டாலர் நகரம் புத்தகமும்...சில கேள்விகளும்..!

>> Sunday, February 3, 2013


ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகம் இருநூறு பக்கங்களுக்கு மேல்  உள்ளது. தரமான அடர்த்தியான காகிதத்தில்; முழுப் பக்கங்களும் வண்ண புகைப்படங்களுடன் கூடிய அழகான வடிவமைப்புடன், சற்றே பெரிய எழுத்தில் அனைவரும் படிக்க சிரமில்லாமல் நேர்த்தியாக, அழகாக, தரமாக, வந்துள்ளது. தரத்துடன் ஒப்பிடுகையில் விலையும் மிகக்குறைவுதான் சரி விமர்சனத்திற்கு செல்லலாம்.

ஜோதிஜியின் முதல் புத்தக பிரசவம் என்கின்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி அதில் உள்ள விசயங்கள் திருப்பூரின் முழுபிம்பத்தையும் காட்டுகின்றதா…? இந்த புத்தகம் திருப்பூரைக் காட்டுகின்ற கண்ணாடியா...?என்கின்ற கேள்வி உங்களுக்கு எழலாம்..! படித்து முடித்த பிறகு இதே கேள்வி எனக்கும் எழுந்தது!

சுவாரஸ்யமாக போகும் ஒரு நாவல் போல.... தான் காரைக்குடியில் இருந்து ஒரு மஞ்சள் பை, வெள்ளை வேட்டியுடன் இந்த மண்ணில் கால் வைத்ததிலிருந்து, இன்று வரை நடந்த விசயங்களை ஒரு கதை போலவே சொல்கின்றார் ஜோதிஜி.

அதில் ஆங்காங்கே பனியன் நிறுவனங்களைப் பற்றி, நிட்டிங் பற்றி, சாயத் தொழில் பற்றி, பையிங் ஆபிஸ் என்றழைக்கப்படும் புரோக்கர்களின் தில்லு முல்லுகள் பற்றி விரிவாக விவாதிக்கின்றார்,. நான் பையிங் ஆபிஸ் பற்றி எழுதியதை படிக்க... படிக்க.... அத்திப்பழம் நியாபகம் வருகின்றது. வெளியில் பளபளப்பாக இருக்கும் அத்திப்பழத்தை பிய்த்துப் பார்த்தால் ஏராளமான புழு நெளியும். என்னைப் போல் உற்பத்தி துறை சாராதவர்களுக்கு பையிங் ஆபிஸ் என்பது ஒரு மதிப்பு மிக்க இடமாகும் அதைப் பிய்த்து புழுக்களை ஜோதிஜி காட்டிவிட்டார்.

பாலியல் பிரச்சனைகள் பற்றியும் 18மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் பிரச்சனைகளைப் பற்றி அலசியிருந்தது பாராட்டத்தக்கது. அதில் அவர் நண்பர் ஒருவரே பெண்ணாசையினால் அவதிப்பட்டதையும் நடுத்தெருவிற்கு வந்ததையும் பற்றி கூறியிருந்தார். அது நிறைய பேருக்கு பாடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத வேலை ஓயாத உழைப்புக்கு மத்தியில் திருப்பூர் மக்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்த சென்னை போன்ற நகரங்களில் உள்ளது போல கடற்கரையோ சுற்றுலா தளங்களோ இங்கு இல்லை.ஒரே ஒரு பூங்கா இருக்கு அதுவும் பெயரளவில்தான் இருக்கின்றது.

மனதில் ஏற்படும் அழுத்தத்தை தீர்க்க மதுக்கடையும், விபச்சாரப் பெண்களை நாடுவதை தவிர இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேறு வடிகால் இல்லை.சிலர் தாங்கள் பணி புரியும் நிறுவனங்களில் உடன் வேலை செய்யும் நபர்களிடமே காம சுகத்தையும் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள். ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களே தடம் மாறிச் செல்கின்றார்கள். அதனால் இங்கு எய்ட்ஸ் நோய் நாமக்கல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பதையும் இந்த புத்தகம் தெளிவு படுத்துகின்றது.

இதில் குறிப்பாக சாயத் தொழிற்சாலை முதலாளிகளின் பேராசையினால் இயற்கைச் சீரழிவு பற்றி சிந்திக்காமல் நடுஇரவில் திருட்டுத்தனமாக சாயக்கழிவுகளை ஆற்றில் விட்டதை தெளிவான ஒரு பார்வையை எடுத்து வைத்திருக்கின்றார். சாயத்தொழிலில் ஈடுபடும் தொழிளார்கள் நலன் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகின்ற நோய் பற்றியும் சாப்ட் புளோ என்கின்ற நவீன இயந்திரம் வருகையினால் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், சாயமேற்றும் சில வகை அமிலங்கள் பற்றியும் தெளிவான குறிப்பிட்டுள்ளார். பயனற்றுப் போன சென்னிமலை அருகில் உள்ள ஒரத்தப்பாளையம் அணையும் விவசாயிகளும் சாய முதலாளிகளும் இரு துருவங்களாக மோதிக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சில இடங்களில் ஊறுகாய் போல உள்நாட்டுத் தயாரிப்பை பற்றி கூறியுள்ளார். ஆங்கிலம் நன்கு தெரிந்தால் போதும் மூளையை வைத்தே பல கோடிகளை அள்ளியவர்களைப் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு பனியன் நிறுவனங்களில் ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்கள் பற்றி சில இடங்களில் கூறியுள்ளார்.

அதிகமாக ஜோதிஜி பனியன் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றியும், சாயத் தொழிற்சாலை பற்றியும் மட்டுமே தன் களத்தில் கொண்டு வந்திருக்கின்றார், அது அவர் உலகம் அது ஒரு குறுகிய வட்டம் ஆனால் அதைத்தாண்டி ஒரு பிரம்மாண்டமான உலகம் திருப்பூரில் உள்ளது அதுதான் பிரிண்டிங் தொழில். 

பனியன் துணிகளில் உள்ள அழகாக கார்டூன் பொம்மை படங்கள், பல டிசைன்களைப் பார்த்திருப்பீர்கள், உலக அளவில் பல நாடுகளில் பேசப்படுவது திருப்பூர் பின்னலாடை என்றால் அந்த பின்னலாடையில் பிரிண்டிங் செய்வது என்பது உலகம் முழுவதுமுள்ள ஜவுளி நிறுவனங்களால்  திருப்பூர் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. 

பெங்களூரு, புனே, மும்பை, லூதியானா, அகமதாபாத் போன்ற நகரங்களில் இந்த தொழில் இருந்தாலும் அங்குள்ள நவீன ரக இயந்திரங்களில் குறிப்பிட்ட வகை பிரிண்ட் மட்டுமே அடிக்க முடியும். ஆனால் திருப்பூரில் மட்டும்தான் எளிதாக கையில் அடிக்கக் கூடிய இயந்திரம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நவீன இயந்திரம் வரை பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமில்லாது திருப்பூரில் அடிக்க முடியாத பிரிண்ட்டை உலகத்தில் வேறெங்கும் அடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரிண்டுகளில் அழகான பாசிகள், முத்துகள், வைப்பது சில்வர் போன்று மினுமினுக்கும் பாயில், பஞ்சு போல் மெத்தென்று இருக்கும் புளோக் பிரிண்ட், டை அன் டை, டிச்சார்ஜ் பிரிண்ட், இரவில் ஒளிரும் ரேடியம் பிரிண்ட், தோல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயோ பிரிண்ட், என்று இது பனியன் தயாரிப்பு நிறுவனங்களை விட அதிக லாபம் கொழிக்ககூடிய பிரம்மாண்டமான ஒரு தொழில் அதைப் பற்றி ஒரு வரிகள் கூட இல்லை என்பதே இந்த புத்தகத்தில் உள்ள ஒரு குறை! ஜோதிஜி அடுத்த பதிப்பில் இதைச் சேர்க்க வேண்டுகின்றேன்.

இது அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்த சுவையான, படிக்க சுவாரஸ்யமான ஒரு புத்தகம் மற்றும் திருப்பூர் வேலைக்கு வர முயலுகின்றவர்களின் வழிகாட்டியாக திகழும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை என்பதே முதல் பத்தியில் நான் வினவியிருந்த கேள்விக்கான பதில்! 

டாலர் நகரம்

4தமிழ் மீடியா வெளியீடு

விலை : 190.00

டிஸ்கி : திருப்பூர் புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, பதிவரில்லாத பலர் வாங்கிச் செல்கின்றனர். திருப்பூரைச் சார்ந்த ஒருவர், அதுவும் எங்கள் நண்பர் எனக்கு தொழில் மற்றும் பதிவுலக வழிகாட்டி ஜோதிஜியின் புத்தகம் பற்றி வாய்வழியாக பாராட்டுகளைக் கேட்கும் போது என்னையே பாராட்டுவது போன்று அகமகிழ்கின்றேன்!

8 comments:

திண்டுக்கல் தனபாலன் 12:29:00 AM  

அலங்கார பூச்சுக்களுக்குத் தான் அதிக லாபம் கொழிக்கிறது என்பதையும் நீங்களும் அவரிடம் ஆலோசிக்கலாம்... மற்றும் நீங்கள் நினைப்பது அனைத்தும் அடுத்த பதிப்பில் வரலாம்... வர வேண்டும்...

திருப்பூர் பக்கத்தில் உள்ள ஆலையில் சில ஆண்டுகள் பணியும் புரிந்திருக்கிறேன்... ஒரு சமயம் Marketing Executive-யாக இருந்த போது, ஆறு மாதம் "ISO சான்றிதழ் வாங்கினால் நல்லது" என்று திருப்பூரில் தெருத்தெருவாக அலைந்தும் உள்ளேன்... ...ம்ஹீம்... ஒரு நிறுவனமும் வாங்கத் தயாராக இல்லை... இப்போது எப்படி என்று தெரியவில்லை...

இனிய நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்...

ஜோதிஜி 1:36:00 AM  

பயந்து கொண்டே உள்ளே வந்தேன். லேசான காயத்துடன் தப்பித்துள்ளேன்.

எப்படியோ நம்ம தனபாலன் அழகான விமர்சனத்தை தந்துள்ளார்.

நீங்க சொல்வதும் உண்மை தான்.

இதே போல 260 பக்கங்கள் உள்ள இன்னோரு புத்தகத்தையும் எழுத முடியும். ஒவ்வொரு துறை சார்ந்த தொழில் நுட்பங்களை விலாவாரியாக விவரிக்க முடியும். குறிப்பாக நீங்க சொல்லியுள்ள பிரிண்டிங் துறை.

120 அடி டேபில் முதல் மெசின் பிரண்டிங்க, ரோட்டரி பிரிண்ட்டிங்க, நேற்று நான் பார்த்து மொசு மொசு பிரிண்டிங்க வரையிலும்.

என்ன செய்வது ஏற்கனவே பதிவு பெரிது என்று சொல்லி ஆளாளுக்கு ஆள் ரணகளப்படுத்தி புண்ணாக்கி விட்டு இன்னும் ஏன் இதையெல்லாம் பற்றி எழுத வில்லை என்பது

கொஞ்சம் ஓவராத் தெரியல.


நாளை தமிழ் மீடியா தளத்தில் ஆன் லைன் வசதியில் வாங்குவது பற்றி குறிப்பிடுகின்றார்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் 6:44:00 AM  

சுரேஷ் விமர்சனத்தால் புத்தகம் வாங்க வேண்டும் என ஆவல் எழுந்துள்ளது.

இங்கு மதுரையில் கிடைக்குமா?

Unknown 9:57:00 PM  

@திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைதான் தனபாலன் அலங்காரத்தில்தான் உள்ளது எதுவும்!

Unknown 9:58:00 PM  

@ஜோதிஜி திருப்பூர் said...

புரிந்துணர்வுக்கு நன்றி..!

Unknown 9:58:00 PM  

@ஸ்கூல் பையன் said...
Nalla alasal......
/////////////////////
நன்றிகள்...!

Unknown 12:53:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ் said...

நான் அனுப்பி வைக்கின்றேன் பிரகாஷ்!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP