அங்கே நூத்தம்பது ரூபாய் அதிகச்சம்பளம்...!

>> Tuesday, May 21, 2013


"நூத்தம்பது ரூபாய் சம்பளம் அதிகம்ங்கறதுக்காக....இந்த கடைக்கு வேலைக்கு வந்தது தப்பாப் போச்சு..!" என்று சோமு நினைத்தான் "இப்ப நெனைச்சு என்ன பண்ணறது இம்மாம் பெரிய திருப்பூர்ல வேற கடை கெடைக்கலையா எனக்கு!" என்னடா புலம்புற என்றான் பக்கத்தில் இருந்த குண்டன் சரக்கு வாசம் அவனிடம் அதிகமாக வீசியது கண்கள் இரத்த நிறத்தில் இருந்தது. "வண்ணாரத் தாயே இவனுககிட்ட இருந்து என்னை உசிரோட காப்பாத்து ஆத்தா" என்று மனம் வேண்டியது.

சோமு ஒரு நூல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான், வாரச்சம்பளம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கு வரும் ஒரு ஆள் வேறு இடத்தில் வேலை வாங்கித்தருவதாக நூத்தம்பது ரூபாய் அதிகம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை காட்டவும், தினம் சத்தியமங்கலம் போக வர பஸ் செலவுக்கு ஆச்சுன்னு இந்த வாரம் திங்கக்கிழமையில் இருந்து புதிய கடைக்கு வேலைக்கு வந்தான்.

பழைய கடை போல் இல்லாமல் கண்ணாடி போட்டு மறைச்சு குளுகுளுன்னு ஏசிபூசின்னு கடை இருந்தது வயசுப்புள்ளைகளும் நல்ல செவத்த புள்ளைக நாலஞ்சு வேற இருந்தது. என்னமோ சொர்க்கம் மாதிரி இருந்தது சோமுவுக்கு, பிஸ்கட்டு, டீ, போண்டா, வடைன்னு கவனிப்பு வேற, பழைய கடையில வயசாளி செட்டியாரு பத்து பைசா செலவு பண்ண மாட்டாரு. ஆனால் இங்க ஓனர் கார்த்திக் சின்னப்பையன் ஹீரோ கணக்கா இருந்தாரு. சாயங்காலம் ஆறுமணிக்கு கார்த்திக் பிரண்டுக நாலஞ்சு பேரு வந்து ஒரே கும்மாளமா பேசிக்கிட்டு இருந்தாங்க அவங்க பேச்ச அரசல்புரசலா கேட்டதுல கார்த்திக் அந்த வழியா போகின்ற ஒரு டீச்சரை காதலிக்கின்றான் என்று தெரிந்தது. ஒரு நாளைக்கு அந்த டீச்சர் புள்ளைய பாக்கோணும் என்று சோமு நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது, கொரியர் அனுப்பிட்டு திரும்பி வரும் போது, சந்துல இரண்டு பேரும் பேசிட்டு இருந்ததைப் பார்த்தான் புள்ள நல்லா செவப்பா இலட்சணமா இருந்திச்சு, கார்த்திக்கு ஏத்த ஜோடிதான்னு சோமு நினைத்துக் கொண்டான்.

எதிர்பாராத ஒரு நாள் அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டான் கார்த்திக். அந்த புள்ள ரொம்ப பணக்கார வூட்டுப் புள்ள போல....சாதியும் வேற! இரண்டு அம்பாசிடர் கார்ல குண்டுகுண்டா ரவுடிகளை ஏத்திக்கிட்டு வந்த அந்தப்புள்ளையோட அண்ணங்காரன். விசயம் தெரியாம கடைக்கு ஏதோச்சையா வந்த கார்த்திக் பிரண்டு லட்சு என்கின்ற லட்சுமணனை எங்க போயிருக்காங்க என்று கேட்டு பின்னி பெடலெடுக்கறாங்க...அவன் அடிதாங்க முடியாம சோமுக்கு தெரியும்ன்னு உளற...சோமுவுக்கு ஏழ்ரை ஸ்டார்ட் ஆச்சு இரண்டு பேர் சோமுவைப் பிடித்துக் கொள்ள ஒரு வயசான ரவுடி ரொம்ப ஒல்லியா இருந்தான் அவன்தான் தலைவன் போல....புல் மப்புல நிக்கமுடியாம இருந்தான்.

"யார்ரா...இவன்? கரிச்சட்டிக்கு காட்டன் சட்டை போட்ட மாதிரி...! இரண்டு பேரும் எங்க ராஸ்கல் சொல்லு இல்ல மூக்குல குத்திருவேன்" என்ற படி கை ஆடி...ஆடி....சரியாக கண்ணைக் குத்தினான்.

"யோவ்...! நீ நல்லா இருப்பே கண்ணை கெடுத்திறாதைய்யா....! ஒண்ணு செய்யு கண்ணைக் குத்துறேன்னு சொல்லிட்டுக் குத்து அப்ப கரைக்ட்டா மூக்குல குத்துவே" என்றான் சோமு.

"ராஸ்கல் எகத்தாளமா.....என்றாலும் பெருசு சோமு சொல்லியபடி "கண்ணைக் குத்திருவேன் ஒழுக்கமாச் சொல்லு" என்று சரியாக வாயில் குத்தியது!

பாவம் சோமுவை அவங்கப்பன் முத்துச்சாமி கூட கை நீட்டி அடிச்சதில்லை.....! அடிக்கிற அளவுக்கு அதுவும் ஒர்த் இல்லை குடிச்சிட்டு ஊர்ல அப்பாவியா இருக்கிறவனா பாத்து ஒரண்டையிழுக்கும் அவனும் "யோவ்....!" அப்படின்னு எகிருனா "சார்..! நீங்க போங்க சார்...! அப்படின்னு பம்பும்...! 

ஒருத்தன் லட்சுவின் மூஞ்சியில் சிகரட்டை ஊதினான்....! "அண்ணே...! இந்த சரக்கு அவ்வளவு கிக் இல்லை இத ஏண்ணே குடிச்சே...?" என்று வாடையை வைத்தே சரக்கை  கண்டுபிடித்து அட்வைஸ் செய்தான். கடுப்பான அவன் இடுப்பைக் கிள்ளினான் சூழ்நிலை மறந்து அவன் கிள்ளியது கிச்சுகிச்சு மூட்டியது போல் இருக்க ஹ...ஹ.....ஹ....என்று சிரித்தான்! ஒரு அடி ஜம்ப் செய்து மண்டையில் நங்கென்று கொட்டு வைத்தான் அவன் லட்சு மிக கேவலமாக நாய் மாதிரி ஊளையிட்டான்.

சோமு பாத்தான் விட்டா இவனுக அடிச்சே ஒரு பக்க ஒரண்டைய கழட்டிடுவாணுக அப்படின்னு நினைச்சு பழனிக்கு போயிருக்காங்க.......என்றான். தூக்கி கார்ல போட்டுகிட்டு பழனி போறாங்க....! மணி எட்டு இருக்கும் லட்சுவையும், சோமுவையும் நடுவில் போட்டு இரண்டு புறமும் இரண்டு குண்டன்கள் உக்காந்து கொள்ள கார் கொடுவாய் தாண்டி போகுது, பழனியில யாரு வீட்டுக்குடா போறாங்க....என்று கேட்கறான் புள்ளையோட அண்ணன். கார்த்திக் ஒருமுறை நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது பழனியில் தன்கூடப் படிச்ச தன்ராஜ் இருப்பதாகவும் அந்த புள்ளைய கூட்டிட்டு ஓடுனா அங்கதான் போவேன்னு அரசல்புரசலா காதில் விழ சோமு அடியில் இருந்து தப்பிக்க சொல்லிவிட்டான். லட்சுவை தன்ராஜ் வீடு தெரியுமாடான்னு கேட்டதுக்கு தெரியும்ன்னு சொல்ல கார் பழனி நோக்கிப் பறந்தது.

நல்ல பனி காலம் வேற சரக்கு வேற ஓசிக்குடி குடிச்ச குண்டனுகளுக்கு ஒன்னுக்கு முட்டிக்கிட்டு வரவும், ஒரு இருட்டுக்குள்ள காரை நிறுத்தி ஒரு குண்டனை மட்டும் காவலுக்கு வச்சுட்டு ரோட்டோரம் ஒன்னுக்கடிச்சிட்டு இருந்தாணுக...சோந்து படுத்துகிட்டு இருந்த லட்சு பாத்தான் அந்த குண்டன் தம் அடிச்சிட்டு அசால்ட்டா நிக்கவும் காரை விட்டு இறங்கி அவன் உயிர்நாடியில் முட்டியை மடக்கு ஒரு உதைவிட அவன் 'ஹஸ்புக்' என்று வினோதமான ஒலியெழுப்பி கீழே விழுந்தான்.

கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒரே ஓட்டமா காட்டுக்குள்ள ஓடிப்போனான். சோமுக்கு கெதக்குன்னுச்சு அவன் கிடைக்கலைன்னா நம்மளை மறுபடியும் குமிய வச்சு கும்முவாணுக அப்படின்னு யோசனை பண்ணி அவன் ஓடிய எதிர் திசையில் காட்டுக்குள்ள ஓடினான். கொஞ்ச தூரம் வேகமா ஓடி ஒரு நல்ல புதர்க்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டான், அவங்களும் ரொம்ப நேரம் காட்டுகுள்ள தேடுனாங்க, சோமு பாங்காட்டு ஆசாமிங்கறதால நல்லா வங்குப்புதராப் பாத்து ஒளிஞசிக்கிட்டான், காருக்குள்ள இருக்கிற ஒரு சின்ன டார்ச்லைட் வச்சு தேடிப்பாத்தாங்க, அப்பவும் அகப்படலை...லட்சுவும் எங்க போனான்னு தெரியலை....விடிய...விடிய...அங்கியே கிடந்தான் சோமு. அவர்களும் தேடிதேடி வெறுத்துப் போயி திருப்பூர்க்கு திரும்பி போயிட்டாங்க...! ரோட்டுக்கு வந்து ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி லிப்ட் கேட்டான் சோமு. திருப்பூர் மார்க்கெட் போற ஆட்டோங்கறதால அதில் திருப்பூர் வந்து சேந்தான். பஸ் ஸ்டேன்ட்டில் கடை வச்சிருக்கும் ஊர்க்காரர் மாணிக்கத்திடம் கொஞ்சம் காசு வாங்கிட்டு ஊருக்குப் போனான்.

                                                                            ***

சோமு பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு திருப்பூர் வந்தான். இனி அங்க வேலைக்குப் போவக் கூடாது, சம்பள பாக்கி மட்டும் வாங்கிட்டு, வேற கடை பாக்கோணும், இல்ல செட்டியார்கிட்டியே மறுபடியும் போயிறணும். என்ற படி விடியக்காலையில் எழுந்து வந்திருந்தான்.

தூரத்தில் இருந்து பார்த்தான், கடை திறந்து இருந்தது, பிரச்சனையெல்லாம் ஓஞ்சு போச்சு போல..."வக்காலிக இவனுக சரக்குக்கு நம்மள ஊறுகா ஆக்கிட்டாங்க என்னா அடி....யம்மா! இன்னியோட இந்தக் கடை வாசல்ல தல வச்சுப் படுக்கக்கூடாது" என்று மனதில் நினைத்தபடி கடைக்குள் நுழைந்தான் இவன் தலயப் பாத்ததும் கார்த்திக் சிரித்தான், கொஞ்சம் வெளுத்து உடம்பு பூசியிருந்தது, பயபுள்ள நல்லா ஜாலியா இருந்திருப்பான் போல, நாமதான் மிதிபட்டோம் கடுப்புடன் சிரிக்கவில்லை சோமு.

"என்னண்ணா ரொம்ப அடிச்சிட்டாங்களா...? சாரிண்ணா....!" என்றான்.

"சரி...சரி...வுடுங்க....என் சம்பள..." பேசி முடிக்க வில்லை கார்த்திக், "கவிதா இங்க சீக்கிரம் வா...."!என்று அழைத்தான். "ஓ......அந்த டீச்சர் புள்ள இங்க கடையிலதான் இருக்கா...?" என்று நினைத்தான் சோமு அந்தப் புள்ள புதுசா மினுமினுக்கும் மஞ்சத்தாலியுடன் வந்து நின்றது இருவரும் ஜோடியாக காலில் விழுந்து  "வீட்டுக்கு நான் ஒரே பையன் என் அண்ணனா ஆசிர்வாதம் பண்ணங்கண்ணா" என்றான் கார்த்திக் சோமுவுக்கு என்னவோ போலாகிவிட்டது "நல்லாயிருங்க.....நல்லாயிருங்க..."என்றான் 

"சோமண்ணா மத்தியானம்  எங்க வூட்டுலதான் சாப்பாடு! ஓட்டலுக்கு போக வேண்டாம்" என்றார்கள். "சரி நீங்க கடைய பாத்துகங்க, நான் கவிதாவை வீட்டுல விட்டுட்டு வந்திடுறேன், பத்து நாளா நீங்க இல்லாம ஒரு வேலையும் ஆகலை" என்று சொல்லிவிட்டு பைக்கில் பறந்து போனார்கள். சோமு எதுவும் புரியாமல் கொஞ்ச நேரம் நின்று விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அவன் மனதில் வேலையை விட்டு நிற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.....!

Read more...

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...?

>> Sunday, May 12, 2013


இது கொஞ்சம் அசைவப் பதிவு கலாச்சார காவலர்கள் அப்பீட்டு!


மீபமாக வெளிவந்து வெற்றிகரமாக?! ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நாயகனின் பெயர் "குஞ்சிரபாதம்" இந்த பெயர் அவனை சங்கடப்படுத்துகின்றது என்பதால் தன்னுடைய பெயரை 'ஹரிஷ்' என்று மாற்றிக் கொள்கின்றான். ஆனால் ஊர்ப்பெயரே இப்படி இருந்தால்...? அவனின் நிலை என்னவாகும்..! தன் பெயரை மாற்றிக் கொள்ளலாம் ஊர்ப்பெயரை மாற்ற முடியுமா..? "சின்னக்கவுண்டன்பாளையம்" என்கின்ற ஊர்ப் பெயரை கலைஞர் ஆட்சியில் "சின்னப்பாளையமாக" மாற்றியமைத்தது போல எதாவது நடந்தால்தான் உண்டு. ஆனால் அம்மா ஆட்சியில் மீண்டும் "கவுண்டன்" வந்து ஒட்டிக்கொண்டது வேறு விசயம். அத வுடுங்க அது அரசியல்! நாம மேட்டர்க்கு வருவோம்!

நான் வேலை பார்த்த ஒரு இடத்தில் செந்தில் என்று ஒருவர் இருந்தார். வேலை செய்யுமிடத்தில் தன்னுடைய ஊர் அரியலூருக்குப் பக்கத்துல ஒரு கிராமம் என்று சொல்லி வைத்திருக்கின்றார். அவருடைய கெட்ட நேரம் ஊர்க்காரர் ஒருவர் செந்திலைப் பார்க்க அலுவலகம் வர இருவரும் சூழல் மறந்து பேசிக்கொண்டிருந்ததை அனைவரும் கேட்டதில் அவர் ஊர்ப்பெயர் "குஞ்சுவெளி" என்பதை அறிந்துகொண்டார்கள்.

அடுத்தநாள் செந்திலை "ஏம்ப்பா... உங்க ஊர்காரங்க பேண்ட்ல ஜிப்பே வைக்க மாட்டாங்களா...? அதனாலதான் இப்படி ஊர்ப் பேரா..?'' என்று கேட்டு அவமாணப்படுத்தினார்கள். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் நாங்க "சார்கிட்ட உங்க ஊர்ப் பேரு என்னன்னு கேட்டுட்டு வாங்க" என்று சொல்லிவிடுவோம். அவர்கள் கேட்டதும் செந்திலுக்கு கண்கள் சிவக்கும், பிறகென்ன எங்களை வண்டவண்டையாக திட்டுவது வாடிக்கையான வேடிக்கையாகிப் போனது. 

இதுல பாருங்க பாரதியார் பாட்டு எல்லாருக்கும் உத்வேகத்தைக் கொடுக்குன்னா, இவருக்கு கொலைவெறியக் கொடுக்கும்! ஆமா! இந்த பதிவு தலைப்பையே சாதாரண விசயத்திற்கு உதாரணமா சொல்லுவோம் எறும்பு கடிச்சிட்டாக் கூட "இங்க பாருங்க சின்ன எறும்பு! 70கிலோ ஆளை கடிச்சா என்ன பாடுபடுறோம்...!" அப்படிம்பாரு ஒருத்தர், உடனே இன்னொருவர் "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" அப்படிம்பார்.

"செந்தில் சார் நான் வண்டியில வந்துட்டு இருந்தேன், ஒரு கோழிக்குஞ்சு மேல வண்டிய விட்டுட்டேன்! அது கொடலே வெளிய வந்திருச்சு" இப்படின்னு சில பேர் வெறியேத்துவாங்க...! சில பேரு "அடேங்கப்பா எவ்வளவு பெரிய காக்கா குஞ்சு வெளிய" அப்படிப்பாங்க..! 

ஜூராசிக்பார்க் படம் பார்த்துட்டு வந்த டீக்கடைப்பையன் என்கிட்ட  கதை சொல்றான் "சார்....! ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ய டைனேசர் சார்...! முட்டை போடுது சார்..! அதிலிருந்து டைனேசர் குஞ்சு வெளிய வருது சார், "இல்ல தலைதானே முதல்ல வெளிய வரும்" இது நான். "சார் நான் குட்டின்னு சொன்னேன் சார்..!" கடுப்பான செந்தில் "டேய் ஓட்ரா....!" என்று அவன் பொடனியில் அடிக்க "போய்யா குஞ்சுவெளி" என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

இந்த நேரத்தில் வேலைக்கு வந்த மலையாளி பையன் உன்னிக்கிருஷ்ணன் வயநாட்டைச் சார்ந்தவன், தமிழ் சுத்தமாக தெரியாது தட்டுத் தடுமாறி கொஞ்சம் தமிழ் பேசக் கற்றுக் கொண்டான், எங்க ஆபிஸ்ல ஒரு டிவிஎஸ் 50, பஜாஜ் கம்பனியின் "Sunny" என இரண்டு வண்டி இருந்தது அதன் பெயரை அவன் எந்த வித கூச்சநாச்சமின்றி அழைப்பது செந்திலை கிண்டல் செய்வது போலவே இருந்தது.

எங்க ஓனர் சிவகாசிக்காரர் அவர் காலையில் வந்தவுடன் 'உன்னி'க்கு ஒரு வேலை கொடுக்கிறார், 

"அண்ணாச்சி நம்ம "Sunny" ரிப்பேர் ஆச்சு!  ஸ்டார்ட் ஆக மாட்டிங்குது!" 

"எண்ணை எரங்கலையோ நல்லா பாத்தியாடா..? டூப்பு அடைச்சிருக்கும்" 

"அண்ணாச்சி நல்லா ஞான் ஸ்டார்ட் செஞ்சும் ஆகலையில்லோ"

"கவுத்து படுக்கப் போட்டுப், பிறகு எடுத்து ஸ்டார்ட் பண்ணுடா ஆவும்" 

"ஆகலை அண்ணாச்சி "Sunny"-ய சர்வீஸ் விடணும்" 

"சரி அப்புறம் விட்டுக்கலாம் டிவிஎஸ் எடுத்துட்டு போ அப்படிங்கிறார்...." 

இந்த உரையாடல் ஆபிஸ்ல இருக்கிற ஆண்கள் விழுந்து..விழுந்து சிரிக்கிறாங்க....! பெண்கள் கூச்சத்தில் நெளியிறாங்க....! அதை கவனித்த அண்ணாச்சி "எலேய்...! இவனை மொதல்ல பஜாஜ் கம்பனி வண்டிப் பேரச் சரியா சொல்ல சொல்லுங்கடா...! எழவு எடுக்கவே கேரளாவில் இருந்து வராணுக" என்றார். ஆனால் அதே ஓனர் உன்னிகிருஷ்ணன் தம்பி குஞ்நுண்ணியையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டார் என்பது வேறு விசயம். இவங்க இரண்டு பேரையும் மாறி மாறி எல்லாரும் கூப்பிட வேலையை விட்டு ஓடியே போனார் செந்தில்.

"பிடிக்காத என்
பெயரை மாற்றிய
பின்னும்...
சாலையில்,
அஞ்சலகத்தில்,
வங்கியில்,
சிற்றுண்டிச் சாலையில்,
என யாராவது என் பெயரழைத்து
கூவும் போது
அனிச்சையாக
திரும்பிப் பார்க்கின்றேன்!"

Read more...

ஏனுங்க...கொஞ்சனேரம் தூங்கறேனுங்க மெட்ராஸ் வந்தா எழுப்புங்க....!

>> Wednesday, May 8, 2013


சோலையம்மா போன்ற பல படங்களை தயாரித்த கள்ளிப்பட்டி ஜோதி கனவு தொழிற்சாலையில் கையைச் சுட்டுக்கொண்டதால்... சென்னையை விட்டுச் சிறிது காலம் சொந்த ஊரில் குடும்பத்துடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவருடைய மகன் எங்க பள்ளியில் வருடத்தின் நடுவில் புதுப்பையனாக சேர்ந்து படிக்க தொடங்கினான், அவனுடைய நட்பும், ஏழாவது பாட புத்தகத்தில் வந்த தலைநகரம் பற்றிய பாடமும், எனக்குச் சென்னை என்கின்ற நகரத்தையும், அதன் பிரம்மாண்டத்தையும், கனவு காண வைத்தது. நான் சென்னைக்கு வாழ்நாளில் ஒரு நாளாவது செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை ஏற்படுத்தக் காரணம் கடலும், ரயிலும்.

எங்க மாவட்டத்தில் ஈரோட்டைத் தவிர ரயிலை எங்கும் பார்க்க முடியாது, ரயில்ப் பாதையே இல்லாத மாவட்டம் எங்களுடைய மாவட்டம். இரண்டாவது நீர் பிரமாண்டம் கடல். ஏரி, குளம், வாய்க்கால் என்று திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீராக இருக்கும் தண்ணீர் தேசம் எனது ஊர் என்றாலும், கடல் பார்க்க வேண்டும் என்பது கனவு.

முதன் முதலாக திருப்பதி ரயிலில் சென்ற போது ரயில் என்பது இரைச்சல் மிகுந்த ஒரு இரும்புத் தொட்டில் என்று புரிந்து கொண்டேன். பலமுறை சென்ற பிறகு அது ஒரு மனிதன் பயணிக்கும் குப்பைத் தொட்டி என்று புரிந்து போனது. தேனீர் விற்பவனின் சத்தம், குழந்தை அழுகுரல், பெண்களின் பேச்சு, குடிகாரர்களின்  அரசியல் பேச்சு என்று இல்லாமல் அடிக்கடி தடதடக்கும் தண்டவாள உரசல் என ரயில் சீக்கிரம் வெறுத்துப் போய்விட்டது.

கடலினை முதன்முதலாக கேரளாவின் அரபிக் கடலின் கரையில் கால் நனைத்தபோது... காலின் கீழே மணல் நகருவது இந்த பூமியே நகருவது போன்ற ஒரு பிரமை. சிறுஅலை, பெருஅலை என்று கால் நனைந்த போது ஏற்பட்ட ஆனந்தம். இந்த பிரபஞ்சமே பாதிக்கு மேல் கடலால் நிரம்பியிருக்கின்றது அதன் துளியை ஸ்பரிசித்த ஒரு கர்வம். ஒரு கிராமத்தானாக கடல் அன்னையை தரிசித்த பெருமை! என்று இருந்த கடல், ஊர் திரும்பிய போது உப்புத் தண்ணீரால் கால் அரித்த போது கடல் என்பது ஏரி, குளம் போல் கிடையாது என்பது புரிந்தது. 

சென்னை சென்ற போது மெரினா பீச்சின் காற்றும், உப்பு, மிளகு தூவிய கடல் மீனும், ஆங்காங்கே மடியில் படுத்துக் கொஞ்சும் காதலர்களும், குடும்பம் குடும்பமாக வரும் கிராம மக்களும், எம்.ஜி.ஆர் சமாதியில் காதுவைத்துப் பார்ப்பதும், எல்லாமே ஒரு வினோதமான உலகமாக தெரிந்தது. சென்னை மொழியும் ஒரு வித்தியாசம்தான் வார்த்தைக்கு வார்த்தை மரியாதை சொற்களை பயன்படுத்திய எங்களுக்கு ஒரு சின்னப்பையன் கூட "இன்னாப்பா" என்பது ஒரு ஆச்சர்யம்தான். இந்த உலகம் ஆச்சர்யங்கள் நிறைந்தது என்பதை கடலும் ரயிலும் மட்டுமல்ல சென்னையும் எனக்குப் புரிய வைத்தது.

சென்னை நண்பர் ஒருவர் எங்களோடு வேலை பார்த்த போது "என்னப்பா இது இந்த ஊர்க்காரங்க இவ்ளவ் மரியாதை கொடுக்குறாங்க கூச்சமா இருக்கு எனக்கு" என்றார் அவர் பெயர் 'ராமதாஸ்' "ஏங்க ராமதாசுங்க....சாப்பிட்டிங்களாங்க..." என்று வார்த்தைக்கு வார்த்தை மரியாதை தரும் ஊரில் மிகவும் சிரமப்பட்டார். பிறகு பழகிய பிறகு அவரும் "ங்க" போட்டு பேச ஆரம்பித்துவிட்டார் விடுமுறையில் ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்தவுடன் "இன்னாப்பா எங்க ஊருக்கு போனாலும் இந்த மரியாதை வந்து தொலையுது எல்லாரும் பேஜாரா பாக்குறாங்கப்பா...!" என்று புலம்பினார்.

எனக்கு சென்னை ஓர் ஆச்சர்யம்! அவருக்கு திருப்பூர் ஒரு ஆச்சர்யம்!. ஒவ்வொருவருக்கும் ஒரு ஊர் ஆச்சர்யம். இங்கு அவர் வந்த வேலை முடிந்து மீண்டும் சென்னை திரும்பிய போது 'இவ்வளவு நல்ல ஊரை விட்டுப் போவது எனக்கு பிடிக்கலை' என்று நெகிழ்வாகத்தான் கிளம்பினார். ஆனால் எனக்கு சிறிய வயதில் ஏற்பட்ட சென்னை மீதான பிரம்மாண்டம், ஆச்சர்யம் திருப்பூரின் மேல் எப்பொழுதும் இருந்ததில்லை அது ரயில் மீதான காதல் போலத்தான்.

“ஒண்டுக்குடித்தனம்,
புறாக்கூண்டு
மேன்சன்,
'பேய்' வேகத்தில் வரும்
ஆட்டோவிலிருந்து
தப்பித்தல்,
'மீன்பாடி' வண்டியில்
உயிர்பிழைத்தல்,
'நகர பேருந்து' நெரிசலில்
'பர்ஸ்' பாதுகாத்தல்,
உப்புத் தண்ணீர்
குளியல்...,
அறைகளில் தங்க
விருந்தினர்களை அனுமதிக்காத
வீட்டு உரிமையாளர் -என
வாழும் எங்களை விட
நிலாவில் கால் வைத்த
'ஆம்ஸ்ட்ராங் 'என்ன
பெரிய கொம்பா...?”

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP