவிஞன் எங்களைப் பாடிவிட்டு
போய்விட்டான்.....!
அவனையும் மதிக்க வில்லை
எங்களையும் மதிக்க வில்லை
வாழ்க சனநாயகம்!

சனங்கள் நீங்கள்
ஆலைக்கழிவு,
அனுக்கழிவு எனக் கொட்டி
நோய்களை நீங்கள்
பெற்றுக் கொண்டீர்கள் சரி
உங்கள் தொகுதியில் இல்லாத
ஓட்டும் இல்லாத
எங்களுக்கும் இலவசமாக
தந்து மொத்தச் சிறகையும்
பிடுங்கிக் கொண்டீர்கள்...!

உங்களுக்கு நேரமிருந்தால்
உங்கள் வீட்டருகில்
மரம் என்று ஒன்றிருந்தால்
நானிருப்பேன் கூவுகின்றேன்
கேளுங்கள் காது கொடுத்து
கேளுங்கள் இனிய கானமல்ல அது
உங்களுக்கு வரப்போகும்
ஆபத்துக்கான
“அபாயச்சங்கு”

Read more...

இயர் ஆப் ஸ்பெசல் மீல்ஸ் 2011 TO 2012

>> Tuesday, November 27, 2012


ஆடு திரும்பல் பேட்டிகுமார்


என்னை மாதிரியே வீட்டம்மாகிட்ட ரொம்ம பயப்படுவாரு, முக்கு கடை முனியம்மா பாட்டியில் இருந்து, சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல் வரைக்கும் அலசி, ஆராய்ஞ்சு எழுதறதுல இவரை மிஞ்ச ஆள் கிடையாது! இவர் இருக்கிற வீதியில் யாரும் இப்ப வாக்கிங் கூட போவதில்லையாம்…..! வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..! பின்னங்கால் பிடறியில் அடிக்க கோமாவில் இருந்த 105 வயது பெரியவர் எழுந்து ஓடுனாறாம் இவர் வீட்டுத் தெருவே பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றது.

பலாசக்கை காப்பிபெவிக்கால்குமார்


இவர் தன் கையில் இருக்கும் பஸ் டிக்கட்டின் பின்புறம் கூட ஜோக் எழுதி பல பத்திரிக்கைக்கு அனுப்பி வெளியிடாமல் திருப்பி அனுப்பியது மட்டும் திருப்பதி மலையை விட உயரமாக இருக்கும். முன்னால் ஆல்ரவுண்ட் பிளாக்கர் இப்பொழுது டுவிட்டரில் மட்டும் கவனம் செலுத்துகின்றார். ஒரு நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார் அதுல 100க்கு 175 சதவீதம் காப்பி பேஸ்ட்…..இவர் போன்ல ஒன்லி மிஸ்டு கால் மட்டும் போகும். இவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட "சண்டைன்னாலும் சம்சாரம்ன்னாலும் கால்ல விழுந்திருவேன்..!"  அப்படின்னு உண்மைய சொல்லுற நல்ல மனுசன்.

'அநியாயத்துக்கு நல்லவன்' தமன்னாகுமார்


சென்னை பாஷையில் எழுதி படிப்பவர்களை அவ்வப்போது நாக்கு சுளுக்கவைக்கும் வித்தையில் வல்லவர். அநியாயத்துக்கு நல்லவர், போஸ்டர் ஒட்டும் முனுசாமி! ஷகிலா படத்தின் போஸ்டரை தெரியாத்தனமாக இவர் வீட்டுக்கு எதிரே ஒட்டியதால் அவரை திருத்துகின்றேன் பேர்வழி என்று பேசியே திருத்தி இப்பொழுது அவர் வேலையில்லாமல் இருக்கின்றார்…..! "என் கைல மாட்டுனா படவா பிச்சுவாவ.. வாயில வுட்டு ஆட்டப் போறேன்" என்று சொல்லிக் கொண்டு போஸ்டர் முனுசாமி காண்ட்ல கீரார் நைனா அந்தாண்டை போய்க்கினாத..ஆங்!, 

அப்ப..அப்ப…அரசியல் உள்குத்து எழுதி கிச்சுகிச்சு மூட்டுவார், ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார். பிரபல பதிவர் ஒருவர் இவருக்கு குழந்தைக்கோமணவாயர் என்கின்ற பட்டத்தைக் கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீடாஷாப் பீதாம்பரகரன்


அஜித் படம் மொக்கையாக இருந்தால் இயக்குனர் தவறென்றும், விஜய் படம் மொக்கையாக இருந்தால் விஜய் தவறென்றும் மாற்றி மாற்றி விமர்சனம் போடுவதில் வித்தகர். புல் டைட்ல படத்துக்கு போயிட்டு காஜல் வரும் சீன்ல மட்டும் முழிச்சு…. முழிச்சு… பார்த்திட்டு காஜால் வரும் சீனை மட்டும் குறிப்பிட்டுட்டு தலைவி, அம்முக்குட்டிக்காகத்தான் போனேன் என்று பதிவிடுவதில் ஜகஜால கில்லாடி…

புனுகு பூனை கக்கா ஆராய்ச்சியில் நீண்ட நாட்கள் இருந்ததால் எப்படிப்பட்ட கப்பையும் எதிர் கொள்ளும் தீரம் மிக்கவர். சில கமெண்ட்ல எதிராளியின் டவுசரை முழுக்க கழட்டுவதால் நிறைய பிரபலங்கள் இவரிடம் ஜாக்கிரதையாகவே பழகுகின்றனர். கேப்டனின் அதிதீவிர கிராம்டன் கிரீவ்ஸ் பேன்! என்பது குறிப்பிடத்தக்கது..!

பெட்டிக்கடைக்காரன் வால்மார்ட்டில் குஜய்குமார்


இரண்டு வருடம் ஓய்வில் இருந்து விட்டு காய்ந்த மாடு கம்பில் பூந்தது போல பேஸ்புக், பிளாக், பிளஸ், பின்ட்ரெஸ்ட், யாகு, வெயான், லின்க் இன், பிளிக்கர், அலேக்சா, சரோசா, நிரோசா எனக் கிடைக்குமிடமெல்லாம் அக்கவுண்ட் ஓப்பன் செய்து……அங்க வச்சு தெளிய…தெளிய…..அடிச்சாலும் நானும் ரௌடி, மதுரைக்காரன், தேனிக்காரன், கரகாட்டக்காரன் என்று பில்டப் கொடுக்கும் ஆல் ரவுண்டர். எல் கே ஜியில குழந்தைய சேர்க்க பட்ட பாட்டை பதிவா போட்டு நிறைய பெற்றோர் வயித்துல புளிய கரைச்ச பதிவுலக பேதி டாகுடர் அண்ணன் குஜய்குமார். இவர் அதி தீவிர ராமராஜன் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சாபூனை விம்ரின்


மதம் சார்ந்த விவாதங்களில் விம் மற்றும் ரின் போட்டு வௌக்குவதால் இவர் பெயரே விம்ரின் என்று ஆகிவிட்டது. வரலாறு, சினிமா என கலந்து கட்டி கருத்து சொல்லும் கருத்து கந்தசாமி. மூக்கு ஸ்ரீதேவி மாதிரியென்று ஒருவர் புகழ்ந்ததால் மூக்குக்கு மட்டும் பேர் அன் லவ்லி தினமும் நாற்பது தடவை தடவுகின்றாராம், ஆனால் மூக்கு வளரவில்லை. அடிக்கடி தும்மல்தான் வருகின்றது வேறு நல்ல பிராண்டு மூர் மார்க்கெட்டில் தேடிக்கொண்டிருக்கின்றார், பல விவகாரமான விசயங்களை பலகாரமாக படைப்பதில் வித்தகர்…..

டிஸ்கி : இந்த பதிவில் வரும் பெயர்களும் சம்பவங்களும் உண்மையே..! நீங்கள் நினைப்பவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அனைத்தும் மொக்கை நகைச்சுவையே..!நோ....பீலிங்ஸ்....நோ....66A

அபாயகரமான அறிவிப்பு 
இது தொடரும்.........
:-)

Read more...

வௌங்காதவன் பய(ப்புள்ள) பயடேட்டா

>> Thursday, November 22, 2012


பெயர் : வெளங்காதவன்

இயற்ப் பெயர் : நாட்டுகொரு நல்லவன்

சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....

தொழில் : ஏராளமான ஆணி பிடுங்குதல்

உப தொழில் : பிடுங்கிய ஆணிகளை எடைக்குப் போடுதல்

நண்பர்கள் : அரசியல் பேசுபவர்கள்

பிடித்த அரசியல்வாதி : கேப்டன் ம்ம் அஸ்க்கு புஸ்க்கு ஒபாமா

பிடிக்காத அரசியல்வாதி : தமிழன் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் அனைவரும்

பொழுது போக்கு : போன் போடுவது

கடுப்பாகுவது : நக்கீரன் எனக்கு போன் போடுவது

சாதனை : பதிவு எழுதுவது

சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது

நீண்ட நாள் சாதனை : பயப்படாமல் தலீவரை நக்கலடித்தது

நீண்ட நாள் விருப்பம் : தமிழ்நாடு குஜராத் மாதிரி ஆகோனும்

பிடிக்காதது : குஜராத்தில் மது விலக்கு….

பிடித்தது : மே.வங்கத்தில் மது விலக்கில்லாதது

நெருங்கிய நண்பர்கள் : எனக்கு போன் செய்பவர்கள்

எதிரிகள் : ஸ்மைலி கமெண்ட்டை எதிர்ப்பவர்கள்

ஆசை : திடீர்ன்னு பிளாக் எல்லாம் டெலிட் ஆயிறனும்

முயற்சிப்பது : கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே

பொறாமைப் படுவது : ஊர்ல நல்ல வேலை கிடைச்சவங்க..!

வருத்தப்படுவது : ஊர்லியே குப்பை கொட்டுறவங்களைப் பார்த்து

ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது

பயப்படுவது : கல்யாணப் பேச்சு

எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்.

இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்

Read more...

ஆர்.கே.செல்வமணி சூப்பிப் போட்ட பனங்கொட்டை!-துப்பாக்கி

>> Thursday, November 15, 2012


ஹிஹி! பட்டாளத்தில் வந்த செல்லக்கிளி தீப்தி நம்பியார்...! விஜய் தங்கச்சி கேரக்டர்..!
ஆர்கே செல்வமணி, விஜய்காந்த் கூட்டணி நன்றாக சூப்பிப் போட்டுத் துப்பிய பனங்கொட்டையை கழுவி பதப்படுத்தி கண்ணு மூக்கு வெச்சு அழகான ஒரு பொம்மை செஞ்சிருக்கின்றார் முருகதாஸ், ஆனாலும் ஓவர் சென்டிமென்ட், பஞ்ச் டயலாக் போன்ற வழக்கமான விஜய் படத்தில் இருக்கும் வன்கொடுமைகள் இதில் இல்லை, அதற்காகவே முருகதாஸ் வீடு இருக்கிற திசை பக்கம் ஒரு கும்புடு போட்டுக்கலாம். ஆனாலும் பாருங்க அழகான திருஸ்டிப் பொட்டு நம்ம காஜல் அன்ட் ஜெயராம். வேகமாக போய்க்கொண்டிருக்கும் கதைக்கு ஸ்பீடு பிரேக்கர் மாதிரி இரண்டு கேரக்டர்கள்….வரும் போதெல்லாம் எரிச்சல் வருகின்றது. பீர் குடிக்காமையே அடிக்கடி யூரின் வருது.

கதைன்னு பார்த்தா ஏக் லைன் கூட இல்லை ராணுவத்தில் இருக்கும் கேப்டன் ஜெகதீஸ் ரிலேட்டிவ், பிரண்ட்ஸ், அம்மம்மா....அப்பப்பா  என யாருக்கும் தெரியாத ரகசியமான ஒரு அமைப்பு "ரா" மாதிரி அதுல இருக்கிறாரு...! பன்னண்டு இடத்துல குண்டு வைக்கும் ஸ்லீப்பர்களை ட்டிஸ்யூம்…..ட்டிஸ்யூம்ன்னு ஒரே டைம்ல விஜய் அன்ட் கோ போட்டுத்தள்ளுது, இவர்களுடைய தல தீவிரவாதி வருகிறான், திருடன் போலீஸ் விளையாட்டு மாதிரி தீவிரவாதி மிலிட்ரி விளையாட்டு விளையாடி, கடைசியில புரட்சித்தலைவர் மாதிரி மூனு அடி வாங்கிய பிறகு, வாய் ஓரத்தில ரத்தத்தை துடைச்சிட்டு, கில்லி மாதிரி உடைஞ்ச கை, கால்களை "சிங்கிரிபாளையம்" மாவுக் கட்டு போடாமையே சரி பண்ணிட்டு சித்தவைத்தியர் விஜய் வில்லனை அடிச்சு நாட்டை காப்பாத்துறாரு.... பட் இந்த சாதாரண கதையை கடைசிவரை கொட்டாய்ல கொட்டாவி வர வைக்காமல் முருகதாஸ் நேர்த்தியாக தீபாவளி மிட்டாயா கொடுத்திருக்கின்றார்....!

இந்த படத்தில எனக்கு பிடிச்ச விசயம் விஜய் அன்ட் கோ 12 பேரைப் போட்டுத் தள்ளுவது, விஜய் நாயை வைத்து தங்கையை கண்டுபிடிப்பது, எனச் சின்ன…சின்ன….விசயங்களை நாம் கணிப்பதற்கு வேறு திசையில் காட்சியை நகர்த்தியிருப்பது முருகதாஸ் அன்ட் கோவின் உழைப்பு தெரிகின்றது.

மீசைய மட்டும் முறுக்கி விட்டுட்டு அம்மாஞ்சி மேஜர் ஜெயராம் (அடப் பாவமே….!) லீவுல வந்த ஆர்மி நண்பர்கள் எல்லாரும் டிஸ்யூம்….டிஸ்யூம்ன்னு தீவிரவாதிகளைச் சுடப் போக, உயர் அதிகாரி ஜெயராம் காஜலோட சப்பாத்தி சுடப் போயிட்டாரான்னு ஒரு கேள்வி வருது. விஜய பிடிக்கலைன்னு சொல்லுகின்ற மேட்டர் பொண்ணு ஜோக் பழசு...கண்ணா அதர பழசு! முடியல....! ஹாரிஸ் மாமா...! ஹாரிஸ் மாமா...! ரெக்கார்டை மாத்துங்க.....! திரும்ப...திரும்ப....பாடற நீன்னு நாங்க வடிவேல் ஜேக்குல வர்ற சங்கிலி முருகன் மாதிரி கதற வைக்காதிங்க மாமா..! பிளீ..............ஸ்! தமிழ்நாடு ரசிகன் பாவம்!
தாரவி சப்இன்ஸ்பெக்டர் சத்தியன் ஒரு சப்பைக் கேரக்டர் காமடியனாக போட்டது சினிமாவுக்கு வேனா ஓகே..! மும்பையில் டான்களின் அட்டகாசம் அதிகமாகும் போதெல்லாம் மும்பை வாலாக்கள் ஒரு தமிழனத்தான் கமிஷனராகவும், உயர் அதிகாரிகளாக நம்ம ஆளுகளைப் போடுவாங்க..., டான்கள் வாலைச்சுருட்டிட்டு ஓடுருவாங்க..., இல்ல அலுமினிய குண்ட நெஞ்சில வாங்கிட்டு மர்கையா ஆயிருவாங்க….காலரை தூக்கிவிட்டுக்கங்கப்பா……! டமில் நாட் போலீஸ்!

காஜல் அழகான டால் மாதிரி, ஊறுகாய் மாதிரி வந்தாலும் நடனத்தில் அதுவும் முக்கியமாக கூகுள் பாடலில் கலக்கியிருக்கு அம்மணி! அழகு தேவதையைக் கூட ரசிக்க விடாமல் வேகமாகச் செல்லும் திரைக்கதைக்கு காஜல் தேவையேயில்லை.......பல ஏராளமான லாஜிக் மீறல்கள்.....கிராபிக்ஸ் ஓட்டை, உடைசல் இருந்தாலும் நல்லா ஈயம் பூசியாதால் பளபளக்குது இரண்டரை மணி நேரம் டைம்பாஸ் துப்பாக்கி.


Read more...

தினம்...தினம்...தீபாவளி கொண்டாடியவர்கள்!

>> Tuesday, November 13, 2012



தீபாவளி என்பது வடநாட்டு பண்டிகை, கொடநாட்டுப் பண்டிகை என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்க....எந்த பண்டிகையா...? இருந்தா என்ன நமக்கு சந்தோசம் தருதா தன் குழந்தைகள் சந்தோசமா இருக்காங்களா அது போதும் என்று பல காமன்மேன்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், இந்த தீபாவளி பண்டிகை பணக்கார குழந்தைகள் தங்கள் சந்தோசத்தை பட்டாசுகளில் வெடித்து காட்டிக் கொண்டிருக்க அவர்கள் வெடித்ததில் வெடிக்காததை பொறுக்கி எடுத்து வெடித்து சந்தோசப்பட்டும் ஏழைக் குழந்தைகள் ஏக்கத்துடன் ஒரு தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது, அந்த ஏழைக் குழந்தை பெரியவனாகிய பிறகு தன் குழந்தைகளும் நம்மைப் போல் ஏங்கித் தெருத்தெருவாக வேடிக்கை பார்க்கக் கூடாது என்று ஏராளமான வெடியை, வாங்கித் தந்து வெடிக்கும் போது எதாவது ஒரு குழந்தை வேடிக்கை மட்டும் பார்க்க வரும். ஆகவே இது சுழற்சிதான்.

திருப்பூரில் இன்று முதலாளியான நண்பன் போனஸ் கொடுக்கனும் வசூல் ஆகலைன்னு புலம்பறான், ஒரு காலத்தில் நானும் அவனும் போனஸ்க்காக காத்திருந்த போது "வருசம் பூரா வேலை வாங்குறானுக சீக்கிரம் போனஸை கொடுத்தா போவமல்லோ" என்று முதலாளியை திட்டியவன் இன்று அவனை எவனோ திட்டிக் கொண்டிருப்பான் என்று புரியாமல் புலம்புகின்றான்.

பண்டிகைகள் என்பது இந்தியாவில் மட்டும் சமதர்மமாய் இருப்பதில்லை அது எம்மதப் பண்டிகைகள் என்றாலும் ஒன்றே..! புத்தாடை, இனிப்பு, நல்ல உணவு, இதுவே பண்டிகை என்றாகிவிட்டது, வெளிநாடுகளைப் போல் ஒயின்,ரம் விஸ்கி, ஒரு பெக் அடித்து சியர்ஸ் சொல்லி விடிய..விடிய வீதிகளில் ஆட்டம் போடும் கலாச்சாரம் இந்தியாவில் இல்லை,அதனால்தான் பணம் இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் பிரித்துக் காட்டுகின்றது, பண்டிகைக் கொண்டாட்டங்கள் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்றாலும் குழந்தைப் பருவத்தில் மூன்று மாதங்ககளுக்கு முன்பாகவே பண்டிக்கைக்கான நாளை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காலண்டரைப் பார்த்து ஏங்கித் தவித்த குழந்தைதான் நானும் ஒரு காலத்தில்.

அன்றைய எண்ணெய்க் குளியல் வெறுப்பேத்தியது! இன்று அதுவே மருத்துவம் என்று விரும்பி செய்கின்றேன், வெடி! வெடி! என ஏங்கிய மனசு....!இன்றைய தூக்கத்தைக் கெடுப்பதால் எரிச்சலாக இருக்கின்றது, ஆனாலும் இந்த குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காணும் போது கோ ஆப் டெக்ஸ் துணியோடு விளையாடிய அன்றைய தீபாவளியை நினைக்க வைக்கின்றது. தூங்கிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நாயின் காதருகில் வைத்த அனுகுண்டின் சத்தத்தில் வெகுண்டு ஓடியதுதான் நான்கு நாட்கள் கழித்துதான் திரும்பி வந்தது! அந்த அப்பாவி ஜீவன்!

விளையாட்டாக கழுதைக்குட்டியின் வாலில் கட்டி விட்ட சரம்வெடியில் மிரண்டு பயந்து தெரித்து ஓடிய கழுதைக்குட்டி ரோட்டோரம் இட்லி விற்றுக் கொண்டிருந்த கிழவியை தள்ளிவிட்டு ஓடியது கிழவி வசைமாரி பொழிய ஒரு தாத்தா "கிழவி உன் இட்லிய தின்னிருக்கும் கழுத அதான் வசமா இன்னிக்கு பழி வாங்கிருச்சு..." என்று ஜோக்கடித்துக் கொண்டே உருண்டு ஓடிய பாத்திரங்களை எடுத்துக் கொடுத்தார். கிழவி கழுதைக்கு சொந்தக்காரரிடம் போட்டுக் கொடுக்க சலவை துணி கொடுக்க வந்தவர் எங்க வீட்டுல போட்டுக் கொடுக்க மாத்து வாங்கியது.

எப்பவும் லூசான டவுசர் போட்டுக் கொண்டு அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு திரியும் யோகா எங்க மாமா பத்த வச்ச வானம் கடைசி நேரத்தில் குடை சாய்ந்து அவன் டவுசருக்குள் புகுந்து கொள்ள டவுசரை விட்டுவிட்டு ஓடினான் எல்லாரும் சிரிக்க......! அவனைப் பிடித்து டவுசரை மாட்டிவிட்டு "எங்கடா குஞ்ச காணம் வானம் கொண்டு போயிருச்சு போல....."என்றார்கள் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள். அவன் அம்மாவிடம் போய் "அம்மா...அம்மா....வானம் என்னதை தூக்கிட்டுப் போய்ச்சு" என்றான். பிறகு விளையாட்டாக டவுசர்ல வானம் விட்டுருவே...என்று மிரட்டினாலே அழுது ஓடிவான். இதைப் போன்ற பல சம்பவங்கள் பலதும் நினைவில் மங்குவதில்லை 

கல்லுவெடின்னு ஒன்னு இருக்கும் இப்ப தடை பண்ணிட்டாங்க......களிமண் வச்சு பெசைஞ்சு உருண்டையா வச்சிருப்பாங்க செவுத்துல இல்ல தரையில அடிச்சா டமார்ன்னு காது பொளக்கும்.பிடிக்காத ஆளுகளை பயமுறுத்த தகுந்த வெடி அது....! சைக்கிளை ஒருத்தன் ஓட்ட, ஒருத்தன் கேரியர்ல உக்காந்துட்டு டவுசர் பாக்கெட்ல வெடிய வெச்சுக்குவோம்....இரவில் அவன் நடந்து போயிட்டு இருக்கும் போது பின்னாடியே போயி எதிரியோட காலடியில வீசுனா அவ்வளவுதான் அலரியடிப்பானுக....! நாங்க சைக்கிள்ல பறந்துருவோம். அதே மாதிரி ஓலை வெடி முக்கோண வடிவில் இருக்கும் அதுவும் தடை பண்ணிட்டாங்க வெடிச்சா காது ஜவ்வு கிழியும் இரண்டுமே ரொம்ப ஆபத்தானதாக இருந்ததால் தடை செய்யப்பட்டது.

பழைய வீட்டு பரணைச் சுத்தம் செய்த போது கிழவிகள் வெற்றிலை கொட்டும் கொட்லா மாதிரி சிறிய உருவத்தில் கனமான இரும்பில் ஒரு வித்தியாசமான பொருளாக இருக்கவே எடுத்து என் தாத்தாவிடம் கேட்டேன் இது என்ன ?என்று வாங்கிப் பார்த்தவர் இதுதான்டா எங்க பட்டாசு என்றார் எப்படி என்று கேட்டபோது கந்தகத்தை வாங்கி வந்து குழியில் சிறிது போட்டு உலக்கை மாதிரியானதில் அடிச்சா டமார்ன்னு வெடிக்கும் என்று கொள்ளுப் பட்டாசைப் போட்டு வெடித்துக் காட்டினார்......சுயமான வெடியை சிலர் தயாரிப்பார்கள் இரண்டு இரும்பு வாசர்களின் நடுவே கொள்ளு பட்டாசை நிறைய வைத்து போல்டு நட்டுப் போட்டு முறுக்கி தரையில் அடித்து வெடிப்பார்கள்.

கோவில் திருவிழாவின் போது திரியே இல்லாத வானத்தை சாதாரணமாக கையிலே வைத்து பற்ற வைத்து வீசுவார்கள், அப்படி ஒருவர் ஒரு திருவிழாவில் ஒத்தைக் கையுடன் வெடித்துக் கொண்டிருந்தார். விசாரித்தேன் வெடி தயார் செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்ப்பட்டு மணிக்கட்டுடன் கையிழந்த போதும் அந்த தொழிலை கர்ம சிரத்தையுடன் செய்து கொண்டிருக்கின்றார்....வேறு வேலை அவர்களுக்கு தெரியாது அரசு அவர்களுக்கு காப்பீடு மாதிரி எதாவது உதவி செய்யலாம்.

மண்ணில் புதைத்து ஒரு வெடி வைப்பார்கள் ஊரே அதிரும் பூகம்பம் வந்த மாதிரி! திருச்சூர் பூரம்  திருவிழாவில்  பிரசித்திப் பெற்றது அந்த வெடி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல கட்டிடங்கள் விரிசல் ஏற்ப்பட்டதால் பூரத்தில் அந்த வெடியின் சக்தியை குறைத்து வெடிக்கின்றார்கள். அது வெடிக்கும் போது காலிலிருந்து ஒரு அதிர்வலை தோன்றி மூளையை அதிர வைத்து நிற்கும் அது ஒரு பரவசம் என்றே கூறலாம் ஆனால் அரசாங்கம் கட்டிய பல பாலங்கள் பொடிந்து உதிர்ந்து விடும் என்பதால் தடை செய்து விட்டது, சட்ட விரோதமாக கிராமங்களில் வெடிக்கின்றார்கள்.

எங்க வீட்டுக்கு கிணறு வெட்டலாம் என்று முடிவு செய்தார்கள் ஆயிபாளைத்துக்காரர் என்று ஒருவர் இருந்தார் கிணறு வெட்டுபவர், அவரைக் கூப்பிட்டுச் சொல்ல பூசையெல்லாம் செய்து குச்சி மாதிரி எதையோ வைத்து நீர் ஓட்டம் பார்த்து கிணறு வெட்டத் தொடங்கினார், அவர் சுமார் ஒரு அம்பது அடி தோண்டியிருப்பார் ஒரு பெரிய பாறை குறுக்கிட்டது வேட்டுத்தான் போடனும் என்று சொல்லி விட்டார் கந்தகம் மருந்து, டெட்டனேட்டர் அன்றைய காலக்கட்டத்தில் சுலபமாக கிடைத்தது. சாதாரணமாக சைக்கிள் கேரியரில் வைத்து வாங்கிக் கொண்டு வந்தார், தோட்டாவை துளையிட்டு டெட்டனேட்டரை வைத்து பாறையில் ஆங்காங்கே ஓட்டை போட்டு அதில் வைத்து மெல்லிய ஒயரை இணைத்து கிணறுக்கு வெளியே பல மீட்டர் தூரம் கொண்டு வந்து சைக்கிள் டைனமோவில் இணைத்து எல்லாரும் ஒளிந்து கொண்டு சைக்கிளை வேகமாக சுற்றினார்கள்கள். ஒரு அதிர்வில் பாறை சுக்கு நூறாக உடைய தண்ணீர் ஊற்று உடைய கிணற்றில் தண்ணீர் நிரம்பி வழிய கையெட்டும் தூரத்தில் தண்ணீர் மோந்து....மோந்து குளிப்போம், குடிப்போம். வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்கள் குளிச்சியான கிணற்று நீரை ஒரு சொம்பு மோந்து குடித்து தேவாமிர்தம் என்பார்கள்.

நான் முதன் முதலாக ஒரு மிகப்பெரிய வெடியை காதுக்குள் ஒரு அரை மணி நேரம் அடைக்கும் ஒரு பேரழிவைப் போன்ற சத்தத்தை கேட்டது அன்றுதான் அதன் பிறகு நமது நாட்டில் வெடித்த பல வெடிகள் மற்றும் போர்வெலெ் கம்பனிகள் இந்த கிணறு வெட்டுபவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து விட்டது. அவர்கள் இப்பொழுது வேறு வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டார்கள்...! தினம்...தினம்...தீபாவளி கொண்டாடிய அவர்கள் இன்று எங்கோ ஒரு மூலையில் முடங்கி படுத்துக் கொண்டிருப்பார்கள்....இன்று நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த வெடிச் சத்தம் பல ஞாபகங்களை அவர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும். 

Read more...

I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.

>> Monday, November 5, 2012

நண்பர்களே! நம்முடைய சுதந்திரமான கருத்துகளைக் கூறும் போது பத்திரிக்கையில் இருந்து மேற்கோள் காட்டுவது கூட நம்மை கைது செய்து மூன்றாண்டுகள் சிறை வைக்க முடியும் என்கின்ற வகையில் இருக்கின்றது. இச் சட்டத்தை திருத்தி ஊடகங்களுக்கு இணையான சுதந்திரத்தை இணையத்தை இந்தியாவில் பயன்படுத்தும் அனைவருக்கும் வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு ஐயா தருமி அவர்களின் முயற்சியால் பதிவிடப்பட்டு தத்தம் வலைத் தளங்களில் அனைத்து பதிவர்களும் பதிவிட்டு அரசுக்கு, மற்றும் ஊடகங்களுக்கும் கவனஈர்ப்பை கொண்டு வரக்கூடிய முயற்சியில் நானும் நமது பல நண்பர்களும் பங்கு கொண்டிருக்கின்றோம், நீங்களும் நாளை மாலைக்குள்  பதிவிட்டு நம் ஒற்றுமையை உலகிற்கு பறை சாற்றுவோம்...வெல்லட்டும் வலைப் பதிவர்கள் ஒற்றுமை


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

Read more...

அம்பது ரூபாய்க்கு ஐநூறு பயம் காட்டுறாங்க-பீட்சா!

>> Wednesday, October 24, 2012


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரில்லர்ப் படம், 100வது நாள் திரைப்படத்துக்கு பிறகு இப்படியான ஒரு படம் வரவில்லை என்பது உண்மை! நூறாவது நாள் திரைப்படத்தில் நீங்கள் அடுத்த காட்சி இது எனக் கணிக்க முடியாது, அதைப் போன்ற ஒரு திரைப்படம்தான் "பீட்சா" தமிழில் பெரும்பாலான ஹாரர்ப் படங்கள் அதிபயங்கரமான ஒப்பனையுடன், கொடூரச் சத்தங்களுடனே பார்வையாளர்களை பயமுறுத்த முனைகின்றன, உதாரணமாக ராம்கோபால்வர்மாவின் சமீமப் படங்கள்..!ஆனால்...! அவை மை டியர் லிசா, யார், ஏழாம் நெம்பர் வீடு போன்ற ஏகப்பட்ட படங்களில் பே…..பே.....எனப் பயமுறுத்தி நமக்கு பயமில்லாமலும், ஒரு வகையான சலிப்பும் ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு படம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ் பாராட்டுக்குறியவர்.


திகில் படங்களில் காதல் காட்சிகள் மொக்கையாக இருக்கும். ஆனால் மனுசன் பூந்து விளையாடியிருக்கின்றார். ரொமான்ஸ் பார்வையாளர்களிடமும் பற்றிக் கொள்கின்றது. இந்த படத்தின் டைட்டிலை யாரும் மிஸ் செய்து விடாதிர்கள்..! நேரத்திலேயே தியேட்டருக்குச் சென்று விடுங்கள்.

ஆரம்ப காட்சிகளில் காதலியுடன் ஒரே வீட்டில் இருக்கின்றார் அவர்களுக்குள் எல்லாம் நடக்கின்றது, "ஏன்? சட்டையை அயர்ன் பண்ணலை...!" என்று திட்டிவிட்டு சமாதானமாக "நான் எதிலாவது கேர்லெஸ்சா இருக்கிறனா...?" என்றுக் கேட்கிறார் விஜய் சேதுபதி! "நான் கர்ப்பமா இருக்கறேன்....!" என்று நம்பீசன் சொல்வது ஒரு மினிக் குறும்படம்.

குடித்து விட்டு நண்பர்களிடம் ஆலோசனைக் கேட்கும் போது ஒரு நண்பன் "காண்டம் கம்பனி மேலக் கேஸ் போடலாமா...?" என்றுக் கேட்பதும் "கடிதம் எழுதி வச்சாலே தூக்குலத் தொங்கறதுதானா...?" என கேட்குமிடம் மற்றும்  "நீ......! ரொம்பப் பயந்தவனாச்சே எப்படிடாச் சாமாளிச்சே...?" என்று நம்பீசன் கேட்பதும் "பயந்தவனாலதான் பேய்க்கதை சரியாச் சொல்ல முடியும்...!" என்பதும் "ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வீக்னெஸ் பெண்,பணம், சிலருக்கு ஆவிபேய்..!" என்பதும் ஆங்காங்கே விஷவல் கவிதைகள் படம் நிறைய! கொட்டிக் கிடக்கின்றது.


விஜய் சேதுபதி மிகச்சிறந்த தேர்வு! விரிவாகக் கூற முடியாது…! ஆனால் மனிதன் தன் முகத்தில் பயத்தைக் காட்டி நம்மை நெளிய வைக்கின்றார் எப்படா…? இடைவேளை விடுவாங்க…! என்று கேட்க வைக்கின்ற நேரத்தில் படம் முடிஞ்சதும் பதினாறு ரீல்தானா என்று நம்பவும் முடியவில்லை…!

நம்பீசன் முகப்பரு நாயகி! கண்ணம், நெற்றி, கண் என முத்தமிடும் விஜய் சேதுபதியிடம் உதட்டைக் காட்டுகின்றார், தியேட்டரே வாய் குவிக்கின்றது.....

என் முன் சீட்டில் ஓர் இளம் ஜோடி உக்கார்ந்திருந்தது திகில் காட்சிகளில் கணவனை கட்டிக் கொண்டது அந்தப்புள்ள! சுப்புராஜ் ஒரு எட்டு வருசத்துக்கு முன்னாடிப் படம் எடுத்திருக்க கூடாது!

நிறைய சேட்ஜிஸ்! குடும்பம் சகிதமான படத்திற்கு வந்திருந்தார்கள், தமிழ்ப் படம் முடிந்துப் போகும் போது ஹிந்தியில் சாருகான் படத்தை சுட்டாக….அமீர்கான் படத்தை சுட்டாக என ரவுசு விட்டுப் போகும் மைதா மாவுக்கள் வெளிரிய முகத்துடன் அமைதியாக வெளியேறியதைப் பார்க்கமுடிந்தது.


மொத்தத்தில் ஒரு தமிழில் மிக அருமையான ஒரு திகில் படம். இயக்குனருக்குக் காதல் காட்சிகளும் நன்றாக வருகின்றது அடுத்த படம் திகில் எடுத்து போரடிக்கவிடாமல் ஒரு காதல் படம் கொடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

அய்யா ராசாக்களா….! படத்தை தியேட்டரில் பாருங்கள்.!சிடியில், இணையத்தில் பார்த்துச் சில விசயங்களை இழந்து விடாதிர்கள்!

Read more...

நான் தேடும் வெளிச்சங்கள்...ஜோஸபின் பாபா/புத்தக விமர்சனம்

>> Friday, October 19, 2012



தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நகைச்சுவையூட்டக்கூடிய நிகழ்வுகளையோ….அல்லது மிகவும் மனது வேதனையுண்டாக்கியத் துயர நிகழ்வுகளையோ நம் மனது நினைவில் வைத்திருக்கும்! பெரும்பாலான எழுத்தாளர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் கற்பனைக் கூட்டி ஒரு சிறுகதையான வடிவோ, சுயசொறிதலாக கலந்து எழுதுவார்கள் இதுதான் எழுத்துலகின் எழுதப்படாத மரபு.


ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது. அதில் என் மனம் கவர்ந்தச் சில விடயங்களைப் பார்க்கலாம்….!

ஒற்றை மரத்தில் நாம் சிறு வயதில் தன் பெற்றோரை விட்டு வேறொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும் போது. அங்கு நமக்கு நடக்கும் அவமாணங்கள் ஆறாத வடுக்களாய் மறையும் வரை மனதின் மூலையில் துருத்திக் கொண்டிருக்கும்.நம் பெற்றோர் மீது இருக்கும் வன்மத்தைக் குழந்தைகளிடம் காட்டுவது வேதனையான விசயம், இன்று பல குடும்பங்களில் கணவன் மீதுள்ள வன்மத்தை மனைவி குழந்தைகளிடமும், மனைவி மீதுள்ள வன்மத்தைத் தன் குழந்தைகளிடமும் மாறி..மாறி…குற்றம் செய்யாக் குற்றவாளிகளாய்ப் பல குழந்தைகள் சிலுவையில் அறையப்படுகின்றன. காரணமில்லாமல் தன் மீது காட்டும் கோபமும் சுடுச் சொற்களும் பிஞ்சு மனதில் எத்தகைய வேதனையை உண்டாக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை என்பதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம் என்பது போல “மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்ததை விட……அம்மா அடிச்சது முதன் முறையாக வலித்தது…” என்கின்ற வரிகளில் சொல்லலாம். 

பால்யக் காலத்தில் பிடித்த ஆசிரியர், உறவினர், தோழி, தோழன் ஒரு சிலர் மனதில் இருப்பார்கள்….அவர்களை ஒரு சிலரைத் தவிர யாரும் தேடிப் போய்ப் சந்தித்துவிட்டு வருவதில்லை அதுவும் பெண்கள் தன் வகுப்புத் தோழனைச் சந்திப்பது மிக அரிது! என் உயிர் தோழனில் தன் கணவனுடன் சென்று அவரின் கடைக்குச் சென்று சந்தித்துப் பால்யக் கதைகளை பேசி வர எத்தனை பேரால் இயலும்…. 

சூத்திரம் போன சுப்பனில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றச் சுப்பனின் பிறப்புறுப்பை அறுத்தெரிகின்றாள் ஓர் அப்பாவிப் பெண். அந்த சுப்பன் மருத்துவ சிகிச்சை முடிந்துத் தேயிலைத் தோட்டதிற்கு பணிக்கு வருகிறான் ,அனைவரிடமும் அந்த இடத்தில் உயிர் இல்லை என்பதை கண்டுபிடிக்க மருத்துவ உலகிற்கு உதவியாக இருந்தேன் என கூறிக் கொண்டிருந்தானாம் வேடிக்கை மனிதர்கள். 

பெண்ணிற்கு மட்டும் பிறந்த வீடு என்பது விருந்துக்கு வந்த விருந்தாளி வீடு போல்தான் என்று வீட்டில் அங்கலாய்க்கின்றார்! அதே போல் சொந்த வீட்டில் வாடகை வீட்டில் படும் துன்பங்களே சொந்த வீடு கட்டத் தூண்டும் காரணியாகிப் போகின்றது என்று கூறுகின்றார். அவர் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வர்ணம் பூசப் பணப் பற்றாக்குறையேற்பட பிறந்த வீட்டுக்கு பேருந்தில் பயணிக்கின்றார், நாமும் கூடவே பயணிக்கின்றோம் ஏனெனில் நம்மில் பலர் சொந்த வீட்டின் ஆசையில்தான் இருக்கின்றோம். 

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள் பூச்செடி விற்பனை வீட்டில் தொடங்க ஒரு வழியாக அதை விற்கப் பட்டச் சிரமங்களை நுணுக்கமாக சொல்லியிருக்கின்றார். பச்சை தாழ்வாரம் என்கின்ற தன் பூந்தோட்டப் பெயர்ப் பலகையை ரிக்கி நாயின் வீட்டுக்குக் குட்டிக் கூரையாக்கிவிட்டு மந்திரப் பெட்டியில் பொழுதைப் போக்கிக் கொண்டு இன்று புத்தகம் போடுமளவுக்கு வந்து விட்டது. 

சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறதில் சேலத்துக் குடும்பத்தின் கத்திப் பேசும் பழக்கம் மொத்தத் தமிழர்களையே கத்திப் பேசுகின்றவர்கள் என்கின்ற எண்ணத்தை மலையாளிகளிடம் உண்டாக்கிவிட்டது, உண்மைதான் தமிழர்கள் கொஞ்சம் கத்திதான் பேசுகின்றார்கள்…..! அதேபோல் மூக்குடைந்த கல் சிலையை சிமண்டு வைத்து மூக்கு வைத்து ஒரு கலையை கற்பழிக்கும் கொலையை பல கோவில்களில் பார்க்கலாம்! இங்கும் அவ்வாறே...!அரண்மனையை நாமும் சுற்றிப் பார்க்கின்றோம்.

என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம் ஓர் உயரதிகாரிப் பெண் "தான்" என்கின்ற அகந்தையில் எப்படி அழிந்துப் போகின்றாள் என விவரிக்கின்றது…எனக்குத் தெரிந்து வட்டாச்சியராக இருந்த ஒரு பெண் இப்படித்தான் இருந்தார். அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் முகத்தில் அடித்தமாதிரிப் பேசியும், குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் ,உறவாடாமல் தனக்கு என்று வட்டம் போட்டு வாழ்ந்த அவரின் கணவருக்கு திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட போது யாரும் உதவிக்கு இல்லாமல் திண்டாடித் தன் கணவரை இழந்தார். அந்த சம்பவம்தான் நினைவில் வந்தது. 

நினைவுகளில் சக்தி ஒரு பழைய சைக்கிள் வாங்க வந்த ஏழைப் பெண்ணைப் பற்றியது, கடைசியில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் அது தெரிந்து தந்தையே மகளை கொன்று விட்டதாகவும் நேரடியாக கூறாமல் பூடகமாக கூறியிருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மனதைப் பாதித்தவள் சக்தி என்றே விளங்குகின்றது. 

நான் ஒரு சில கதைகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கின்றேன் இதைப் போல் ஆங்காங்கே மனதை மெல்லிய மயிலிறகால் வருடியும், கீரியும் நம்மை அவர் உலகத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகின்றார் கன்னி முயற்சி என்றாலும் மிகச் சிறந்த ஒரு தொகுப்பு எனவே கூறலாம் அதைப் படைத்த அவருக்கு வாழ்த்தையும் பாராட்டையும் கூறுகின்றேன்.


புத்தக விலை 75 ரூபாய். 
J.P Josephine Mary, 
Indian Bank, M.S University Branch, 
A/C No : 854576367, IFSC code : IDIB000A107 என்ற விலாசத்தில் D/D எடுத்தும் அல்லது அவர் முகவரியில் M/O அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.

J.P Josephine Baba,
18, Vijayakrishna Nagar,
N.G.O A Colony,
Tirunelveli.
Pin Code 627007 


Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP